privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகேரளாவின் மோடியா பினரயி விஜயன் ?

கேரளாவின் மோடியா பினரயி விஜயன் ?

-

லையாள எழுத்தாளரும் நாடக செயற்பாட்டளருமான கமல்ஸி பிராணா (18.12.2016) ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். செய்த குற்றம் என்ன ? ஃபேஸ்புக் மறுமொழி ஒன்றில் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கும் கேரள போலீசு, அவர் மீது 124 ஏ தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தின் கருங்கபள்ளி காவல் நிலையத்தில் பா.ஜ.க.-வின் இளைஞர் அணி கொடுத்திருக்கும் புகாரின் பேரில் பிராணா கோழிக்கோடு நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

writer
கமல்ஸி பிராணா

பிராணா சமீபத்தில் எழுதிய “சமஸ்தானங்களோடே” எனும் நாவலில் இருந்து சில வரிகளை எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். பள்ளி ஒன்றின் மாணவர்கள் கழிப்பறை செல்வதற்கு மறுக்கும் ஆசிரியர்கள் குறித்த சூழலை அந்த வரிகள் விளக்குகின்றது. பள்ளி மூடும் நேரமான மாலை நான்கு மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கு “அப்பாடா இனியாவது நிம்மதியாக கழிப்பறை செல்லலாம்” என்று தோன்றுகிறது. அதாவது அவர்களைப் பொறுத்தவரை தேசிய கீதம் என்றால் கழிப்பறைக்கு சுதந்திரமாக செல்லும் வாய்ப்பை வழங்குகிற ஒரு குறியீடு.

இந்தக் காட்சியை ஃபேஸ்புக்கில் வெளியிடும் வரை பிராணவின் நாவல் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்படவில்லை.  மேலும் கேரளாவில் சமீபத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சில பங்கேற்பாளர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்கவில்லை என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில்தான் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் துவங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் பாடவேண்டுமென்று உச்சீநீதிமன்றம் உத்தரவிட்டது.

தன்னை ஒரு தீவிரவாதி போல போலீஸ் சித்தரிக்கிறது என்கிறார் எழுத்தாளர் பிராணா. முதலமைச்சர் பினரயி விஜயன் கேரளாவின் மோடியாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் கவலைப்படுகிறார். சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னார் அமைச்சருமான எம்.ஏ.பேபி, போலீஸார் இதை முழுமையாக விசாரிக்காமல் கைது செய்து விட்டார்கள் என்று சமாளித்திருக்கிறார். இந்தக் கைதை கண்டித்தோ, அவரை விடுதலை செய்யுமாறோ பேபி நேரடியாக கோரவில்லை. அரசு நல்லபடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவே குறிப்பிடுகிறார்.

இடதுசாரி பாரம்பரியம் உள்ள மாநிலமான கேரளாவில், பார்ப்பனியத்தை எதிர்த்தும் அது உருவாக்கிய பாரத தேசபக்தியை எதிர்த்தும் எந்த விதமான பண்பாட்டு போராட்டமும் நடத்தவில்லை. அதன் விளைவாக இன்று கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் குறிப்பிடத்தக்க செல்வாக்கை உருவாக்கியிருக்கிறது.

charge-sheetஇதை எதிர்கொள்ள முடியாத கேரளாவின் போலி கம்யூனிஸ்டுகள் மறுபுறத்தில் பொதுப்புத்தியில் அமைந்திருக்கும் பார்ப்பனிய மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் நேரடியாக இந்துமதத்தையோ அதன் ஆதிக்கங்களையோ, மூடநம்பிக்கையையோ எதிர்த்து பேசுவதில்லை. நம்பூதிரிபாடு போன்ற சி.பி.எம் பிதாமகர்கள் இந்து மதத்தின் ‘நல்ல வரலாற்றையெல்லாம்’ கண்டுபிடித்து எழுதியிருக்கிறார்கள். அதை “போலி கம்யூனிஸ்டுகளின் வேத உபதேசம்” எனும் புதிய கலாச்சாரம் கட்டுரைத் தொடரிலிருந்து அறியலாம்.

எனவே எழுத்தாளர் பிராணா கைது செய்யப்பட்டிருப்பது ஏதோ கேரள போலீசின் முட்டாளதனமான நடவடிக்கையில் இருந்து எழவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் பார்ப்பனிய சமரசமே இந்த தேசபக்தி குதிப்பிற்கு அடிப்படையான காரணம்!

அதனால்தான் முதலமைச்சர் பினரயி விஜயன், கேரளாவின் மோடியாக மாறிவிடக்கூடாது என்று எழுத்தாளர் பிராணா கூறுமளவு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அவரது நாவலில் குழந்தைகளின் கழிப்பறை அவஸ்தையை பள்ளி நிர்வாகத்தின் ஒழுங்கு எப்படி கேலி செய்கிறது என்பதை தேசிய கீதம் வழியாக புரிந்து கொள்கிறோம். போகிற போக்கைப் பார்த்தால் அந்தக் குழந்தைகளையே கைது செய்துவிடுவார்கள் போலும்!

பா.ஜ.க மோடியை எதிர்த்து கொள்கை பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள், தமது ஆழ்மனதில் பூணுலாய் பதிந்து கிடக்கும் பார்ப்பனிய மதிப்பீடுகளை வெட்டி எறியாமல் ஆர்.எஸ்.எஸ்-ஐ முறியடிக்க முடியாது. இல்லையெனில் இடதுசாரிகளில் ஒரு இந்துத்துவா எனும் புதிய இழி பெயருக்கு அவர்கள் தயாராக வேண்டும்.

செய்தி ஆதாரம்:
For a school tale, Kerala writer held for ‘disrespecting’ national anthem