பாசிச பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் விஜயபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நவம்பர் 13 அன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அன்றிரவு கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல், அக்கிராமத்திலிருந்த அம்பேத்கர் சிலையைத் தாக்கி அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தலித் மக்கள் மீது தாக்குதல் இக்கும்பல் எதற்காகத் தாக்குதல் நடத்தியது; இவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் மத்தியப்பிரதேச போலீசோ தலித் மக்கள் மீதான தாக்குதலை ஆதரிக்கும் வகையில் வன்முறையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. போலீசு அதிகாரிகளின் கூற்றுகளே இதற்குச் சான்றாக உள்ளன.
தலித் மக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்பாக ஷியோபூர் மாவட்ட எஸ்.பி., வீரேந்திர ஜெயின் ,”இது சாதி மோதல் அல்ல. இரு தரப்பினருக்கும் இடையே சிறிய தகராறு என விசாரணை மூலம் தகவல் கிடைத்துள்ளது. தாக்குதல் தொடர்பாக முறையான புகார் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. அதனால் இது பெரிய பிரச்சனை இல்லை” என அலட்சியமாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதேபோல் மற்றொரு போலீஸ் அதிகாரி, ”தேர்தல்களின் போது இது போன்ற பதற்றங்கள் பொதுவானவைதான். முறையான புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
#WATCH | MP: Nearly 200 Goons Storm Into Vijaypur After Polling Concludes; Pelt Stones At Villagers, Set Fire To Cattle Feed#MpNews #MadhyaPradesh #Vijaypur pic.twitter.com/6DQUTLpdyP
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 14, 2024
சிகாஹ்ரா (Sikahra) கிராமத்திலும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தலித் மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளன.
“பா.ஜ.க ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தலித்துகள் மீதான தாக்குதல் அவமானகரமானது ஆகும். பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட விரோத சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி கூறியுள்ள கருத்து இங்கு கவனிக்கத்தக்கதாகும். அவர் “பழங்குடியினர் மற்றும் தலித் சமூகங்களை பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றனர். கோஹ்தா கிராமத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram