காலனிய சட்டங்களுக்கு தடை – தேசத் துரோக சட்டங்கள் இனி நடைமுறை !
ஊபா போன்ற கடும் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது தேசப் பாதுகாப்பு சட்டம் இடைக்கால தடை உத்தரவு என்பதெல்லாம் ஒரு போலி முகத்திரை ஜனநாயகத்தை உருவாக்கும் தன்மை கொண்டதுதான்.
தேசத் துரோக சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிய இடைக்கால உத்தரவை மே 11 அன்று பிறபித்துள்ளது உச்சநீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்வதையும் நடவடிக்கைகள் எடுப்பதையும் ஒன்றிய – மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
1962-ம் ஆண்டு, தேசத் துரோக வழக்கு, கேதார்நாத் சிங் vs பீகார் வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யகோரி பொதுநல இயக்கங்களால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கு கடந்த மே 10 அன்று விசாரணைக்கு வந்தபோது, “தேசத் துரோக வழக்கு தவறாக கையாளப்படுவதாக ஒன்றிய அரசே கவலை தெரிவித்துள்ளது. இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதுவரையில் ஒன்றிய, மாநில அரசுகள் – 124-A பிரிவை – தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தனது அமைச்சகத்தின் மூலம் ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விசாரணையின் போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொசிலிட்டர் ஜெனரல் தூஷார் மேத்தா, இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் அறிவுறுத்தல் கேட்ட பின்பு மே 11 அன்று கருத்து தெரிவிப்பதாக கூறினார்.
000
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மே 11 அன்று ஒன்றிய அரசின் கருத்தை பதிவு செய்தார் துஷார் மேத்தா. ஒன்றிய அரசின் சார்பில், இடைக்கால தடைவிதிக்க கோரும் மனுவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதனோடு, ‘கடுமையான குற்றங்களுக்காக கடந்த 1962-ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு மூலமாக உறுதி செய்யப்பட்ட இந்த சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது. தேவைப்பட்டால் இந்தச் சட்ட பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரத்தை காவல் கண்காணிப்பாளர் வரை பொறுப்புகளை உயர்த்தலாம் என கூறினார். மேலும், நிலுவையில் உள்ள தேசத் துரோக சட்டங்கள் குறித்த தீவிரம் அரசுக்கு தெரியாது. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பயங்கரவாத செயல்களாகவும் இருக்கலாம். வேண்டுமென்றால் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தாலாம்” என ஒன்றிய அரசின் கருத்தை பதிவு செய்துள்ளார்.
துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் 124-A பிரிவினை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இந்த விசயத்தை அராசாங்கம் ஆராயும் வரை வழக்கை எடுக்க வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு கேட்டு கொண்டு உள்ளது. ஒன்றிய அரசு காலனித்துவ சட்டங்களை மாற்றி அமைப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
தலைமை நீதிபதி ரமணா, ‘இச்சட்டம் தவறாக மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. அனுமன் சாலிசா கோசமிட்டதற்கு வழக்குபோடுவது போன்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுக்கோபால் கூறியிருந்தார் என்றார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும், தேசத் துரோகம் சட்டம் தேவையா? என்று ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினார். இச்சட்டம் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். காந்தி, பால கங்காதர திலகர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தபட்ட சட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். இச்சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாகவும் கூறினார்.
அட்டர்னி ஜென்ரல் கே.கே.வேணுகோபால் இச்சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்றும் ஆனால், இந்த பிரிவு குறித்த வழிகாட்டுதல்கள் தேவை அவசியமானது எது, அவசியமற்றவை எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இச்சட்டம் தவறாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது என்றும் கூறினார்.
ஒன்றிய அரசின் கருத்து வரும் வரை மாத கணக்கில் ஒருவரை சிறையில் அடைக்க முடியாது. அதன்பிறகு விரிவாக ஆலோசனை செய்து ஒன்றிய அரசின் கருத்தை மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முழுமையாக ஏற்றுகொள்ளவில்லை. மேலும், 124-A சட்டப்பிரிவு மறுஆய்வு செய்யப்படும் வரை, தேசத்துரோக சட்டத்தின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணை தொடரவும், நடவடிக்கைகள் எடுக்கவும் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். இச்சட்டப்பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணைகள், மேல்முறையீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
000
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘அரசு நிர்வாகம் – நீதித்துறை என ஒவ்வொரு நிர்வாகத்துக்குமான எல்லையை லட்சுமண ரேகை வழிகாட்டுகிறது. அதன்படி தெளிவான எல்லை வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் யாரும் அவரவர் எல்லையை மீறக் கூடாது. நீதிமன்றம் அரசையும் நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார்.
000
தேசத் துரோக வழக்கு சட்டம் 124-A பிரிவின் கீழ் இதுவரை 13,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில். கடந்த 2015 – 2020 வரை இச்சட்டப்பிரிவின் கீழ் 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2014 பிறகு 149 பேர் மீது மோடியை விமர்சனம் செய்ததற்காகவும், சிறுமைப்படுத்தும் விதமாக குறிப்புகள் எழுதியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய நபர்கள் மீது பல்வேறு தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக தனிநபராகவும், அமைப்பாகவும் பலரும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். காவி பாசிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கதான் பெரும்பாலும் இச்சட்டம் பயன்படுத்த படுகிறது. இதுவரை மோடி அரசுக்கு எதிராக போராடும் தனிநபர்களை, இயக்கத்தின் முன்னணியான நபர்களை இச்சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
000
உச்ச நீதிமன்றம் காலனியகால சட்டங்களான தேசத் துரோக வழக்கிற்கு இடைக்கால தடைவிதித்தாலும், இதைவிட கொடூர சட்டங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கத் தான் செய்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊபா போன்ற கொடும் ஆள்தூக்கி சட்டங்களே அரசியல் ரீதியாக எதிர் கருத்து சொல்லும் அமைப்பாக இருந்தாலும், தனிநபர்களாக இருந்தாலும் கைது செய்ய முடியும் என்று 2019-ல் திருத்தம் கொண்டு வந்தது மோடி அரசு.
ஊபா சட்டத்தின் மூலம் இதுவரை 3005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊபா போன்ற கடும் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது தேசப் பாதுகாப்பு சட்டம் இடைக்கால தடை உத்தரவு என்பதெல்லாம் ஒரு போலி முகத்திரை ஜனநாயகத்தை உருவாக்கும் தன்மை கொண்டதுதான்.
அடுத்து வரக்கூடிய தேசப் பாதுகாப்பு சட்ட திருத்தங்கள் என்பது காவி பாசிசத்திற்கு எதிராக கருத்து சொல்பவர்களை ஒடுக்கவதற்காகவும், மறுகாலணியக்கத்திற்கும், பாசிசத்திற்கும் சேவை செய்யும் வகையில்தான் அமையும். காவி பாசிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும் வரை ஜனநாயகத்திற்கான சட்டம் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுவது என்பது அது காலனிய கால சட்ட என்பதால்தான் இல்லை, இந்திய மக்களை இந்த அரசாங்கம் கொடுமைப் படுத்துகிறது என்பதால்தான் என்று உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மூலம் அறிய முடியும். மக்களை கொடுமைப்படுத்துகிறது என்று கருதி உச்ச நீதிமன்ற இந்த சட்டத்திற்கு தடை விதிக்கிறது என எடுத்துக் கொண்டால் ஊ.பா போன்ற கொடூரச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை. இதில் இருந்தே உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நீதித் துறையும், அரசு அதிகார வர்க்கமும் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைதான் இயற்றும் என்பதை தவிர வேறென்ன செய்துவிட போகிறது.
வினவு தோழரே, உண்மையில் 124-ஏ சட்டம் பற்றிய சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாடுகளை ஏன்?எதற்கு?எப்படி?என்ற கோணத்தில் தெரிந்து கொள்ள, ஆவலாக இருந்த எனக்கு, இந்த கட்டுரை சரியான தெளிவினை புரிதலை தரவில்லை.
கட்டுரைகள் பிரசுரத்திற்காக தங்களிடம் வரும்போது முழு பொறுப்பும் தங்களை சார்ந்ததாகிவிடுகிறது.அதில் ‘திருத்தங்கள், தொகுத்தல், நீக்குதல்’ ஆகியவற்றில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
உதாரணத்திற்கு கட்டுரை முடிவில்”இந்த நீதித் துறையும், அரசு அதிகார வர்க்கமும் எந்த உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைதான் இயற்றும் என்பதை தவிர வேறென்ன செய்துவிட போகிறது”.
என்ற வரிகளில் “எந்த” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு படித்தால்தான் அந்த வரிகளின் அர்த்தம் முழுமையாகும்,புரியும் என்பதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள்.
வினவு தோழரே, உண்மையில் 124-ஏ சட்டம் பற்றிய சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாடுகளை ஏன்?எதற்கு?எப்படி?என்ற கோணத்தில் தெரிந்து கொள்ள, ஆவலாக இருந்த எனக்கு, இந்த கட்டுரை சரியான தெளிவினை புரிதலை தரவில்லை.
கட்டுரைகள் பிரசுரத்திற்காக தங்களிடம் வரும்போது முழு பொறுப்பும் தங்களை சார்ந்ததாகிவிடுகிறது.அதில் ‘திருத்தங்கள், தொகுத்தல், நீக்குதல்’ ஆகியவற்றில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
உதாரணத்திற்கு கட்டுரை முடிவில்”இந்த நீதித் துறையும், அரசு அதிகார வர்க்கமும் எந்த உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைதான் இயற்றும் என்பதை தவிர வேறென்ன செய்துவிட போகிறது”.
என்ற வரிகளில் “எந்த” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு படித்தால்தான் அந்த வரிகளின் அர்த்தம் முழுமையாகும்,புரியும் என்பதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள்.