ண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகள் இதுவரை காணாத அளவில் உச்சநிலையை எட்டியிருக்கின்றன. சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், ஆர்.எஸ்.எஸ் நிறுவத்துடிக்கும் இந்து ராஷ்டிரக் கொடுங்கோன்மை நமக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டதா? அல்லது இந்து ராஷ்டிரத்திற்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வி, அரசியல் நடப்புகளை கவனிக்கும் அனைவருக்கும் இயல்பாக எழுகிறது.

செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்-உம் குஜராத் முன்னாள் போலீசு அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமாரும் குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளி மோடிக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி வழக்கு தொடுத்தனர் என்பதே அவர்கள் மேற்கொண்ட ‘பயங்கரவாத நடவடிக்கை’.

உண்மை சரிபார்ப்பு (Fact Check) இணையதளமான ஆல்ட் நியூஸ்-இன் இணை ஆசிரியர் முகமது ஜீபைர் டெல்லி போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகமது நபியை இழிவாகப் பேசி இஸ்லாமியர்களின் மத உணர்வைக் காயப்படுத்திய நுபுர் ஷர்மாவின் காணொலியைப் பகிர்ந்ததன் மூலம், ஜீபைர் மதமோதலை உருவாக்க முயன்றார் என்பது குற்றச்சாட்டு. கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நுபுர் கைதுசெய்யப்படவில்லை. நுபுரின் காணொலியைப் பகிர்ந்த ஜீபைர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


படிக்க : உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ


மேற்சொன்ன வழக்குகளில் கைதுசெய்தவர்களை பிடியாணை (வாரண்ட்), முதல் தகவல் அறிக்கை எதையும் காட்டாமல் சட்டவிரோதமாகவும், ரவுடித்தனமாகவும் கைதுசெய்துள்ளது போலீசு.

ஆர்.எஸ்.எஸ் காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி எழுதிவந்த கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகிய எழுத்தாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்; பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய, 84 வயது முதியவர் ஸ்டான் சுவாமி, பீமா கொரேகான் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வதைத்துக் கொல்லப்பட்டார்; ஆனந்த தெல்தும்டே, வரவர ராவ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட மற்ற செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; இவற்றின் நீட்சிதான் மேற்சொன்ன கைதுகள்.

தன்னை எதிர்க்கும் அறிவுத்துறையினர், செயல்பாட்டாளர்களுக்கு என்ன கதி நேரும் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் பாசிஸ்டுகள். பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள், நகர்ப்புற நக்சல்கள் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுக்க பாசிச எதிர்ப்பாளர்கள், ஜனநாயக சக்திகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

***

இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஓர் புதிய இயல்பு நிலையை அடைந்துள்ளது. இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு அடையாளங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. முக்கியமாக இத்தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ். மதவெறி குண்டர்களைத் தாண்டி, போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களே தலைமையேற்று நடத்துகின்றன அல்லது ஒத்துழைக்கின்றன.

இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்ய காவி பயங்கரவாதிகள் விடுத்த வெளிப்படையான அறைகூவல்கள், ஹிஜாப் அணியத் தடை, ‘ஹலால் ஜிகாத்’ பொய்ப் பிரச்சாரங்கள், இராமநவமி உள்ளிட்டு தொடர்ந்துவந்த இந்துப் பண்டிகை நாட்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள், பாபர் மசூதிக்கு அடுத்து காசி முதல் கர்நாடகா வரை நாடுதழுவிய அளவில் குறிவைக்கப்படும் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள், முகமது நபியை இழிவாகப் பேசி இஸ்லாமியர்களின் கோபத்தைத் தூண்டியது, போராடிய இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தள்ளியது – என காவி பாசிஸ்டுகளின் அண்மைய நடவடிக்கைகளிலிருந்தே இதை உணரலாம்.

***

மோடி அரசின் எட்டாண்டு கால ஆட்சியில், பெரும்பான்மை உழைக்கும் மக்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளானார்கள். அந்நிலை மென்மேலும் மோசமாகி வருகிறது.

பெட்ரோல் – டீசல் – காஸ் சிலிண்டர் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியது மோடி அரசு. அதன் விளைவாக, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலைகளும் விண்ணை முட்ட உயர்ந்துவிட்டன. நெடுநாட்களாக விலை உயர்த்தப்படாமல் பராமரிக்கப்பட்ட தேநீர், இட்லி – தோசை உள்ளிட்ட அடிப்படை உணவு பொருட்களின் விலைகளும் இரண்டு, மூன்று ரூபாய்கள் உயர்த்தப்பட்டுவிட்டன.

2018-ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட போதே சிறுவியாபாரிகள் நொடிந்து போய்விட்டார்கள். மக்களின் வாங்கும் சக்தி அளவும் குறைந்துவருவதால் பொருட்கள் விற்கவில்லை. விவசாயிகளின் நிலையை தனியாக விளக்க வேண்டியதில்லை. வேலையின்மையாலும், கடன்சுமையாலும் மனமுடைந்து கொடூரமாக தற்கொலை செய்துகொள்ளும் குடும்பங்களின் செய்திகள் அன்றாடம் செய்தித்தாள்களை நிரப்புகின்றன. முக்கியமாக 40 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இந்நிலையில், சமூகத்தில் ஒரு சிறுபான்மை பிரிவினருக்காவது உத்தரவாதமான வாழ்வாதாரத்தைக் கொடுத்துவந்த அரசுத்துறை வேலைவாய்ப்புகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு காண்டிராக்ட் மயமாக்கப்பட்டு வருகின்றன. தங்கள் வாழ்க்கை அழிக்கப்படுவதை உணர்ந்து இளைஞர்கள் கொதித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்; பீகாரில் அரசுத் தேர்வெழுதிய மாணவர்களின் போராட்டம், தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவைகளே இதற்குச் சான்றுகள்.

மதவெறி போதையில் ஆழ்த்தப்பட்டு தங்களது உண்மையான பிரச்சினைகளைப் பற்றி, தங்கள் வாழ்வு யாரால் சீரழிக்கப்பட்டது என்பதைப் பற்றி சிந்திக்கவிடாமல் ஆக்கப்பட்டிருந்த மக்கள் பிரிவினர் கூட, இந்து ராஷ்டிரம் இந்துக்கள் என்று சொல்லபடுபர்களுக்கே எதிரானது என்பதை புரிந்துகொள்ளும் சூழல் மறுபுறம் உருவாகி வருகிறது.

மோடி அரசின் விவசாயச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடும் விவசாயிகள், பொதுத்துறை தனியார் மயமாக்கத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்கள், வேலை கேட்டு போராடும் இளைஞர்கள் ஆகியோர் பா.ஜ.க-வினரால் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களை அச்சுறுத்த புல்டோசரோடு பேரணி நடத்தியிருக்கிறது உ.பி போலீசு. தங்களுக்கு எதிராகப் போராடினால், இந்துக்களாக இருந்தாலும் புல்டோசர் பாயும் என்பதை நமது மண்டைக்கு உணர்த்துகிறார் யோகி.

***

பா.ஜ.க அல்லாத எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்களை நியமித்து இணையாட்சி நடத்துகிறார்கள் பாசிஸ்டுகள். தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் இதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். காசுக்காக தங்களையே விலைபேசிக் கொள்ளும் ஓட்டுக்கட்சி பொறுக்கிகளினால், பா.ஜ.க.வால் தாங்கள் நினைத்த நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆட்சியைக் கவிழ்த்துவிட முடிகிறது; மத்தியப்பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி தொடங்கி தற்போது மகாராஷ்டிரா வரை இதற்கு சான்றுகள். நாறுகிறது சொல்லிக் கொள்ளப்படும் ‘மக்களாட்சி’ தத்துவம்.


படிக்க : காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!


பீமா கொரேகான் வழக்கில் ரோனோவில்சன், வரவர ராவ், ஹனிபாபு ஆகியோரின் மின்னஞ்சல்களை ஹேக் செய்து, மோடியைக் கொல்ல சதி செய்திருப்பதாக மொட்டைக் கடிதத்தை நுழைத்தது புனே போலீசுதான் என்பதை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட செண்டினல் ஒன் என்ற புலனாய்வு நிறுவனம் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. யோக்கியாமான நீதிமன்றங்களுக்கு இது தெரியாதா? உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றங்களோ தானே முன்வந்து இதை விசாரித்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கைப் போல, இதுவும் காணாமல் ஆக்கப்படும்.

இதையெல்லாம் பார்த்தும்கூட “இந்தக் கட்சி அல்லது அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சரியாகவிடும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம், அரசியலமைப்பு நம்மை காக்கும்” – என்று பிதற்றிக் கொண்டு திரிய முடியாது. இனிதான் இந்து ராஷ்டிரம் நிறுவப்படப் போகிறது என்பதல்ல.. இந்து ராஷ்டிரத்தின் பெரும்பான்மை கூறுகள் தற்போதே நடைமுறையில் வந்துவிட்டன. அதாவது நாம் இந்து ராஷ்டிரத்திற்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டமைப்பே சிதைந்து அதிவேகமாக இந்து ராஷ்டிரம் உருக்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வையும் அதற்கு ஆதாரத்துணாக விளங்கும் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பையும் அடித்து நொறுக்காமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வில்லை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க