பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு

பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வரவழைத்து நிலத்தை அளந்து கொடுத்துள்ளார் முத்துசாமி. இதற்கு பொன்னுசாமி சம்மதம் என ஒப்புக்கொண்டுள்ளார். நிலத்தை அளந்து கொடுத்தபிறகும் பிறகும் முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது நிலத்திற்கு வரும்போதெல்லாம் பக்கத்து நிலத்துக்காரர் பொன்னுசாமி, வசந்தா, ஆர்த்தி, ஜெயந்தி ஆகியோர் நாகூசும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியும் வந்துள்ளனர்.

தினந்தோறும் பார்க்கும் இடமெல்லாம் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியும் வந்ததால் முத்துசாமியின் மகன் கோவிந்தராஜ் பொன்னுசாமியின் வீட்டின் முன்னிருந்த கயிறு கட்டில் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பொன்னுசாமி, கோவிந்தராஜ் மற்றும் அவரது அப்பா முத்துசாமி ஆகிய இருவர் மீதும் ஏரியூர் போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் முத்துசாமி அவரது மகன் கோவிந்தராஜ் இருவரும் போலீசு நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

அப்போது அங்கிருந்த போலீசார் இருவரையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளனர். ரூபாய் 20,000 பணம் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறோம்; இல்லையென்றால் கொலைவழக்கு பதிவு செய்து ரிமான்ட் செய்துவிடுவேன் என போலீசு இணை ஆய்வாளர் முனிராஜ் மிரட்டியுள்ளார்.

ஒருநாள் அவகாசம் கொடுங்கள் என முத்துசாமியும் அவரது மகன் கோவிந்தராஜ் இருவரும் கெஞ்சியுள்ளார். அதற்கு போலீசு இணை ஆய்வாளர் முனிராஜ் ”நான் ஒரு இரகசிய தொலைப்பேசி எண் கொடுக்கிறேன். வெளியில் யாரிடமும் இச்சம்பவத்தைப் பற்றிக் கூறக்கூடாது. ரூ. 20,000 பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என மிரட்டி அனுப்பியுள்ளார்.

முத்துசாமி மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் வட்டிக்குப் பணம் கேட்டு அலைந்து திரிந்துள்ளனர். போலீசு இணை ஆய்வாளர் முனிராஜ் கோவிந்தராஜை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு ”பணம் எப்போ வரும், பணம் வரலனா மர்டர் கேசில் தூக்கி உள்ள வெச்சிருவன். நீ எங்க இருந்தாலும் உன்ன துக்கிருவன்” என உளவியல் ரீதியாக சித்திரவதை செய்துள்ளார்.

20.02.2025 அன்று முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் முத்துசாமியின் மகன் கோவிந்தராஜ் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.

கோவிந்தராஜின் உடலை ஏரியூரிலேயே வைத்திருந்தால் பிரச்சனை பெரிதாகி விடும் என்பதால் கோவிந்தராஜின் உறவினர்களையும் ஊர் மக்களையும் மீறி கோவிந்தராஜ்-இன் உடலை உடற்கூராய்வு செய்ய பென்னாகரம் மாவட்டம் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்ந்தனர் ஏரியூர் போலீசார்.


படிக்க: திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்


”கோவிந்தராஜ் போலீசார் ஏற்படுத்திய மன உளைச்சலால் இறந்து விட்டார். சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரியையும், நிலத்தகராறில் ஈடுபட்டுவந்த பொன்னுசாமி, ஜெயந்தி, ஆர்த்தி, வசந்தா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே கோவிந்தராஜ் உடலை உடற்கூராய்வு செய்ய ஒப்பு கொல்வோம்” என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவிந்தராஜின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ”கோவிந்தராஜின் இறப்பில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். எழுத்துப்பூர்வமான மனு ஒன்றை எழுதிக் கொடுங்கள்” எனக் கேட்டுள்ளனர்.மறியலில் ஈடுபட்ட கோவிந்தராஜின் உறவினர்கள் பொதுமக்கள் போலீசாரின் பேச்சில் நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளார். மறியலில் ஈடுபட்டால் கைது செய்துவிடுவோம் என மிரட்டி மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்துள்ளனர்.

மறுநாள் (21.02.2025) காலை கோவிந்தராஜ் மரணத்திற்குக் காரணமான போலீசு இணை ஆய்வாளர் முனிராஜ், நிலதகராரில் ஈடுபட்டுவந்த பொன்னுசாமி, ஜெயந்தி, ஆர்த்தி, வசந்தா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவிந்தராஜ் உடலை உடற்கூராய்வு செய்ய ஒப்பு கொல்வோம் என மனு அளித்தனர்.

மனுவைப் படித்துப் பார்த்த SI மாரி ”இது ஏதோ கதை வசனம்போல் எழுதியுள்ளீர்கள். காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நீக்கிவிட்டு நாங்கள் கூறுவது போல் மனு எழுதிக் கொடுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் எங்களால் வேலை செய்ய முடியாது. நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். நாங்கள் கூறுவது போல் மனு எழுதிக் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம். இல்லை என்றால் எவ்வளவு நேரமானாலும் நாங்களும் இங்கேயே நின்றுகொண்டுதான் இருப்போம்” என மிரட்டியுள்ளார்.

இனியும் போலீசாரை நம்பினால் கோவிந்தராஜ் மரணத்திற்குத் தீர்வு கிடைக்காது  என உணர்ந்த கோவிந்தராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கோவிந்தராஜின் உறவினர்களையும்,பொதுமக்களையும் மண்டபத்தில் அடைத்துவிட்டு திருட்டுத்தனமாக கோவிந்தராஜின் அப்பா முத்துசாமி 85 முதியவரிடம் கோவிந்தராஜின் உடலை உடற்கூராய்வு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அவர் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களிடம் மீண்டும் சென்று கோவிந்தராஜ் உடலை உடற்கூராய்வு செய்ய ஒப்புக் கொள்ளும்படி மிரட்டியுள்ளனர்.


படிக்க: நாகப்பட்டினம்: “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” பேனரை அகற்றிய சங்கி போலீஸ்


கோவிந்தராஜின் உறவினர்கள் தாங்கள் எடுத்த முடிவில் விடாப்பிடியாக நின்று தொடர்ச்சியாகப் போராடினர். கோவிந்தராஜ் மரணத்திற்குக் காரணமான போலீசு அதிகாரி முனிராஜ் மற்றும் நிலத்தகராறில் ஈடுபட்டுவந்த பொன்னுசாமி, ஜெயந்தி, வசந்தா, ஆர்த்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடற்கூராய்வுக்கு ஒப்புக் கொள்வோம் என கோவிந்தராஜின் உறவினர்கள் உறுதியாக நின்று தொடர்ந்து போராடினர்.

கோவிந்தராஜின் மரணத்திற்கு முக்கிய காரணமான போலீசு இணை ஆய்வாளர் முனிராஜை காப்பாற்றும் நோக்கத்திலேயே தொடர்ச்சியாக போலீசு செயல்பட்டுவந்த  நிலையில் பொதுமக்கள் மற்றும் கோவிந்தராஜின் உறவினர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக கோவிந்தராஜின் மரணத்திற்குக் காரணமான போலீசு இணை ஆய்வாளர் முனிராஜ் மீதும் நிலத்தகராறில் ஈடுபட்டு வந்த பொன்னுசாமி, ஜெயந்தி, வசந்தா, ஆர்த்தி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசு.

அதன் பிறகு, கோவிந்தராஜின் உடல் உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் கோவிந்தராஜின் உறவினர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாகவே வழக்குப் பதிவு செய்வது என்ற கோரிக்கையாவது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் வாங்கிக்கொண்டு, போலீசு நிலையத்திலேயே கட்டப் பஞ்சாயத்து செய்துகொண்டு மக்களின் உணர்வுகளையும், உயிரையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் போலீசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இச்சம்பவம் மீண்டும் ஓர் சான்றாகும்.

நம் வாழ்வில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பொதுமக்களாகிய நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும். அதன் மூலம்தான் நமது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.


வினவு செய்தியாளர்,
தர்மபுரி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க