பாசிச மோடி கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திவருகிறது. ஏற்கெனவே, காவி-போலீசு கும்பலாட்சியை நிறுவுவதற்கான மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்  நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இந்துராஷ்டிரத்திற்கான நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது பாசிசக்கும்பல். நாட்டின் பெரும்பான்மை மக்களான அடித்தட்டு – நடுத்தர வர்க்க பிரிவினரையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகளையும் திட்டங்களையும் மட்டும் வாரி வழங்கும், நிதிநிலை அறிக்கையை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் பின்பற்றப்பட்டுவந்த பெயரளவிலான வழிமுறைகளையும் மரபுகளையும் தூர வீசிவிட்டு, அரசியல் நோக்கத்திலிருந்து ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது பாசிசக் கும்பல்.

நிதிநிலை அறிக்கையில், தங்கள் மீது வரிக் கொள்ளை கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பா.ஜ.க. ஆதரவாளர்களே மோடி-நிர்மலா கும்பலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 77 ஆண்டுகால இந்திய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏறக்குறைய 80 நிதிநிலை அறிக்கைகளில் இத்தகையதொரு நிதிநிலை அறிக்கையை இதுவரை கண்டதில்லை என முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காலனிகளாகும் மாநிலங்கள்

பீகார் மற்றும் ஆந்திராவிற்கு பல சிறப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ள மோடி அரசானது, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி திட்டங்களை அறிவிக்கவில்லை. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் கூட இடம்பெறவில்லை.

அதேப்போல், பீகார், அசாம், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வெள்ள துயர் நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.11,500 கோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது, பாசிச மோடி  அரசு.

அதேசமயம், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு பல சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டாலும் அம்மாநில மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலான எந்த திட்டங்களும் நிதியும் ஒதுக்கப்படாமல் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கும் இரு மாநிலங்களை சேர்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதற்குமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், கடந்த பத்தாண்டுகாலமாகவே மக்களுக்கு செய்ய வேண்டிய ஒன்றிய அரசின் செலவினங்களை வெட்டி சுருக்கி அரசின் அளவை (Size of the government) குறைத்துக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசு, மாநில அரசுகளுக்கும் நிதி ஒதுக்காமல் மாநில அரசுகளின் அளவையும் சுருக்கி தனக்கு கப்பங்கட்டும் காலனிகளாக மாற்றிவருகிறது பாசிசக்கும்பல்.

கல்வி, விவசாயம் என அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கம்

நீட் தேர்வு மோசடி, யூ.ஜி.சி-நெட் தேர்வு மோசடி என அடுத்தடுத்து உயர்கல்வித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளும் மோசடிகளும் அம்பலமாகி, ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அதை மேலும் சீரழிக்கும் விதமாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 60 சதவிகிதம் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே, அடித்தட்டு மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் கல்வித்திட்டங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு வரும் போக்கை மேலும் தீவிரமாக்கும். நிதி நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிலையை மேலும் மோசமாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான வழியை ஏற்படுத்தும். இதனால், பல லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம் உள்ளது.

அதேபோல், விவசாயத்துறையிலும் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலேயே நிதி நிலை அறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளின் உயிராதார கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டதோடு, பயிர் வளர்ப்பு, உர மானியம் முதலியவற்றிற்கான நிதியும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டிஜிட்டல்முறை, புதிய ஹைபிரிட் ரக விதைகள், பயோ மையங்கள் என விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் திட்டங்களுக்கான நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது.


படிக்க: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!


மோடி அரசின் பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகிய பாசிசத் தாக்குதல்களால் நொடிந்து போயுள்ள சிறு, குறு நிறுவனங்களின் முக்கிய கோரிக்கைகளான வங்கி வட்டியை ஐந்து சதவிகிதமாக குறைப்பது; வேறு நிறுவனங்களுக்கு செய்துதரும் பணிகளுக்கான ஜி.எஸ்.டி-யை 5 சதவிகிதமாக குறைப்பது; இயந்திரங்கள் கொள்முதலுக்கு 15 சதவிகிதம் மானியம் ஆகியவற்றை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அந்நிறுவனங்களை கடன் வலையில் சிக்கவைத்து அவற்றை படிப்படியாக மூடும் விதமாகவே நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அதே போல அங்கன்வாடிகளுக்கான நிதி ரூ.21,543 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவிற்கான மானியம் 2.57 சதவிகிதம் வெட்டப்பட்டிருக்கிறது. சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு பொறுத்தவரை மொத்த பட்ஜெட்டில் 1.8 சதவிகிதம் மட்டுமே; மொத்த நிதிநிலை அறிக்கையில் பட்டியலின மக்களுக்கு 3.43 சதவிதமும், பழங்குடியின மக்களுக்கு 2.74 சதவிகிதமும் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; உணவு மானியத்திற்கான பட்ஜெட் 3.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் விரோதமாகவே இந்த நிதிநிலை அறிக்கையை பாசிசக்கும்பல் கொண்டுவந்துள்ளது.

அம்பானி-அதானி-அகர்வால் வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டற்ற கொள்ளைக்காக உழைக்கும் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள பாசிசக் கும்பல்,  கார்ப்பரேட் கும்பலுக்கான சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

2024 ஜூன் நிலவரப்படி வேலையின்மை 9.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தலைவிரித்தாடும் வேலையின்மைக்கு வடமாநிலங்களில் நடக்கும் இளைஞர்களின் போராட்டங்களும், இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய அவலத்திலிருக்கும் இளைஞர்களுமே சாட்சி. நடந்தமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட வேலையின்மை பிரச்சினை பெரியளவில் பேசுபொருளானது. ஆனால், பாசிச மோடிக் கும்பல்  இவ்வேலையின்மை நெருக்கடியை தீர்ப்பதற்கு பதிலாக, அற்பக்கூலிக்கு இளைஞர்களின் உழைப்புச் சுரண்டுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான பெயிட் இண்டர்ன்ஷிப் திட்டத்தை  (Paid Internship Scheme) அறிவித்திருக்கிறது.

இத்திட்டத்தின்படி, திறன் பயிற்சி என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு 12 மாதங்களுக்கு 500 நிறுவனங்களில் பயிற்சி வழங்குவது; அந்நிறுவனங்கள் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து வழங்குவது என்றும், புதியதாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 மானியமாக வழங்குவதுடன் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 “ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி”  கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

அதாவது, இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது என்ற பெயரில் சமூக பாதுகாப்பின்றி மிகச் சொற்ப கூலிக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை உருவாக்கவது; அதற்காக மக்கள் வரிப்பணத்தையே கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்குவதையே இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக மொத்த நேரடி வரி வசூல்களில் 29.2 சதவிகிதமாக உள்ள தனிநபர் வருமான வரியை விட கார்ப்பரேட் வரி 27.2 சதவிகிதமாக குறைந்துள்ள நிலையிலும், இந்த நிதிநிலை அறிக்கையில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பரம்பரை சொத்துவரி விதிக்க வேண்டும் என பல நாடுகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மோடி அரசோ கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்து தன் வர்க்க பாசத்தை நிரூபிக்கிறது.

மாற்று அரசுக் கட்டமைப்புக்காக போராடுவோம்!

பா.ஜ.க-வின் இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சிக்கும் பலரும் இதனை மரபு மீறல், எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநிலங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்றுதான் பார்க்கின்றனர். ஆனால், கல்வி, விவசாயத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவம், ரயில்வே போன்ற மக்கள் செலவினங்களை வெட்டி சுருக்கிவிட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு நாட்டை தாரை வார்ப்பதற்கான செயல்திட்டமாகவே கடந்த பத்தாண்டுகால பாசிச பா.ஜ.க. ஆட்சியில் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் இந்துராஷ்டிரத்திற்கான பொருளாதார அடித்தளத்தை கட்டமைத்து வருகிறது. அந்தவகையில், பாசிச பா.ஜ.க. கும்பல் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாசிச சட்டத்திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்திவரும் சூழலில் இந்துராஷ்டிரத்திற்கான பொருளாதார கட்டமைப்பை தீவிரப்படுத்துவன் அங்கமாகவே இந்தாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு பெயரளவில் இருந்த அதிகாரங்களை, ஆணையங்கள், முகமைகள், தீர்ப்பாயங்களை  போன்ற தன்னாட்சி அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் மோடிக் கும்பல் பறித்து வருகிறது. இதுபோன்ற அமைப்புகளுக்கு தலைவராக பிரதமரை நியமிப்பதன் மூலம், பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை சுற்றியுள்ள சிறு கும்பல் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக நிர்வாக முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பாசிசக் கும்பல் ஆட்சிக்கு வந்தப் பிறகு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் நாடாளுமன்றத்திற்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டு “நிதி ஆயோக்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால், நாட்டிற்கான வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்து அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற ‘நாடாளுமன்ற ஜனநாயகமுறை’ ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

அதனால்தான், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி அயோக்கை கலைத்துவிட்டு, பழையபடி “திட்டக் கமிஷனை” கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆனால், திட்டக் கமிஷன் முறையை மீண்டும் கொண்டுவருவதால் மட்டும், இப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியுமா? பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் மோடிக் கும்பல் இந்துராஷ்டிரத்திற்கான பல்வேறு அடிக்கட்டுமானங்களை உருவாக்கி வைத்துள்ளது. நாட்டின் மிக உயர்ந்த சட்டமியற்றும் அமைப்பான நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே பல முக்கியமான கொள்கை முடிவுகளும், சட்டங்களும் அமலாகிக் கொண்டிருக்கின்றன. மோடி அமித்ஷா கும்பலால், பெயரளவிலான நாடாளுமன்ற ஜனநாயகமும் கேலிக்கூத்தாக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது, நாடாளுமன்ற ஜனநாயகம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்ற மாய பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான பாசிஸ்டுகளின் நாடகமாகவே உள்ளது.

அதேபோல், ஜி.எஸ்.டி. மூலம் மாநில அரசுகளை கப்பம் கட்டும் நிர்வாக அமைப்புகளாக மாற்றிவருகிறது. எனவே,பாசிசமயமாகிப் போயுள்ள அரசுக் கட்டமைப்பை பொருளாதார கட்டுமானத்தை இனியும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. இந்துராஷ்டிரத்திற்காக சிதைத்து மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் பொருளாதாரத்திற்கு மாற்றாக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உள்ளடக்கிய-கார்ப்பரேட் ஆதிக்கத்தை புறக்கணிக்கிற மாற்று பொருளாதாரத்தை முன்வைக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க