PP Letter head16.01.2022

பத்திரிகை செய்தி

மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு !

கொலைகார போலீஸ் ,சிறை அலுவலர், நடுவர் ஆகியோர் மீது வன்கொடுமை மற்றும் வழக்குப் பதிவு செய்!

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, கருப்பூரில் வீட்டிலிருந்த மாற்றுத்திறனாளி ஏ. பிராபகரன் மற்றும் அவரது மனைவி திருமதி அம்சலா ஆகியோரை நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் 8.1.2022 அன்று, விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

நேரடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், காவல்துறை குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோதமாக வைத்து மூன்று நாட்கள் இருவரையும் அடித்து சித்திரவதை செய்து உள்ளனர். இதன் காரணமாக திரு. பிரபாகரனுடைய ஆணுறுப்பு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கேட்கும்போதே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

பின்னர் இருவர் மீதும் குற்ற எண் 8/2022 U/S ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 457,380 IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட பிரபாகரனை 11.01.22 அன்று நாமக்கல் கிளை சிறையில் அடைத்துள்ளனர். உடல்நிலை மேலும் மோசமானதால் 12.01.22 அன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போலீசின் இத்தகைய பச்சைப் படுகொலையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி, தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோர் மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகார போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யாமல், கைது செய்யாமல் இருப்பதிலிருந்து , இது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலை இது என்பது நிரூபணமாகிறது.

லாக்கப் படுகொலைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் எவ்வளவுதான் போராடினாலும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

வருடங்கள் கடந்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, கொலை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் இந்த அரசின் யோக்கியதை .

இவ்வழக்கில் கூட அக்காவல் நிலையத்தைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் .பிரபாகரன் சிறையில் அடைக்கப்பட தகுதியானவர் என்று சான்று அளித்த அரசு மருத்துவர், படுகாயமுற்ற நபரை சிறையில் அனுமதிக்க மறுக்காமல் சிறையில் அனுமதித்த சிறை அலுவலர் , படுகாயமுற்ற ஒருவரை சிறைக்கு அனுப்பிய நீதித்துறை நடுவர் அனைவருமே வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரபாகரனின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும் அரசு வேலையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறெல்லாம் செய்யாமல் கணவனை இழந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய் வழக்குப் போட்ட இந்த அயோக்கியத்தனமான அரசு நிர்வாகத்தின் கள்ளக் கூட்டுக்கு எதிராகவும் எல்லாவற்றையும் மூடிமறைக்கும் திமுக அரசுக்கு எதிராகவும் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

இனி இன்னொரு லாக்கப் படுகொலை தமிழகத்தில் நடைபெறா வண்ணம் தமிழகம் இந்தப் படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை!

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்.
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு -புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க