ஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ ( NSO Group) நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus spyware) உதவியுடன் அல் ஜசீரா (Al Jazeera) உட்பட பல்வேறு செய்தி நிறுவனங்களில் பணி புரியும் 30-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உளவு பார்க்கப்பட்டதை சிட்டிசன் ஆய்வக (Citizen Lab) இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி தனிநபர்களது கைப்பேசியில் (ஆண்டிராய்டு அல்லது ஐபோன்) உள்ள தகவல்களை அவர்களறியா வண்ணம் உளவு பார்க்கவும் திருடவும் முடியும்.

அல் ஜசீராவின் புலனாய்வு திரைப்படத் தயாரிப்பாளரான தாமர்  அல்மிஷல் (Tamer Almisshal) ​தன்னுடைய தொலைப்பேசி உளவு பார்க்கப்படுவதாக சந்தேகித்து,  டொராண்டோ பல்கலைகழகத்தின் ( University of Toronto) சிட்டிசன் லேபிடம் aது குறித்து அச்சம் தெரிவித்திருந்தார். அவருடைய கைப்பேசியை கண்காணிக்க சிட்டிசன் லேபிடம் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

”ஜூலை 19, 2020-ல் ஒரு வலைதளத்திற்கு அவரது ஐபோன் மூலம் அவர் சென்றதை எங்களது இணைய ஸ்கேனிங்கில் கண்டறிந்தோம். அதன் மூலம் தான் அவரது போனில் பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே அவரது போன் உளவுப் பார்க்கப்பட்டிருக்கிறது” என்று சிட்டிசன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் அவர்களது அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

படிக்க :
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !
♦ உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

இந்த உளவு நடவடிக்கையையை சவுதி அரேபியா மற்றும் யு.ஏ.இ (UAE) நாட்டு அரசாங்கங்கள் நடந்தியிருப்பதை ஆய்வு உறுதிபடுத்துகிறது. அல் ஜசீரா ஊடகவியலாளர்களின் கைப்பேசிகளை 4 பெகாசஸ் ஸ்பைவேர் ஆபரேட்டர்கள் உளவு பார்த்திருப்பதை சிட்டிசன் ஆய்வகம் உறுதி செய்திருக்கிறது. அதில் ஒரு ஆபரேட்டரான ”மோனார்கி” (MONARCHY) சவுதியுடன் தொடர்புடையது என்றும் மற்றொரு ஆபரேடர் ”ஸ்னீக்கி கெஸ்ட்ரெல்” (SNEAKY KESTREL) யு.ஏ.இ யுடன் தொடர்புடையது என்றும் ஆய்வு கூறுகிறது.

ஐபோனின் IOS 14-க்கும் முன்னதான அனைத்து ஐபோன்களும் இந்த ஸ்பைவேர் மூலம் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்பிருப்பதாக ஆய்வகம் தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக ஐபோனின் வாடிக்கையாளார்கள் தங்களது ஐ.ஓ.எஸ் (IOS) இயக்கு தளத்தை புதுப்பிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. ஆனால் NSO Group இந்த குற்றச்சாட்டை வழக்கம் போலவே மறுத்துள்ளது. இதற்கு சான்று எதுவும் இல்லை என்றும் நாங்கள் வழக்கம் போலவே பாதுகாப்பான உலகை உருவாக்க பாடுபடுவோம் என்று NSO-ன் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

ஐபோனில் உள்ள பாதுகாப்பு குறைப்பாட்டினைப் பயன்படுத்தி இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்காக கிஸ்மெட் (Kismet) என்ற மென்பொருள் பயன்படுத்தப்பதை போனிலிருந்த பதிவுகள்(logs) மூலம் கண்டறிந்திருக்கிறது. பயனாளிகளின் செயல்பாடு இல்லாமலேயே கைப்பேசிக்குள் ஊடுறுவும் இந்த வகையான தாக்குதலை ஜீரோ கிளிக் தாக்குதல் ( “zero-click” exploits) என்று அழைக்கிறார்கள். இந்த தாக்குதல்கள் iMessage எனப்படும் ஐப்போனின் செயலிகள் வழியாக பெரும்பாலும் நடக்கின்றன. மேலும் வாட்ஸப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) என்று எந்த செயலிகளும் இதிலிருந்து தப்ப முடியாது.

யு.ஏ.இ-யின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான டார்க்மேட்டர் (DarkMatter) 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ஜீரோ கிளிக் தாக்குதல் மென்பொருளைப் (Karma) பயன்படுத்தி அல் ஜசீராவின் தலைவர் உள்ளிட்ட ஏராளமான நபர்களின் கைப்பேசிகளை உளவு பார்த்திருக்கிறது. மேலும் 2018 ல் ஐபோனின் பாதுகாப்பை வெற்றிகரமாக உடைத்திருப்பதாக பெகாசஸ் கூறியது. ஆனால் அது என்ன ஐபோன் செயலி வழியாக அதைச் செய்தது என்று கூறவில்லை.

மெக்சிகோ, சவுதி அரேபியா, யு.ஏ.இ என NSO-க்கு ஏராளமான அரசாங்க வாடிக்கையாளர்கள் உள்ளனர். அல் ஜசீரா வெளியிடும் அரசியல் ரீதியிலான செய்திகள், கட்டுரைகள் மற்றும் காணொளிகள் மத்திய கிழக்கின் உண்மையான தோற்றத்தை உலகம் காண்பதற்கு வழிவகை செய்கின்றன. மேலும் அது மத்திய கிழக்கில் நடைபெறும் நிகழ்வுகளை மாறுபட்ட கோணத்தில் வழங்குகிறது. இது சவுதிக்கும், யு.ஏ.இ-க்கும் அல் ஜசீராவின் மீதான வெறுப்புக்கும் போதுமான காரணமாக இருக்கிறது.

துனிசியா, எகிப்து, ஏமன், லிபியாவில் நடைபெற்ற ”அரபு வசந்த” போராட்டங்களை நேரலை செய்ததன் மூலம் போராட்டத்தின் வீச்சை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அல் ஜசீரா உதவியாக இருந்தது. தொடர்ந்து 2017-ல் சவுதி மற்றும் யு.ஏ.இல் அல் ஜசீரா தடை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை குறி வைத்து அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் இந்த நாடுகள் முடக்கிவிட்டன.

சவுதி அரேபியாவை தொடர்ந்து விமர்சித்து வந்த அல் அராப் செய்தி நிறுவன ( Al-Arab News Channel) ஊடகவியலாளரான ஜமால் காஷோகியை (Jamal Khashoggi) 2018 அக்டோபரில் இஸ்தான்புல் தூதரகத்தில் சவுதி அரசாங்கம் படுகொலை செய்தது. அந்த கொலையை அல் ஜசீரா சார்பாக புலானாய்வு செய்தவர் தாமர் அல்மிஷல். இது ஒன்றே அவரை முடக்குவதற்கான காரணமாக இருந்தது. தொடர்ந்து ஜனவரி மாதம் சிட்டிசன் ஆய்வகத்தை அணுகி ஊடுறுவுத் தாக்குதலை கண்காணிக்க கோரியிருக்கிறார்.

இலண்டனை சேர்ந்த Al Araby TV-யைச் சேர்ந்த ரானியா ட்ரிட்டின் (Rania Drid) கைப்பேசியும் இதே போல உளவு பார்க்கப்பட்டிருந்து, அவர் அரபு உலகத்தில் நிகழும் பல்வேறு பாலியல் வன்முறைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.

படிக்க :
♦ டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

இந்திய அரசாங்கம் 2019-ம் ஆண்டில் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி 121 செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கண்காணித்ததாக கலிபோர்னிய நீதிமன்றத்தில் NSO ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. பீமா கோரேகான் வழக்கறிஞர் நிஹால் சிங் ரத்தோட், எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த் டெல்டும்ப்டே, மனித உரிமை வழக்கறிஞர் பேலா பாட்டியா, சிறையில் அடைக்கப்பட்ட செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் ஆகியோரின் செல்போன்களும் இந்தக் கண்காணிப்பு வளைத்தில் அடக்கம்.

உலகம் முழுதும் அரசாங்கங்களின் மக்கள் விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை குறி வைத்து இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. செயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன. இதன் மூலம் பிற செயல்பாட்டாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும்  அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை முடக்க முயற்சிக்கின்றன.


ஆறுமுகம்
BBC
, CitizenLab , The Quint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க