மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது, விடியல் பிறந்துவிட்டது. மேலும் பாசிச மோடி ஆட்சியை எதிர்ப்பதற்கு திமுகவை ஒரு கேடயமாக நாம் பயன்படுத்த வேண்டும் என்ற ரீதியில் கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புரட்சிகர கம்யூனிஸ்ட்டு கட்சியில் உள்ள சிலர் மற்றும் ஜனநாயக சக்திகள் என பலரும் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அந்த அளவிற்கு இன்னல்களை கடந்த மோடியின் அடிமை எடப்பாடி ஆட்சியில் அனுபவித்து வந்தோம் என்றால் அது உண்மைதான். ஆனால், முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இன்னல்கள் தீராது, விடியல் பிறக்காது என்பதைத்தான் மீண்டும் ஒருமுறை தற்போதய திமுக ஆட்சி மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
திமுக அரசு கொடுத்து வரும் இலவசங்கள் மக்கள் வைத்த கோரிக்கைகள் அல்ல. அது தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் அறிவிக்கும் இலஞ்சம். ஆனால், டாஸ்மாக்கை மூடு, ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்பது மக்கள் இரத்தம் சிந்தி, உயிரை கொடுத்து நீண்ட காலமாக வைத்து வரும் போராட்ட கோரிக்கை.
டாஸ்மாக்கால் தமிழகம் பல ஆண்டுகளாக சீரழிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் கட்சிகள் வைரலாகி தமிழகத்தை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. மதுவின் விளைவாக இன்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பெரும் கொடிய குற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த டாஸ்மாக்கிற்கு எதிராக கடந்த ஜெயாவின் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் ஸ்தம்பிக்கும் படியான போராட்டங்கள் நடந்தன. டாஸ்மாக் உடைப்பு போராட்டம், முற்றுகை போராட்டம், இதனால் பல்வேறு கைது நடவடிக்கைகள், வழக்குகள் என தொடர்ந்தது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் இழிந்த நிலைக்கு தமிழகம் சென்றது. பாசிச ஜெயாவையே படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என்று பேசவைக்கும் அளவிற்கு போராட்டம் வீச்சாக பற்றி படந்தது. பாசிச பாஜக உட்பட இந்த போராட்டத்திற்கு குரல் கொடுக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த எழுச்சியை வரித்துக்கொள்ளும் அளவிற்கு டாஸ்மாக்கிற்கு எதிராக கருப்பு கொடி பிடித்துக்கொண்டு, கருப்பு உடையணிந்து போராடினார்.
படிக்க :
இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!
டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !
ஆகவே, திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பு பொய்த்து போனது. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வரானதும் மக்கள் எதிர்பார்ப்பில் மண் அள்ளி போட்டார். மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தோருக்கு இது பேரிடியாக இருந்தது. திமுகவின் வாக்குறுதிகள் மீது இருந்த மாயை மெல்ல மெல்ல விலகியது.
அடுத்ததாக, எடப்பாடியின் ஆட்சியில் பெரும் துயரமாக நிகழ்ந்தது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு. அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக நயவஞ்சகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு துணைபோனது. இன்றும் அந்த பகுதி மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் கெயில் எரிவாயு குழாய்க்கு எதிராகவும், பவர் கிரிடு நிறுவனத்திற்கு எதிராகவும் இப்போதும் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால், திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விருப்பத்தை மீறி பவர்கிரிட், கெயில் நிர்வாகங்களை நிலத்தில் இறங்க அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகளின் கூட்டங்களில் பச்சை துண்டை போட்டுக்கொண்டு பேசினார். ஆனால், ஏப்ரல் இறுதியில் திருப்பூர் காங்கேயத்தில் முறையாக சட்ட நடைமுறைகளை எதையும் பின்பற்றாமல் விளைநிலத்தில் இறங்கி சர்வே செய்யும் வேலைகள் செய்யமுயன்று விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் பகுதிகளில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்றுவரை நடைமுறைபடுத்தாமல் உள்ளது மாவட்ட நிர்வாகம்.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதி கெயில் எரிவாயு குழாய் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் கணேசன்(45) என்ற விவசாயி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சுமார் 30 போலீசுடன் வந்து விவசாய நிலத்தில் இறங்கி சர்வே செய்யும் வேலையை செய்ய துவங்கியது கெயில் நிர்வாகம். இதற்கு எதிராக விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை துவங்கினர். விவசாயிகள் 6 பேர் சீமண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
அடுத்த நாள் சுமார் நூற்றுக்கணக்கான போலீசை குவித்து விவசாயிகளை கைது செய்யும் நோக்கோடு அதற்கான வேலைகளில் இறங்கியது போலீசு. இந்த இரு நாள் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கணேசன், 13-ம் தேதி நிலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணேசனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் பவர் கிரிட் நிர்வாகம் பறித்துக் கொண்டது. மீதி 30 சென்ட் நிலத்தையும் கெயில் நிர்வாகம் எடுக்க போலீசை குவித்து தீவிரமாக முயன்றது. தன் மகளோ திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கணவனால் கைவிடப்பட்டு வீட்டில் வந்திருக்கிறார். இந்த சூழ்நிலை அவரை வேறுவழியின்றி தற்கொலைக்கு தள்ளியுள்ளது. கணேசன் இறப்புக்கு முன்பும் அவரது உடலை நெடுஞ்சாலையில் போட்டு சாலை மறியல் போராட்டம் செய்து நீதி கேட்டு போராடிய போதும் போலீசை குவித்து விவசாயிகளுக்கு விரோதமாக இந்த அரசு செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.
தொடரும் கொட்டடி கொலைகள்
அதிமுக ஆட்சியில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொட்டடி கொலை பெரிய அளவில் கொட்டடி கொலையாக பேசப்பட்டு நாடு முழுதும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி ஆட்சியை காரி உமிழ்ந்தனர் மக்கள். இதற்கு சற்றும் சளைக்காத வண்ணம் கொட்டடி கொலைகள் தற்போதய திமுக ஆட்சியில் நடந்த வண்ணம் உள்ளது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் சேலத்தில் வாகன சோதனை என்ற பெயரில் முருகேசன்(45) என்ற இளைஞரை அடித்து கொலை செய்தது போலீசு. இதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதம்,  மாஸ்க் போடவில்லை என்று கூறி சட்ட கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை(21) போலீசு நிலையம் அழைத்துச்சென்று லாக்கப்பில் வைத்து அடித்து சித்திரவதை செய்த போலீசுன் காட்டுமிராண்டிதனம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இம்மாதம் கடந்த ஏப்ரல் 18 அன்று மெரினா கடற்கறையில் கைதுசெய்யப்பட்ட சென்னை பட்டினம்பாக்கத்தை சேர்ந்த கடற்கரையில் குதிரை சவாரி விட்டு பிழைப்பு நடத்தும் தொழிலாளி விக்னேஷ்(25), போலீசு கொட்டடி கொலையில் இறந்தான். அவனது உடலை உறவினர்களை கூட பார்க்க அனுமதிக்காமல் நேரடியாக எரியூட்டும் சுடுகாட்டுக்கு போலீசு அனுப்பமுயன்றது. விக்னேஷின் அண்ணனை யாரிடமும் தகவல் கொடுக்கவிடாமல் காவலில் வைத்திருந்தனர். மறைமுகமாக பணத்தை கொடுத்து செய்தியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது போலீசு.
படிக்க :
வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !
கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !
அது முடிந்து பத்து நாட்களுக்குள் ஏப்ரல் 26-ம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த தங்கமணி(48) என்பவரை கள்ள சாராயம் விற்றதாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தநாள் அவர் சிறையிலேயே வலிப்பு வந்து இறந்துவிட்டதாக போலீசு தெரிவித்தது. அவரது குடும்பத்தினரிடம் 6 லட்சம் வரை பணம் கொடுப்பதாக கூறி விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என்று பேரம் பேசியுள்ளது போலீசு. முதலில் அவரை கைது செய்யாமல் இறுப்பதற்காக போலீசு ரூ.2 லட்சம் கேட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படி அடக்குமுறைகளும், கொட்டடி கொலைகளும் அரசு ஓர் வன்முறை கருவி என்பதை நிரூபித்து வருகிறது.
இதேபோல் சாதிய படுகொலைகள், சாதிய தாக்குதல்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்ற தடை, தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சாயத்து தலைவரானும் நாற்காலியில் அமர முடியாமல் பொம்மையாக இருப்பது, அப்பாவி இருளர் இன மக்கள் தாக்கப்படுவது, சிறை கைதிகள் விடுதலையில் இஸ்லாமியர்களுக்கு பாகுபாடுகாட்டுதல், காவி பாசிசத்தை அனுமதிக்கும் இல்லம் தேடி கல்வி, புதிய கல்வி கொள்கை மெல்ல மெல்ல அனுமதித்தல், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கனிமவள கொள்ளை, கவுத்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு கொடுக்க தீவிர முயற்சி, சமூக பிரச்சினைக்காக போராடுவோர் மீதி வழக்குகள் போன்ற அனைத்தும் காட்டுவது சாரம்சத்தில் எதுவும் மாறவில்லை, விடியல் பிறக்கவில்லை என்பதையே.
திராவிட மாடல் ஆட்சி, அடிமை ஆட்சி என்று பெயர்களில் மாற்றம் இருக்கலாம். அவை அனைத்தும் சாராம்சத்தில் கார்ப்பரேட்டிற்கு சேவை செய்து உழைக்கும் மக்களை கொல்லும் முதலாளித்துவ ஆட்சிமுறையே! இதில் ஏதும் மயக்கம் கொள்ள வேண்டியதில்லை.
வினவு செய்திப் பிரிவு
முத்துக்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க