ன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்றால் வேர்மட்ட ஜனநாயகம், பெண்கள் − தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்ற வழக்கமான கதைகள் ஒருபுறம்; இக்கதைகளை எல்லாம் எள்ளி நகையாடும் வகையில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர் பதவிகளை ஏலம் விடுவது மறுபுறம் என ‘ஜனநாயகக் கூத்துகள்’ அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
வேர்மட்ட ஜனநாயகத்தை அரிக்கக்கூடிய இந்த ஏல முறை பற்றி இப்போதுதான் தெரியும் என்பதுபோல, தூக்கத்திலிருந்து எழுந்த மாநிலத் தேர்தல் ஆணையம் ‘கடுமையான’ உத்தரவுகளைப் போட்டிருப்பதாக ஊடகங்கள் பூச்சாண்டி காட்டுகின்றன. தேர்தல் ஆணையம் சொல்லும் அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சித் தத்துவம், ஜனநாயக முறையிலான உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் எப்படி இருக்கிறது?
படிக்க :
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !
பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட எந்தப் பதவியாக இருந்தாலும், அந்தப் பதவிக்குப் போட்டியிடும் பெண்களின் கணவர்களே ‘உண்மையான’ வேட்பாளர்கள். எந்தப் பெண் வெற்றி பெற்றாலும், அதிகாரப் பசி கொண்ட அவர்களின் வீட்டு ஆண்களே ‘செயல்படும்’ அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
இது ஒருபுறம் இருக்க, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடுகள் உள்ள ஊர்களில், ஆதிக்க சாதியினரின் கைப்பாவைகளே வேட்பாளராக நிறுத்தப்படுவதும், தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் ஆதிக்க சாதியினரின் சதிகளால் பிளவுபட்டுத் தோற்பதும் தொடர் நிகழ்வுகள். அதையும் தாண்டி வெற்றி பெறும் தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பான பெண்கள் ஊராட்சித் தலைவர் நாற்காலியில் அமர்வதே ‘பெருங்குற்றம்’ என்ற நிலைதான் இன்னும் நீடிக்கிறது.
தேர்தல் ஆணையம் சொல்லும் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முயன்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், தலைவராகத் தேர்வு செய்யப்பட்டாலும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதும், இழிவுபடுத்தப் பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இவை, ஆணாதிக்க − சாதிய மேலாதிக்கத்தின் கீழ் உள்ளாட்சித் தேர்தலின் ‘ஜனநாயக’ மாண்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதற்கான உதாரணங்கள்.
இந்த ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டும் இன்னொரு கூறாக இருப்பவர்கள் கார்ப்பரேட்டுகள், திடீர்ப் பணக்கார ரவுடிகள் உள்ளிட்ட பணம் படைத்த கும்பல். ஏலம் விடப்படும் ஊராட்சிகளில் கல் குவாரி, மணல் குவாரி என இயற்கை வளங்களைச் சூறையாடும் கும்பல்களோ, சுற்றுச்சூழலை நாசம் செய்யும் கம்பெனிகளோ கட்டாயம் இருக்கவே செய்கின்றன. ஊராட்சி சார்பாக இவர்களிடம் ‘வசூல்’ செய்யும் அதிகாரத்துக்கோ, நத்திப் பிழைக்கும் நோக்கத்திலோதான் தேர்தலுக்கு முன்பாகவே ஐந்து முதல் அறுபது இலட்சம் வரை கொட்டி, ஏலத்தில் வெற்றி பெற்று, பதவிக்கு வருகிறார்கள். எதிர்ப்பார் யாருமின்றி போவதால் இந்த ஊர்களில் தேர்தல் நடப்பதில்லை. அதாவது, ‘ஜனநாயகம்’ விலைபேசப்பட்டு விடுகிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கோடிகளைச் செலவிடும் நபர், பதவிக்கு வந்தபின், முதலீடு செய்த பணத்தை ஒன்றுக்கு பத்தாக, நூறாகத் திரும்ப எடுப்பது எல்லாரும் ‘ஏற்றுக்’ கொள்ளும் உண்மையாகி இருக்கும்போது, ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மட்டும் நேர்மை, பரிசுத்தத்தின் அடையாளமாக இருக்க முடியுமா?
பொறுக்கித் தின்பதற்கு மட்டுமே நேர்ந்து விடப்பட்டுள்ள இந்த ஊராட்சித் தேர்தலில், அரிதினும் அரிதான வகையில் மக்கள் ஆதரவோடு வென்று, ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் கிராம சபை − ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தை நிலைநாட்டுவது, அதாவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டுவது என்று எவரேனும் புறப்பட்டால், அவர்களின் கதி என்னவாகும்?
இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராக, சுற்றுச்சூழலை நாசம் செய்யும் கம்பெனிக்கு எதிராக, அரசே நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் போட்டு தடுத்து நிறுத்த முடியுமா? எத்தனை ஊர்களில் அப்படி சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படிருக்கிறது? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போடப்பட்ட தீர்மானங்களின் கதி என்ன?
நெல்லை − கங்கைகொண்டானில் இருக்கும் கோக் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் தலைவரை, அந்நிறுவனமே கொன்றொழித்ததே, இது அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நியாயமாகும்? மணற்கொள்ளையை எதிர்த்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அரசின் எந்த உறுப்பு நியாயம் தேடிக் கொடுத்தது?
இவை யாவற்றையும் விட, ‘ஜனநாயக’ முறைப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றம், அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்தால், கட்டுப்பட மறுத்தால் அதைக் கலைக்கும் உரிமையை மாவட்ட கலெக்டருக்குக் கொடுத்திருப்பது இதே சட்டம்தானே?
எந்தவிதமான ஜனநாயக முறையின்படியும் தேர்வு செய்யப்படாத கலெக்டர்தான் மாவட்டத் தேர்தல் அதிகாரி; அவர் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கிராம சபைகளைக் கலைக்கும் அதிகாரம் படைத்தவர் என்பதை நியாயப்படுத்துகிறது, தேர்தல் ஆணையம். இத்தகைய ஜனநாயக விரோத தேர்தல் ஆணையம்தான், ஊராட்சித் தேர்தலில் ஏலம் எடுக்கும் முறை ‘ஜனநாயக’ விரோதமானது என கூப்பாடு போடுகிறது.
படிக்க :
புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !
நாட்டின் இயற்கை வளங்களை, மக்களின் உரிமைகளை பன்னாட்டு − உள்நாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்து, நாட்டையே மறுகாலனியாக்கும் ‘இலட்சிய வேகத்துடன்’ செயல்படும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கமெனில், இங்கு ஜனநாயகத்திற்கு இடமேது?
இத்தகைய மோசடி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, தேர்ந்தெடுக்கவும், திரும்ப அழைக்கவும், கண்காணிக்கவும் உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாங்க முறையை, சட்டமியற்றும் மக்கள் பிரதிநிதிகளே அதை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு அமைப்பை உருவாக்கும் போராட்டங்களின் மூலமாகத்தான் மக்களை ஜனநாயகப்படுத்துவதும், மக்களுக்கான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும் சாத்தியம்.
புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க