போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி

“போபாலுக்கு நீதி வழங்குங்கள்” என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஏராளமான பெண்களும் ஆண்களும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

த்தியப் பிரதேச தலைநகரான போபாலில் டிசம்பர் 3 அன்று யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நடந்த விசவாயு கசிவு பேரழிவின் 40வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கைவிடப்பட்ட தொழிற்சாலை பகுதியை நோக்கி பேரணி நடைபெற்றது. விசவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய நான்கு அமைப்பினர் இணைந்து இப்பேரணியை நடத்தினர்.

“போபாலுக்கு நீதி வழங்குங்கள்” (போபால் கா இன்சாஃப் கரோ) என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஏராளமான பெண்களும் ஆண்களும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் நிறுவனத்தில் ஏற்பட்ட விசவாயு கசிவால் டிசம்பர் 2-3, 1984 இடைப்பட்ட இரவில் 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். விசவாயு ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 5,74,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தையடுத்து அந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டும், கண் பார்வை பறிபோயும், சிறுநீரக பாதிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் மற்றும் சர்வதேச நிவாரண அமைப்புகளைக் கண்டித்தனர். “ரொனால்ட் ரீகன் தொடங்கி பராக் ஒபாமா வரை அடுத்தடுத்து வந்த அமெரிக்க அதிபர்கள் யூனியன் கார்பைடு மற்றும் டவ் கெமிக்கல் நிறுவனங்கள் மீது இந்தியாவில் வழக்குத் தொடராமல் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துள்ளனர்” என்று போபால் காஸ் பீடிட் மகிளா ஸ்டேஷனரி கர்மச்சாரி சங்கத்தின் (Bhopal Gas Peedit Mahila Stationery Karmchari Sangh) தலைவர் ரஷிதா பீ (Rashida Bee) கூறினார்.


படிக்க: போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்… | மீள்பதிவு


மெத்தில் ஐசோ சயனைட் (MIC) என்ற நச்சு திரவம் விபத்து நடந்து முடிந்த பின்பும் ஆலையின் சேமிப்பு கிடங்கில் மீதமிருந்தது. மீதமிருந்த ரசாயனங்களைக் கொண்டு அந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்க முயன்றது. ஆனால் போபால் மக்கள் அதை எதிர்த்துப் போராடி ஆலையை மூட வைத்தனர்.

ஆனால், யூனியன் கார்பைட் நிறுவத்தின் தாய் நிறுவனமான டவ் கெமிக்கல் நிறுவனம் இன்றளவும் எவ்வித சிக்கலுமின்றி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. போபால் தகவல் மற்றும் நடவடிக்கை குழுவை (Bhopal Group for Information and Action) சேர்ந்த ரச்னா திங்ரா (Rachna Dhingra), நரேந்திர மோடி ஆட்சியின் போது டவ் கெமிக்கல் நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவில் பத்து மடங்கு வளர்ச்சியடைந்ததாகக் கூறினார்.

மேலும், “இந்த 10 ஆண்டுகளில், ‘மாசுபடுத்தியவர் பொறுப்பேற்க வேண்டும்’ (polluter pays) என்ற கொள்கையின்படி, டவ் கெமிக்கல் நிறுவனத்தால் போபால் நிலத்தடி நீர் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால் (மாசுபட்ட) நிலத்தடி நீர் நகரத்திற்குள் மூன்று கிலோமீட்டர் தூரம் நகர்ந்துள்ளது. யூனியன் கார்பைடின் சொத்துக்களை ஐ.ஓ.சி.எல், கெயில் மற்றும் ஜி.ஏ.சி.எல் போன்ற இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு டவ் கெமிக்கல் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல என்று அந்நிறுவனம் கூறி வருகிறது” என்று திங்ரா கூறினார்.

இன்றுவரை அமெரிக்காவைச் சேர்ந்த டவ் நிறுவன முதலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. சிலருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறுநீரக பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இந்த சொற்ப இழப்பீடு எந்த விதத்தில் உதவி புரியும்.

டவ் நிறுவன முதலாளிகளைத் தண்டிக்க மறுப்பதும், அந்நிறுவனத்தின் சொத்துகளைப் பரிமுதல் செய்து மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இந்தியா அடிபணிந்து போவதையே காட்டுகிறது.


துருவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க