டந்த 03-11-2020 அன்று காலையில் கேரளாவின் வயநாடு பனசுரா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தோழர் வேல்முருகன் போலி மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தண்டர்போல்ட் படைகள் எனும் பெயரில் கேரள போலீசு படை அமைக்கப்பட்டு, அங்கு மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதியன்று மணிவாசகம் , கார்த்திக், அரவிந்த் மற்றும் ரெமா ஆகிய மாவோயிஸ்ட் தோழர்கள் அட்டப்பாடி பகுதியில் கேரள போலீசு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல கடந்த 2019, மார்ச் மாதத்தில் மாவோயிஸ்ட் தோழர் ஜலீல் என்பவரை போலி மோதலில் படுகொலை செய்தது கேரள போலீசு.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
♦ கேரளாவின் மோடியா பினரயி விஜயன் ?

தற்போது போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் வேல்முருகன், தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர். அவரது உடலை அடையாளம் காட்டிய அவரது தம்பி, வேல்முருகனின் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகவும், அவற்றின் தன்மையைப் பார்க்கையில் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது போலத் தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரையும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுத்துள்ளது கேரள அரசு.

உடலைப் பார்க்கச் சென்ற கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியிருக்கிறது கேரள போலீசு.  வேல்முருகனின் உடலைப் பார்க்க அனுமதிக்குமாறு கேட்ட கேரள காங்கிரஸ் துணைத்தலைவர் சித்திக்கை அனுமதிக்க மறுத்து குண்டுக்கட்டாக அவரை வெளியேற்றியது.  கேரள காங்கிரஸ் கட்சியே இதனை போலி மோதல் படுகொலை என்று குறிப்பிட்டுள்ளது.

போலி மோதல் கொலை நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்க மறுத்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் அரசு. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் பினராயி விஜயன் அரசால் மாவோயிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்ட போலி மோதல் கொலையைக் கண்டித்து நவம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தனது சொந்தக் கட்சி தொண்டர்கள் இருவரையே ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது பினராயி போலீசு. பினராயி அரசு எந்த அளவிற்கு ஆளும் வர்க்கத்திற்கு அடிபணிந்து சீரழிந்து போயிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்று !

கிட்டத்தட்ட சட்டீஸ்கரில் ராமன்சிங் தலைமையிலான முந்தைய பாஜக அரசு பல்வேறு போலி மோதல் கொலைகள் மூலம் அப்பகுதி பழங்குடி மக்களுக்கு ஆதரவாக விளங்கிய மாவோயிஸ்டுகளைக் கொன்று குவித்த அதே பாணியை கேரளாவிலும் பின்பற்றி வருகிறது பினராயி விஜயன் அரசு.

தோழர் வேல்முருகனின் இளவயது புகைப்படம்

இந்தியா முழுவதும் பாஜக – சங்க பரிவாரக் கும்பல் ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டரீதியான ஒடுக்குமுறைகளின் மூலமும்,  சட்டவிரோத போலி என்கவுண்டர்கள் மற்றும் சட்டவிரோத சங்க பரிவாரக் குண்டர்களைக் கொண்டு கொலை செய்தல் ஆகியவற்றின் மூலமும் பாசிசத்தை அமல்படுத்தி வரும் வேளையில் பாசிஸ்ட்டுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் இத்தகைய போலி மோதல் கொலைகளை அரங்கேற்றியுள்ளது கேரள சி.பி.எம் அரசு.

மாவோயிஸ்டுகளின் பிரச்சினையை அரசியல் ரீதியாக அணுகித் தீர்க்கவேண்டும் என முதலாளித்துவ அறிவுஜீவிகளும் ஜனநாயகவாதிகளுமே பேசிவரும் வேளையில், போலி மோதல் கொலைகள் மூலமாகவும் படைகளைக் கொண்டும் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பாஜக மற்றும் காங்கிரசின் ஆளும்வர்க்க உத்தியை அப்படியே பின்பற்றியிருக்கிறது கேரள “கம்யூனிஸ்ட்” அரசு.

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக, புரட்சிகர சக்திகளை வர்க்கரீதியாகவும்,  அணிதிரட்ட வேண்டிய சமயத்தில் பினராயி அரசு பாசிஸ்டுகளுக்கு சேவகம் செய்வது குறித்து சி.பி.எம் கட்சியின் மத்தியக் கமிட்டி மற்றும் அரசியல் தலைமைக் கமிட்டி என்ன கருதுகிறது ? ஜனநாயக விரோதமாக, சட்டவிரோதமாக நடத்தப்பட்ட போலி மோதல் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப் போகிறதா ? அல்லது கேரளாவில் மட்டுமே இருக்கும் ஒரே அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள அங்கீகரித்து பாசிசத்திற்கு துணை போகப் போகிறதா ?

இந்தியா முழுவதும், குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற பாஜகவின் கிரிமினல் கும்பல்களின் அதிகாரம் உச்சியிலிருக்கும் மாநிலங்களில் நடைபெறும் போலி மோதல் கொலைகள் மற்றும் சட்டவிரோதக் கைதுகள் ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடத்தும் சி.பி.எம் தொண்டர்கள் கேரள சி.பி.எம் அரசைக் கண்டித்துப் போராட வேண்டும். உள்ளிருந்து கட்சித் தலைமைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.


கர்ணன்
செய்தி ஆதாரம் : தி நியூஸ்மினிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க