த்தாலியில் 1924−இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முசோலினியின் பாசிஸ்ட் கட்சி தலைமையில் உருவான தேசிய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்த பின்னர், அரசியல் கொலைகள், கும்பல் வன்முறைகள் முதலான சட்டவிரோதமான செயல்பாடுகளைச் செய்துகொண்டே, சட்டங்களைத் திருத்தி ஒரு போலீசு ராஜ்ஜியத்தை உருவாக்குவது, அரசு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பாசிஸ்டுகளை புகுத்துவது − என சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிமுறைகளை இணைத்துக் கொண்டுதான் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. அவற்றுள் “நாடாளுமன்றத்திற்கு கட்டுப்படாத” பிரதமரை உருவாக்கியது குறிப்பிடத்தக்க அம்சம்.
இத்தாலியின் வரலாறு, தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிகழ்வுகள் அனைத்தும் பாசிசம் வேகமாக அரங்கேறி வருவதை நமக்கு எச்சரிக்கவும் செய்கிறது.
000
மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பதும், நாடாளுமன்றத்தில் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கான நேரமும் சூழலும் குறைவதுமான இரண்டு போக்குகளும் அதிகரித்து வந்தன. கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கிய பின்னர், இவ்விரு போக்குகளும் மேலும் தீவிரமடைந்தன.
படிக்க :
இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கொத்துக் கொத்தான மரணங்கள், கங்கைக் கரையை நிறைத்த பிணங்கள், சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் − என்ற மோடிக்கு நெருக்கமான இரண்டு நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட தடுப்பூசிக் கொள்கை, அவர்களுக்கு மட்டுமே ஏகபோக அனுமதி, கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில் உத்திரப்பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மோடி − அமித்ஷா கும்பல் ஆயிரக்கணக்கனோரைக் கொண்டு நடத்திய தேர்தல் பொதுக்கூட்டங்கள் − பிரச்சாரங்கள் ஆகியவையெல்லாம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்புகளை உருவாக்கின.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி நிலுவைகளை வழங்காமல் ஏமாற்றி வருவது, இந்திய − சீன எல்லைப் பிரச்சனை, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை, அம்பலப்பட்டு நாறிய ரஃபேல் ஊழல், விண்ணை முட்டும் பெட்ரோல் − டீசல் விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் போன்ற எதையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை. மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகாவின் அடாவடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாத மோடி அரசின் அலட்சியப்போக்கானது, இனியும் இந்த ஆட்சியைச் சகித்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு நாட்டு மக்கள் அனைவரையும் தள்ளியது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள், வேலை இழப்புகள் போன்ற அனைத்திலும் மோடி அரசு பொய்யான விவரங்களை அள்ளி வீசியது. கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் வகையில் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தது. இவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை உழைக்கும் மக்கள் நடத்தி வந்தனர்.
நாட்டில் நடந்துவரும் இந்த அசாதாரணமான நிலைமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை என்பதும், மற்றொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் விவாதங்கள் நடப்பது குறைந்து வருவதென்பதும் தொடர்ந்தது.
சென்ற 2020−ம் ஆண்டில் கொரோனா முதல் அலை உருவாகியதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரிலும் அவையின் நேரம் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரும் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும், ஆளுங்கட்சியின் அராஜகமான செயல்பாடுகளாலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாலும் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படவில்லை. ஆகவே, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலாவது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் எதிர்கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 19−ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 13−ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
000
நாடாளுமன்றத்தில் கேள்விகளை அனுமதித்து முறையாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்ட நிலையில், இரு அவை உறுப்பினர்களையும் ‘‘நாடாளுமன்றத்திற்கு வெளியே’’ கூட்டி பிரதமர் உரையாற்றுவார்; அதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அதைக் கைவிட்டது மோடி அரசு.
இந்நிலையில், முதல்நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அன்றைய நாள் மாலையில், இசுரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் ‘‘பெகாசஸ் ஸ்பைவேர்’’ என்ற செயலி மூலம் மோடி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் − என இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரை உளவு பார்த்த விவகாரம் வெளிவரத் தொடங்கியது.
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு, மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமானது. எதிர்க்கட்சிகளின் ஃபோனை ஒட்டுக்கேட்கும் விவகாரம் என்பது புதிய விசயமல்ல. இதற்கு முன்னர் காங்கிரசு ஆட்சியிலும் நடந்தவைதான். நவீன தொழில்நுட்பம் வளர்ந்ததை அடுத்து செல்ஃபோன் வழியாக எதிர்க்கட்சிகளையும், தனது அரசை விமர்சிப்பவர்களையும் துல்லியமாக உளவு பார்த்துள்ளது பா.ஜ.க அரசு. புதிய விசயம் என்னவென்றால், இதுவரை சொந்த நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகளே உளவு பார்த்துதான் வரலாறு. ‘தேச பக்தி’யை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் பா.ஜ.க-வோ அந்நியக் கம்பெனி மூலம் சொந்த நாட்டு மக்களை உளவு பார்த்து, ‘தேச பக்தி’யில் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது.
விவாதங்கள் நடத்தாமல் நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதை தனது மரபாகவே கொண்டுள்ள பா.ஜ.க-வுக்கும் பிழைப்புவாத எதிர்க்கட்சிகளுக்கும் இந்த பெகாசஸ் பிரச்சனை நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஜூலை 20−ம் தேதி முதல் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தபோதிலும், அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதைக்காட்டி, ‘‘பாருங்கள், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிபடுத்துகிறார்கள்’’ என்று நரித்தனமாகப் பிரச்சாரம் செய்து தன்னை ஜனநாயகக் காவலனாகக் காட்டிக் கொண்டது, பா.ஜ.க.
அரசின் மீதான விமர்சனங்களை விவாதிக்க அனுமதி மறுப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுப்பது, ‘‘கூச்சல் போடுகிறார்கள்’’ என்று சொல்லி எதிர்க்கட்சியினரை அவையிலிருந்து வெளியேற்றுவது, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை விவாதக் குறிப்பில் இருந்து நீக்குவது, தொடர்ந்து அவையை ஒத்திவைப்பது, பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் நாடாளுமன்றத்தை அவமதிப்பது − என பாசிஸ்டு கட்சிக்கே உரித்தான வகையில் நாடாளுமன்றத்தை நடத்தியது பா.ஜ.க.
திரிணாமுல் காங்கிரசு எம்.பி−க்கள் ஐந்து பேரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது, விவாதிக்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளை ‘‘நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை’’க் கெடுத்துவிட்டார்கள், ‘‘நாடாளுமன்றத்தின் மாண்பு’’ பறிபோய்விட்டது என்று குறை கூறியது, மாநிலங்களவையின் சபாநாகர் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது − என நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது மட்டுமல்ல; கேள்வி கேட்கும் அடிப்படை உரிமையையே கேலிக்கூத்தாக்கி எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடியது மோடி − அமித்ஷா கும்பல்.
அத்தனை அயோக்கியத்தனங்களையும் அராஜகங்களையும் தானே செய்துவிட்டு, இறுதியில், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற வேண்டிய இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடித்துவிட்டதாக மோடி அரசு அறிவித்தது.
இந்திய ஜனநாயகத்தில் இன்னமும் நிலவுவதாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ‘விவாதச் சுதந்திரமும்’ நிராகரிக்கப்பட்டுவிட்டதன் மூலம் ‘‘ஜனநாயகம் செத்துவிட்டது’’ என்று சொல்லி எதிர்க்கட்சிகள் புலம்புவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் முடங்கிவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகளை நாடாளுமன்ற அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்றாமல், வெளியாட்களைக் கொண்டு வெளியேற்றி, எதிர்க்கட்சிகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மேலும் கேலிக்குரியதாக்கியது, மோடி அரசு.
படிக்க :
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?
இறுதிவரை, தாங்கள் எழுப்பிய எந்தப் பிரச்சனையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாத எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லியில் பேரணி சென்ற அவலக் காட்சி நடந்தேறியது. இந்த பேரணியில், ‘‘நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்டது; ஆனால், நாட்டிலுள்ள 60 சதவிகித மக்களின் நலன்களுக்காக இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை; நாடாளுமன்றத்திற்குள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை; இதன் மூலமாக மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நடத்தியுள்ளது’’ என்று காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒப்பாரி வைத்தார்.
‘‘இந்த நாடு தங்களைக் கைவிட்டுவிட்டது என்ற உண்மையை எதிர்க்கட்சிகளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இக்கூட்டத் தொடரில், தெருக்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அராஜகத்தைக் கொண்டுவருவதே எதிர்க்கட்சிகளின் ஒரே செயல்திட்டமாக இருந்தது’’, ‘‘மழைக்காலக் கூட்டத் தொடரில் நடந்த சம்பவங்களுக்காக நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார் பா.ஜ.க-வைச் சேர்ந்த பியூஸ் கோயல். மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து, எதிர்க்கட்சிகள் மீது புகார் கொடுத்த நாடகமும் அரங்கேறியது.
தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த இந்த ‘ஜனநாயகப் படுகொலை’யை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டங்களை, 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் கூட்டமாகவும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கூட்டமாகவும் மாற்றப்பட்டிருந்த வரலாறை நமக்கு நினைவுபடுத்துகிறது.
000
அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான விவாதம் மற்றும் சட்டமியற்றுதல் ஆகிய இரண்டு கடமைகள் நாடாளுமன்றத்திற்குரிய சில முக்கிய கடமைகளாகும். இவற்றில் முதல் கடமையாகிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை; அதேசமயம், நாடாளுமன்றக் குழுக்களின் கருத்துகளோ, விமர்சனங்களோ, சோதனையோ இல்லாமலேயே நடப்புக் கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சாராசரியாக ஒவ்வொரு சட்ட மசோதாவும் 34 நிமிடங்களில் விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களைப் பற்றிய புதிய திவால் சட்டத் திருத்த மசோதா 2021 (Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2021) ஐந்தே நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மோசடி ஜனநாயகத்தை, ‘‘இந்தியா − செயல்படாத நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம்’’ என்று முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியோ, ‘‘விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல’’ என்று புலம்பியிருக்கிறார். ‘‘மோடி − அமித்ஷா−வின் கொடூர அரசாங்கம்’’, ‘‘பாசிசம்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார் திரிணாமுல் காங்கிரசின் எம்.பி ஒருவர்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்கள், திட்டங்களை விவாதத்தின் மூலம் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியே நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகிறது. ஆனால், அப்படிப்பட்டதொரு நிகழ்வே இல்லையென்றால், இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்புகின்றனர், சில அறிவுத்துறையினர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று நேர்ந்துள்ள இந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு வேதனையடையும் சிலர், சரியான கட்சி ஆட்சிக்கு வந்தால் இதனை மீட்டுவிடலாம் என்று கனவும் காண்கிறார்கள். ‘‘அரசியல் சாசனத்தைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்” என்றும் முழங்குகிறார்கள். ஆனால், இது செத்தவன் கையில் வெற்றிலையைக் கொடுத்த கதைதான்.
000
முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ‘‘அரட்டை மடம்’’ என்று கேலி செய்வார் லெனின். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்கவும் விவாதிக்கவும் கூட வாய்ப்புத் தராமல், தான் வகுத்துக் கொண்ட விதியின்படியே கூட இயங்க முடியாமல், அனைத்தையும் அவிழ்த்துவிட்ட அம்மண நிலைக்குச் சென்றுவிட்டது, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். 1992−ல் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கம் நடைமுறைக்கு வரும் முன்னர் நாடாளுமன்றத்தில் அடிதடிகளும் வேட்டிகளை கிழித்த கதைகளும் ஏராளமாக நடந்துள்ளன. முந்தைய காலங்களில், தங்களது பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் ஆளுங்கட்சியினரின் சர்வாதிகாரப் போக்கினாலும் நாடாளுமன்ற அராஜகங்கள் அரங்கேறி வந்தன. ஆனால், தனியார்மய − தாராளமயமாக்கலுக்குப் பின்னர் நடந்துவரும் நாடாளுமன்ற அராஜகங்களுக்கு ஒரு தனி இயல்பு உள்ளது.
தனியார்மய − தாராளமயம் என்பது வெறும் பொருளாதார ஆதிக்க கொள்கை மட்டுமல்ல; அரசியல், சமுதாயம், பண்பாடு − என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான கொள்கையுமாகும். இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கை தன்னளவிலேயே ஆகப் பிற்போக்கான, ஆக மிகக் கொடுங்கோன்மையான பாசிசத் தன்மை கொண்டது. இந்த கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதே ‘‘மக்கள் நல அரசு’’ என்ற பெயரில் திரைமறைவில் நடந்துவந்த ஆளும் வர்க்கச் சேவைக்கு பதிலாக, நேரடியான கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காகத்தான்; அதற்குத் தடையாக உள்ள அனைத்து பழைய பெயரளவிலான ஜனநாயக நடைமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். இந்தப்போக்கு 1990−களிலேயே தொடங்கிவிட்டது.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை, இருப்பிடம் போன்ற எந்த அடிப்படை உரிமைகளையும் உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவது அரசின் பொறுப்பல்ல; மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட வேண்டும்; முதலாளிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் புரோக்கர்களாக மட்டுமே அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதுதான் மறுகாலனியாதிக்கத்தின் கொள்கை.
இதனடிப்படையில், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., தேசிய நீர்க்கொள்கை, தேசிய சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு, புதிய மருத்துவக் கொள்கை, டி.ஏன்.ஏ சட்டத் திருத்தம், ஊ.பா போன்ற கருப்புச் சட்டங்கள், ஆதார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை − என பா.ஜ.க அரசும், அதற்கு முந்தைய காங்கிரசு அரசும் கொண்டுவந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் நிறுவுவதாகவும், அரசியல் சாசனம் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கி வந்த உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் நடவடிக்கைகளாகவுமே அமைந்துள்ளன.
மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளின் உரிமைகளை ஒழித்துக் கட்டமுடியும் என்பதையும், சொல்லிக்கொள்ளப்படும் ‘‘கூட்டாட்சி தத்துவம்’’ என்பது ஒரு வெங்காயமும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.
முப்படை தளபதிகளும் கூட்டுச்சேர முடியாது, இது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு என்றெல்லாம் தாராளவாதிகள் பெருமை பீற்றிக் கொண்டனர். ஆனால், முப்படைகளையும் இணைத்து இராணுவ ஜெனரல் என்ற ஒரு புதிய அதிகாரத்தை மோடி அரசு உருவாக்கியபோது இவர்கள் வாயடைத்து போனார்கள்.
இதுமட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தைத் திட்டமிடும் தேசிய திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு தனியார்மய − தாரளமய − உலகமயக் கொள்கைகளை நேரடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆயோக் நிறுவப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் புள்ளியல் துறை செயலிழக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு இருந்த பல அதிகாரங்கள் கார்ப்பரேட் அதிபர்களையும் அதிகாரிகளையும் கொண்ட ஆணையங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பங்கிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் − டீசல் விலையைத் தீர்மானிப்பது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது வரை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றன. எந்தத் தொழிலுக்கான விதிமுறைகளையும் இனி கார்ப்பரேட்டுகளே வகுத்துக் கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, ஆணையங்களிடம் வழங்கப்பட்டுவிட்டன.
இந்த ஆணையங்களை அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் கொண்ட ஒரு கும்பல் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஆணையங்களின் தலைவர்களைப் பிரதமரின் அலுவலகம் கட்டுப்படுத்துகின்றது. இவற்றின் அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.
தன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் முக்கியமான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் ரிசர்வ் வங்கியின் நிதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. தேர்தல் கமிசனோ, மோடி அரசுக்கு ஐந்தாம் படையாகவே வேலை செய்கிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசின் கலாச்சார நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள் திட்டமிட்டே நுழைக்கப்பட்டுள்ளனர்.
படிக்க :
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
பொது சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
மொத்தத்தில், பீற்றிக்கொள்ளப்பட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்டுவிட்டன. அதன் உச்சமாக நாடாளுமன்ற ‘‘விமர்சன சுதந்திரம்’’ அடைந்திருக்கும் பரிதாப நிலையைத்தான் மேலே விளக்கியுள்ளோம்.
இறுதியாக, உளுத்துப்போன குட்டிச்சுவராக காட்சியளிக்கும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக உள்ள கட்டிடத்தையும் மோடி − அமித்ஷா கும்பல் விட்டுவைப்பதாக இல்லை. இந்தப் பழைய கட்டிடத்திற்கு பதிலாக, ரூ.20,000 கோடி செலவில் சென்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியமைத்து வருகிறது.
1925−ம் ஆண்டில் உருவான ஆர்.எஸ்.எஸ்−ன் நூற்றாண்டு நெருங்கி வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்து ராஷ்டிரத்தின் அங்கமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் அமையும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதுவே, இந்துராஷ்டிரம் தொடங்குவதை அறிவிப்பதாகவும் அமையலாம் !

புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க