பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, “இது வெறும் முன்னோட்டம்தான்; காசி, மதுரா என தங்களுக்கு அடுத்தடுத்த இலக்குகள் உள்ளன” என்று வெளிப்படையாக அறிவித்தார்கள் காவி பாசிஸ்டுகள். இன்று அதை நோக்கிச் செயலுக்குப் போய்விட்டார்கள். “இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை” என பல புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, அடுத்தடுத்து இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய நினைவுச் சின்னங்கள் குறிவைக்கப்படுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ்மஹால், காசி – ஞானவாபி மசூதி, மதுரா – சாகி ஈத்கா பள்ளிவாசல்; டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரம், மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஜாமியா மசூதி, மங்களூருவில் உள்ள மாலாஜி ஜீம்மா மசூதி ஆகியவை முதற்கட்டமாக குறிவைக்கப்பட்டுள்ளன.
‘தாஜ்மஹால்’ இல்லையாம், ‘தேஜோ மஹாலயா’-வாம்!
யமுனை ஆற்றங்கரையில், வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஷாஜகான், தனது காதலி மும்தாஜ்-ன் நினைவாக கட்டியதாகும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பரிவாரங்களோ ‘தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோயில்தான் தாஜ்மஹால் என்ற கதையை நீண்ட காலமாகப் பாடிவருகிறார்கள்.
படிக்க :
♦ ’குதுப்மினாரை முகலாயர்கள் கட்டவில்லையாம்’ – கரசேவகனாக கூவும் தொல்லியல் துறை அதிகாரி !
♦ மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !
‘தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில்’ என 2000 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக, பின்.ஓக் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு 2005 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் 2015 ஆம் ஆண்டில் ஆக்ரா நீதிமன்றத்திலும் சிலரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின், மாநில சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹாலை நீக்கி தனது வெறுப்பை வெளிக்காட்டினார்கள் காவிகள். “தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, அதற்கு இந்திய வரலாற்றில் இடமளிக்கக் கூடாது; அதை இடித்துவிட்டு மீண்டும் இந்துக் கோயில் கட்ட வேண்டும் அல்லது தேஜோ மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றி இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும்” – என அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களால் வெளிப்படையாக பேசப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி மாவட்ட பா.ஜ.க. ஊடகப் பொறுப்பாளரான ரஜ்னீஷ் சிங், கடந்த மே மாதத் தொடக்கத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தாஜ்மஹால் பற்றிய ‘உண்மையை’ கண்டறிய, அதற்குள் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை சோதனையிட்டுப் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார். இம்மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வழக்கின் மூலம் ‘தேஜோ மஹாலயா’ என்ற வரலாற்றுப் பொய்யை மீண்டும் விவாதப் பொருளாக்கிவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள்.
ஞானவாபி மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிவலிங்கம்’, உண்மையில் ஒரு செயற்கை நீரூற்று.
நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடிசெய்வதற்கு ஒருநாள் முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் அரசன், இரண்டாம் மான் சிங்-இன் பேத்தியுமான தியா குமாரி, “தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் எனது முன்னோர்களான ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் இந்நிலத்தை எங்களிடமிருந்து ஆக்கிரமித்துவிட்டார்” என்று பேட்டியளித்திருந்தார்.
***
தாஜ்மஹாலைப் போலவே, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள ஜாமியா மசூதியும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என கிளம்பியிருக்கிறது காவி கும்பல். இம்மசூதி, 19 ஆம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாப்-ஆன குத்துஸியா பேகம் என்பவரால் கட்டப்பட்டது. ஆனால், இம்மசூதி சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டதென்றும், அங்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டுமென்றும் கோரி மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரிடம் ‘சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின்’ என்ற அமைப்பு மனு அளித்துள்ளது.
ஞானவாபி மசூதிக்கு அடியில், காசி கோயில்?
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மிகப் பழையான மசூதி ஆகும். பாபர் மசூதிக்கு முன்பாகவே, ஞானவாபி மசூதியை குறிவைக்கும் திட்டம் காவிகளுக்கு இருந்துவந்திருக்கிறது. இம்மசூதி உள்ள இடத்தில்தான் பழைய காசி விஸ்வநாதர் கோயில் இருந்ததாகவும் அவுரங்கசிப் ஆண்டபோது, காசி கோயில் இடிக்கப்பட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் காவிகளால் தொடர் பிரச்சாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது; இன்றுள்ள காசி கோயில், மசூதி கட்டிய பிறகு, புதிதாக கட்டப்பட்டது என அவர்களால் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, 1991 ஆம் ஆண்டே வி.எச்.பி.யால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
ஞானவாபி மசூதிக்கு அடியில், பழைய காசி கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் தொல்லியல் துறை ஆய்வின் மூலம் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறி, 2019 ஆம் ஆண்டு, விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற சங்கி, வாராணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு (2021) மீண்டும் இந்துத்துவ அமைப்பொன்றின் சார்பில் ஞானவாபி மசூதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஸ்வ வேத சனாதன சங்கத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள், ஞானவாபி மசூதியில் வெளிப்புறச் சுவறொன்றில் சிருங்கார கௌரி, விநாயகர், அனுமன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், நாள் தோறும் அங்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் இந்து அடையாளங்களை கண்டறிவதற்காக, வளாகத்திற்குள் சென்று ஆய்வு நடத்தவும் அதை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த ஆய்வில், மசூதியின் வளாகத்தில் ‘சிவலிங்கம்’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக் குழுவினால் தெரிவிக்கப்பட்டது. காவி கும்பல் உடனடியாக இதை பிரச்சாரமாக்கியது. உண்மையில் அது மசூதிக்கு வழிபட வருபவர்கள், தங்கள் கைகால்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள ‘செயற்கை நீரூற்று’ என மசூதி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிருங்கார கௌரி உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதோ, மசூதியின் மேற்கு வெளிப்புறச் சுவரில்; வழக்கு தொடுக்கப்பட்டதோ, அச்சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வேண்டி; ஆனால், சம்மந்தமே இல்லாமல் மசூதிக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரா: ‘கிருஷ்ணன் கோயில் ஆக்கிரமிப்பு’
மதுராவில் உள்ள சாகி ஈத்கா மசூதி, அவுரங்கசிப் காலத்தில் கிருஷ்ணர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகவும், அம்மசூதியை இடித்துவிட்டு மீண்டும் அதை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது காவி கும்பல். இதையொட்டி இதற்கு முன்னரும் பல வழக்குகள் தொடரப்பட்டு, அவை நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சாகி ஈத்கா மசூதி, கேதவ் தேவ் என்ற கிருஷ்ணன் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. ஆகவே பல ஆண்டுகளாக, இந்துத்துவவாதிகளால் இம்மசூதி கிருஷ்ணன் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்துவரப்படுகிறது.
1968 ஆம் ஆண்டு, கேதவ் தேவ் கோயில் நிர்வாகத்திற்கும் சாகி ஈத்கா மசூதி நிர்வாகத்திற்கும் இடையே மதச் சொத்துக்கள் விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது; இதன்படி, அவரவர் வழிபாட்டுத் தலங்கள் அவரவருக்குச் சொந்தம் என்ற ஒத்த முடிவு ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தற்போது காவி கும்பல் மதுரா விவகாரத்தை மீண்டும் சர்ச்சையாக்கியுள்ளது.
டெல்லி குதுப்மினாரை மீட்கக் கோரி, அனுமன் சாலிசா பாடி போராட்டம் நடத்தும் சங் பரிவார அமைப்புகள்.
இவ்வழக்கு ஒரு பக்கம் விசாரணையிலிருக்கும்போதே, முகலாய மன்னன் அவுரங்கசிப் உத்தரவின் பேரால் கிருஷ்ணன் கோயில் இடிக்கப்பட்டபோது, கோயிலில் இருந்த பொன் வேய்ந்த சிலைகள் கொல்லையடிக்கப்பட்டு, ஆக்ராவில் உள்ள பேகம் சாஹிபா மசூதிக்கு கீழே புதைத்திருப்பதாகவும் அதை மீட்க வேண்டுமெனவும் கோரி, சங்கி ஒருவரால் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
“அம்மசூதியின் படிக்கட்டுகளின் கீழே இந்துதெய்வங்களின் சிலை உள்ளதால், அதை மிதித்துக் கொண்டு செல்லக்கூடாது; அது இந்துதெய்வங்களை அவமதிப்பது போன்றதாகும்; ஆகவே இம்மசூதிக்கு பொதுமக்கள் செல்வதை தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
குதுப்மினார்: ‘விஷ்ணு கொடிமரம்’ அல்லது ‘சூரிய கோபுரம்’
தாஜ்மஹாலைப் போன்ற மிகப் பழைமையான (13 ஆம் நூற்றாண்டு) கட்டிடம் டெல்லியில் அமைந்துள்ள குதுப்மினார். இஸ்லாமிய மன்னன் குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்ட மிக உயர்ந்த செங்கல் கோபுரம் இது. ஆனால், இது ‘குதுப்மினார்’ அல்ல, ‘விஷ்ணு கோபுரம்’ என்று ஒரு கதையை தோற்றுவித்திருக்கின்றன வி.எச்.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள். மேலும் குதுப்மினாருக்கு உள்ளே இருக்கும் இந்தியாவின் முதல் மசூதியான குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதி 27 இந்து மற்றும் சமணக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
பல சங்கப் பரிவார அமைப்புகள் ஒன்றிணைந்து, கடந்த மே 10 ஆம் தேதி, குதுப்மினாரை ‘விஷ்ணு கொடிமரம்’ என பெயர் மாற்றக் கோரியும், குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதியை இடித்துவிட்டு மீண்டும் இந்துக் கோயில்களைக் கட்டித்தர வேண்டும் என்று கோரியும் அனுமன் சாலிசா பாடி போராட்டம் நடத்தியுள்ளன.
குதும்பினார் விஷயத்தில், முன்னாள் தொல்லியல் துறை அதிகாரியும் சங்கியுமான தரம்வீர் சர்மா என்பவர் சற்று வேறுபட்டு கூவுகிறார். குதுப்மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லையென்றும், அது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து மன்னன் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால், அதன் பெயர் ‘சூரிய கோபுரம்’ என்கிறார்.
கர்நாடகா: வடக்கே அவுரங்கசிப், தெற்கே திப்பு சுல்தான்
டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மட்டுமல்லாது கர்நாடகாவிலும் மசூதிகளை குறிவைத்துக் கொண்டிருக்கிறது காவி கும்பல். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் ஜாமியா மசூதியானது கி.பி. 1782 ஆம் ஆண்டு திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மசூதியாகும். இது தற்போது இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மே 14 ஆம் தேதி, ‘நரேந்திர மோடி விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு, “இம்மசூதி உள்ள இடத்தில், முன்பு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது; அதை இடித்துவிட்டுத்தான் திப்பு சுல்தான் ஜாமியா மசூதியை கட்டியுள்ளார். எனவே இந்துக்கள் மீண்டும் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று மாண்டியா மாவட்ட துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளது.
ஆஞ்சநேயர் கோயிலை மீட்கக் கோரி வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர், ஜூன் 4 ஆம் தேதி ‘ஸ்ரீரங்கப்பட்டணம் சலோ’ என்ற பெயரில், பேரணி ஒன்றை அறிவித்து நடத்தினர். இப்பேரணியின் முடிவில், ஜாமியா மசூதிக்குள் சென்று பூஜைகள் செய்யப்போவதாக அறிவித்தனர். மதவெறி நோக்கம் கொண்ட இப்பேரணியை தொடக்கத்திலேயே தடுக்காமல், மசூதியை நோக்கி வரும் வரை வேடிக்கைப் பார்த்து, பாதி பேரணியில் தடுத்து நிறுத்தியது கர்நாடக காவல்துறை.
ஜாமியா மசூதிக்குள், இஸ்லாமியர்கள் நடத்தும் மதரசாப் பள்ளி ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு பயிலும் மாணவர்கள், அங்குள்ள இந்து அடையாளங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, அம்மதரசாவை ஒருமாதத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று அரசுக்கு கெடுவிதித்துள்ளது வி.எச்.பி. அவ்வாறு காலி செய்யவில்லையென்றால் தாங்களே காலி செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார்கள்.
இம்மசூதி மட்டுமல்லாமல் மங்களூருவில் உள்ள மலாலி ஜீம்மா மசூதியும் காவிகளின் இலக்காகியிருக்கிறது. கடந்த மே மாத இறுதியில், இம்மசூதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது; அப்போது இந்து கோயில் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்பிவிடப்பட்ட வதந்தியை அடுத்து, வி.எச்.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் “மசூதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும்” என்று பிரச்சினையாக்கத் தொடங்கினர்.
***
‘வரலாற்றுச் சான்றுகளை’ தயாரிக்கும் வரலாற்றுப் புரட்டல்வாதிகள்
இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய மசூதிகள், நினைவுச் சின்னங்கள் அனைத்துமே இந்துக் கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவைதான் என்று கூறும் காவி கும்பல், தனது பொய்-புரட்டுகளை வைத்தே மதவெறிக் கலவரங்களை நடத்திவருகிறது. ஆனால், தாங்கள் கூறும் கூற்றுகளுக்கெல்லாம் ‘தொல்லியல் ஆதாரங்கள்’, ‘வரலாற்றுச் சான்றுகள்’ போன்றவைகள் இருப்பதாக கதையளிக்கிறார்கள் காவிகள்; உண்மையில் அப்படிச் சிலவற்றைக் காட்டவும் செய்கிறார்கள். அவையெல்லாம் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த புரட்டல்வாத அறிவுஜீவிகளால், தோற்றுவிக்கப்பட்ட ‘ஆதாரங்கள்’.
‘ஆஞ்சநேயர் கோயிலை’ மீட்கக்கோரி, கர்நாடகா ஜாமியா மசூதியை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்ற வி.எச்.பி.
சான்றாக, தாஜ்மஹாலை ‘தேஜோ மஹால்’ ஆக்கியவர் பி.என்.ஓக் என்ற புரட்டல்வாதி. இவர் ஒரு வரலாற்றுப் பேராசியர் மற்றும் கடைந்தெடுத்த சங்கி ஆவர். 1989 ஆம் ஆண்டு, தாஜ்மஹால்: ஓர் உண்மை கதை (Taj Mahal : The True Story), தாஜ்மஹால் ஒரு கோயில் அரண்மனை (Taj Mahal is a Temple palace) ஆகிய புரட்டல்வாத நூல்களை வெளியிட்டார். 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக தாஜ்மஹாலை ஆராயச் சொல்லி வழக்கு போட்டவர் இவர்தான். ஷாஜகானுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே ‘தேஜோ மஹால்’ என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுவிட்டது என்றும் ‘தேஜோ மஹால்’ என்பதன் திரிபே தாஜ்மஹால் என்று ஆனதாகவும் இவர் கூறுகிறார்.
இவர் ஆர்.எஸ்.எஸ். உடைய ‘அகண்ட பாரத’ பிரச்சாரத்தையும் தாண்டி, ‘அகில பாரத’ பிரச்சாரத்தை மேற்கொண்ட முரட்டுச் சங்கி. ஐரோப்பியாவில் இருக்கும் வாடிகன் சிட்டி, சவுதி அரேபியாவின் கப்பா மெக்கா, இலண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே ஆகியவை ஒரு காலத்தில் இந்து கோயில்களாக இருந்ததாகச் சொல்கிறார் இவர். இக்கூற்றிலிருந்தே இவரது ‘வரலாற்று ஆய்வை’ நாம் வியப்போம்.
பழைமை வாய்ந்த மசூதிகளெல்லாம் இந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவை என்று சித்தரிக்கும் நூல்களுள் ஒன்று, “இந்து கோயில்கள் : அவற்றுக்கு என்ன ஆனது?” (Hindu Temples : What happened to them) என்ற நூல். சீதா ராம் கோயல், அருண் ஷோரி, ஹர்ஷ் நரேன், ஜெய் துபாஷி மற்றும் ராம் ஸ்வரூப் ஆகியோர் இணைந்து இந்நூலை எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆவர்.
இவர்கள் எழுதிய மேற்கண்ட நூலில், சுமார் 1800-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கட்டிடங்கள், அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பாபர் மசூதி, ஞானவாபி, குதும்பினார் ஆகியவையும் அடக்கம்.
நூல்களைத் தாண்டி, தாங்கள் கடத்தவரும் வரலாற்றுப் புரட்டுகளை திரைப்படங்களாகவும் கொண்டுவந்து வெகுமக்களை மதவெறியூட்டுகிறார்கள் காவி பாசிஸ்டுகள். அதற்கு பொறுத்தமான சான்று, அண்மையில் வெளிவந்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். ‘வரலாற்று உண்மையை’ அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்ற பெயரில், ஒட்டுமொத்த காஷ்மீர் முஸ்லீம்களையும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளாகவும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவும் காட்டும் வரலாற்று மோசடி இத்திரைப்படத்தில் அரங்கேற்றப்பட்டது. பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்படுவதாகக் காட்டும் காட்சிகளை, நம்மை இரத்தம் கொப்பளிக்க வைப்பவையாகவும் ‘முஸ்லீம்களை பழிதீர்க்க வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடியதாகவும் அமைத்திருப்பார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. அதுதான் அவரது நோக்கம்.
இந்த சங்கப் பரிவாரப் பிரச்சார பீரங்கியின் அடுத்தப் படமாக தயாராகிக் கொண்டிருப்பது ‘டெல்லி ஃபைல்ஸ்’. விவேக் அக்னிஹோத்ரி சென்னை வந்திருந்தபோது, “முகலாயர்கள் ஆட்சி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சிவரை டெல்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது டெல்லி ஃபைல்ஸ் படத்தின் கதைக்களமாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லியை ஆண்ட சுல்தான்கள் ‘இந்துக் கோயில்களை இடித்துச் சேதப்படுத்தினார்கள்’ என்ற கருப்பொருளுக்கு சில வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துவைத்துக் கொண்டு, அவற்றை மிகைப்படுத்தி, திரித்து, போலியாக சேர்த்து பேசக் கூடிய படமாக ‘டெல்லி ஃபைல்ஸ்’ இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் வன்முறையை ஏவுவுதற்கான தலைசிறந்த பிரச்சாரக் கருவியாக இது செயல்படும்.
காவி பாசிஸ்டுகளின் கையாளாக நீதிமன்றங்கள்
“இந்துக் கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்ட மசூதியை மீட்க வேண்டும்” என்று கூறி நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வது காவிகளுக்கு இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாக அவர்கள் செய்துவருவதுதான். ஆனால், 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அவ்வாறு தொடுத்த வழக்குகள் பெரும்பாலும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை; காரணம், 1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் ஆகும்.
1991-இல் பாபர் மசூதியைக் குறிவைத்து இராம ஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இச்சட்டத்தின் பிரிவு 4, ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அப்படியே பராமரிக்கப்பட வேண்டுமெனவும்; ஒரு மத வழிப்பாட்டுத் தலம், முன்னொரு காலத்தில் வேறொரு மத வழிபாட்டுத் தலமாக இருந்து, அதை இடித்துவிட்டு தற்போதைய மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டதாகக் கூறி, அதை பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது என்றும் சொல்கிறது. இச்சட்டத்தில், பாபர் மசூதிக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, இச்சட்டப்பிரிவை நீக்கக்கோரி விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதுவரை, இச்சட்டம் நடைமுறையிலேயே உள்ளது. இப்படியிருக்க ஞானவாபி, மதுரா வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்திருக்கின்றன. இது சட்டத்தைக் காக்கும் நிறுவனமாக கருதப்படும் நீதிமன்றங்களே செய்த சட்டவிரோத நடவடிக்கைகளாகும்.
உச்சமாக, மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வேண்டி தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்கு உள்ளே சென்று ஆய்வு நடத்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது வாரணாசி சிவில் நீதிமன்றம். 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, ஆய்வுக் குழு அமைத்த வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மசூதி நிர்வாகம்; ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதி நிர்வாகத் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோதும், ஆய்வுக்குத் தடை விதிக்கப்படவில்லை; மாறாக, இவ்வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என நழுவிக் கொண்டது உச்சநீதிமன்றம். இதற்கிடையில், மசூதிக்குள் ஆய்வு நடைபெற்று, நீரூற்றை ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டதாக போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன; ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சீல்வைக்கச் சொல்லி, பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எஃப். படைகளை குவித்து முஸ்லீம் மக்களை அச்சுறுத்தியது வாரணாசி நீதிமன்றம்.
மசூதி நிர்வாகத்தின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத்தன்மையை கண்டறிவாதாலேயே அதை 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாக கருதமுடியாது” என்று கருத்து தெரிவித்திருந்தார். ‘இந்துக்களின் நம்பிக்கை’ என்பதாலேயே பாபர் மசூதியில் இராமன் கோயில் கட்ட அனுமதி கொடுத்த மனுநீதி மன்றமல்லவா உச்சநீதிமன்றம், அதனிடம் நாம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.
‘தேஜோ மஹாலயா என்பதுதான் தாஜ்மஹால்’ சங் பரிவார புரட்டல்வாதி பி.என்.ஓக் எழுதிய நூல்.
ஞானவாபி, மதுரா விவகாரங்களில் காவிகளின் மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்டே போதே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்பது கழிப்பறை காகிதமாக்கப்பட்டுவிட்டது; காவிகளின் விருப்பத்திற்கேற்ப அக்காகிதமும் இனி கிழித்தெறியப்படலாம்.
எதிர்கொள்வோம்!
“இந்துக் கோயில்களை மீட்போம்” எனக் கிளம்பியிருக்கும் இந்நடவடிக்கையானது, இராம ஜென்ம பூமி இயக்கத்திற்குப் பின், காவி பாசிஸ்டுகள் கையிலெடுத்துள்ள இன்னொரு கரசேவை இயக்கமாகும். ஆர்.எஸ்.எஸ்-இன் வரலாற்றில், இராம ஜென்ம பூமி இயக்கம் என்பது முக்கியமானதாகும். இந்த இயக்கத்தை ஒட்டி நடத்தப்பட்ட இரதயாத்திரை கலவரங்களில்தான், நாடு முழுவதும் சுமார் 2,000 பேர்கள் வரை கொல்லப்பட்டார்கள். கொடிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனக்கு மக்கள் மத்தியில் வலுவானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டதும் இந்த இயக்கத்தின்போதுதான்.
“ராமர் கோயில் பிரச்சினையைக் கையிலெடுத்த பின் ஆர்.எஸ்.எஸ். செழித்து ஓங்கியது. 1979-க்கும் 1989-க்கும் இடையிலான பத்தாண்டுகளில் ஸ்வயம்சேவக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 18 லட்சமாக உயர்ந்தது. ஷாகாக்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்தது மட்டுமன்றி 18,880 நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியது. அதற்கு 38 முன்னணி அமைப்புகள் இருந்தன. 50 லட்சம் பேர் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இதே கால கட்டத்தில் தென்னிந்தியாவில் வியக்கதகு வளர்ச்சியை அடைந்தது ஆர்.எஸ்.எஸ். கேரளாவில் இருக்கும் 14 மாவட்டங்களில் 12-இல் 3,000 தினசரி ஷாக்காக்களும் 900 வாராந்திரக் கூட்டங்களும் நடத்தப்பட்டன” (ஏ.ஜி. நூரானி எழுதிய, “ஆர்.எஸ்.எஸ். : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற நூலிலிருந்து)
எனினும், அன்றைக்கும் இன்றைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அன்று ஆர்.எஸ்.எஸ். தனது அடித்தளத்தை மக்கள் மத்தியில் வலுப்படுத்தி, விரிவுபடுத்திக் கொள்ளும் கட்டத்தில் இருந்தது. இன்றோ, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அமைப்புகள் புற்றீசல் போல பெருகி, எண்ணிலடங்காதவையாக வளர்ந்துள்ளன. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை நடத்தி முன்னோட்டம் பார்த்திருக்கிறது. ‘இந்துத்துவத்தின் சோதனைச் சாலை’ என்று ஒரு காலத்தில் குஜராத் மாநிலத்தை மட்டுமே குறிப்பிட்டு வந்தோம்; இன்றோ உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என தனது அடித்தளங்களை பல்வேறு மாநிலங்களிலும் வலுப்படுத்தி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.
அன்று பாபர் மசூதி என்ற ஒரு இடத்தை குறிவைத்து, நாடு முழுக்க மதவெறியூட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது, மதவெறி குண்டுகள் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றன.
மேலும் காவி பாசிஸ்டுகளே அறிவித்ததைப் போல, 1992-இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, இரதயாத்திரைக் கலவரங்கள் ஆகியவை ஒரு ‘முன்னோட்டம்’தான். கொடிய இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான முன்னோட்டம் அது.
இன்று, ஆர்.எஸ்.எஸ். அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்கள், ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன; பெயரளவிலான போலி ஜனநாயகக் கட்டமைப்புகளும் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு, இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள் என எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்.தான்” என சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளிப்படையாக பேசினார் கர்நாடக அரசவைத்தலைவர் விஷ்வேஸ்வர் ஹெக்டே.
படிக்க :
♦ ‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
♦ கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !
இது முந்தையவைகளைக் காட்டிலும் கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளும், இனப்படுகொலைகளும் நாடுமுழுவதும் தலைவிரித்தாடப்போகும் காலகட்டமாக இருக்கப் போகிறது.
ஆனால், நம்மிடம் அச்சப்படுவதற்கு மட்டுமே விசயங்கள் இல்லை; பாசிச அபாயம் முறியடிக்கப்பட முடியாதது அல்ல. ஆர்.எஸ்.எஸ். வெகுமக்களை இந்துமதவெறியின் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கும்போதே, புரட்சிகர நெருக்கடிக்கான சூழலும் கனிந்துகொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கொரோனா பொருளாதார முடக்கம், உக்ரைன் – இரஷ்யப் போர் ஆகியவை தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் தோல்வியை உலக அளவில் விரைவுபடுத்தியுள்ளன; இலங்கையைப் போலவே பல்வேறு நாடுகளிலும் பணவீக்கமும், கடன் நெருக்கடிகளும் தீவிரமாகி வருகிறது. நமது நாட்டில்கூட பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிகப்பெரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன; அரசி, பருப்பு, சமையல் எண்ணெய், பெட்ரோல்-டீசல் என அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றன. (இந்த நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு வித்திட்டுவிடக்கூடாது என்ற அச்சம் காரணமாகவே மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை சொற்பமாகக் குறைத்து நாடகமாடியுள்ளது)
பீகாரில் அரசுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களே வீதிக்கு வந்து போராடியது, இரயில்களைக் கொளுத்தியது ஆகியவை வேலையின்மையின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், ஷாகீன்பாக் போராட்டம், டெல்லிச் சலோ என காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டச் சூழல் கனிந்து வருகிறது. இவ்வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதும் வளர்த்தெடுப்பதும்தான் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் வழி.

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க