Sunday, June 7, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !

கைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !

-

“ஆழ்வார் பேட்டை ஆண்டவா, வேட்டியைப் போட்டுத் தாண்டவா” புகழ் உலக நாயகனை கலைஞானி என்று அழைப்பதே தமிழக மக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதில் அவரை அரசியல் ஞானி என்று அழைக்கும் காலத்தின் அரசியல் அஞ்ஞானத்தை கொஞ்சம் பார்ப்போம்.

கைப்பிள்ளை சண்டைக்கு கிளம்பினால் இன்று எத்தனை தலை உருளுகிறதோ என்ற வாசகத்தை கமலஹாசனுக்கும் அதிமுக அடிமை அமைச்சர்களுக்கும் நடக்கும் போரை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

பிக்பாஸ் முன்னோட்டத்தில் பணம் வாங்கி ஓட்டுப் போடும் மக்களை விட நான் பெரிய நடிகனல்ல என்று அநியாயத்திற்கு நியாயம் பேசினார் கமல். பிறகு பிக்பாஸ் வார இறுதி தொகுப்புரையிலும் சரி டவிட்டரிலும் சரி அல்லது அவரது அறிக்கைகளிலும் சரி விஜய் டிவியில் இருந்து அவர் வாங்கும் பணத்தை எப்படி நியாயப்படுத்துகிறார்?

அவருக்கும் வீடு, சம்பாத்தியம், தொழில் இருப்பதால் அந்தப்பணம் தேவைப்படுகிறதாம். இதன்படி கமலின் தத்துவம் என்னவென்றால் பணம் வாங்கிக் கொண்டு நல்ல காரியங்களில் ஈடுபடலாம். அந்த நல்ல காரியங்கள் எவை என்று கலைஞானியே தீர்மானிப்பார்.

ஜெயா ஆண்ட போதும், மோடி இவரை “ஸ்வச்ச பாரத்” தூதராக நியமித்த போதும் கமலின் முதுகை மட்டுமே நாம் பார்த்தோம். தற்போது எடப்பாடி ஆட்சியில் அவரது வீரம் செறிந்த “பான் கேக்”முகத்தை பார்க்கிறோம். என்ன இருந்தாலும் எடப்பாடி வகையறாக்களோடு சண்டை போடுவதற்கு தனி வீரம் வேண்டுமல்லவா?

டவிட்டரில் இருக்கும் சினிமா பிரபலமான கமல், மெரினா எழுச்சிக்கு பிறகு கொஞ்சம் தைரியம் அடைந்து அரசியல் கீச்ச ஆரம்பித்தார். அந்த தைரியத் தருணங்களின் நல்வாய்ப்பாக புரட்சித் தலைவி அதே மெரினாவில் சமாதியானது தற்செயல் என்றாலும் கமல், ஓபிஎஸ்-ஐ ஆதரித்தார். மறு தேர்தல் வருமென்றார். தற்போது தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று பொத்தாம் பொதுவாக போட்டுப் பார்த்தார்.

அவர் டிவிட்டரில் பேசும் போதே அதிமுக அடிமை அமைச்சர்கள் கமலுக்கு தனி மரியாதை கொடுத்து பேசினார்கள். தமிழகத்தில் விவசாயி போராடுகிறார், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறார்கள், பெண்கள் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுகிறார்கள்… சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறிப்போனது.

அந்த போராட்டக் களத்தின் மக்களையோ இல்லை அவர்கள்து கேள்விகளுக்கோ பதில் சொல்லத் துப்பற்ற இந்த அஞ்சப்பர் பிரியாணி வாடிக்கையாளர்கள் கமலின் தும்மலுக்கு மட்டும் உடனே கைத்துண்டால் பிடித்து ஏந்தி மறு தும்மல் போட்டு காற்றில் பறக்க விட்டார்கள். ஊரெங்கும் இப்போது அஞ்ஞான சளி!

தமிழக அரசில் ஊழல் மலிந்திருந்தால் கமல் கோர்ட்டுக்கு போகவேண்டியது தானே என்கிறார் துணை சபாநாயகரும், இந்தியா முழுவதும் சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் முதலாளியுமான தம்பித்துரை. என்ன இருந்தாலும் வாய்தா ராணியின் நீதிமன்ற போங்காட்டத்தை அணு அணுவாக செய்த கும்பலைச் சேர்ந்தவராயிற்றே!

தமிழக அரசை கமல் தொடர்ந்து குறை கூறிப் பேசினால் அவர் மீது அவதூறு வழக்கு போடுவோம், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நாங்களும் பேசுவோம் என்கிறார் அமைச்சர் வேலுமணி. என்ன இருந்தாலும் தமிழகத்திலேயே ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மீது நூற்றுக்கணக்கான அவதூறு வழக்கு போட்டு சாதனை படைத்த தலைவியின் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே! இதில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருதரப்பும் பேசினால் அது தமிழக மக்களுக்கு பிக்பாஸையே விஞ்சும் ரியாலிட்டி தொடர் கிடைப்பது நிச்சயம்.

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் இப்போது மூன்றாம் தர நடிகராக கமல் பேசிவருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழவுபடுத்தியிருப்பதால் அவரை வன்கொடுமை சட்டத்தில்  கைது செய்ய வேண்டும் என்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். உடுமலைப் பேட்டை சங்கர், தருமபுரி இளவரசன் ஆகியோரை மேலே அனுப்பிய ஆதிக்க சாதிவெறியின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கையில் வைத்திருக்கும் நாக்கு அப்படிப் பேசுகிறது. கமலும் தனது கவிதை கிடங்கிலிருந்து தலித் மக்களை சிலாகித்து வடித்த இரண்டு கவிதைகளை எடுத்து விட்டால் பிறகு அவரும் தலித் போராளிதான்.

கமலின் முதுகில் ஆயிரத்தெட்டு புளுகு மூட்டை உள்ளது. எங்களப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. தைரியமிருந்தால் அரசியலுக்கு வந்து பேசட்டும் என்கிறார் கார் டயரை வளைந்து நெளிந்து கும்பிடும் அமைச்சர் ஜெயக்குமார். சரி அருகதை உள்ள நம்மைப் போன்றோர் பேசியதால் அவர் அதை காது கொடுத்து கேட்பாரா? இல்லை கோவனை கைது செய்தது போல, திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் போட்டது போல செய்வாரா? கமல் அரசியலுக்கு வந்து ஊர் ஊராக சுற்றி, பூத் கமிட்டி போட்டு இந்த கடுமுழைப்பு வேலைக்கெல்லாம் அவர் கனவிலும் வரமாட்டார் என்ற தைரியத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார். ஆனால் சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு நாலு வரியில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டலே அதை சிலாகிக்க இங்கு ஒரு பெரும் கூட்டம் உள்ளது என்பது கமலுக்குத் தெரியாதா என்ன?

ஏதோ விளம்பரத்திற்காக இப்படிப் பேசுகிறார், பொத்தாம் பொதுவாக நான்காம் தரப் பேச்சாளர் போல கமல் பேசக்கூடாது என்று கடிகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவர் நாகரிகமாக பேசியதைக் கேட்டு காதைப் பொத்திக் கொண்டு பால்கனியில் டாட்டா காட்டும் அம்மணி தீபாவே புதிய தலைமுறையில் இருந்து விவாதம் ஒன்றில் வெளியேறினார். பிறகு தெர்மாக் கோல் போன்ற  குறிப்பான அறிவியல் கண்டுபிடிப்புகளின் நாயகனான செல்லூர் ராஜுவெல்லாம் கமலுக்கு உபதேசிப்பதைப் பார்த்தால் இனி அரசியல் நகைச்சுவைக்கு நாம் டி.ஆரை தேடக்கூடாது. கலைஞானி  கையிலிருக்கும் போது ராஜேந்திரின் தாடி வெடியெல்லாம் வெறும் நமத்துப் போன பட்டாசுதான்.

கமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தோடு அவர் நிறுத்தா விட்டால் அரசு சார்பில் அவர் மீது வழக்குப் போடுவோம் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. ஒரு வேளை புழலில் களி தின்ன வைத்தால் கலைப்புலி வளை எலியாகிவிடும் என்று நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் சசிகலா ஷாப்பிங் வசதிகளெல்லாம் கமலுக்கு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

இப்படி ஆள் மாத்தி ஆள் கமலின் தும்மல், விம்மல், பொறுமல், அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்த கமல் நாமும்  கொஞ்ச நாள் அரசியல் ஞானியாக நடிப்போமே என்று நினைத்து விட்டார் போலும். என்ன இருந்தாலும் நாலு சோப்ளாங்கி அடிமைகளோடு சண்டை போடும் போது பான் கேக்கால் தனது சோப்ளாங்கித்தனத்தை மறைக்கும் வித்தை தெரிந்த ஒரு நடிகருக்கு வீரம் வரலாம் அல்லவா?

மேலும் மற்ற எதிர்கட்சி தலைவர்கள் அவர்கள் மு.க ஸ்டாலினோ இல்லை கம்யூனிஸ்டு தலைவர்களோ அனைவரும் கலைஞானியின் பாதுகாப்பிற்காக வரிந்து கொண்டு வருகிறார்கள். மோடி அரசையும், எடப்பாடி அரசையம் விமரிசித்து ஒரு நோட்டிஸ் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் போட்டார்கள் அல்லவா! அதை கண்டித்தும் ஒரு அறிக்கை! கமலை ஆதரித்தும் ஒரு அறிக்கை! முடிந்தது ஜனநாயகக் கடமை!

இப்படி ஒன்றுமில்லாத தனது தும்மல்கள் ஆளும் அடிமைகளால் தலைப்புச் செய்திகளாக அன்றாடம் பத்து அணிவகுப்பதைப் பார்த்த கமல், ரஜனி ஃபார்முலாவில் இதோ, இந்தா, பாரேன் நானும் வாரேன் என்று ஒன்றை கொளுத்திப் போட்டார். காசா பணமா எல்லாம் டிவிட்டர் நறுக்குதானே?

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை, தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர், விரைவில் ஒரு விளி கேட்கும், புரியாதோர்க்கு நாளை  வரும் சேதி என்று படையாப்பாவின் இரண்டாவது வெர்ஷனை எடுத்து விட்டார். அதற்கு அச்சு – மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பொழிப்புரை, மர்ம விளக்குரை, மறைபொருள் உரை என்று மாறி மாறி ஒரே விசயத்தை விளக்கும் பொருட்டு அடித்துக் கொள்கிறார்கள்.

கமலுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நடிகையான கஸ்தூரியெல்லாம் வந்து கம்பு சுற்றுகிறார். அதிலும் ஜெயா ஆட்சியின் போது இந்த அமைச்சர்களெல்லாம் முதுகெலும்பு இல்லாமல் இருந்தவர்கள் இப்போது கமலை கண்டிப்பது ஏன் என்றெல்லாம் பேசுகிறார். இதையே கமலுக்கும் பொருத்தலாம் என்பது கூட அந்த அம்மையாருக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும்  கமல் முதுகு மட்டும் தங்க முதுகில்லையா?

இடையில் பந்தி முடிந்து விடும் என்று தமிழிசையும் எச்.ராஜாவும் இந்த சென்சேஷன் அல்ப விளம்பரத்தில் சுருட்டும் பொருட்டு கமலை செல்லமாக வைகிறார்கள். இதற்கு உடனே மோடிக்கு ஃபோன் போட்டால் நடப்பதே வேறு என்று கமலுக்குத் தெரியாதா என்ன? ரஜினியை ஒரு ஃபார்முக்கு கொண்டு வருவதற்குள் இந்த உத்தம வில்லன் வந்தால் உத்தம புத்திரர்களான பாஜக லோக்கல் தாதாக்களுக்கு கோபம் வராதா என்ன? என்ன கமலே பெரிய பாஜக தாதாக்களின் திண்ணையில் பேசக்கூடியவர் என்றாலும் லோக்கல் ஆட்டம் தனியில்லையா?

இந்தியாவில் பணமதிப்பிழப்பு, மாட்டு இறைச்சி தடை, ஜி.எஸ்.டி கொள்ளை, நீட் சதி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் மக்கள் சிக்கி வதைபடுகிறார்கள். அதிலெல்லாம் அறச்சீற்றம் அடையாத கமல் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டுக்காக அதிமுக அமைச்சர்களோடு மகாபாரதயுத்தமே நடத்துகிறார்.

இதுதான் தமிழகத்தின் சாபக்கேடா?
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. நீங்கள் என்ன சொன்னாலும் சரி கலைஞானியின் மூளை அரசியல் மூளை.
  கருணாநிதிக்கும் மருத்துவருக்குமே டியூஷன் எடுக்கும் மூளை.
  கருப்புச்சட்டை போட்டிருப்பதால் பெரியார் மாணவராம்.சேரிபிகேவியர் என்ற வார்த்தை எதார்த்தமானதுதானாம்.
  இறைச்சி உணவு உண்பவனுக்குத்தான் கடும் கோபம் வருமாம்.இது ஆராய்ச்சியில் வேறு நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.
  இதற்க்கு மேல் வேறு என்ன அரசியல் தகுதி தேவை?
  சூப்பர்ஸ்டாரால் இவ்வளவு அறிவுஜீவித்தனமாகவெல்லாம் அரசியல் செய்ய வருமா?
  அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய் தன் பழைய ரத்தத்தையெல்லாம் வெளியேற்றி புதிய ரத்தத்தை ஏற்றிக்கொண்டு வருவதாகவும் உடலின் இறந்த செல்களை நவீன முறையில் உதிர்ந்து விட்டு புத்தம் புதிய செல்கள் தழைக்க சிகிச்சை எடுப்பதாகவும் ஒரு கதை இவரைப்பற்றி சொல்லப்படுவதுண்டு.அது உண்மையோ பொய்யோ..
  ஆனால் தன் பார்ப்பணிய ரத்தத்தை மிக ரகசியமாய் காப்பாற்றி வருவதாகவே இருக்கிறது அவர் பேச்சு.
  மிக மிக கபடமும் கள்ளமும் நிறைந்த மனதுடையவராகவே இருப்பார் இந்த கமல் என்று எனக்கு ஒரு அனுமானம்.

 2. பிக்பாஸ் விஜெய் டிவி நிகழ்ச்சி தொடர்பான காயத்திரி ரகுராம் பேசிய அவதூறு பேச்சு”சேரி பிகேவியர்” தொடர்பாக காயதிரியையும் ,அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல் அவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தால் என்ன தவறு?

  குறிப்பு:

  என்ன குற்றம் :

  எஸ்சி, எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015’ படி பார்த்தால் ஜாதி பெயரை சொல்லி திட்டுவது, சமூக, பொருளாதார ரீதியாக அவர்களை ஒதுக்கி வைப்பது ஆகிய இரு குற்றங்களை செய்து உள்ளார் காயத்தி.. அந்த நிகழ்ச்சி நேரலை நிகழ்ச்சியாக கூட இல்லாத நிலையில் அந்த அவதூறு கருத்துகளை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல் எடிட்செய்து நீக்காத காரணத்தால் அவர் மீதும் இந்த சட்டம் பாய வேண்டும் !

  என்ன தண்டனை:

  குறைந்த பச்ச தண்டனை ஆறு மாதம் மற்றும் அபராதம்

 3. ஊழல் செய்பவனை பற்றியும், திருடுபவனையும் பற்றியும் பேசவும், எழுதவும் யாருக்கும் உரிமை உண்டு… அமைச்சர்களின் உழலை பற்றி பேசினால், ஏன் காவிரியை பற்றி பேசவில்லை, முல்லை பெரியாரை பற்றி பேசவில்லை என்பது அறிவிலிதனம்… சமூக சேவையில் இருக்கும் போராளிகள் பல பேர் துறை சார்ந்த பிரச்சனை பற்றியும், அல்லது ஏதோ ஒரு விஷயத்தை பற்றியும் பேசி, போராடி வந்துள்ளனர்.. உதாரணம், கூடங்குள்ம் உதயக்குமார், மேதா பட்டாகர், அன்னா அசாரே என பல பேர்… ஏன், ஊர் அறிந்த யோக்யன் அப்துல் கலாமை எந்த சமூக சீர்கேட்டிற்க்காக போராடி இருக்கிறார்???? கமல் ஒரு நடிகன்… ஊழல் செய்யாத, யாரையும் சுரண்டாத, உண்டியல் குலுக்காத ஒரு புத்திசாலி நடிகன்….. வினவும், இன்னும் பிற சிவப்பு பாவாடைக்காரர்கள் கொடி பிடித்து நாய் கூச்சல் இட்டு செய்யமுடியாததை கமல் போன்ற ஒருவனால் ஏ.சி. ரூம்மில் இருந்து போடும் ஒரு டூவீட்டர் பதிவு பெரும் பாதிப்பை உருவாக்கும்..உருவாக்கிவிட்டது…. குண்டியில் குச்சி சொருகியதை போல அமைச்சர்கள் அமைதி ஆனதையும், கமலுக்கு ஆதரவு பெருகிவருவதையும் எல்லோரும் அறிந்ததே…. வினவு கும்பலை பொருத்தவரை, ஒன்று இவர்களோடு போராட வேண்டும், அல்லது இவர்களுக்கு துட்டு குடுக்க வேண்டும்… யாராவது தனியாக போராடினால் அவர்கள் மேல் ஒரு கீழ்தரமான ஒரு கட்டுரையை எழுதுவது வாடிக்கை… பேடிகள்.

  • கமல் , ஒரே ஒரு மக்கள் நல விவகாரத்தை கையில் எடுத்து களத்தில் இறங்கி நீதி மன்றம்
   மூலமோ, அமைதி போராட்டங்கள் மூலமோ நடத்தி முடிக்கும் மன உறுதியோ,
   அல்லது தெளிவோ (இவர் பேசுவதிலேயே தெரியம் அது) இவருக்கு உள்ளதா
   என்பதை இங்கு உணர்ச்சிவயப்பட்டு பாராட்டி இருக்கும் தமிழ் மக்களிடமே
   விட்டுவிடுகிறேன். உங்களுக்கு இன்னும் ஒரு நடிகரின் AC ரூம் ரிமோட்
   கண்ட்ரோல் ஆட்சியை அனுபவிக்க ஆசை என்றால் உங்களின் தலை
   எழுத்தையும், அத்துடன் கூடிய உங்களின் முட்டாள் தனத்தையும் அந்த கடவுளே
   நினைத்தாலும் மாற்ற முடியாது. இன்னும் சில நாட்களில் 2G வழக்கில் தீர்ப்பு
   வரப்போகின்றது அப்போது பாருங்கள் இவரின் ஊழலுக்கு எதிரான வீரத்தை??

 4. கணினி போராளி கமல்… நீட், நெடுவாசல், கதிராமங்கலம், காவேரி மேலாண்மை வாரியம், மதுவிலக்கு போன்ற வற்றில் கமலின் நிலைப்பாடு என்ன ??? இது வரைக்கும் மக்களை சேர்ந்து கொண்டு ஏதாவது போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தியது உண்டா ? இப்பவும் தனது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த எதிர்ப்பை மடைமாற்ற தான் தமிழக அரசு லஞ்சம் ஊழல் என்று பிதற்றுகிறார். கருணாநிதி ஜெயா எல்லாம் உத்தமர்களா அல்லது அவர்களிடம் பயமா ?>> சும்மா ரசிகர்களை தூண்ட கூடாது. களத்தில் இறங்கி போராடும் திராணி கமலுக்கு இல்லை.

 5. ஐயோ பாவம்!வினவு என்னும் கைப்பிள்ளை விடாம கமல் முன்னாடி கம்புசுத்திகிட்டே இருந்தாலும் கமல் இந்த கைப்பிள்ளையை கவனிப்பதாக தெரியவில்லை!மனச தளர விடாதீங்க!BTW நேத்து மீண்டும் நீங்க எழுதுன உன்னைப்போல் ஒருவன் விமர்சனத்த படிச்சேன்!அது A Wednesday படத்தின் ரீமேக் என்பதைக்கூட குறிப்பிடும் நேர்மை இல்லாத உங்க வழி தனி வழிதான்!லால் ஸலாம்!

  • அய்யா இராசா…..வினவ டிக்கிகடி கமலு கண்டுகிறது இருக்கட்டும்….விசுவரூபம் படத்துல அமெரிக்காகாரனுக்கு கால் அமுக்கி விட்டதுக்கு பிறகு ஜேம்ஸ் கேமரூன் கமலுக்கு ஒரே பொன் மேல பொன் போட்டு ஆஸ்கார வாங்கி கொடுக்காம விட மாட்டேன்னு சொன்னாராமே….

   The wednesday படத்த கமல் சுட்டு எடுத்த படம் தான் உன்னைப்போல் ஒருவன் . அந்த படத்தை அப்படியே ரீமேக் கமல் செய்யவில்லை தன்னுடைய சொந்த சரக்கையும் திணித்திருப்பார். அந்த விமர்சனத்தில் கீழ் வரும் வரிகள் கமலின் அறிவு நாணயத்தை தொளுருத்தி கட்டுகிறது,

   //ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?//

   //கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

   ///

 6. கமலை நம்பி தயாரிப்பாளர்களே காசு போட தயாரா இல்லை. இந்த
  லட்சணத்துல எந்த முதலாளி இவனை நம்பி காசு போட்டு கட்சி
  ஆரம்பிப்பாங்க. எல்லா சும்மா time pass அவளோ தான் இவரு twitter ல
  மட்டும் தான் போராடுவாரு அதுவும் திமுக ஆட்சிக்கி வந்தா திரை
  உலகத்தை அபேஸ் செய்து விடுவார்கள் என்று இப்போதே துண்டு போட்டு
  வைத்து கொள்கிறார் அவ்வளவு தான் . அதனால் தான் இந்த twitter போராளி
  திமுகவை விமர்சிப்பது இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க