ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !

"நாங்கள் மெமோவை கொடுக்கச் சென்றோம். ஆனால், போலீசு எங்களைத் தாக்கியது. பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரியும் தாக்கப்பட்டார். அவர் உள்ளூர் போலீசுத்துறை மற்றும் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்”

0
த்தியப்பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஒரு நாடகக் கலைஞர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசு நிலையத்தில் அவர்களைஉள்ளாடைகளுடன் துன்புறுத்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சித்தி மாவட்டத்தில் உள்ள இந்திராவதி நாட்டிய சமிதியின் இயக்குனராக இருப்பவர் குந்தர். இவர் விந்தியக் கலையைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாஜக எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் கேதார் குருதத் சுக்லா ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்களை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு குந்தர் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனைலை நடத்தும் பத்திரிகையாளர் கனிஷ் திவாரி, ஏப்ரல் 2 அன்று நாடகக் கலைஞர் நீரஜ் குந்தர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று விசாரிக்க உள்ளூர் போலீசு நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரும் அவரது ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறி நுழைதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் தன் மீதும், தன்னுடைய ஒளிப்பதிவாளர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் திவாரி கூறினார்.  “எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள்? என்று போலீசு எங்களிடம் கேட்டது. எங்களை அடித்தனர். மேலும் ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தினர் ” என்று திவாரி கூறினார்.
படிக்க :
மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !
திவாரி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்கள், ஏப்ரல் 2-ம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 3-ம் தேதி மாலை 6 மணி வரை 18 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நாடகக் கலைஞர்களும் அடங்குவர். அவர்கள் குந்தர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனால் போலீசு அவர்களை சரமாரியாக தாக்கி கைது செய்துள்ளது.
அனுராக் மிஸ்ரா என்ற பெயரில் போலி முகநூல் கணக்கின் மூலம் குந்தர், பாஜக எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் கேதர் குருதத் சுக்லா ஆகியோருக்கு எதிராக இழிவான கருத்துக்களை பதிவிட்டதாக போலீசு குற்றம் சாட்டுகிறது.
குந்தரின் கைது குறித்து விசாரிக்க போலீசு நிலையத்திற்குச் சென்ற மற்றொரு நாடகக் கலைஞரான நரேந்திர பகதூர் சிங், “நாங்கள் மெமோவை கொடுக்கச் சென்றோம். ஆனால், போலீசு எங்களைத் தாக்கியது. பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரியும் தாக்கப்பட்டார். அவர் உள்ளூர் போலீசுத்துறை மற்றும் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்” என்றார்.
இதற்கிடையில், சித்தி மாவட்ட போலீசுத்துறை உயர் அதிகாரி முகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா, கைது செய்யப்பட்டவர்களில் ஊடகவியலாளர்கள் யாரும் இல்லை. “குற்றவாளிகள்” மட்டுமே இருப்பதாகக் கூறினார்.
“நான் ஒரு பத்திரிகையாளர். அரசியல்வாதிகள், குறிப்பாக எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் இங்குள்ள போலீசு குறித்து கடுமையான கேள்விகளைக்கேட்டு வருகிறேன். எனது யூடியூப்  சேனலான mpsandeshnews24-ல் 170K (1,70,000) சந்தாதாரர்கள் உள்ளனர். விமர்சன பதிவுகளுக்காக நான் குறிவைக்கப் படுகிறேன்” என்று திவாரி கூறினார்.
இந்த சம்பவத்தை, “மன்னிக்க முடியாத குற்றம்” என்று அழைத்த பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா  “பத்திரிகையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முதன்மையாக பாஜக ஆளும் மாநிலங்களில் முன்பு இல்லாத வகையில் அதிகரித்துள்ளது” என்று கூறுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் எவரும் பத்திரிகையாளர்கள் இல்லை என்று போலீசு கூறியது குறித்து, “தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, மத்தியப் பிரதேச போலீசுத்துறையும், அரசு எந்திரமும் கைது செய்யப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள் இல்லை என்ற பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது” என்று பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா குற்றம் சாடுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் பத்திரிகையாளர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சாதாரண குடிமக்களாக இருந்தாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் எங்கும் கைது செய்யப்பட்ட நபர்களை ஆடைகளை கழற்றி பொது வெளியில் அவமானப்படுத்தலாம் என்றும், அவர்களை நிர்வாணப்படுத்தி அந்தப் புகைப்படங்களை டிஜிட்டல் மீடியா தளங்களில் பகிரலாம் என்றும் குறிப்பிடப்படவில்லை.
படிக்க :
♦ வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !
♦ சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு!
போலீசுத் துறையினால் அவர்களுக்கு ஏற்பட்ட மனவேதனை மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு மத்தியப் பிரதேச அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நாட்டில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தை பறித்து, கொலைவெறி தாக்குதல்களை தொடுக்கும் பாசிச (போலீசு மற்றும் அரசு) மிருகங்களிடமிருந்து ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், முற்போக்காளர்கள், கலைஞர்கள் ஆகியோரை பாதுகாப்பது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க