நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!

மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள மோடி அரசின் செயல்பாடு, மறுகாலனியாக்கக் கொள்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி தீவிரமாக அமல்படுத்துவதுதான்.

டப்பு ஆண்டில் உலகின் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையை சந்திக்க நேரிடும் என முதலாளித்துவ அறிஞர்கள் கூறிவருகின்றனர். அதை முன்னறிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடி வருகிறது. இந்திய பொருளாதாரமோ வெகுவிரைவாக நெருக்கடியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகிறது. அதிகரிக்கும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் சாதாரண உழைக்கும் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்; வறுமை, பசி, பட்டினி மற்றும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில்தான், 2023-24 ஆம் ஆண்டுகான நிதிநிலை அறிக்கை ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினங்களை வெட்டிச் சுருக்கி, கார்ப்பரேட் கும்பல்களுக்கு சலுகைகளை வாரியிறைத்துள்ளதன் மூலம் மோடி அரசு தனது வர்க்க பாசத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

படிக்க : ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!

இதன் காரணமாக, இந்த நிதிநிலை அறிக்கையை கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றிப்போற்றி வரவேற்கின்றனர். கவின்கேர் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன், “இந்த பட்ஜெட்டை நான் பாசிட்டிவ் பட்ஜெட்டாகவும், அனைவருக்கும் சாதகமான பட்ஜெட்டாகவும் பார்க்கிறேன்” என்று கூறியிருப்பது அதற்கு ஓர் சான்றாகும்.

நடுத்தர வர்க்கத்தை ஏய்க்கும் கவர்ச்சி அறிவிப்பு

பா.ஜ.க அரசும் அதன் எடுபிடிகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்த மிகப்பெரும் சலுகையாக பீற்றிக் கொள்கிறார்கள்.

பழைய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கான உச்சவரம்பை இரண்டரை லட்சத்திலிருந்து மூன்று லட்சமாகவும், புதிய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கான உச்சவரம்பை ஐந்து லட்சத்திலிருந்து ஏழு லட்சமாகவும் அதிகரித்து உள்ளது மோடி அரசு.

புதிய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கான உச்சவரம்பை ஏழு லட்சமாக உயர்த்தியதன் மூலம், பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை இவ்வரிமுறையை நோக்கி ஈர்க்கிறது மோடி அரசு. பழைய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கு சேமிப்புகள் மற்றும் காப்பீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன.

புதிய வரிமுறையில் இச்சலுகைகள் கிடையாது. இதன்மூலம் நடுத்தர வர்க்கத்திடம் சேரும் நிதி உபரியை சேமிக்க ஊக்கப்படுத்தாமல், செலவு செய்யத் தூண்டுவதுதான் இச்சலுகையின் நோக்கம். இது கார்ப்பரேட்டுகளின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சியாகும்.

உழைக்கும் வர்க்க விரோத நிதிநிலை அறிக்கை

வரிச்சலுகையின் மூலம் நடுத்தர வர்க்கத்தைக் கவர்ந்துள்ள பா.ஜ.க, ஏழை – அடித்தட்டு உழைக்கும் மக்களை வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளும் வகையில், இந்த நிதிநிலை அறிக்கையை வடிவமைத்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு; உணவு, உரம், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் ஆகியவற்றைக் கணிசமாக வெட்டியுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியை விட ரூ.29,400 கோடி குறைவாகும். உணவு மானியத்திற்காக ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது மூன்றில் ஒரு பங்கு வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையிலேயே கிட்டதட்ட பாதி அளவுக்குத்தான் செலவழிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்படும் அற்ப நிதியும் நடைமுறையில் முழுமையாக பயன்படுத்தப்படாது என்பதே உண்மை.

2022-23 நிதிநிலை அறிக்கையில், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் ஆதார விலை குறையும்போது, நட்டமடையும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தொகை சகிக்க முடியாத அளவுக்கு வெட்டிச் சுருக்கப்பட்டு வெறும் ரூ.1 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் உர மானியமும் குறைக்கப்பட்டுள்ளது. பி.எம் கிசான் (PM Kisan) போன்ற விவசாயிகளுக்கான பெயரளவிலான கவர்ச்சித் திட்டங்களும் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படையிலேயே இது விவசாயி விரோத நிதிநிலை அறிக்கையாக இருக்கையில், வேளாண் துறையினருக்கு கடன் வழங்குவதற்காக 20 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கிறார் நிர்மலா சீதாராமன். விவசாயிகளுக்கு கடன் வழங்குவதையே மாபெரும் சாதனையாக, சலுகையாகக் காட்டுகிறார். ஆனால், இந்த விளம்பரம் கூட உண்மையில்லை, ‘வேளாண் துறையினருக்கு கடன்’ என்ற பெயரில் இவையெல்லாம், வேளாண் துறையில் கால்பதித்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கே வழங்கப்பட போகின்றன.

சிறுபான்மை மக்களை ஒதுக்கும் பாசிசத் திட்டம்

சிறுபான்மையின மக்களை நான்காந்தரக் குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களின் கல்வி மீது பெரும் தாக்குதல் தொடுத்துள்ளது பாசிசக் கும்பல். சிறுபான்மை நல அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஆண்டை விட 38 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைக்கான நிதி ரூ.1,425 கோடியிலிருந்து, ரூ.433 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதரஸாக்களுக்கான கல்வித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி சென்ற ஆண்டை விட 93 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மேலும் பல சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கான நிதிகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகள் ஒன்றியத்தின் காலனிகளாக…

மாநில அரசுகளுக்கு பிரித்து ஒதுக்க வேண்டிய நிதி அளவையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது மோடி அரசு. இதன்மூலம் மாநில அரசுகள் என்பவை, சுயேட்சையான அதிகாரமற்ற, ஒன்றியத்தின் நிர்வாக அலகுகளாக மாற்றப்பட்டுள்ளன.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசானது தனது மொத்த வரி வருவாயில் 42 சதவிகிதத்தை தர வேண்டும். மோடி அரசோ, இப்பரிந்துரைகளைக் கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்கவில்லை.

2021-22 நிதியாண்டில் ரூ.4.6 லட்சம் கோடி (31.2 சதவிகிதம்) ஒதுக்கிய மோடி அரசு, 2022-23 நிதியாண்டில் அதை ரூ.3.07 லட்சம் கோடியாக குறைத்தது. தற்போது அச்சொற்ப நிதியை மேலும் குறைத்துள்ளது.

அமிர்தகாலமும் ஆலகாலமும்!

சாதாரண உழைக்கும் மக்கள், விவசாயிகள், சிறுபான்மையினர் மற்றும் மாநில அரசுகள் மீது தாக்குதல் தொடுத்துள்ள மோடி அரசானது, கார்ப்பரேட் கும்பல்களுக்கு சலுகைகளை வாரியிறைத்துள்ளது.

தங்களுடைய எட்டு ஆண்டுகால ஆட்சியில், 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி, வரிச்சலுகை, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தல், காடு – மலை – கனிம வளங்களைக் கொள்ளையிட திறந்து விடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கார்ப்பரேட்டுகளைக் குளிர்வித்த மோடி அரசு, இந்த நிதி அறிக்கையிலும் தனது சேவையைத் தொடர்ந்திருக்கிறது.

குறிப்பாக, ஆண்டுக்கு ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி சதவிகிதத்தை 37 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்துள்ளது மோடி அரசு. இதன் மூலம் இப்பிரிவினரின் வருமான வரி விகிதமானது 42.7 சதவிகிதத்திலிருத்து 39 சதவிகிதமாக குறையும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சாதாரண உழைக்கும் மக்களுக்கு வரிச்சுமை, பணக்காரர்களுக்கு வரிச்சலுகை; இதுதான் காவி பாசிஸ்டுகளின் புதிய நீதி!

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களைப் புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம், வாகன விற்பனையை அதிகரிக்க வைப்பதுதான் இக்கும்பலின் நோக்கம். மேலும், மின்சார வாகன பேட்டரிகளுக்கான சுங்கவரியை 13 சதவிகிதமாகக் குறைத்துள்ளது; பேட்டரிகளில் லித்தியத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் ஐந்து எம்.எம்.டி (MMT – Million Metric Tons) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்து, அதற்காக ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் கால்பதித்துள்ள அதானி குழுமத்தின் கைகளுக்குத்தான் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

***

மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்து கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரியிறைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையை முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே கூட கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், “நடுத்தர வர்க்கத்திற்கு எதிரான, பணக்கார சார்பு பட்ஜெட்” (Anti Middle class pro rich Budget) என்று விமர்சித்துள்ளார். பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “பட்ஜெட் அற்ற பட்ஜெட்” (Non Budget) என்று வருணித்துள்ளார்.

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து சந்தைப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இப்பொருளாதார அறிஞர்களின் வாதம். ஆனால், ‘மோடினாமிக்ஸ்’ என்பது மக்களின் இரத்தத்தை உறிஞ்சி, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுப்பது என்பதால், இவர்களின் வாதங்களை மோடி – நிம்மி கும்பல் கண்டுகொள்வதில்லை.

1990-களில் மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பெயரளவிலான மக்கள் நல அரசு கொள்கையும் ஒழித்துக்கட்டப்பட்டு வருகின்றன.

படிக்க : பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

கல்வி, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் பணியல்ல; மக்கள் நலத் திட்டங்களுக்கான மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட வேண்டும்; ஆறுகள், மலைகள், காடுகள் போன்றவை கார்ப்பரேட் கொள்கைக்காக திறந்துவிடப்பட வேண்டும்; அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும்; உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்கான புரோக்கர்களாக மட்டும் அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதுதான் மறுகாலனியாக்கக் கொள்கை. இக்கொள்கையை மூர்க்கமாக அமல்படுத்துகிறது மோடி அரசு.

ஆக்ஸ்பார்ம் அறிக்கை மற்றும் உலகப் பட்டினிக் குறியீடு போன்ற ஆய்வு அறிக்கைகள் வெளியாகி மக்களின் அவலநிலையையும், வரலாறு காணாத சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அம்பலப்படுத்திய பிறகும், இப்படிப்பட்ட மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள மோடி அரசின் செயல்பாடு, மறுகாலனியாக்கக் கொள்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி தீவிரமாக அமல்படுத்துவதுதான்.

‘சுதந்திர இந்தியா’வின் நூறாம் ஆண்டை (2047) நோக்கிப் பயணிக்கும் 25 ஆண்டுகளை (2023-2047), “அமிர்த காலம்” என்று குறிப்பிடுகிறது பா.ஜ.க. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தனது நிதிநிலை அறிக்கை தாக்கல் உரையில், “அமிர்த காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை” என்று பெருமையாகக் கூறியுள்ளார். மோடியோ, “புதிய இந்தியாவிற்கான வலுவான அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கை” என்று கூறியுள்ளார்.

அமிர்த காலமும், புதிய இந்தியாவும் யாருக்கானது என்பதை, அமிர்த காலத்திற்கான முதல் பட்ஜெட் மூலமே கூறிவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள்.


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
மார்ச், 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க