இருளர் மக்களின் பிள்ளைகளின் விருப்பத்தை
நிறைவேற்றியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி
கடந்த வாரம் எனது மகன் படிக்கும் அரசு பள்ளியின் ஆசிரியருக்கு “கயிறு” என்ற சிறுகதை வெளியீட்டை வழங்கினேன். அந்த கயிறு புத்தகம் சாதி ரீதியான பிரச்சினைகளை மையப்படுத்தியது எனவும் குறிப்பிட்டேன். அப்போது அந்த ஆசிரியர் சாதி ரீதியாக பின்தங்கியுள்ள குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை என குறிப்பிட்டு வேதனைப்பட்டார். ஆசிரியரின் வேதனையை உணர்ந்தது மட்டுமல்ல, என்னிடம் சொன்னால் ஏதாவது முயற்சி எடுப்பார்கள் என்ற நோக்கத்தில் தான் அவர் அதனை வெளிப்படுத்தினார்.
உடனடியாக எனது வீட்டின் அருகாமையில் வசிக்கும் இருளர்-பழங்குடி மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர முயற்சி செய்தேன். இரண்டு நாட்களாக அக்குடும்பத்துடன் பேசி, அவர்களின் வாழ்க்கை முறை, வறுமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை கண்கூடாக பார்த்தபோது அக்குடும்பத்தின் நிலை என்னை நொடிந்து போகச் செய்தது. பள்ளிக்கு அழைத்து செல்ல ஆசிரியர்களோ அல்லது இதர நபர்கள் எவர் வந்தாலும் அம்மாணவர்கள் மரத்தில் ஏறிக் கொள்வதும், அங்கிருந்து ஓடி ஒளிந்துக் கொள்வதும் தொடர்ந்து வந்தது.
செவ்வாய் அன்று காலையில், நான் எனது நண்பருடன் சென்ற பொழுதும் அதே நிலை தான் தொடர்ந்தது. பெற்றோர் எவரும் வீட்டில் இல்லை. மீண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை சந்திக்க சென்றோம். பள்ளி மேலாண்மை குழு தலைவரையும் அழைத்துச் சென்றேன். சிறுவர்களின் தந்தை, “அச்சிறுவர்கள் பள்ளிக்கு போக மறுக்கிறார்கள். நான் என்ன செய்வது? நான் என் பிழைப்பை பார்பேனா, இவனுங்க பின்னாடி அலைவேனா?” என அலுத்துக் கொண்டார். என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். நான் அவர்கள் நிலையை புரிந்து கொண்டேன்..
அப்போது அங்குள்ள சிறுவர்கள் மீண்டும் மரத்தில் ஏறிக் கொண்டார்கள். சாக்லேட், கடலை மிட்டாய் வைத்துக் கொண்டு சிறுவர்களை அழைத்து சிறுவர்களுக்கு வழங்கினேன். அந்த சிறுவர்களிடம், “நீங்கள் படித்தால் பஸ் ஓட்டலாம், கார் ஓட்டலாம், பைக் ஓட்டலாம்..” என்று பேச்சை தொடங்கினேன். பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்களின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும் பேசினேன்.
“எங்களுக்கு இருப்பது போல் தான் கை, கால், கண், மூளை எல்லாம் உங்களுக்கும் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் வறுமையில் வாழ வேண்டும். உங்கள் பிள்ளைகள் எங்களைப் போல் வாழ வேண்டும் என்றால் படிக்க வேண்டும். உங்களுக்கு கல்வி பயில தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. பள்ளியிலே காலை உணவு வழங்கப்படுகிறது. நீங்கள் வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதற்கும் உங்கள் மூன்று மகன்களின் எதிர்காலமும் நல்லபடியாக அமைவதற்கும் வாருங்கால சந்ததியினரும் வறுமையிலிந்து விடுபடுவதற்கும் உங்கள் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும். உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்” என்று அழுத்தமாக பேசினேன்.
படிக்க : இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !
மறுநாள் காலை, அப்பிள்ளைகள் பள்ளிக்கு தயாராகிவிட்டார்களா என பார்க்கச் சென்றேன். அப்போது தான் தெரிந்தது அந்த சிறுவர்களுக்கு உடுத்திக்கொள்ள உடைகள் கூட இல்லை. உடனே எனது மகனின் உடைகளை எடுத்து வந்து கொடுத்து அணிந்து கொண்டு வரச் சொன்னேன். அதன் பிறகு என் வீட்டில் உள்ள எனது மகனின் உடைகளையும் என் நண்பனின் வீட்டில் இருந்து சில உடைகளையும் பெற்று கொடுத்தேன். கூடுதலாக அச்சிறுகளுக்கு முடி வெட்டுவதற்கு அவர்கள் தாயிடம் 100 ரூபாய் கொடுத்து அப்பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டேன்.
எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இரு சிறுவர்களில் ஒருவன் “ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம்” என்று சொல்லி வண்டியில் இருந்து குதித்தான். இதோ அடுத்தநாள் பள்ளியில் மகிழ்ச்சியாக காலை உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்தத் தாயும் அளவில்லா மகிழ்ச்சியில் எனக்கு நன்றி சொன்னார். இது நாள் வரை, பொதுவுடமை இயக்கத்தில் இணைந்த பிறகு எத்தனையோ உதவிகளை பலருக்கு செய்து வந்திருக்கின்றேன், இந்த சம்பவம் போன்று ஒரு மகிழ்ச்சி இல்லை…
சாதி அனைவரையும் சமமாக நடத்தாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனை ரீதியாக தனக்கு படிப்பு வராது, தான் வறுமையில் வாழ்வது தலையெழுத்து, நம் பிள்ளைகள் படிக்காது என தங்களை தாங்களே தாழ்த்திக் கொண்டுள்ள மனநோய்க்கு காரணமான இந்த சனாதன, பார்ப்பனிய சமூக கட்டமைப்பை உடைத்தெறிய களமிறங்குவோம். பார்ப்பனிய எதிர்ப்பு போராளிகளின் மரபை உயர்த்தி பிடிப்போம். இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்ட பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிப்போம். பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க சாவித்திரிபாய், அம்பேத்கர், பெரியார் வழியில் பயணிப்போம்.
சௌந்தர்