நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம். ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்)

ம்.ஜி.ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்.) அவர்களின் சகாப்தத்தை நவீன கால அரசியல் புனைவாக இந்தப் புத்தகம் பகுத்து ஆய்கிறது. தமிழக அரசியலில் இதற்கு முன் எவரும் பெற்றிடாத செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். ‘தமிழ்நாட்டு ஏழைகளின் ஈடிணையில்லாத காவல் தெய்வம்’ என அவரின் ரசிகர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர். ‘அரசியல் கோமாளி’ என்று அவரின் எதிர்ப்பாளர்களால் வசைபாடவும்பட்டார். அவர் வாழ்நாளிலேயே ஜாம்பாவனாகத் திகழ்ந்தவர். ஏதேனும் அரசியல் அல்லது சொந்த சிக்கல்களில் எம்.ஜி.ஆர் சிக்கிக் கொண்டபோதெல்லாம் அவரின் நன்றிமிகுந்த ஆதரவாளர்கள் விருப்பத்தோடு தங்களின் உயிர்களை ஈந்தார்கள். அவரின் அரசியல் எதிரிகள் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னரும் அவரின் பெயர் பொதுமக்களிடையே உண்டாக்கும் உணர்ச்சிப்பெருக்கை கண்டு பயம்கொண்டார்கள்.

எம். ஜி. ஆர். எனும் ஆளுமையின் தாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சம் அவர்  வெறுமனே அரசியல் ஆளுமையாக மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரமாகவும், அரசியல்வாதியாகவும் ஒரே சமயத்தில் திகழ்ந்தார் என்பதே ஆகும்…

… எம்.ஜி.ஆர். தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வுகள் பற்றிய கால வரிசையிலான வர்ணனையில் இந்நூல் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாகப் பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புக்கூறுகளை விவரித்து அவற்றை ஒன்று சேர்த்து கோர்வையான வர்ணனையின் மூலம் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை இந்நூல் நிறுவும். ஏன் எம்.ஜி.ஆர். தாக்கம் தீவிரமான தேடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது என்பது பற்றிய முக்கியக்கூறுகளைக் காட்டுகிறது எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது அல்லது தமிழகத்தின் கலாசார மரபோடு அது எவ்வாறு தொடர்புடையது என்பன குறித்துப் பேசுகிறது. மேலும் முன்னோக்கி பயணித்து எப்படி இந்தத் திரை பிம்பத்தை எம்.ஜி.ஆரின் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகளின் மூலம் அரசியல் களத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க முடிந்தது என்பது குறித்தும் பகுத்து ஆய்கிறது. இந்தப் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் அவரின் திரை பிம்பத்தோடு முழுக்கப் பொருந்தும் வகையில் இரண்டுக்கும் வேறுபாடு காணமுடியாத வகையில் கவனமாக உருவாக்கப்பட்டன. இறுதியாக, இந்நூல் அடித்தட்டு மக்களின் பொருளியல்/பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் எம்.ஜி.ஆர் தாக்கத்தின் எழுச்சிக்கு இடையே உள்ள உறவை கண்டறிகிறது. (நூலின் முன்னுரையிலிருந்து)

பெண்கள் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் அனுபவிக்கும் விடுதலைத் தருணங்கள் சிதறிக்கிடப்பவை. அவை தமிழ் சமூகத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தைத் திறந்த மனதுடன் விமர்சிக்கவில்லை என்பதை இறுதியாகப் பகுத்தாய்வு செய்து பார்க்கையில் காண முடிகிறது. இதற்கு மாறாக, படத்தின் முடிவுகள் பெண்களுக்கான உரிமை சார்ந்த கேள்விகளை ஆணாதிக்கச் சமூகத்தின் மதிப்பீடுகளை உறுதிபடுத்தியே இருக்கின்றன. இப்படி ஆணாதிக்கத்தை உறுதிபடுத்துவது இரண்டு வழிகளில் இயல்பாக நடக்கிறது. ஆணின் இச்சைக்கு உரிய, ஆணின் கவலைக்குரிய, கீழ்படிய மறுக்கிற பெண்ணை , அல்லது அடங்காப்பிடாரி என்று அழைக்கப்படும் கதாப்பாத்திரத்தை நாயகன் கீழ்படிய வைப்பார். இரண்டாவதாக, இப்படங்களில், ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு மற்றும் பிற ஆணாதிக்க அமைப்புகளோடு தொடர்புடைய அடையாளங்கள் அனைத்தும் பெண்ணின் முக்கிய நற்குணங்களாக விவரிக்கப்பட்டு நியாயப்படுத்தப்படும். (நூலிலிருந்து பக்-104)

சுருக்கமாக, எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் மூலம் எங்கும் கண்ணுக்குத் தெரியாமல் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தின் கட்டமைப்பு தமிழகத்தில் மறு உறுதி செய்யப்பட்டது. இத்திரைப்படங்களில் பெண்களுக்கு விடுதலை தரப்படும் தருணங்களும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்குள்ளேயே அடங்கும்படி உருவாக்கப்பட்டன. ( நூலிலிருந்து பக்.112)

படிக்க:
எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !
ரஜினி, கமல், அஜித், விஜய், ஹீரோவா ஜீரோவா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2016

எம். ஜி.ஆரின் திரைப்படங்களில், அவருக்கு சினிமாவிலும், அரசியல் செயல்பாடுகளிலும் பெண்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததென்றால் அதற்கு தமிழ்க்கலாசாரத்தின் தலையாய பண்பாக இருந்த தந்தைவழி சமூக அமைப்பே காரணமாகும். பெண்களின் குழந்தைப் பருவம் முதல் வீடே உலகம், கற்பே சிறந்த பண்பு எனச் சொல்லி வளர்க்கப்படுகின்றனர். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்றும், மணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுளை அருள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகின்றனர். சமூகத்தைக் கட்டமைக்கும் வெளிப்படுத்தும் தமிழ் மொழியே ஆணாதிக்கத் தன்மையுடையதாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்ணைக் குறிக்க விதவை (கைம்பெண்) என்ற சொல் இருப்பதைப் போல், மனைவியை இழந்த ஆணைக் குறிக்கும் சொல் ஏதும் இல்லை. முறை தவறிய உறவுகளில் ஈடுபடும் பெண்களை, வைப்பாட்டி, கூத்தியாள், தாதி, கணிகை, பரத்தை போன்ற சொற்களால் குறிப்பதைப் போல் ஆண்களைக் குறிக்கும் சொற்கள் இல்லை.

தமிழகத்தின் அடித்தட்டு மக்களுடைய எல்லாக் கதையாடல்களும் ஆணாதிக்கமுடையவை என்று சொல்லிவிட முடியாது. நாம் ஏற்கனவே சொன்னதைப்போல், பொதுபுத்தி என்பது ஒன்றுக் கொன்று முரண்பட்ட எண்ணங் களின் தொகுப்பாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அடித்தட்டு மக்களின் பொதுபுத்தியானது, தனக்கே உரிய வகையில் ஆணாதிக்கத்துக்கு எதிரான கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. (நூலிலிருந்து பக்.114-115)

… குறிப்பிட்ட வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கட்டமைப்பதன் மூலம், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் காட்டப்படும் அதே வாழ்க்கையையே அவர் நிஜத்திலும் வாழ்கிறார் என்று நம்ப வைக்கப்பட்டது. இந்தத் திரைப்பட வாழ்க்கைக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை எனத் துடைத்து அழித்துப் பதிய வைத்தது பொதுபுத்தியில் கச்சிதமாகச் சென்று சேர்ந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் பற்றி எழுதிய ஒரு ஆய்வு அறிக்கை இப்படிச் சொல்கிறது:

”எம். ஜி. ஆரின் திரைப்படங்களில் வெளிப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தாண்டி இந்த ரசிகர்மன்ற உறுப்பினர்களால் செல்ல இயலாமல், திரையில் காட்டப்படுவதே எம்.ஜி.ஆரின் குணம் என நம்பப்படுகிறது. அவரின் ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர் நல்ல மனிதர் என்கிற அவர்களின் வாதத்தை நிறுவுங்கள் எனக் கேட்ட பொழுது, எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் இருந்தே எல்லாரும் எடுத்துக்காட்டுகள் தந்தனர் என்பதில் இருந்து இது தெளிவாகின்றது.” (நூலிலிருந்து பக்.157)

நூல்:பிம்பச் சிறை
(எம்.ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்)
ஆசிரியர்: எம்.எஸ்.எஸ். பாண்டியன்
தமிழில்: பூ.கொ. சரவணன்

வெளியீடு: பிரக்ஞை பதிப்பகம்,
10/2 (8/2), போலீஸ் க்வாட்டர்ஸ் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017.
தொலைபேசி எண்: 044 – 2434 2771
கைபேசி : 99400 44042 – 98414 94448
மின்னஞ்சல் : publications@pragnai.com

பக்கங்கள்: 248
விலை: ரூ 225.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: udumalai | noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க