ளிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதித்துறைதான் என்று நடுத்தர வர்க்க குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் ஒரு சித்திரத்தை தீட்டி வைத்திருந்தனர். ஆனால் அந்த சித்திரம் தற்போது அதன் வண்ணங்களை இழந்து சிதைந்துவிட்டது. அதை அந்த குட்டி முதலாளித்துவ அறிஞர்களே கண்டுகொண்டனர். நீதித்துறை இனிமேலும் யாருக்கும் நம்பிக்கையாக இல்லை. இதை நீதித்துறை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த நபரான ஏ.ஜி.நூரானியே தனது “ஆர்.எஸ்.எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்னும் புத்தகத்தில் இப்படியாக சொல்கிறார். “மதப்பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அரசியல் பெரும்பான்மை பெற்று கட்டுக்கடங்காத அரசு அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டமும், நீதிமன்ற தலையீடும் ஓரளவுக்குதான் இதைத் தடுக்க முடியும்”.

தற்போது கடந்த ஏழு நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகள் நீதித்துறையின் அவலத்தை அப்பட்டமாக காட்டுவதாக இருக்கிறது. நூபுர் ஷர்மாவின் வெறுப்பு பேச்சு விவகாரத்தின்போது பதியப்பட்ட அதே பிரிவுகளின்கீழ் தான் முகமது ஜுபைர் மீதும் வழக்கு பதியப்படுகிறது. ஆனால், இருவருக்கும் வெவ்வேறு வகையில் நீதித்துறை நடந்து கொள்கிறது. இது பாசிஸ்டுகளின் ஆட்சியின்கீழ் நீதித்துறை என்னவாக இருக்கிறது என்பதை துல்லியமாக காட்டுகிறது.‌

ஆல்ட் நீயுஸ் (ALT NEWS) என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு “இந்து யுவ வாகினி” (இந்த அமைப்பு யோகியால் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது) அமைப்பின் மாநிலத் தலைவர் விகாஸ் அகிர் என்பவருடன் தொடர்பில் உள்ள அநாமதேய, நம்பகத்தன்மையற்ற சமூக ஊடக கணக்குகளின் வலைப்பின்னல் மூலம் ஓராண்டிற்கு மேலாக பிரச்சாரம் செய்யப்பட்டதுதான் காரணம் என்ற உண்மை The Wire என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆல்ட் நீயுஸ் என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் மீது கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு ஜுபைர் போட்ட ஒரு டிவீட்டை காரணமாக காட்டி, அவர் சாதி மதம் போன்றவற்றின் பெயரில் இரு வேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்றும், ஒரு மதத்தைச் சேர்ந்த வழிபாட்டு தலத்திற்கு அவமதிப்பு அல்லது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகவும் சொல்லி அவரை டெல்லி போலீஸ் இந்திய தண்டனைச் சட்டம் 153A, 295 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


முகமது ஜுபைர் ட்டிவீட் செய்திருந்தது “கிஸ்ஸி சே நா கெஹ்னா” என்னும் இந்தி நகைச்சுவை திரைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ம் ஆண்டின் ஒரு வழக்கிற்கு முகமது ஜுபைர் கைது செய்யப்படாமல் இருக்க உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அப்படி கைது செய்யப்படாமல் இருக்க பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கிற்கான விசாரணைக்கு டெல்லி போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு, வேறு ஒரு வழக்கின்கீழ் கைது செய்யப்படுகிறார் ஜீபைர்.

ஜூன் 29-ம் தேதி முகமது ஜுபைர்க்கு பிணை வழங்குவது பற்றிய விசாரணையில், “புகார் அளித்த நபர் ஒரு அநாமதேய நபர் அல்ல. அவர் பற்றிய விவரங்கள் இங்கே இருக்கிறது. அந்த விவரங்கள் இல்லாமல் யாராலும் டிவிட்டர் கணக்குகளை வைத்திருக்க முடியாது” என்று வாதாடினார் ஜீபைர்க்கு எதிராக வழக்காடிய வழக்குரைஞர். எந்தவொரு தகவலும் இல்லாமல் ஆயிரக்கணக்கான தானியங்கி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி இயக்க முடியும் என்ற எளிய உண்மை கூடத் தெரியாத அளவிற்கு இந்த வழக்குரைஞர் “அப்பாவியாக” இருக்கிறார்.

ஆனால், அந்த புகார் அளித்த டிவிட்டர் கணக்கு பற்றிய விவரங்களை அளிக்குமாறு ஜூன் 29-ம் தேதி மாலைதான் டெல்லி போலீஸ் டிவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. வழக்கை விசாரித்துவரும் டெல்லி போலீஸாருக்கே தெரியாத “தகவல்கள்” பற்றி நீதிமன்றத்தில் பேசுகிறார் இந்த வழக்குரைஞர்.

இதற்கிடையில், இந்த ட்விட்டர் கணக்கு பற்றிய ஆய்வு செய்த The Wire என்னும் பத்திரிகை அகிர் (விகாஸ் அகிர்) என்ற அந்த டிவிட்டர் கணக்குடன் இணைப்பில் இருக்கும் 757 கணக்குகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த அகிர் என்ற கணக்குடன் இணைப்பில் இருக்கும் 757 கணக்குகளின் நோக்கமே முகமது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா (இவர்கள் இருவரும் ஆல்ட் நீயுஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்) இருவரும் பதிவு செய்துள்ள பழைய டிவீட்டுகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் தவறாக சித்தரித்தல் மூலமாக இந்த இரண்டு பத்திரிகையாளர்களையும் “இந்து விரோதிகளாக” பொதுவெளியில் கட்டமைப்பதுதான். இந்த 757 கணக்குகளில் ஜீபைர் மீது புகார் அளித்த டிவிட்டர் கணக்கின் 8 பிரதி கணக்குகளும் அடங்கும். இந்த 8 பிரதி கணக்குகளும் ஒரே மாதிரியான முகப்பு படங்கள், டிவீட்டுகள், பயனர் பெயர்களை கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆல்ட் நீயுஸ் நிறுவன பத்திரிகையாளர்களை குறிவைத்து இணையவெளியில் தாக்க ஓரே வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கிறது.

#Arrest Zubair போன்ற ஹேஷ்டேக்குகளை பரப்ப 18,364 கணக்குகளை கொண்ட வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த கணக்குகளில் பெரும்பாலான கணக்குகள்  Bots எனப்படும் தானியங்கி சமூகவலைதள கணக்குகளுக்கு உண்டான குணங்களை கொண்டுள்ளது கண்டறியப்பட்டது. அதாவது இந்த கணக்குகள் மனிதர்களால் நடத்தப்படும் போலிக் கணக்குகள் அல்ல. Bots என்பது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படும் கணிணியால் உருவாக்கப்படும் தானியங்கி போலிக் கணக்குகளாகும். இதன் மூலம் அதில் 62% அதாவது 11,380 கணக்குகள் Tekfog செயலியின் தொகுதியாகும்.

பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பாட்டாளர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்த Tekfog செயலி, எந்த அளவு பாசிசத்தின் பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அது எந்த அளவு சமூகக் கேடானது மற்றும் தனிநபர் அந்தரங்கத்தை மீறக் கூடியது என்பதை வினவு தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

இன்று இந்தியாவில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் நபரால் இவையெல்லாம் செய்யப்படுகிறது. முகமது ஜுபைர்க்கு பிணை வழங்கக் கூடாது என்று வாதாடுவது இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் என்பதை பார்க்கும்போது இது ஆளும் பாஜக கும்பலால் திட்டமிட்டு புனையப்பட்ட வழக்கு என்பது தெளிவு.

கடந்த மே மாத இறுதியில், பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா என்பவர் முகமது நபிக்கு எதிராக ஆட்சேபத்தற்குரிய கருத்துகளை தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தார்.

அவர் மீதும் இதே 153A, 295 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் போடப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் நூபுர் ஷர்மாவிற்கு டெல்லி போலீஸார் பாதுகாப்பு வழங்கியது.


படிக்க : டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !


கடந்த ஜீலை ஒன்றாம் தேதி “நூபுர் ஷர்மாவின் வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. நூபுர் ஷர்மா தான் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு தனியாளாக காரணம். அவருக்கு எதிராக பல முதல் தகவல் அறிக்கைகள் இருந்தும் அவரை ஏன் டெல்லி போலீசுத்துறை கைது செய்யவில்லை?” என்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்.

“நூபுர் ஷர்மா தனது முகமது நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்திற்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக் கொள்வது எல்லாம் வெட்கக் கேடானது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரும் ஒருவர் கைது செய்யப்படாமல் இருப்பது அவருடைய செல்வாக்கை காட்டுகிறது. அவர் தன் பின்னணியில் அதிகாரம் இருப்பதால் பொறுப்பற்ற வார்த்தைகளை சொல்லலாம் என்று நினைக்கிறார்” என்றெல்லாம் நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நூபுர் ஷர்மாவை கண்டித்தது.

இப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறிமாறி நூபுர் ஷர்மாவை கண்டிப்பதால், கடந்த நாட்களில் நடந்த சமூக பதற்ற நிலை சரியாகிவிடுமா? இல்லை அவரை மன்னிப்பு கேட்க வற்புறுத்துவதால் இங்கே என்ன நடந்துவிடப் போகிறது? முகமது ஜுபைர் மீது Tekfog என்னும் சட்ட விரோத, சமூக விரோத செயலி ஒன்றின் மூலம் புனையப்பட்ட வழக்கில் கடுமையாக நடந்துகொண்ட நீதித்துறை, ஏன் நூபுர் ஷர்மாவிடம் கடினமான வார்த்தைகளால் கெஞ்சிக் கொண்டிருக்கிறது? தவறு செய்யாதவராக இருந்தாலும் சிறுபான்மையினர் தண்டிக்கப்படுவார்கள், தவறு செய்திருந்தாலும் பாசிச அடிவருடிகள் விடுவிக்கப்படுவார்கள் இதுதான் பாசிஸ்டுகளின் ஆட்சி. உச்ச நீதிமன்றத்தின் இந்த “கண்டிப்பு” பாசிஸ்டுகளின் ஆட்சியின்கீழ் நீதித்துறையின் கையாளத்தனத்தை காட்டுவதாக இருக்கிறது. தனக்கு இந்த நாட்டில் இருக்கும் கடைசி துளி நம்பகத்தன்மையும் பறிபோய்விடும் என்ற அச்சத்தால் நீதித்துறை போடும் அரிதாரம் தான் இந்த “கண்டிப்பு”.

இந்த கண்டிப்பை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் வரவேற்றாலும், இந்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகளை சமூக ஊடகங்களில் உள்ள சிலர் குறிவைத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தனிநபர் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த நீதிபதி ஜே.பி. பார்திவாலா “சட்டம் உண்மையில் என்ன நினைக்கிறது என்று சிந்திப்பதற்கு பதிலாக சமூக ஊடகங்கள் என்ன நினைக்கும் என்று யோசிக்கும் இந்த நிலை சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கானது” என்றார்.

மேலும் கூறிய அவர், “இந்தியா போன்ற நாட்டை முழுமையான முதிர்ச்சி பெற்ற வரையறைக்கப்பட்ட சனநாயக நாடு என்று சொல்ல முடியாது. சமூக ஊடகங்கள் அடிக்கடி, முழுவதும் சட்டம் அரசியலமைப்பு சம்பந்தமான பிரச்சினைகளை அரசியலாக்கவே முடுக்கிவிடப் படுகிறது. அதனால் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களை கட்டுப்படுத்த நெறிமுறைகள் வேண்டும்” என்கிறார்.

அவரின் இந்த கூற்றுக்கு ஆதரவாக பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றியும் பேசுகிறார். “அது வெறும் நிலப்பிரச்சினை ஆனால் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டபோது அது அரசியல் சர்ச்சையை அடைந்துவிட்டது” என்கிறார்.

ஆனால், சமூக ஊடகங்களில் நீதிபதி பார்திவாலா மற்றும் சூர்ய காந்த் ஆகியோரை குறிவைத்து இழிவுபடுத்தியது இந்து மதவாத சக்திகளுக்கு சொந்தமான கணக்குகள்தான் என்று MakTooB நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சமூக ஊடகங்களில் தனிநபர் தாக்குதலுக்கு இலக்காக்குவது இந்து மதவாதிகள் என்ற உண்மை நீதிபதி பார்திவாலாவிற்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர் பொதுவாகவே பேசுகிறார். சமூக ஊடகங்களில் தனது தனிநபர் கண்ணியத்தை சீர்குலைப்பவர்களை குறிப்பிட்டக் கூட பேசாதவர், மின்னணு ஊடகங்களுக்கான நெறிமுறைகள் வகுப்பது பற்றி பாடம் எடுக்கிறார். தன் கண்ணியத்தை சிதைப்பவர்கள் இந்து மதவாதிகள் தான் என்றும் அதை அவர்கள் சமூக ஊடகங்களில் தான் செய்கிறார்கள் என்றும் தெரிந்த பின்பும் அவர் “மின்னணு ஊடகங்களுக்கான நெறிமுறைகள் பற்றி பேசுகிறார். மேலும், போகிற போக்கில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு “வெறும் இடம் பிரச்சினை” என்கிறார். கரசேவையின் போது மதவாதிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இவர் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் அதுதான் அவருக்கு நல்லது என்று தெரியும். “இந்தியா ஒரு முதிர்ச்சி பெறாத சனநாயக நாடு” என்று கூட இவரால் சொல்ல முடிகிறது ஆனால் தன்னை சமூக ஊடகங்களில் தனிநபர் தாக்குதலுக்கு இலக்காக்குவது இந்து மதவாதிகள்தான் என்று சொல்ல முடியவில்லை.

மேலும், ஜீலை இரண்டாம் தேதி முகமது ஜுபைர்க்கு பிணை வழங்குவது பற்றிய வழக்கில் நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் முன்பே, “ஜீபைர்க்கு பிணை மறுக்கப்பட்டதாகவும் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்படப் போவதாகவும்” செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டது. அந்த செய்தி டெல்லி போலீஸ் துணை ஆணையர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா சொன்னதாகவும் ஊடகங்கள் மேற்கோள் காட்டுகிறது.


படிக்க : பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!


இதைக்குறித்த பேசும்போது, “குற்றவியல் நீதித்துறை இதைவிட கீழாக சீரழிந்து போக முடியாது” என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே சொல்கிறார்.

இப்படியாக  நீதித்துறை பாசிஸ்டுகள் ஆட்சியின் ஒரு உறுப்பாக மட்டுமே இருக்கிறது என கடந்த ஏழு நாட்களில் அம்பலப்பட்டுவிட்டது.

“எனவே, இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்டத்திருத்தத்தை (அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும்) செய்ய வேண்டிய தேவையில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதை போன்றே ஆட்சி செய்தால்போதும். இதைத்தான் மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார்” என்று “ஆர்.எஸ்.எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற தனது புத்தகத்தில் ஏ.ஜி.நூரானி தெரிவிக்கிறார்.

அதனால் இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது என்பதை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்கிறோம். இந்திய நீதித்துறை அதன் துன்பவியல் நாடகத்தின் உச்சச் காட்சியை நடித்துக் கொண்டிருக்திறது.


மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்.
செய்தி ஆதாரம் : BBC Tamil, Thewire, maktoobmedia, thewire2,
thewire 3

1 மறுமொழி

  1. அரிதாரம் கறைந்தது, பார்ப்பனிய பாசிச முகமூடி கழன்றது, சிண்டு முடிந்த குடுமிகளின் ஆட்டம் அரங்கேறியது. நூலை அறுக்காமல் நிற்காது ஆட்டம் போடும் பட்டத்தின் வால் ஆட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க