ங்கள எப்பதான் வாழவிடுவீங்க! கொத்து கொத்தா புடிச்சி போடுறீங்களே இருளர்கள… இது என்ன ஜனநாயக நாடு” – விழுப்புரத்தில் இருளர்கள்மீதான போலீசின் அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், இருளர் சமூக பெண் ஒருவர் தன்னுடைய வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் சித்தலிங்கமடத்தைச் சேர்ந்த பாண்டியன், இராமச்சந்திரன் மற்றும் குமார் ஆகிய இருளர் சமூகத்தைச் சேர்ந்த மூவரை போலீசு கைதுசெய்தது. அம்மாவட்டத்தில் உள்ள சின்னவளவனூர் மாரியம்மன் கோவில் உட்பட 10 கோவில்களில் திருடினார்கள் என்பது வழக்கு.

படிக்க :

ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !

வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

இது இருளர் ஆண்களின்மீது போடப்பட்ட பொய்வழக்கு; எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் மக்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
000
தமிழகத்தில் கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடத்தில் வாழும் இருளர் மக்கள் மூன்றாண்டுகளுக்கு முன்புவரை ஆந்திர மாநிலம் சித்தூரில் கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்கள். இவர்களை, தனது தீவிர முயற்சியால் மரக்காணத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மீட்டிருக்கிறார். இம்மக்களுக்கு சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதையும் அரசு செய்துகொடுக்கவில்லை.
தங்களது சாதி காரணமாகவும் வேறு வேலை கிடைக்காததாலும் தற்போதும் இவர்கள் சித்தலிங்கமடத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், கொத்தடிமைகள்போல்தான் வேலை பார்க்கின்றனர்.
கொத்தடிமைகளாக இருந்ததற்காக அரசாங்கத்தால் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியைப் பெறவேண்டுமானால் கொத்தடிமையாக வேலை செய்த அனைவரின் விவரங்களும் காண்பிக்கப்பட வேண்டும். இதற்காக வெளியூரிலுள்ள கணேசன் என்பவரையும் சந்தித்து சான்றிதழ்களைப் பெறவேண்டியிருந்தது. பாண்டியன், இராமச்சந்திரன், குமார் ஆகிய மூவரும் கணேசனை சந்திப்பதற்காக விழுப்புரம் – சென்னைக்கு இடையிலிருக்கும் கூட்டேரிப்பட்டு என்ற ஊருக்கு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.
வழியில் சின்னவளவனூரில் பாண்டியனும் குமாரும் மது அருந்துகின்றனர். அப்பொழுதுதான் அவர்களைக் கைதுசெய்கிறது போலீசு. இருளர்கள் என்பதால் கேட்க நாதியற்றவர்கள் என்று அவர்கள்மீது கோயிலில் திருடிவிட்டதாக பொய்வழக்கு போட்டிருக்கிறது.
இம்மூவர் மட்டுமின்றி கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகியோரும் திருட்டில் ஈடுபட்டதாகவும் பிடிக்கும்போது தப்பி ஓடிவிட்டதாகவும் கதைகட்டியது போலீசு. சம்பவம் நடந்த நாள் இரவில் இந்த நான்கு பேரும் செங்கல் சூளையில்தான் வேலை செய்தனர் என்று அச்சூளையின் உரிமையாளர் கூறியிருக்கிறார். இதிலிருந்தே இவ்வழக்கு ஒரு பொய்வழக்கு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
“குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத வழக்குகளில், இருளர்கள்மீது பொய்வழக்கு போட்டு கைதுசெய்வதை ஒரு போக்காகவே வைத்திருக்கிறது போலீசு” என்று கூறுகிறார் இருளர் மக்களுக்காக சங்கம் நடத்திவரும் பேராசிரியர் கல்யாணி.
இருளர்கள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறை செலுத்திவரும் போலீசின் மிருகத்தனத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
இரவு நேரத்தில் கைதுசெய்த போலீசு, அவர்களிடமிருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டது. மேலும் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்லாமல் வேறு இடத்தில் வைத்து மூவரையும் இரவு முழுக்க காட்டுமிராண்டித்தனமாக அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. கைது பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச சட்டவிதிமுறையைக்கூட போலீசு கடைபிடிக்கவில்லை. கைதானவர்களே தங்கள் கைப்பேசியின் மூலமாக தகவல் தெரிவித்த பிறகுதான் அவர்களது குடும்பத்தினருக்கே தெரிந்திருக்கிறது.
மேலும் இருளர் மக்கள் வீட்டை சோதனையிடச் சென்ற போலீசு கும்பல், விருதாம்பாள் என்பவரின் வீட்டிலிருந்து பாட்டுக்கேட்கின்ற ஸ்பீக்கர்களையும் இரண்டு இணை காதணிகளையும் திருடிச் சென்றிருக்கிறது.
000
இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் பேராசிரியர் கல்யாணி.
மேலும் 2012-ஆம் ஆண்டில் இருளர்கள்மீது புனையப்பட்ட பொய்வழக்கு ஒன்றைக் குறிப்பிடுகிறார் அவர். அப்போது கர்ப்பிணி உட்பட 4 இருளர் பெண்களைக் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தியதோடு, பாலியல் வல்லுறவும் செய்திருக்கின்றனர் காக்கிப் பொறுக்கிகள்.
ஊழல் செய்யும் அமைச்சர்கள்-அதிகாரிகளை, மல்லையா போன்ற பெரும் பணக்காரர்களை, யுவராஜ் போன்ற சாதிவெறியர்களை கண்ணியமாக நடத்துகிற போலீசு, ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.
ஒருசில போலீசார்கள்தான் இத்தகைய காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. இது அரசுக்கட்டமைப்பின் அங்கம் முழுவதும் வர்க்க ஒடுக்குமுறையும் சாதிவெறியும் புரையோடியிருப்பதன் வெளிப்பாடே. ஏனெனில் இருளர்கள்மீது பொய்வழக்கு போட்டதற்காக இதுவரை எந்த அதிகாரியும் எந்த ஆட்சியிலும் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை.
இருளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளின் உண்மைத் தன்மையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வர்க்கமும் சாதியும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

படிக்க :

மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்

இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !

ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான போலீசின் காட்டுமிராண்டித்தனமும் கொட்டடிக் கொலைகளும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் தொடருகின்றன. மக்களுக்கு கட்டுப்படாத, மக்களை அடக்கி ஒடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்த போலீசுத்துறையையே கலைக்காமல் இதனை மாற்ற முடியாது.
ஜெய்பீம் படத்திற்குப்பின், தமிழக அரசு ஆங்காங்கே பழங்குடி மக்களுக்கு சில நலத்திட்டங்களை வழங்குவதைப் பார்த்து “ஆஹா எல்லாம் மாறிவிட்டது” என்று நினைப்பது தவறு. களத்தில் எந்த மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கிறது.
அத்திரைப்படம் ஓடியபோது, பழங்குடி மக்களைப் பற்றி விவாதித்த ஊடகங்கள் எதுவும் அம்மக்களது அன்றாடப் பிரச்சினைகளை செய்திகளாக்குவதில்லை. அப்படியே, அங்கொன்றும் இங்கொன்றும் செய்திகள் வந்தாலும் பல்வேறு பிரச்சினைகளோடு ஒன்றாக நாமும் அதைக் கடந்துசென்றுவிடுகிறோம்.
மூன்று மணிநேர படத்தைப் பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி முடித்துக்கொள்வதல்ல பிரச்சினை. கண்ணீர் சிந்துபவர்களுக்கு அற உணர்ச்சி இருக்குமாயின் அவர்களுக்காக நடைமுறையில் குரல் கொடுக்க வேண்டும்.


வாகைசூடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க