சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
லாக்கப்பில் சித்திரவதை செய்தது, உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, இளைஞரின் உடலை தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது இடைநீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நிறுத்து ! கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
பத்திரிகை செய்தி
சென்னை கெல்லீஸ் பகுதியில், கடந்த 18-ம் தேதி வாகனச் சோதனையின் போது காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கட்டுமானத் தொழிலாளியான பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக மரணமடைந்துள்ளார். இது காவல்துறை நடத்திய படுகொலையாகும்.
இந்த லாக்கப் கொலைக்கு எதிராக தொடர்ச்சியான பல்வேறு அமைப்புகளின் கடும் கண்டனங்களை அடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாகவும் கொலையில் தொடர்புடைய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இளைஞரை லாக்கப்பில் சித்திரவதை செய்தது, மரணம் அடைந்த இளைஞரின் உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, உடலை அச்சுறுத்தி தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
குற்றவாளிகளை வெளியில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை என்ன எப்படிப்பட்ட விசாரணை நடத்தினாலும் நீதி கிடைக்கப்போவதில்லை.
ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும் போலீசுக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுகின்ற இந்த முறைதான், போலீசு தொடர்ச்சியாக மக்கள் மீது நடத்துகின்ற அடக்குமுறைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
ஆகவே, இவ்வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்கு மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியவை பதிவு செய்து உடனே சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன், தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.
வினவு தோழருக்கு வணக்கம். இந்த பதிவில் மக்கள் அதிகாரம் லோகோ சரியான பதிவிடப்படவில்லை
சரி செய்கிறோம் தோழர்