கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !

‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போலவே இதுவும் இடிக்கப்பட வேண்டும். எனவே, இந்து மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும்‘ என்று ரிஷி குமார் கூறினார்.

0
திப்பு சுல்தான் காலத்துக்கு முற்பட்ட மசூதியில் இந்துமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்துத்துவ அமைப்பு ஒன்று அனுமதி கோரியுள்ளது. இந்த மசூதி 1782-ல் கட்டப்பட்டது. இது இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தளமாகும்.
திப்பு சுல்தான் ஆட்சியின்போது, கட்டப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜமா மசூதிக்குள் இந்துக்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி விசார் மஞ்ச் என்று இந்துத்துவ அமைப்பு, மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது.
மஞ்ச் அமைப்பின் செயலாளரான மஞ்சுநாத், கடந்த மே 14 அன்று மாண்டியா மாவட்டத்தின் துணை ஆணையரைச் சந்தித்தார். பெங்களூரில் இருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மஸ்ஜித்-இ-ஆலா எனப்படும் ஜாமியா மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு துணை ஆணையரிடம் குறிப்பாணையை சமர்ப்பித்தார்.
மசூதி இருக்கும் இடத்தில், அனுமான் கோயில் இருந்தது என்று பாரசீக ஆட்சியர்களுக்கு திப்பு கடிதம் எழுதியதற்கான ஆவண ஆதாரங்கள் உள்ளது என்றும் மசூதியின் தூண்கள், சுவர்களில் உள்ள இந்து கல்வெட்டுகள் எங்கள் இந்துமதத்தை சார்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். எனவே வழிபாடு நடத்த மசூதியின் கதவுகளைத் திறக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார் மஞ்சுநாத்.
காளி மடத்தைச் சேர்ந்த ரிஷி குமார் ஸ்வாமி என்பவர் 1784-ல் அனுமான் கோவிலை இடித்து திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மசூதிதான் இது என்று கூறியுள்ளார். மசூதியை இடிப்போம் என்று மிரட்டல் விட்டதற்காக கடந்த ஜனவரி மாதம் ரிஷி குமார் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
படிக்க :
இஸ்லாமியர்களின் வழிபாட்டு  அபகரிக்கத் துடிக்கும் காவிகள் !
காலனிய சட்டங்களுக்கு தடை – தேசத் துரோக சட்டங்கள் இனி நடைமுறை !
“ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள இந்த மசூதி ஒரு காலத்தில் ஒரு கோவிலாக இருந்தது, மேலும் அதன் கட்டிடக் கலையும் இந்து கோயிலைப் போலவே உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போலவே இதுவும் இடிக்கப்பட வேண்டும். எனவே, இந்து மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும்” என்று ஜனவரி மாதம் ரிஷி குமார் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்திற்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்துமதவெறியர்கள் கிளப்பிய பிரச்சினைக்கு பிறகே கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜமா மசூதி பற்றிய பிரச்சினையை தீவிரப் படுத்தியுள்ளது காவிக் கும்பல்.
000
தாஜ்மஹாலை அபகரிக்கத் துடிக்கும் காவிக் கும்பலின் செயல்பாடுகள் தொடங்கி இந்தியாவின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் மக்களின் வழிபாட்டு தளங்கள் குறிவைக்கப்படுகிறது. பாபர் மசூதியை இடித்து கரசேவை புரிந்த காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கு முன், மசூதியை இடித்தவனுக்கே நிலம் சொந்தம், இராமர் கோவிலை கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
அந்த தீர்ப்பை மையமாக வைத்தே இன்று தாஜ்மஹாலை அபகரிக்க களமிறங்கியுள்ளது இந்துமதவெறிக் கும்பல். ஜெய்பூரின் பழைய அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி என்ற சங்கி, தாஜ்மஹால் இருக்கும் இடம் எங்க குடும்ப சொத்து என்று கனைத்து வருகிறார்.
முகலாய ஆட்சியாளர் ஷாஜகான் தனது குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்திக் கொண்டதாகவும், நிலத்தின் மீதான உரிமையைக் காட்டும் ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தியா குமாரி கூறியுள்ளார்.
கேட்கிறவன் கேனையனாக இருக்கும்வரை இந்த காவிக் கும்பல் முஸ்லீம் மக்களின் வழிபாட்டு தளங்களை சிறிது ஆதாரமே அற்ற – எவராலும் நம்பமுடியாத – பல பொய் புரட்டுகளை கூறி, இடித்துக் கொண்டுதான் இருக்கும். முஸ்லீம் வழிபாட்டு தளங்கள் மட்டுமல்ல, தான் அபகரிக்க நினைக்கும் எந்த இடத்தை வேண்டுமானாலும் புராணப் புரட்டுகளைக் கூறி சட்டப் பூர்வமாகவும் கரசேவையின் மூலமும் இக்காவிக் கும்பல் அபகரித்துக் கொள்ளும்.
சங்கிகள் கூறும் பெரும்பான்மை இந்து மக்களை கொண்டே, முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீதான காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் இந்த தொடர் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க