ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பத்திரிகையான தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் போலீசால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 2 அன்று ஒரு வழக்குக்கு (எஃப்ஐஆர்) ஆஜராகுமாறு ஜே & கே போலீசுத்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ) பத்திரிகையின் ஆசிரியரான (23வயது) யாஷ்ராஜ் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. “தேசத்துரோக” கட்டுரையை வெளியிட்டதற்காக பத்திரிகைக்கு எதிராக எண் (01/2022) 2011-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் வாலா பத்திரிகையின் ஆசிரியர் ஃபஹத் ஷா ஏற்கனவே எஸ்.ஐ.ஏ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆசிரியர் அப்துல் ஆலா ஃபாசிலி, காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் 17 அன்று ஸ்ரீநகரில் SIA-வால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 6 அன்று ‘அடிமைத்தனத்தின் கட்டுகள் உடைந்து விடும் – The Shackles of Slavery Will Break’ என்ற தலைப்பில் தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் யாஷ்ராஜ் ஷர்மாவின் கட்டுரை வெளியானபோது அவருக்கு 12 வயது. ராஜஸ்தானில் வசிக்கும் யாஷ்ராஜ் ஸ்ரீநகரில் பத்திரிகை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
தி காஷ்மீர் வாலா ஆசிரியர் அப்துல் ஆலாவுக்கு எதிராக, SIA சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 120-பி (குற்றச் சதிக்கான தண்டனை), 121-ன் பிரிவுகள் 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை) மற்றும் 18 (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல்) இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 (தேசத்துரோகம்), 153-பி (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளை தொடர கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்பு, கடந்த மே 30 அன்று நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு வெளியான இக்கட்டுரை “ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுத்தது” என்று கூறியது.
இதற்கு முன் அரங்கேற்றப்பட்ட, புலனாய்வு அமைப்பின் தி காஷ்மீர் வாலா ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான பாசிச நடவடிக்கைகளை பார்ப்போம். கடந்த 2022 பிப்ரவரி மாதம், சமூக ஊடகங்களில் “தேச விரோத உள்ளடக்கத்தை” பதிவிட்டதாக ஃபஹத் முதன்முதலில் புல்வாமா போலீசுத் துறையினரால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 22 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும், அவர் காவலில் இருந்து வெளியேறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ஃபஹத் ஷா இதேபோன்ற வழக்கில் ஷோபியான் போலீசுத்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். மார்ச் 5 அன்று அவ்வழக்கிற்கு ஜாமின் கிடைத்தது. இருப்பினும், கலவரம், கொலை முயற்சி, தூண்டுதல், அவதூறான விஷயங்களை அச்சிடுதல் ஆகிய குற்றங்களின் கீழ் மூன்றாவது வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 14 அன்று, ஸ்ரீநகரில் உள்ள நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நான்காவது வழக்கு போடப்பட்டு ஃபஹத் ஷா, வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள சிறைக்கு மாற்றினர். அவர் தொடர்ந்து கைது செய்யப்பட்டதை எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள் மற்றும் பிற சுதந்திரமான பேச்சுக் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இருப்பினும், கடந்த மே 23 அன்று, கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபஹத் ஷா, குப்வாராவில் உள்ள சிறையிலிருந்து எஸ்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டார். ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளருக்கு எதிரான ஐந்தாவது வழக்கு இதுவாகும்.
இதுபோன்ற பாசிச நடவடிக்கைகள், காஷ்மீர் வாலா பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து மோடி அரசால் ஏவப்பட்டு வருகிறது. கட்டுரை எப்படி கலவரத்தை தூண்டும்? ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்து மதவெறியர்கள் நாடுமுழுவதும் வெளிப்படையாகவே முஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்கள்; இவர்களை கைது செய்து தட்டிக்க துப்பில்லாத அரசு பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை செயல்படவிடாமல் செய்து வருகிறது.
காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களின் அரங்கேற்றப்படும், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் இந்த செயல்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.