மத்தியப்பிரதேச மக்களை துரத்தும் போபால் விஷவாயு படுகொலை

1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.

1984-இல் போபாலில் நடந்த போபால் விஷவாயு படுகொலைக்குக் காரணமான யூனியன் சல்பைட் நிறுவனத்திலிருந்து அகற்றப்படும் நச்சு கழிவுகளை பீதாம்பூர் பகுதியில் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி 2-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் தீக்குளித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநில தலைநகர் போபாலில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து (America Union Carbide Corporation) 1984, டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் 27 டன் மெத்தில் ஐசோசயனேட் நச்சு வாயு வெளியேற்றப்பட்டது. இதில் 3,000-ற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் அரங்கேறியது.

இப்பேரழிவில் ஒட்டுமொத்தமாக 20,000-ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்பார்வை இழப்பு, புற்றுநோய், இதயநோய், கருச்சிதைவு, பெருமூளை வாதம் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டனர். பலரின் இழப்புகளையும் பேரழிவு ஏற்படுத்திய பாதிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கொடூரங்களும் அரங்கேறியது.

இத்தகைய கொடூரமான கொலைக்குக் காரணமான கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குச் சாதகமாகவே ஒன்றிய-மாநில அரசுகள் செயல்பட்டுவந்த நிலையில், மக்களின் எதிர்ப்பால் வேறுவழியின்றி தொழிற்சாலை மூடப்பட்டது. இருப்பினும், இப்பேரழிவு நிகழ்ந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதுவரை முழுமையான நிவாரணம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தராத மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம், கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அன்று “இன்னொரு பாதிப்பிற்காக காத்திருக்கிறீர்களா?” என்று மத்தியப்பிரதேச மாநில பா.ஜ.க. அரசிடம் கேள்வியெழுப்பியது. மேலும், “ஒரு மாதத்திற்குள் நிறுவனத்தின் கழிவுகளை அகற்ற வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


படிக்க: கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதம்


இதுகுறித்து போபால் வாயு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறையின் இயக்குநர் ஸ்வதந்த்ர குமார் சிங் கூறுகையில், “சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் 30 டன் நச்சுப்பொருட்களை ஏற்றிச் செல்கின்ற ஒவ்வொரு லாரியிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். அபாயங்களைக் குறைப்பதற்காக கான்வாய் போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்காக பீதாம்பூர் வரை பசுமைவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “நச்சுவாயு கழிவுகளைக் கையாளுகின்ற தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு கருவிகள் மற்றும் முகமூடிகள் வழங்கப்படும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் 30 நிமிடம் வேலையுடன் ஓய்வு வழங்கப்படும். தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

அதன்படி, ஜனவரி 2-ஆம் தேதி அன்று இரவு கார்பைட் நிறுவனத்திலிருந்து அகற்றப்பட்ட 337 மெட்ரிக் டன் நச்சு கழிவுகள் அகற்றப்பட்டன. 12 கன்டெய்னர் லாரிகள் மூலம் 250 கி.மீ. தொலைவில் பீதாம்பூர் பகுதியில் அமைந்துள்ள கழிவுகளை அகற்றும் ராம்கி என்விரோ நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

ஆனால், இக்கொடிய விஷ கழிவுகள் தங்களது பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து பீதாம்பூர் பகுதி மக்கள் ஜனவரி 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 4-ஆம் தேதி அன்று 150-க்கும் மேற்பட்ட மக்கள், கழிவுகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் வாயிலில் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அப்பகுதி முழுக்க போலீசு குவிக்கப்பட்டுள்ளதுடன், பி.என்.எஸ்.எஸ். 163 பிரிவின் கீழ் ஜனவரி 12-ஆம் தேதி வரை தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


படிக்க: கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!


மத்தியப்பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வர் மோகன் சிங், “நச்சு வாயு கழிவுகளை அகற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதைச் சோதனை முயற்சிகள் காட்டியுள்ளன” என்று பாசிச திமிருடன் தெரிவித்துள்ளார். ஆனால், திடக்கழிவுகள் எரிக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவதால் தண்ணீரை மாசுபடுத்தும், சுற்றுச்சூழல் பிரச்சினையை உருவாக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அம்பலப்படுத்துகின்றனர். மேலும், மக்கள் வாழும் பகுதிகளில் விஷ கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்கெனவே விவசாய நிலங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி மக்கள் தங்களது தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய ஆலையில் உள்ள நச்சு கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கு ஏன் யூனியன் கார்பைடு நிறுவனம் மற்றும் டவ் கெமிக்கல் நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தப்படவில்லை? என்று அரசு மற்றும் நீதிமன்றத்தின் வர்க்கப் பாசத்தை அம்பலப்படுத்துகிறார் சமூக ஆர்வலர் ரச்னா திங்ரா.

அம்மாநில பாசிச பா.ஜ.க. அரசானது பாதுகாப்பான முறையில் நச்சு கழிவுகளை அகற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில், மக்கள் வாழும் பகுதிகளில் கழிவுகளை எரிப்பதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, தடை உத்தரவு பிறப்பிப்பது என மக்களை ஒடுக்கி அமெரிக்க நிறுவனத்திற்கு ஆதரவாக நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றது.

மொத்தத்தில், 1984-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபால் மக்களைக் கொலையுண்டதற்குத் துணைபோன அரசு நிர்வாகம், இன்று பீதாம்பூர் மக்களை அழிவில் விளிம்பிற்குத் தள்ளுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த கொலைகார கூட்டுக்கு எதிராக, போபால் விஷ வாயு படுகொலையால் பாதிக்கப்பட்ட போபால் மக்கள், படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிவரும் ஜனநாயக சக்திகள், பீதாம்பூர் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க