முதல் பாகம் || பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !

பாகம் 2 : ஹிட்லருக்கு எஸ்.எஸ். உளவுப் படை – மோடிக்கு பெகாசஸ்

திருடனுக்குத் தேள் கொட்டியது போல வாய்மூடிக் கிடக்கும் மோடி அரசு :

முன்னரே கூறியது போல 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெகாசஸ் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கண்காணிக்கப்பட்டது அம்பலமானது. அந்த சமயத்தில் வாட்சப் நிறுவனம், இந்தியர்களின் தகவல்கள் வாட்சப் மூலம் கண்காணிக்கப்படுவதாக 2019-ம் ஆண்டின் மே மாதமே ஒன்றிய அரசிடம் தகவல் தெரிவித்ததாக அறிவித்தது.

எனில், கடந்த 2019, மே மாதமே இந்தியர்கள் கண்காணிக்கப்படுவது குறித்து தகவல் தெரிந்தும் ஒன்றிய அரசு, அதற்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்காததற்கான காரணம் என்ன ?

அடுத்ததாக 2019, அக்டோபர் மாத இறுதியில் வாட்சப் நிறுவனம், இந்தியர்களின் அலைப்பேசிகள் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் தான் ஒற்றுளவு பார்க்கப்பட்டன என்பதை பகிரங்கமாக அறிவித்து, என்.எஸ்.. நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.

இதற்குப் பிறகும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மேல் வழக்கு தொடராதது ஏன் ? ஒரு அரசாங்கம் என்ற வகையில் தனது ‘நட்பு’ நாடான இஸ்ரேலின் மூலம் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அவ்வளவு ஏன், விவகாரம் தற்போது வெளியே வந்து நாறிய பிறகும் கூட என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மோடி அரசு வாய் திறக்கவில்லையே..

இந்தப் பின்னணியில், சட்டீஸ்கரின் தற்போதைய முதல்வர் பூபேஷ் பகெல் என்.எஸ்.ஓ நிறுவன அதிகாரிகள் பாஜகவின் ராமன்சிங் ஆட்சி நடந்த போது சட்டீஸ்கருக்கு வந்து சென்றனர் என்று சமீபத்தில் தெரிவித்ததையும் இணைத்துப் பார்த்தால், மோடி அரசு இன்னும் மலைமுழுங்கியைப் போல கமுக்கமாக இருப்பது ஏன் என்று புரியும்.

திருடனுக்குத் தேள் கொட்டினால், அவன் பொத்திக் கொண்டு தானே இருக்க முடியும் ?

படிக்க :
♦ பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

இந்த உளவு வேலையின் பரிமாணம் என்ன ?

இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்களின் மூலம், அவர்களுக்குத் தெரியாமலேயே இந்நாட்டின் இரகசியங்களை ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் கண்காணித்திருக்கிறது மோடி அரசு.

பொதுவாகவே, இந்த விவகாரம் பத்திரிகை சுதந்திர பறிப்பு, எதிர்க்கட்சிகளைக் கண்காணித்தல், நீதிபதியை கண்காணித்தல் என தனித்தனி விவகாரங்களாகவே பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதில் உளவு என்பது ஒரு அங்கமாக இருக்கத்தான் செய்யும். பொதுவாக முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில், நிலவும் அரசுக் கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், கடத்தல் பேர்வழிகள் ஆகியோரை கண்காணிக்கவே உளவு வேலைகள் பயன்படுத்தப்படும். அதைப் போல இதுவும் ஒரு சாதாரண உளவு அல்ல.

ஏனெனில், இங்கு உளவு பார்க்கப்பட்டவர்களில் யாரும் பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ, பெண்கள் / குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்களோ அல்ல. (அத்தகையவர்கள் அனைவரும் பாஜகவிலும் சங்க பரிவார அமைப்புகளிலும் தான் இருக்கிறார்கள் என்பது தனி விவகாரம்). உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இந்த அரசுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் அல்ல. இந்த அரசுக் கட்டமைப்பை ‘சீராக’ இயக்கியவர்கள். இந்த அரசுக் கட்டமைப்பின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள்.

இந்த நாட்டின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள், இராணுவத்தினர், உளவுத்துறை ஆகியோர் வரை அனைவரையும் கண்காணித்திருக்கிறது மோடி அரசு.

ஒரு நாட்டை ஒழித்துக் கட்டவோ, அடிமைப்படுத்தவோ விளையும் ஒரு எதிரி நாடு யார் யாரையெல்லாம் கண்காணித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விளையுமோ, அவர்களையெல்லாம் கண்காணித்திருக்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

எனில், இவர்களின் நோக்கம் என்ன ?

ஜெர்மனியில், தேர்தல் மூலம் வெற்றிபெற்ற ஹிட்லர், ஆட்சியில் அமர்ந்ததும் அந்நாட்டு பத்திரிகைகள், கலைத்துறையினரை தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தான். எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கினான். தேச வளர்ச்சி எனும் பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களை இயற்றினான். நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

ஜெர்மனியின் ஜனநாயகக் கட்டமைப்பை படிப்படியாக மூன்றே ஆண்டுகளுக்குள் தனது நாஜி சர்வாதிகார ஆட்சிக் கட்டமைப்பாக மாற்றினான் ஹிட்லர். இதையெல்லாம் செய்வதற்கு ஹிட்லருக்கு தனது சொந்த நாட்டு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களையே உளவு பார்க்க வேண்டிய அவசியம் இருந்தது. ஹிட்லரின் எஸ்.எஸ். உளவுப் பிரிவு இந்தச் சேவையை செவ்வனே செய்தது.

அதை அப்படியே இந்தியாவில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது மோடி அமித்ஷா கும்பல். சொந்த நாட்டு அரசுக் கட்டமைப்பின் பொறுப்பாளர்களை கண்காணித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், தமது இந்துராஷ்டிர பாசிச அரசுக் கட்டமைப்பை நோக்கியப் பயணத்தை விரைவுபடுத்தியிருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன ?

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளன. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்க மோடி அரசு தயாராக இல்லை.

நீதிமன்றமோ வாய் மூடி அமைதி காக்கிறது. உலகத்தையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில், ஒரு பொறுப்புள்ள நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் (suo-motto) பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரையில் ஏதும் நடக்கவில்லை. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராமும் மற்றொருவரும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அவ்வழக்கு இன்னும் எத்தனை மாதங்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்பது மோடி அமித்ஷா கும்பலுக்கே வெளிச்சம்.

குற்றவாளியே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அரசுக் கட்டமைப்பின் அனைத்து அதிகார மட்டத்திலும் இருப்பவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் சட்டப்படியான எவ்வித முன்னெடுப்புகளும் தீர்வைத் தருவதற்கான வாய்ப்பு இல்லை.

பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பிற கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் போராட்டமாகக் கொண்டு போகிறார்களே தவிர, இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று இதை மக்கள் போராட்டமாகக் கொண்டு செல்லவில்லை. அதற்கான முனைப்பும் எதுவும் இல்லை. அப்படி கொண்டு செல்லக் கூடிய அமைப்புகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

ஒரு உளவு மென்பொருள், நான்கு சுவருக்குள் நடைபெறும் நமது அந்தரங்கங்களை வேறு ஒருவருக்கு நேரலையாக அனுப்புகிறது. நவீன பெருவீத உற்பத்தியில் பண்ணைகளில் ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க அவை அடைக்கப்பட்டுள்ள பட்டிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விலங்குகளுக்கு அந்தரங்கம் என்று எதுவும் கிடையாது என்ற வகையில் அவை அது குறித்துக் கவலைப்படுவதில்லை.

நமது அந்தரங்க நடவடிக்கைகளை நமது கைப்பேசியின் மூலமாகவே ஒரு கிரிமினல் கும்பலால் பார்க்க முடியும் அளவிற்கு ஒரு பெரும் தொழில்நுட்பக் கேடான விவகாரத்தை ஒரு அரசே செய்திருக்கிறது என்ற கோபம் நமக்கு வருவதில்லை.

தனிப்பட்ட ரகசியம் காக்கப்படும் என்ற உறுதியளித்துதான், கண் கருவிழி அடையாளம், கைரேகை என நமது தனித்துவ அடையாளங்களை ஆதார் என்ற பெயரில் ஏற்கெனவே இந்த அரசு எடுத்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவை கசிந்த போதும் அதைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. இதைப் பற்றி நம்மில் பலருக்கும் கவலையில்லை.

அதே போலத்தான் தற்போது பெகாசஸ் எனும் இந்த உளவு மென்பொருள் திருட்டுத்தனமாக பலரது அலைபேசிகளில் நுழைக்கப்பட்டு பலரும் கண்காணிக்கப்பட்டதையும், பலரது அந்தரங்கத் தகவல்கள் அரசின் கைகளில் இருப்பதையும் நாம் சர்வ சாதாரணமாகக் கடந்து போகிறோம். அது யாரோ ஒருவருக்கு எங்கேயோ நடப்பதாகவும், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் நினைக்கிறோம். நமது அந்தரங்கம் குறித்த இந்த அக்கறையற்ற மனநிலையே, பாசிஸ்டுகளுக்கு பலம் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துராஷ்டிரத்தை நோக்கிய முன்னெடுப்பில் அரசுக் கட்டமைப்பில் இருக்கும் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். நாளை இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட்ட பிறகு, பாரத மாதாவின் பெயரால் பெகாசஸ் போன்ற ஒரு அதிகாரப்பூர்வ உளவு மென்பொருள் மூலம் ஒவ்வொரு குடிமகனும் கண்காணிக்கப்படலாம்.

இந்துராஷ்டிரத்தை ஏற்றுக் கொண்டு, பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் நிலைமைக்குச் செல்ல நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது இத்தகைய உளவு வேலைகளுக்கு எதிராகவும், இந்து ராஷ்டிரத்துக்கு எதிராகவும் களம் இறங்கப் போகிறோமா ?

(முற்றும்)


சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க