வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் பரஸ்பர அடிப்படையில் இந்தியாவில் சட்டப் பணியை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) அனுமதி அளித்துள்ளது. இதன் பொருட்டு, மார்ச் 13-அன்று ‘இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகள், 2022’ (Registration and Regulation of Foreign Lawyers and Foreign Law Firms in India, 2022) பார் கவுன்சிலால் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டது. சுருங்கக் கூற வேண்டுமெனில் சட்ட சேவைத்துறை தாராளமயமாக்கப் பட்டுள்ளது.
இவ்விதிகளின்படி, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவன பிரச்சினைகள், இந்தியாவின் சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகள் போன்றவற்றில் பரஸ்பர அடிப்படையில் உதவிகளை வழங்க முடியும். பதிவுசெய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு வழக்கறிஞர் இந்தியாவில் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் போன்றவற்றில் ஆஜராகி வாதாட இயலாது. வழக்கு அல்லாத விசயங்களில் மட்டுமே வழக்கறிஞராக பணியாற்ற அனுமதி அளிக்கப்படும். ஆஜராகும் இந்திய வழக்கறிஞர்களுக்கு ஆலோசனைகளை மட்டும் வழங்க அனுமதிக்கப்படுவர்.
வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக 2007-ஆம் ஆண்டு முதல் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், 2009-ஆம் ஆண்டில் பம்பாய் உயர் நீதிமன்றம் இந்திய சட்டப் பட்டம் பெற்ற இந்தியர்கள் மட்டுமே இந்தியாவில் வழக்கறிஞர் பயிற்சி செய்ய முடியும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம், ஏ.கே. பாலாஜி எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பணிபுரிய தடை விதித்து உத்தரவிட்டது.
2018-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் சென்னை மற்றும் பம்பாய் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை உறுதி செய்தது. இந்நிலையில், தற்போது இந்திய பார் கவுன்சில் புதிய ஒழுங்குமுறை விதிகளை வகுத்து வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
படிக்க: கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!
மேலும், வெளிநாட்டில் சட்டம் படித்த ஒருவர் அந்த நாட்டில் பணிபுரியும் தகுதி பெற்றிருந்தால் அவர் இந்திய பார் கவுன்சிலில் தனது பெயரை பதிவு செய்யும் தகுதி பெற்றவராவார் என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்ய $25,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்; வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் $50,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவ்விதிகள் கூறுகின்றன.
“வழக்கறிஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சரி செய்வதற்குப் பதிலாக, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நிறுவனங்களை இந்தியாவில் பயிற்சி செய்ய அனுமதிப்பதாக இந்திய பார்கவுன்சில் திடீரென அறிவித்துள்ளது” என்று நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (All India Lawyers’ Association for Justice – AILAJ) தெரிவித்துள்ளது.
மேலும் “சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பாக இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, இந்திய சட்ட சேவைத் துறை உள்ளிட்ட சேவைகள் வர்த்தகத்திற்கு திறந்து விடப்படுகின்றன. இதனால் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன” என்று வழக்கறிஞர்கள் சங்கம் (AILAJ) தெரிவித்துள்ளது.
“இந்திய பார் கவுன்சில் தனது சுயாதீன அந்தஸ்தை கைவிட்டுவிட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்திற்காக இந்திய வழக்கறிஞர்களின் நலன்களை தியாகம் செய்வதன் மூலம் மோடி அரசாங்கத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. இந்த (அந்நிய) நுழைவு பரஸ்பர அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் மற்றும் ஒழுங்குபடுத்தப்படும் என்ற வாதம், இம்முடிவால் ஏற்படவிருக்கும் கடுமையான பாதிப்பை மென்மையாக்கி காட்டுவதற்கான ஒரு சதித்திட்டமாகும். இது ஒரு படிப்படியான நுழைவு என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று அது மேலும் கூறியுள்ளது.
படிக்க: சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!
இந்நடவடிக்கையால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் முன் ஆலோசனை கூட நடத்தாமல் பார் கவுன்சிலால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவால் இந்திய வழக்கறிஞர்கள் சர்வதேச அளவில் போட்டி போடுவதற்கான சூழல் உருவாகும் என்று ஆசை வார்த்தைகள் கூறப்படுகிறது. வேண்டுமானால், இது பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் சுரண்டலையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் துணைகொண்டு சட்டரீதியாக மேற்கொள்ளத்தான் வழிவகை செய்யும்.
பொம்மி