பிப்ரவரி 17, 2017 அன்று, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகரும், அந்நடிகையுடன் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்த சக நடிகருமான திலீப் கைதுசெய்யப்பட்டார். சக நடிகரே இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபட்டது மேலும் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, மலையாள திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பாக “வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC)” உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பினர் சார்பாக திரையுலகில் பணிச்சூழல்கள் குறித்து ஆய்வு செய்யக் கோரி மே 18, 2017 அன்று முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அடுத்ததாக, ஜூலை 2017-இல் மலையாள திரையுலகில் பணிச்சூழல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மூத்த நடிகை டி.சாரதா, ஓய்வுபெற்ற கேரள முதன்மைச் செயலாளர் கே.பி. வல்சலாகுமாரி ஆகியோர் இடம்பெற்றனர்.
மலையாள திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பல பெண்களுடன் விசாரித்த பின்னர், இந்த ஆணையம் 2019 டிசம்பரில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் 290 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தது.
படிக்க: பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா | 300 பெண்கள் பாலியல் வன்கொடுமை | தோழர் ரவி
ஆனால், இந்த அறிக்கையை நான்கரை ஆண்டுகளாக கேரள சி.பி.எம் அரசு வெளியிடவில்லை. மே 2022-இல் ஒன்றரை பக்க அளவில் ஹேமா குழு கொடுத்த பரிந்துரைகள் மட்டும் வெளியிடப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலமுறை கேட்கப்பட்டும் முழு அறிக்கை வெளியிடப்படவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி கேரள மாநில தகவல் ஆணையத்தால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
இவ்வாண்டு (2024) ஜூலை தொடக்கத்தில் தான் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளிப்படாதவாறு இவ்வறிக்கையை வெளியிடலாம் என்று மாநில தகவல் ஆணையர் கூறினார். இதனையடுத்து கேரள உயர்நீதிமன்றமும் அவ்வறிக்கை வெளியிடப்படுவதற்கான தடையை நீக்கி, ஒரு வாரத்திற்குள் ஹேமா குழு அறிக்கையை வெளியிடுமாறு கூறியது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 19 ஆம் தேதி 235 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக இது வெளியிடப்பட்டது. தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய, பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதால், அதுதொடர்பான பக்கங்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்று கேரள அரசால் கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஹேமா குழு அறிக்கை வெளியிடப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்குப் பதிலளித்த பினராயி விஜயன், “இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள் தனிநபர்களின் அந்தரங்கம் தொடர்புடையதாக இருப்பதால் இவ்வறிக்கையை வெளியிட வேண்டாம் என்று பிப்ரவரி 20, 2019 அன்று நீதிபதி ஹேமா கடிதம் எழுதியிருந்தார். அதனால் தான் இவ்வறிக்கையை வெளியிடுவதற்குத் தாமதமாகி விட்டது” என்று சமாளிக்கும் வகையில் பதிலளித்தார்.
படிக்க: போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!
ஹேமா குழு அறிக்கை வெளியான பிறகு மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான “அம்மா” (Association of Malayalam Movie Artists – AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். நடந்த குற்றத்திற்குப் பொறுப்பேற்று, நீதி பெறுவதற்கு ஆவன செய்யாமல், கோழைத்தனமாக இந்த சங்கம் கலைந்துவிட்டது.
இந்த அறிக்கை வெளியான பின்பு 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேமா குழு அறிக்கை மூலம் வெளிவந்துள்ள உண்மைகள்
தற்போது வெளியாகியுள்ள ஹேமா குழு அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான விசயங்கள் இடம்பெற்றுள்ளன.
- பாலியல் துன்புறுத்தல் இத்துறையில் அதிர்ச்சிகரமான விதத்தில் பரவலாக உள்ளது. அவை கண்காணிக்கப்படுவதோ கட்டுப்படுத்தப்படுவதோ இல்லை.
- ஆண்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை நிரூபிக்கப் பலரும் வீடியோ, ஆடியோ பதிவுகள், ஸ்க்ரீன்ஷாட்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஹேமா குழுவிடம் வழங்கியுள்ளனர். அதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களும் தங்கள் மீதான வன்முறை குறித்துக் கூறியுள்ளனர்.
- சில ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் இயக்குநர்கள் (சுமார் 10 -15 பேர்) பெரும் புகழ் மற்றும் பணத்தைச் சம்பாதித்து, மலையாள திரையுலகைத் தற்போது தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த கும்பல் ஒரு “மாஃபியா” போலச் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்குப் பணிய மறுத்தாலோ, அவர்களை எதிர்த்தாலோ மலையாள திரையுலகில் பணிபுரிய முடியாது என்று கூறப்படுகிறது.
- மலையாள திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை இந்த மாஃபியா பாலியல் ரீதியில் பயன்படுத்துகின்றது. “சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
- இரவு நேரங்களில் பெண் நடிகைகள் தங்கியிருக்கும் அறைகளின் கதவுகள் தட்டப்படும் கொடூரம் அரங்கேறுகிறது. சில சமயங்களில், ஆண்கள் குடிபோதையில் கதவுகள் உடைந்துவிடுமோ என்ற அச்சம் கொள்ளும் அளவிற்குத் தட்டுவதும் நடக்கிறது. இதனால், இரவு முழுவதையும் அச்சத்தில் கழிக்க வேண்டிய அவல நிலை பெண் நடிகர்களுக்கு ஏற்படுகிறது.
- பெண் நடிகர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதி கூட இல்லை. திறந்த வெளியில் பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதற்குப் பயந்து குறைவான தண்ணீர் பருகுவதால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
- சில ஆண் நடிகர்களும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ஆனால் அவர்களுக்கான திரை வாய்ப்புகள் மறுக்கப்படும் என்பதால் வெளிப்படையாகப் பேச அச்சப்படுகின்றனர்.
- ஆண் நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விட பெண்களுக்குக் குறைவான சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.
- துணை நடிகர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். படப்பிடிப்புத் தளங்களில் அவர்களுக்குக் கழிவறை வசதிகூடச் செய்து தரப்படுவதில்லை. காலை 9 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 2 மணிவரைகூட அவர்கள் பணிபுரிய வைக்கப்படுகின்றனர்.
- ஹேமா குழு அறிக்கையில் தொழிலாளர்கள் உரிமை குறித்துப் பேசப்பட்டுள்ளது. திரைத்துறையில் பணியாற்றுவார்களைத் தொழிலாளர்களாக அங்கீகரித்து பரிந்துரைகள் வழங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஹேமா குழு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
கேரளா சி.பி.எம் அரசின் செயல்பாடு குறித்து நமக்கு எழும் சில கேள்விகள்:
- 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக, அதாவது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து, வெளியிடப்பட்டுள்ளது ஏன்?
- முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுவதைப் போல், பெண் நடிகைகளின் தனியுரிமை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹேமா குழு அறிக்கை இவ்வளவு காலம் வெளியிடப்படவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட, அறிக்கையை வெளியிடாமலேயே பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?
- ஹேமா குழு அறிக்கை வெளியான பின்பு நடிகரும் சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது பாலியல் வல்லுறவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எதுவும் (தற்காலிகமான நடவடிக்கைகூட) எடுக்கப்படவில்லையே ஏன்?
- மாஃபியா கும்பல் மீதான அச்சத்தால் ஒரு சிலரே ஹேமா குழு முன்பு தங்களுக்கு நேர்ந்த வன்முறை குறித்து வாக்குமூலம் கொடுத்தனர். அதுவும் அவர்களின் அடையாளம் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று கூறியதால் தான். இந்நிலையில், வெளிப்படையாக வந்து புகார் அளித்தால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது நியாயமா?
- யாரைப் பாதுகாக்க நினைக்கிறது கேரள சி.பி.எம் அரசு? பாதிக்கப்பட்டவர்களையா? பாலியல் குற்றவாளிகளையா?
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram