காலனியக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் வங்காள புரட்சியாளர்களின் சுவடுகளை ஒருபோதும் தவிர்க்க இயலாது. அத்தகைய வங்கத்தில் பிறந்து, பிரிட்டிஷ் சர்வாதிகார பேரரசை குலை நடுங்கச் செய்த குதிராம் போஸின் நினைவு தினம், ஆகஸ்ட் 11.  பதினெட்டு வயதே நிரம்பிய நிலையில் காலனியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட குதிராம் போஸின் வாழ்வு, நாட்டின் விடுதலைக்கு இளைஞர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டிய தேவையை இன்றும் கூட உணர்த்தும் வல்லமை கொண்டது.

1889, டிசம்பர் மாதம் 3-ம் தேதி மேற்கு வங்காளத்தில், மிட்டாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹபிப்பூர் என்ற கிராமத்தில் குதிராம் போஸ் பிறந்தார். அவரது தந்தை த்ரைலோக்யநாத், தாயார் லக்ஷ்மிபிரியா தேவி ஆவர். போஸின் தந்தை தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குதிராம் தனது ஆறாவது வயதில் தாயை இழந்தார். அதற்கடுத்த வருடமே தந்தையையும் இழந்தார். அவரது அக்காவிடம் வளர்ந்தார். அக்காவின் கணவரான அமிர்தலால் ராய், போஸை ஹாமில்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கிறார். அந்த நாட்களில் அனுசீலன் சமிதியின் நிறுவனரான அரவிந்தரின் பேச்சுக்களால் கவரப்படுகிறார். தன்னுடைய 15-வது வயதில் அனுசீலன் சமிதி என்ற இயக்கத்தில் சேர்ந்தார். அனுசீலன் சமிதி என்பது ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழித்துக் கட்டமுடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்ட அமைப்பாகும்.

படிக்க :
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
♦ இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?

அவரின் வயதை ஒத்த சிறுவர்கள் எல்லாம் இன்று நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கும்போது, குதிராம் போஸோ அன்று நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் கடினமான போராட்டத்தில் தன்னை மகிழ்ச்சியோடு ஈடுபடுத்திக் கொண்டார்.

தன்னுடைய 16-வது வயதில் பிரிட்டிஷ் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். காலனிய ஆதிக்க போலீசு நிலையங்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளை குண்டுவீசி தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் சிறையில் அவருக்கு உருவாகியது. பின்னர் கல்கத்தாவை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட புரட்சியாளரான பரிந்தர குமார் கோஷின் தலைமையில் செயல்படும் விடுதலைப் போராட்டக் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

“ஜுகந்தர்” – அனுசீலன் சமிதியின் நாளிதழ். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சுரண்டலுக்கெதிராகப் போராட வேண்டியதன் நோக்கத்தை பரப்புவதே அதன் தலையாய பணியாக இருந்தது. இதனாலேயே பல்வேறு தடைகளையும் இன்னல்களையும் சந்தித்தது. அச்சமயத்தில் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருந்த டக்ளஸ் போர்ட், ஜூகந்தரின் ஆசிரியரான பூபேந்திரநாத் தத்தா மற்றும் இதர எழுத்தாளர்களை கண்காணிக்க உத்தரவிட்டார். எனினும் தனது தலையங்கங்களில் பிரிட்டிஷ் அரசை கடுமையாக சாடியது. இதனால் மேலும் 5 வழக்குகளைப் பரிசாகப் பெற்றது “ஜுகந்தர்”. அரசின் தொடர் அடக்குமுறைகளால் நிதி நெருக்கடியில் சிக்கியது.

டக்ளஸ் போர்ட், மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே இளம் அரசியல் செயல்பாட்டாளார்கள் மீது கடுமையான மற்றும் அநியாயமான தண்டனைகளை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அமைதிவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட பொது மக்கள் முன்னர் சவுக்கடி கொடுக்கும் தண்டனையை சாதாரணமாக வழங்கினார். இதன்மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க நினைத்தார்.

இந்தியர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத இத்தகையப் போக்குகளை கடுமையாக எதிர்த்த அனுசீலன் சமிதி, அலிப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி டக்ளஸ் போர்ட்-ஐ தனது இலக்காக அறிவித்தது.

டக்ளஸ் போர்ட்–ஐ கொல்வதற்கு ஹேமச்சந்திர தாஸால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவுற்றதை அடுத்து, அனுசீலன் சமிதியானது அடுத்தக்கட்ட தயாரிப்பில் கவனம் செலுத்தியது. அதுவே இந்தியாவின் தீரமிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் மறையாத நினைவானது.

1908-ஏப்ரலில் கொலை நடவடிக்கைக்காக அனுசீலன் சமிதியால், பிரபுல்லா சக்கியும், குதிராம் போஸூம் தெரிவு செய்யப்பட்டனர். டக்ளஸ் கிங்ஸ் போர்ட் உயிருக்கு ஆபத்து இருப்பதை மோப்பம் பிடித்த கல்கத்தா போலீசு, இது தொடர்பாக முசார்பூர் மாவட்ட கண்காணிப்பாளாருக்கு தகவல் அளித்தது. அம்மாவட்ட போலீசு, கிங்ஸ் போர்டுக்கு பாதுகாப்பை அளித்ததுடன் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது.

இதனால் பிரபுல்ல சக்கி, தினேஷ் சந்திர ராய் என்ற பெயரிலும் குதிராம் போஸ், ஹரேன் சர்கார் என்ற பெயரிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். தர்மசாலாவில் சில நாட்கள் தங்கி இருந்து, டக்ளஸை நிழல் போல கண்காணித்து வந்தனர். அவனது நீதிமன்ற பணி நேரம், கிளம்பும் நேரம், அவனின் விருப்பப்பூர்வ இடமான கிளப்பில் இருக்கும் நேரம் என கிங்ஸ் போர்டின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர்களது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்தனர்.

ஏப்ரல் 30, 1908 கிங்ஸ் போர்டின் வாகனத்தை எதிர்பார்த்தபடி, குதிராமும், பிரபுல்ல சக்கியும் தங்களை மரங்களுக்கிடையில் புதைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். கிளப்பில் இருந்து தங்களது இல்லத்திற்கு செல்வதற்காக பலரும் கிளம்பிக் கொண்டு இருக்கிறார்கள் அரசு வழக்கறிஞர் பிரிங்கல் கென்னடி மகள் மற்றும் மனைவி ஆகியோர்  வண்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த வண்டி கிங்ஸ்போர்டின் வீட்டை நெருங்குகையில், நீதிபதி கிங்ஸ்போர்டின் வண்டி என தவறுதலாக நினைத்து வெடிகுண்டை வீசிவிட்டு மின்னலென இருவரும் தப்பிக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வீச்சால் பலத்த காயமடைந்த இரு பெண்களும் அடுத்தடுத்து இறந்து போகின்றனர்.

இச்சம்பவம் நடைபெற்ற உடனேயே, இரவு 9 மணிக்குள்ளேயே மொத்த நகரமும் போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ரயில் நிலையங்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டன. இதனை முன் கூட்டியே யூகித்த குதிராம் ஏறத்தாழ 25 மைல் வரை நடந்து சென்று வைனி என்ற ரயில் நிலையத்தை 1908, மே 1 அதிகாலை சென்றடைந்தார். மிகுந்த தாகமடைந்த அவர் ஒரு கடையில் தண்ணீரைக் கேட்கும்போது, இவரின் காலணியற்ற தோற்றத்தை கண்ட இரு போலீசுக்காரர்கள், விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசிடமிருந்து தப்பிக்க முனைந்த குதிராம் போஸ், தனது துப்பாக்கியின் பழுதால்  அதை பயன்படுத்த முடியாமல்போனது. அவரிடமிருந்து ரூ.30 பணம், 37 வெடிகுண்டுகள், ரயில்வே மேப் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. அவர் அடுத்த நாள் முசாபர்பூர் போலீசு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“அந்தச் சிறுவனைப் பார்க்க மக்கள் அதிகமாக அங்கே கூடி இருந்தனர். முதல்வகுப்பு பெட்டியில் இருந்து அவனை நடந்தே அழைத்து வந்தனர். அவனிடம் கொஞ்சமும் கவலையோ துக்கமோ இல்லை. மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்.”

மேற்கண்டவாறு ஸ்டேட்ஸ்மென் என்ற ஆங்கில இதழ் பதிவு செய்திருந்தது.

1908, மே 21-ம் தேதி விசாரணை தொடங்கியது. அரசுத்தரப்பு வழக்கறிஞர்களாக மன்னுக், பினோத பிகாரி மஜூம்தார் ஆகியோர் ஆஜராகினர். குதிராம் தரப்பிற்காக பண்டேபாத்யாயா, காளிதாஸ்பாசு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இலவசமாக ஆஜராகினர்.

படிக்க :
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்

1908, ஜூன் 13, தண்டனை அறிவிப்பதற்கான நாளின்போது பெயரில்லாத அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அது வங்காளிகளிடமிருந்து அல்ல மாறாக பீகாரிகளிடமிருந்து வந்தது. எனினும் குதிராமுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

அத்தீர்ப்புக்கு எதிராக குதிராம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் நீதிபதிகளால் ஜூலை 18-ம் தேதி குதிராமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தூக்கிலிடப்பட்டபோது குதிராம் போஸ் 18 ஆண்டுகளையும் 8 மாதங்களையும் நிறைவு செய்திருந்தார்.

கொல்கத்தாவின் வீதிகளில் மாணவர்கள் குதிராம் போஸுக்காக நிறைந்திருந்தார்கள். ஆனால் காந்தியோ “இந்திய மக்கள் ஒரு போது நாட்டின் விடுதலைக்காக இது போன்ற வழிமுறைகளை பின்பற்றக் கூடாது” என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

“அச்சிறுவன் தூக்கு மேடைக்கு செல்லும்போது, நாட்டின் விடுதலை முழக்கங்கங்களை எழுப்பியவாறு மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.” என்று அடுத்த நாளில் வெளியான நாளிதழ்கள் பதிவு செய்தன.

தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.


மருது
செய்தி ஆதாரம் : Economicstimes, indianexpress

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க