மத்திய அரசு வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டமன்றத்தை அவசரமாகக் கூட்டுவது தொடர்பாக மாநில அரசு கவர்னருக்கு அனுமதி கேட்டது. கேரள கவர்னரான ஆரிஃப் முகம்மதுகான் இதற்கு அனுமதி மறுத்துள்ளார்.
மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக விவசாயிகள் கடுமையாக எதிர்த்து நின்று போராடி வருகின்றனர். ஆயினும் மத்திய மோடி அரசு பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து, பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளைச் செய்து வருகிறது.
இந்தச் சட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களும், பாஜகவின் அடிவருடிகள் ஆளும் மாநிலங்களைத் தவிர பிற அனைத்து மாநில முதலமைச்சர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இப்போராட்டத்தை போர்க்குணத்துடன் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
படிக்க :
♦ கேரள போலி மோதல் கொலைகள் : பாசிசத்திற்கு துணைபோகும் பினராயி அரசு !
♦ “கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !
இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தமது மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இத்தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற அவசரகால அடிப்படையில் கேரள சட்டமன்றத்தைக் கூட்ட கவர்னரிடம் அனுமதி கேட்டுள்ளது கேரள அரசு. இதை கேரள அமைச்சரவையும் அங்கீகரித்திருக்கிறது.
இதற்கு அனுமதி மறுத்து அனுப்பிய கடிதத்தில், 15 நாட்கள் முன்கூட்டியே இது குறித்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், அவசர காலத் தேவை என்ற கேரள அரசின் காரணத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான்.

இந்த தீர்மானத்தைக் கண்டு கேரள கவர்னர் அச்சம் கொள்வதற்கான காரணம் என்னவெனில், 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டமன்றத்தில் ஒரே ஒரு பாஜக சட்ட மன்ற உறுப்பினரைத் தவிர மீதமுள்ள 139 உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கின்றனர்.
கவர்னரின் இந்த முடிவை கேரள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இருதரப்பிலிருந்தும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்து கவர்னருக்கு பதில் கடிதம் எழுதிய பினராயி விஜயன், கவர்னரின் இந்த முடிவு அரசியல்சாசன சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, இது குறித்துக் கூறுகையில், கவர்னரின் இந்த முடிவு ஜனநாயகமற்றது என்று கூறினார்.
அவசரக் கூட்டம் கூடுவதற்கு கவர்னர் அனுமதி மறுத்துள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரியில் கூட்டப்படவுள்ள நிதியறிக்கைக்கான கூட்டத் தொடரில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
கவர்னரின் இந்த முடிவைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிற சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டமன்றத்திற்கு அருகே இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட பினராயி விஜயன், “டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், இந்தியா சந்தித்துள்ள விவசாயிகள் போராட்டத்திலேயே மிகப்பெரியது. விவசாயிகளின் கோரிக்கையே நாட்டின் கோரிக்கை” என்றார்
விவசாயிகள் போராட்த்தை மக்கள் திரள் வழியிலான, ஒன்றுகுவிக்கப்பட்ட போராட்டம் என்று கூறிய பினராயி விஜயன், பிரபல போராட்ட இயக்கங்களைப் பிளவுபடுத்தி அழிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பது போல இந்த போராட்த்தை மோடி அரசாங்கத்தால் தோற்கடிக்க முடியாது என்று கூறினார். மேலும், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் பின் வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !
அரசியல்சாசனத்தின் பிரிவு 7-ன் படி “விவசாயம்” என்பது மாநில அரசு சட்டமியற்றும் அதிகாரத்துக்குக் கீழ் வரும் பகுதி என்பதால், 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து புதிய சட்டம் இயற்றுவது குறித்து மாநில அரசு பேசி வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இப்படி ஒரு தீர்மானம் இயற்றுவதற்கு தடையாக இருந்து பிரச்சினையையும் முரண்பாட்டையும் உண்டாக்குவது கேரள கவர்னருக்கு இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக கேரள மாநில அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது, எதிர்கட்சி நிலையெடுத்துப் பேசினார், கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான்.
கவர்னர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக. சட்டப்படி தீர்க்கமுடியாத இத்தகைய முட்டுக்கட்டைகளை வீதீயில் வைத்துதான் தீர்க்கமுடியும்!
கர்ணன்
நன்றி : The Wire
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு புறம் ஓட்டுப் பொருக்கி கட்சி என்று பிரச்சாரப்படுத்துவது மறுபுறம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதராவாக பேசுவது போல் இரட்டைத்தன்மை நிலைமை எடுப்பதுதான் வினவின் வாடிக்கையாக இருக்கிறது.
வினவு கம்யூனிசம் பேசிக் கொண்டே அணைத்து கம்யூனிச கட்சிகளையும் எதிர்மறையான விமர்சித்து வினவு வாசகர்களிடையே கம்யூனிசத்தையும்,கம்யூனிஸ்ட் கட்சிகளையும் எதிமறையாக விமர்சனம் செய்து குழப்பத்தை விதைக்கிறது.
இதில் குழப்பமடைய என்ன இருக்கிறது..! மாநில உரிமைகளை நடுவண் அரசு ஒடுக்க முனையும் போது, மார்க்சிஸ்ட் என்ன.. எந்த கட்சியாக இருந்தாலும் வினவு குரல் கொடுக்கும்.
“இரட்டைத்தன்மை”, “வாடிக்கை” போன்ற உங்களின் சொல்லாடல்கள், வினவிடம் heavy யாக வாங்கிக்கட்டிய மார்க்சிஸ்ட்டாக இருக்குமோ என எண்ண வைக்கிறது.