09.12.2024

யு.ஜி.சி-இன் மாணவர் விரோதமான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு! மக்கள் அதிகாரம் கண்டனம்

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC – University Grants Commision) வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்பை தொடர்ந்து பட்டப்படிப்பில் சேர இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று யு.ஜி.சி. அறிவித்துள்ளது. தகுதி எனும் பெயரில் பல மாணவர்களின் உயிர்களை குடித்துக் கொண்டிருக்கும் நீட் நுழைவுத் தேர்வை தொடர்ந்து பட்டப்படிப்பிலும் நுழைவுத் தேர்வு புகுத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் (05.12.2024) அன்று வெளியிடப்பட்ட யு.ஜி.சி. வரைவு (UGC Draft) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  1. மாணவர்களுக்கான நெகிழ்வுத் தன்மை (Flexibility for students):

    பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை எடுத்தாலும், இளங்கலை செல்லும்போது மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்துகொள்ளலாம். அதே போல் இளங்கலையில் எதைப் படித்திருந்தாலும், முதுகலை மேற்கொள்வதாயின் எந்த ஒரு துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனைக் கேட்டவுடன், மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பாக இது அமையும் என்று தோன்றும். ஆனால், கூர்ந்து கவனித்தால் இந்த திட்டத்தின் பின் மறைந்திருக்கும் பேரபாயத்தை நாம் உணரலாம்.

    பல்கலைக்கழக அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி பயில முடியும் என்பதே இதன் உள்நோக்கம். எனவே நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் இடம்பெறும் மாணவர்கள் மட்டுமே தங்களுக்கு விருப்பமான எந்த ஒரு துறையையும் எடுத்து படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தேசிய தேர்வு முகமை (National Testing Agency) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வரைவு குறிப்படுகிறது. இந்த விதிமுறையானது 14 ஆண்டுகள் பயிலும் பள்ளிக்கல்வியின் மதிப்பைக் குறைத்து, பயிற்சி மையங்கள் (Coaching centres) அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். ஏற்கனவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் ஏழை மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தால், இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும், ஏழைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், பள்ளிகளைவிட பயிற்சி மையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த திட்டம் பயிற்சி மையங்களை நடத்தும் கோட்டா நகரத்தில் உள்ளதை போன்ற கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்கு வித்திடுமே தவிர மாணவர்களின் கற்றலில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.

  1. பன்முறை நுழைவு மற்றும் வெளியேறல் வழங்குமுறை (Provision of multiple entry and exit) கல்லூரி மாணவர் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்ற திட்டத்தை வரைவு முன்வைக்கிறது. முதலாம் ஆண்டில் தேர்ச்சிப் பெறாவிட்டாலும் இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடரலாம் என்பதே தற்போதைய நடைமுறையில் உள்ளது. எனினும் இந்த வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், முதலாம் ஆண்டில் தோல்வியடையும் மாணவர் இரண்டாம் ஆண்டிற்குச் செல்ல தகுதியற்றவராகக் கருதப்பட்டு, முதலாம் ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். அதேபோல் இரண்டாம் ஆண்டில் தேர்ச்சிப் பெறவில்லையெனில் பட்டயப்படிப்பு (Diploma) வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். மேலும் மூன்றாம் ஆண்டில் தோல்வியடைந்தால் பட்டமும் (Degree), நான்காம் ஆண்டில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு ஹானர்ஸ் பட்டமும் (Degree with Honours) வழங்கப்படும் என்று யு.ஜி.சி வெளியிட்டுள்ள வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-நடுத்தர குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவன் ஒருவன், இடைநிற்றலை எதிர்க்கொண்டு மீண்டும் படிக்க வருவதில் உள்ள உளவியல், சமூக, பொருளாதார சிக்கல்கள் எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் திட்டமிட்டே இந்த விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களை பாட சாலைகளிலிருந்து விரட்டியடித்து மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பாசிசக் கும்பல்.
  2. ஆண்டுக்கு 2 முறை சேர்க்கை (Biannual admission)

    தற்போது கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூலை /ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை இனி பின்பற்றப்படும் என்றும் வரைவு குறிப்பிடுகிறது.

  1. குறைந்தபட்ச வருகைப் பதிவே போதும் (Minimum attendance requirement)

    புதிய கல்விக் கொள்கையால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு கற்றல் முறைகள் மற்றும் முழுமையான மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் வெவ்வேறு திட்டங்களில் மாணவர்களின் குறைந்தபட்ச வருகைத் தேவையை தீர்மானிக்கலாம் என்று யு.ஜி.சி பரிந்துரைத்துள்ளது.

யு.ஜி.சி. வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கையின் உள்ளடக்கம் வரும் 2025-2026 கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேசியக் கல்விக் கொள்கை 2019-இன் கூறுகளை பல்வேறு மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் மறைமுகமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த இந்திய கல்வித்துறையையும் சீரழித்து காவி-கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையே ஆகும்.

ஏழை-நடுத்தர மாணவர்களை கல்விக்கூடங்களில் இருந்து விரட்டி அடித்து மீண்டும் குலக்கல்வியை கொண்டு வருவதும், பயிற்சி வகுப்புகள் எனும் பெயரில் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவுமே பாசிச மோடி அரசால் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் பாசிசக் கும்பலின் இந்த திட்டத்தை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்!

இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பதிலாக பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்னும் மாற்றை முன்வைத்து ஒருங்கிணைந்த போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி மக்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.


தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க