14.10.2022
சாதிச் சான்றிதழ் கொடுக்காததால் தீயிட்டு கொளுத்திக் கொண்ட பழங்குடி வேல்முருகன் மரணம்!
அதிகார வர்க்கம் நடத்திய பச்சைப் படுகொலையே!
கண்டன அறிக்கை
கடந்த 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தன்னைத் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார் மலைக்குறவர் சாதியைச் சேர்ந்த பழங்குடியான வேல்முருகன். கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டும் கிடைக்காததால் விரக்தியில் ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் அம்பலப்படுத்த தன்னைத் தானே தீயிட்டுக்கொண்ட பழங்குடி வேல்முருகன் தற்போது மரணம் அடைந்து விட்டார். ஆனால், சான்றிதழ் வழங்காத அதிகாரியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜெய் பீம் படம் வந்ததைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்கள் வீட்டில் உணவு அருந்துவதும், சிலருக்கு சான்றிதழ் வழங்குவதுமாக இருந்தார். அது எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக காட்டிக்கொண்ட கவர்ச்சிவாத அரசியல் பிம்பம் என்பது தற்போது அம்பலப்பட்டுப் போய் உள்ளது.
இன்னொருபுறம் பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டதாக நாடகம் போடுகிறது பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல். ஒரு பழங்குடியினப் பெண்மணியைக் குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டதால் பிரச்சனை தீர்ந்து விட்டதா?
1989 க்கு முன்பு தாசில்தார் தான் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவார் என்ற நிலைமை இருந்தது. பழங்குடியினர் அல்லாதவருக்கும் பழங்குடி என்று தாசில்தார்கள் போலிச் சான்றிதழ் வழங்குகிறார்கள். அதிகமாக முறைகேடு நடக்கிறது என்பதால் கோட்டாட்சியர் மட்டும்தான் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது அரசு.
கோட்டாட்சியரிடம் அதிகாரம் வந்த பிறகு, முன்பு குறைந்தபட்ச அளவுக்கேனும் வழங்கிய பழங்குடியின சாதிச் சான்றிதழையும் வழங்காமல் நிறுத்திக் கொண்டனர்.இன்னொரு புறம் ஒரு சாதி சான்றிதழ் வழங்க இத்தனை ஆயிரம் ரூபாய் பணம் கொடுங்கள் என்று கோட்டாட்சியர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க முடியாத எதார்த்த நிலையில் தான் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.
இத்தகைய அதிகார வர்க்கத்தின் தடித்த தோள்களுக்கு சொரணை வர இப்படி எத்தனை வேல்முருகன்கள் தீயிட்டுச் சாக வேண்டும்? பல பழங்குடியின மக்கள் கூட்டம் கூட்டமாக பல போராட்டங்கள் நடத்தியும் கூட அவர்களிடம் முறையான ஆய்வு நடத்தி அவர்களுக்குச் சான்றிதழ் தருவதில்லை. இந்த மரணம் அதிகாரம் வர்க்கம் நடத்திய பச்சைப் படுகொலை என்று தான் சொல்ல வேண்டும்.
இதே போல்தான் கந்து வட்டிக் கொடுமையைத் தாங்க முடியாமல் திருநெல்வேலி இசக்கிமுத்துவின் குடும்பம் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இசக்கி முத்துவின் குடும்பமே தீயில் கருகியது, அந்த மாவட்ட ஆட்சியரின் மீது எடுத்த நடவடிக்கைதான் என்ன?
உழைக்கும் மக்களை இப்படி வாட்டி வதைக்கும் கிரிமினல்மயமான, ஊழல்மயமான அதிகார வர்க்கம் பெரும் முதலாளிகளுக்கு செய்யும் சேவையை நினைத்துப் பாருங்கள்..
மூன்று அடியில் அள்ள வேண்டிய மணலை 30 அடிக்கு மேலே அள்ளும்போதும் வேடிக்கை பார்ப்பார்கள். பி.ஆர். பழனிச்சாமி தனது கிரானைட் கொள்ளைக்காக அந்தந்த மாவட்ட பகுதிகளில் பல்வேறு அதிகார வர்க்கத்தை தனது கையில் வைத்துக்கொண்டு வரைமுறை இல்லாமல் மலைகளை வெட்டி எடுத்துச் சூறையாடினான்.
அதானிக்கு சுரங்கம் வாங்க பாரத் ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியே ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஒப்பந்தத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார்.
அதிகார வர்க்கம் ஊழல் மயப்பட்டுப் போனது ஒரு பக்கம் என்றால் அதன் சாதிய மனோபாவம் பழங்குடியின மக்களை இழிவாகவே கருதுகிறது. பொய் வழக்கு போடுவதற்காகவும், திருட்டுப் பட்டம் கட்டுவதற்காகவும் பழங்குடியின மக்களைப் பயன்படுத்துகிறார்கள்
ஊழல் மயப்பட்டுப்போன, சாதிய திமிரு கொண்ட இந்த அதிகார வர்க்கத்தை பழங்குடியினர் குடியரசுத் தலைவரானதால் மட்டும் திருத்த முடியுமா?
உழைக்கும் மக்களுக்கு எதிராகவே மாறிப்போன இந்த அரசு கட்டமைப்பைத் தூக்கி எறியாமல் நமக்கான உரிமைகளை நிலைநாட்ட முடியாது. பழங்குடியின மக்களுக்கான உரிமைகளைப் பெற , உழைக்கும் மக்கள் அனைவரும் அவர்களுக்குத் துணை நிற்போம்! ஒன்றிணைந்து போராடுவோம்!
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.