இருளர்கள்மீது தொடரும் போலிசின் வெறியாட்டங்கள் :
பொய்வழக்கே, சித்திரவதையே உன்பெயர்தான் போலீசா?
மீபத்தில் ஜெய்பீம் படம் வெளியாகி இருளர் இன மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையையும், போலீஸ் அதிகாரிகளின் திமிரையும், கொடூரத்தையும் அம்பலப்படுத்தியதை நாம் அறிவோம். அதற்குப் பின்னரும் இருளர்கள், நறிக்குரவர்கள் போன்றோரின்மீது தொடுக்கப்படும் சித்திரவதைகளும், வன்கொடுமைகளும் குறைந்தபாடில்லை.
விழுப்புரம் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் ஒன்றில், கடந்த மார்ச் 2-ம் தேதி அதிகாலை கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, சித்தலிங்கமடம் பகுதியில் நீதிபதி சந்துரு குடியிருப்பில் வசித்துவரும் இருளர் இனத்தைச் சேர்ந்த 7 பேர் மீது பொய்வழக்கை புனைந்து அதில் 3 பேரைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. கைது செய்த 3 பேரை மயிலம் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகே ஒரு பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் வைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளனர். மீதம் 4 பேரும் தப்பியோடியதாகக் கூறியது போலீசு.
படிக்க :
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு !
மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
கைது செய்யப்பட்டுள்ள மூவர் திருடியதாகக் கூறப்படுவது அக்டோபர் 2 அதிகாலை 4 மணி. ஆனால், அக்டோபர் 1-ம் தேதி இரவு 7.30 மணிக்கே மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான பாண்டியனின் மனைவி கமலா என்பவருக்கு அக்டோபர் 2 அதிகாலை 2.45 மணிக்கே ஒரு அழைப்பு வருகிறது. அதில் பாண்டியன் ‘போலீசு எங்கள பிடித்து வைத்திருக்காங்க’என்று சொல்வதுடன் துண்டிக்கப்படுகிறது என்கிறார் கமலா. மேலும், தப்பியோடியதாகக் கூறப்பட்ட நால்வர் அடுத்த நாள் (அக்டோபர் 2) மாலை 4 மணி வரை தமது செங்கல் சூளையில்தான் வேலைபார்த்தனர் என்கிறார் சூளையின் உரிமையாளர் முருகன். இதிலிருந்தே இந்த வழக்கு எந்தளவு பொய்யானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பொய் வழக்கை ஒப்புக்கொள்ளச் செய்யவே மூவரையும் இரவு முழுவதும் சித்திரவதை செய்துள்ளது போலீசு.
அன்றைய தினமே (2-ம் தேதி) நீதிபதி சந்துரு குடியிருப்பில் உள்ள சங்கர் என்பவரின் வீட்டில் நுழைந்த இரண்டு போலீசு அதிகாரிகள், சுமார் ரூ.75,000 மதிப்பிலான கம்மல், மாட்டல், எலக்ட்ரானிக் சாதனத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அக்டோபர் 3-ம் தேதியன்று வெளியான நாளிதழ்களில், கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 2-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உண்டியலை உடைத்து 7 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் பாண்டியன், ராமச்சந்திரன், குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்… கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகிய 4 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் எழுதிக் கொடுத்ததை, அதன் உண்மையை துளியும் சரிபார்க்காமல் அப்படியே வாந்தி எடுத்துள்ளன ஊடகங்கள்.
இந்தக் கைதை கண்டித்து விழுப்புரத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரியும் இப்படி தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டும் வன்கொடுமைகளை கண்டித்தும் 500 மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல கடந்த 26.12.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவனை ‘சந்தேகத்தின் பெயரில்’கைதுசெய்த விருத்தாசலம் போலீசு, அச்சிறுவன் இருளர் இன சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன் அவன் கைகளில் வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், கடையை உடைத்து திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி, அவனை முட்டிபோட வைத்து இரண்டு கால்களிலும் லத்தியால் அடித்து விரல்களை நசுக்கியுள்ளனர். வலி தாங்காமல் கத்திய அஜித்திடம் உன்னை சாகடித்து விடுவோம், ஒழுங்காக திருட்டை ஒப்புக்கொள் என மிரட்டி வழக்குகளை அந்த 14 வயது சிறுவன் மீது போட்டுள்ளனர்.
இதேபோல, 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அருகேயுள்ள தி.கே.மண்டபம் என்ற கிராமத்தில் வசித்து வந்த இருளர் இனத்தைச் சேர்ந்த காசி மற்றும் முருகன் என்ற இருவரையும் போலீஸ் அதிகாரிகள் ‘சந்தேகத்தின் பெயரில்’விசாரணைக்கு அழைத்து சென்று, திருட்டை ஒப்புக் கொள்ளச் சொல்லி கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். “ஏன் என்னை அடிக்கிறிங்க சாமி, நான் எந்த தப்பு பன்ன சாமி, என்னை அடிக்காதிங்க”என்று சொன்ன முருகனை உக்கார வைத்து சாக்கு தைக்கும் கோணி ஊசியை அவரின் ஆசன வாயில் குத்தியுள்ளனர். வலி தாங்காமல் ரத்தம் வருகிறது ஐயா என்று சொன்ன முருகனிடம் “ஒரு விரலால் அழுத்தி பிடித்துக் கொள் ரத்தம் வராது”என்று ஏளனமாக கூறியுள்ளனர்.
இரவு 8 மணிக்குமேல் முருகனின் வீட்டிற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வீட்டிலிருந்த நகை, பணம் என எல்லாவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த முருகனின் இரண்டு மகள்கள் மற்றும் முருகனின் இரண்டு மருமகள்களான வைகேஸ்வரி, லட்சுமி, ராதிகா, கார்த்திகா ஆகிய நான்கு பெண்களையும் வலுகட்டாயமாக வேனில் ஏத்தி அருகேயுள்ள தைல தோப்பிற்கு இரவு 12 மணிக்குமேல் அழைத்து சென்றுள்ளனர் போலீசு அதிகாரிகள்.
நாங்கள் உங்கள் தங்கச்சி மாறி என்று கதறிய 3 மாத கர்ப்பிணி உள்ளிட்ட நால்வரை கிஞ்சித்தும் இரக்கமின்றி அதிகாரிகள் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் இக்கொடூரத்தை நிகழ்த்திய போலீஸ் அதிகாரிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சமீபத்தில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க சொல்லி வலியுறுத்தியுள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் மற்றும் காசியும் அந்த வழக்கிலிருந்து விடுபடாமல் இன்றும் அலைந்து கொண்டு இருக்கின்றன. அந்த பெண்களுக்கான குறைந்தபட்ச நீதியும் இதைவரை கிடைக்கவில்லை. அந்த போலீஸ் அதிகாரிகளோ காக்கி சட்டையோடு இன்றும் பணி செய்து கொண்டுள்ளனர்.
இப்படிச் சொல்லிக் கொண்டேபோகலாம்.
கேட்க நாதியற்றவர்கள் என்பதாலேயே அப்பாவி உழைக்கும் மக்களான இருளர்கள், நரிக்குறவர்கள் போன்றோர் மீது பொய்வழக்குப்போட்டு ஒப்புக்கொள்ள வைப்பதும், அதற்காக அவர்களைச் சித்திரவதை செய்வதும், பெண்களின்மீது பாலியல் வன்முறைகள் ஏவப்படுவதும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
படிக்க :
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
போலீசு நடத்தும் கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள் அம்பலமாகும்போதெல்லாம், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் “ஒரு கூடை நல்ல மீனில் ஒரு அழுகிய மீன்” என்று ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ஆழ்வார்களான அறிவுஜீவிகளும் ஊடகங்களும் கூறுகிறார்கள். போலீசில் நல்லவர்கள் யாருமே இல்லையா என்று நமக்கு வகுப்பெடுக்கிறார்கள். பணிச்சுமை காரணத்தால் போலீசார் சிலர் கடுமையாக நடந்துகொள்வதாகவும் அவர்களுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாகவும் இக்கொடூரச் செயல்களை நியாயப்படுத்துகிறார்கள்.
எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?
மொத்தமாக கிரிமினல்மயமாக இருக்கும் இப்போலீசை கொண்டுதான் இரக்கமற்ற முறையில் மக்களின் போராட்டங்களை ஒடுக்கமுடியும் என்பதால் ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் இவர்களைத் திட்டமிட்டு வளர்த்து வைத்துள்ளனர். அவர்கள் அடி என்றால் அடிப்பதற்கும் கடி என்றால் கடிப்பதற்குமே போலீசு இருக்கிறது. எனவே “ஒருகூடை அழுகிய மீனில் ஒரு நல்ல மீனை”த் தேடுவதும் இத்தகைய ‘நியாயவாதங்களை’நம்புவதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறல்ல.
அகிலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க