ரோட்டில் 16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தை மூலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் கைது என்ற செய்தியை ஜூன் 3 அன்று தினகரன், தினமலர் இரண்டிலுமே ஒரேபோன்று வெளியானதை பார்த்திருப்போம். உண்மையை திரித்து போலி செய்தியை ஒன்று போல் பரப்பி உள்ளனர்.
அந்த செய்தியில் சொல்லப்பட்டிருப்பது என்ன? 16 வயது சிறுமி அவள் 12 வயதில் பூப்படைகிறாள். அதன் பின் அவளுடைய தாயாரின் இரண்டாவது கணவன் (வளர்ப்பு தந்தை) இந்த குழந்தையை 12 வயதில் பாலியல் வன்கொடுமை செய்கிறான். அதன் பின் அந்த கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் ஒரு புரோக்கர் மூலமாக ரூ.25,000-க்கு விற்று, அதில் ரூ.5,000 புரோக்கருக்கு கொடுத்து விடுகின்றனர்.
இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. தொடர் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். இப்பொழுது அந்த குழந்தைக்கு 16 வயது. 4 வருடத்தில் 8 முறை அந்த குழந்தையிடமிருந்து கருமுட்டை பெற்று ஈரோடு, ஓசூர் சேலம், பெருந்துறையில் என 8 தனியார் மருத்துவமனைகளில் விற்று உள்ளனர். இப்படி வரும் வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
பார்த்த உடனே நமக்கு என்ன தோன்றும், முதலில் அந்த குழந்தையின் அம்மா மீது கோபம் வரும் ”இவ எல்லாம் ஒரு தாயா? இவளும் ஒரு பெண்ணா? என்று தோன்றும். இது இயல்புதான். ஏனென்றால் ஊடகங்கள் என்ன சொல்கின்றனரோ அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே நாம் அந்த குழந்தையின் தாய் மீதும், வளர்ப்பு தந்தை மீதும், புரோக்கர் மீதும்தான் கோபம் வரும்.
படிக்க :
♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
♦ இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!
எவ்வளவு சீரழிந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். திட்டமிட்டு NEWS 7 சேனலில் செய்தி பரப்பப்படுகிறது. குற்றவாளி அந்த மூன்று நபர்கள் மட்டும்தான் (தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர்) என்று செய்தியை பரப்பி அப்படியே உண்மையை ஊற்றி மூடுகின்றனர்.
தனது வறுமைக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் (இரண்டாவது கணவருடன்) சேர்ந்து கொண்டு குழந்தையை சீரழித்து இருப்பது தவறுதான். இந்த குற்றத்திற்கு பின் இருப்பது வறுமை என்ற ஒன்றுதான். அதை போக்கினால் இந்த குற்றம் அப்பொழுதே முடிவுக்கு வரும். ஆனால், அந்த 12 வயதிலிருந்து 16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகங்களும் குற்றமற்றவர்களா? 12 வயது பெண்ணுக்கு 16 வயது என்று போலியாக வயதுச் சான்றிதழ் அளித்த அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை?
ஒரு மருத்துவருக்கு 12 வயது குழந்தையை பார்த்தால் தெரியாதா? ஆனால், அந்த குழந்தையின் தாய் குழந்தையின் வயதை 16 என ஆதார் அட்டையில் மாற்றம் செய்து போலி ஆவணம் தயார் செய்து கொடுத்ததாகவும், இதனால் மருத்துவமனைக்கும், அந்த மருத்துவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல் திட்டமிட்டு செய்தியை பரப்புகின்றனர். இது மிகவும் அப்பட்டமான பொய். தாய் உட்பட அந்த 3 நபர்களை மட்டும் குற்றவாளிகளாக்க மருத்துவமனை நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு போலீசுத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த போலீசின் போலி செய்தியைத்தான் ஊடக நிறுவனங்கள் செய்திகளாக்கி நம் மனதில் பதிய வைக்கின்றன.
எதோ குழந்தைகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளில் விற்பதாக போலீசுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும் இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளும்போது இவர்கள் பிடிபட்டதாவும் செய்தியை முதலில் பரப்புகின்றனர். ஆனால், உண்மை என்னவோ அந்த குழந்தை, தன் தாயிடமிருந்து தப்பித்து சித்தி, சித்தப்பாவிடம் சொல்லி அவர்கள் மூலம்தான் செய்தி வெளிவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில்தான், போலீசுத்துறை வந்துள்ளனர். ஆனால், ஏற்கனவே போலீசுத்துறை இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதான ஒரு பிம்பம் மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பரப்பட்டு வருகிறது.
ஆனால் ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தையிடமிருந்து மட்டுமே 8 முறை கருமுட்டை எடுத்துள்ளன. அப்படியானால் இது ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டதாகவும், அதை போலீசுத்துறை மிகவும் இலாவகமாக கையாண்டு பிடித்து விட்டதாகவும் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இந்த மருத்துவமனைகள் கள்ள மெளனம் சாதிக்கும்போதே தெரிகிறது இது தொடர் நிகழ்வு என்று. அதிலும் குறிப்பாக போலீசுத்துறை பரபரப்பாக காட்டும்போதே தெரிகிறது இது அவர்களின் கண்காணிப்பில் தான் அரங்கேறுகிறது என்பது.
ஏனென்றால், இது சாதரணமாக ஒரு எளிய மக்களால் செய்யப்படக் கூடிய குற்றமா? அப்படி செய்துவிடதான் முடியுமா? ஆனால், இப்பொழுது இந்த பிரச்சினை பரபரப்பாக பேச காரணம் என்பது அந்த குழந்தையின் சித்தி, சித்தப்பா தான். அவர்கள் கொடுத்த புகாரினால் தான் வேறுவழி இல்லாமல் இந்த 3 பேர் மட்டுமே குற்றவாளி என்ற வகையில் பிரச்சினையை திசைதிருப்பி மூடுகின்றனர். அப்படியானால் இந்த குற்றம் நின்று விடுமா? இதுபோன்ற நடவடிக்கை என்பது குற்றத்தை மேலும் அதிகரிக்கதான் செய்யும்.
உண்மையான, குற்றத்திற்கு அடிப்படையான குற்றவாளிகளான ஈரோடு, ஓசூர், சேலம், பெருந்துறை பகுதிகளில் பெயர் வெளியிடப்படாத தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதன் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு துணைபோகும் போலீசுத்துறை, 16 வயது குழந்தையின் வயதை 20 என மாற்றிய அரசு அதிகாரிகள் ஆகிய அனைத்து பணத்திற்காக அதிகாரத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருக்கும் இந்த பணவெறி பிடித்த நாய்கள் தான் முதன்மை கிரிமினல் குற்றவாளிகள்.
படிக்க :
♦ ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !
♦ ’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!
இது ஏதோ இக்குற்றத்தில் மட்டுமல்ல பல குற்றங்களுக்கும் அடிப்படையாக இந்த அரசுக்கட்டமைப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைக்க பிரச்சினையை கிளுகிளுப்பாகவும் ரசிக்கக் கூடியதாகவும் கண்ணீர் வரக்கூடியதாகவும் போட்டு நம் சிந்தனைகளை திசைத்திருப்புகின்றன இந்த ஊடகங்கள்.
இந்த குற்றவாளிகளை இச்சமூக அமைப்போ அல்லது சட்டமோ தண்டிக்குமா? அல்லது இதுபோன்ற குற்றங்களுக்கு இவர்கள் தண்டனைதான் அனுபவித்து உள்ளார்களா? கட்டாயமாக தண்டிக்கப்படவில்லை என்று நம் உள்மனம் சொல்கிறது. அப்படியானால் யார் தண்டிப்பது இந்த கயவர்களை?
இந்த சமூகமும் கட்டமைப்பும் முழுக்க முழுக்க சீரழிந்து, சீரழிவு மட்டுமே புறையோடிப்போய் உள்ளது. இதில் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுபவர்கள் அல்லது ஆக்கப்படுபவர்கள் சாதாரண மக்களே!
உழைக்கும் கரங்கள் தான் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைகளை மக்களே ஒன்று திரண்டு இழுத்து மூட வேண்டும் அல்லது அரசுடைமையாக்க வேண்டும். பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்களை அடித்து நொறுக்க வேண்டும். சமூக மாற்றம் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவையாக மாறிப்போய் உள்ளது.

ஓவியா

1 மறுமொழி

  1. வறுமையின் பிடியில் இந்தச் சமூகம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது…
    பெரும்பாலான பெண்கள் வறுமையை போக்க பாலியல் தொழிலுக்கு போகிறார்கள்..
    குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்….
    இப்பொழுது கருமுட்டை விற்பனை ஒவ்வொரு நாளும் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது அனைத்து துன்பங்களும் உழைக்கும் மக்கள் மீது வந்து விழுகிறது…..
    மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க தேவை ஒரு சோசலிசம்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க