ம.பி: தலித் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்!

பஞ்சாயத்துத் தலைவரின் மகன் வயலில் வைத்து ஜாதவை அடித்ததுடன் பிறகு அவனுடைய கடைக்குள் இழுத்துச் சென்று ஷட்டறை மூடிக் கொண்டு கொலை வெறியுடன் அடித்துள்ளான்.

வம்பர் 26 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் கிராமத்தில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தண்ணீர் தகராறில் பஞ்சாயத்துத் தலைவரின் குடும்ப உறுப்பினர்களால் தலித் இளைஞர் நாரத் ஜாதவ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நடந்த அன்று நாரத் ஜாதவ் தனது தாயுடன் இந்தர்கர் கிராமத்தில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது நாரத்திடம் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்கப் பஞ்சாயத்துத் தலைவர் குடும்பம் மறுத்து வருவதால் தங்களால் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நாரத் வயல்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்சுவதற்காக ஆழ்துளைக் கிணற்றில் குழாயை இணைத்த போது அங்கே வந்த பஞ்சாயத்துத் தலைவர் குடும்பத்தினர் ஆழ்துளைக் கிணற்றைத் தொடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

அதற்கு நாரத் ஜாதவ் “எங்களின் குடும்பமும் ஆழ்துளைக் கிணற்றினை அமைப்பதற்குச் செலவு செய்துள்ளதால் தண்ணீரை எடுப்பதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அவர்களை மீறி ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற போது பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பத்தினர் நாரத் ஜாதவை கொலை செய்யும் நோக்கத்துடன் கட்டைகளைக் கொண்டு அடித்துள்ளனர்.

பஞ்சாயத்துத் தலைவரின் மகன் வயலில் வைத்து ஜாதவை அடித்ததுடன் பிறகு அவனுடைய கடைக்குள் இழுத்துச் சென்று ஷட்டறை மூடிக் கொண்டு கொலை வெறியுடன் அடித்துள்ளான். “நாங்கள் அவனைக் காப்பாற்றுவதற்குள் அவனுடைய உயிர் போய்விட்டது” என்று நாரத்தின் அண்ணன் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் “பல ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் குடும்பத்தினரின் செலவில் ஆழ்துளைக் கிணற்று அமைக்கப்பட்டு தண்ணீர் சரிசமமாகப் பங்கிடப்பட்டு வந்தோம். சில ஆண்டுகளாகப் பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பம் எங்களைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்லி வந்தனர்.

அதனால் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. அவை ஒருபோதும் சண்டையாகவோ வன்முறையாகவோ மாறியதில்லை. ஆனால் தற்போது நாரத்தின் உயிர் போய்விட்டது” என்று அண்ணி சாந்தினி தெரிவித்துள்ளார் .

நாரத் ஜாதவ் பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பத்தால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாரத்தின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்; நாரத் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இப்போராட்டத்திற்குப் பிறகு நாரத் ஜாதவ் கொலையில் சம்பந்தப்பட்ட எட்டு பேர் மீது கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பஞ்சாயத்துத் தலைவர் உள்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக ஷிவ்புரி மாவட்ட எஸ்.பி சஞ்சீவ் மூலே தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் “தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்குகளில் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஷிவ்புரி மாவட்டத்தின் இந்தர்கர் கிராமத்தில் தலித் இளைஞர் நாரத் ஜாடவ் கொடூரமாக அடித்துக் கொல்லப்படும் நெஞ்சை உருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு செயலிழந்த நிலையில் உள்ளது” என்று தன்னுடைய எக்ஸ் ( Twitter) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


படிக்க: துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்


காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி “பாஜகவின் பாரதூரமான முரண்நகையைப் பாருங்கள்! ஒருபுறம் நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்ட தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது, மக்கள் பாபா சாஹேப் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிப் பேசுகிறார்கள், மறுபுறம் பா.ஜ.க ஆட்சியில் எனது தலித் சகோதரர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார். இன்று பா.ஜ.க ஆட்சி என்பது தலித்துகள் மீதான சுரண்டல் மற்றும் வன்கொடுமைகளின் மறுபெயராக மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டிலும் தலித் குடும்பங்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன” என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஷிவ்புரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் குஷ்வாஹா பஞ்சாயத்துத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சி.பி.எம் மத்தியக்குழு, “மோடியின் புதிய இந்தியா தலித்துகளுக்கானது அல்ல. பா.ஜ.க-வின் ராம ராஜ்ஜியத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தலித்களுக்கு எதிரான சாதி வெறியின் கொடூரமான உண்மைதான் சிவ்பூரி சம்பவம். தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை ‘ஏக் ஹெய்ன் டு சேஃப் ஹெய்ன்’ (ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என்ற முழக்கம் மூலம் மறைக்க முயல்கிறது பா.ஜ.க அரசு” என்று கூறியுள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதியினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது.

செய்தி மூலங்கள்: தி இந்து, பிபிசி தமிழ்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க