தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே, கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தன்னையும் அவரது குடும்பத்தினரையும் ஜம்மு & காஷ்மீர் போலீசுத்துறை தொடர்ந்து மிரட்டல் விட்டு அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் 8, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி கேரவன் பத்திரிக்கை நிறுவனத்தின் வேலைக்காக ஜனவரி மாதம் ஸ்ரீநகருக்குச் சென்றதிலிருந்து தற்போது வரை காஷ்மீர் போலீசுத்துறை தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகக் கூறுகிறார்.

காஷ்மீரில் 370-வது பிரிவை அமல்படுத்திய பிறகு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அரசின் ஒடுக்குமுறைகள் தொடர்ப்பான முதல் கட்டுரையை பிப்ரவரி 1-ம் தேதியும், ஜம்மு&காஷ்மீரில் “தேசியவாத எதிர்ப்புகளில்” இந்திய இராணுவத்தின் பங்கை ஆராய்ந்தது தொடர்பான இரண்டாவது கட்டுரையை ஜூன் 1-ம் தேதியும் பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே தயாரித்து வெளியிட்டார்.

படிக்க :

♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

♦ காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !

குறிப்பாக இந்த இரண்டு கட்டுரைகள் தொடர்பாக விசாரிக்க தான், காஷ்மீரில் உள்ள போலீசு நிலையங்களுக்கு தந்த்ரேயும் அவரது தந்தையும் பலமுறை அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். போலீசு அதிகாரி, காஷ்மீரில் தந்த்ரே தனது தொழிலை செய்ய விரும்பினால், அவர் முன் மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.

ஒன்று, அரசாங்கத்திற்கு எதிராக எதையும் எழுதமாட்டேன் என்று அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் கொடுத்தால் தந்த்ரே காஷ்மீரில் தங்கலாம். இரண்டு, அவர் காஷ்மீரில் தங்கி, “அதிருப்தி அடையும் அரசாங்கத்தின்” எழுத்துக்களைத் தொடரலாம். இந்த வழக்கில் அவர் “சுடப்படுவார் அல்லது சிறைக்கு அனுப்பப்படுவார்.” மூன்று, அவர் “உடனடியாக” காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும். என்று போலீசுத்துறை தந்த்ரேவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இருப்பினும் பிப்ரவரி 7-ம் தேதி காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு சென்றதாக தந்த்ரே கூறுகிறார்.

ஏப்ரல் 10-ம் தேதி, காஷ்மீர் பத்திரிகையாளர் ஆசிப் சுல்தான், மற்றொரு வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு, பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ) பதிவு செய்யப்பட்டதைப் பற்றி தந்திரே ட்வீட் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது, இந்த பிரச்சினை பற்றி ஏன் ட்வீட் செய்தீர்கள் என்று கேட்டதாக தந்த்ரே கூறுகிறார். “இது ஐரோப்பா இல்லை” என்றும், “காஷ்மீர் ஒரு போலீஸ் மாநிலம்” என்றும், திருமணம் செய்துகொள்வதே நல்லது என்றும் அவருக்கு மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே

பத்திரிகை நடைமுறைக்கு ஏற்ப, ஜே & கே போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள், கவர்னர் அலுவலகம் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு தனது அறிக்கையின் ஒரு பகுதியாக கேள்வித்தாள்களை அனுப்பியதாக தந்த்ரே கூறுகிறார்.

இருப்பினும், போலீசு தன்னையும், குடும்பத்தினரையும் “தொடர்ந்து” துன்புறுத்தி வருவதாக தந்த்ரே கூறுகிறார்; அவர் எங்கிருக்கிறார் என்று விசாரிப்பதற்காக காஷ்மீர் போலீசுத்துறையினரால் அவரது தந்தைக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் கட்டுரைகளில் மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அதிகாரிகளால் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4-ம் தேதி, தந்த்ரே-வைப் பற்றி விசாரிக்க அவரது தந்தை காஷ்மீரில் உள்ள ரெங்ரெத் போலீசுத்துறையால் அழைக்கப்பட்டார். அவரது தந்தை, தனது மகன் டெல்லியில் பணியில் இருப்பதாக பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி, ஒரு துணைக் போலீசு கண்காணிப்பாளர் தந்தைக்கு போன் செய்து, “தந்த்ரே காஷ்மீருக்கு வருவாரா அல்லது டெல்லிக்கு தேடுதல் குழுவை அனுப்ப வேண்டுமா என்பதை இன்னும் அரை மணி நேரத்தில் சொல்லுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நிலுவையில் உள்ளதா? என்பதை வெளிப்படுத்துமாறு உயர் அதிகாரிகளை தனது கடிதத்தில் கேட்டுள்ளார் தந்த்ரே. எப்.ஐ.ஆ.ரின் நகலை கேட்ட அவர், சட்டப்படி தனக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு உட்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். போலீசு அதிகாரிகளிடமிருந்து கடிதங்கள் பெறப்பட்டதற்கான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என்று தந்த்ரே கூறுகிறார்.

படிக்க :

♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

♦ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

காவி பயங்கரவாதிகள் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதையும் கொலை செய்வதையும் பார்த்திருப்போம். ஆனால் காஷ்மீர் போலீசுத்துறையே காவிக் குண்டர் படையாக மாறி வருகிறது. தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.

மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கேலிக்கூத்தாக மாறிவரும் நிலையில், மத்திய மாநில அரசு எந்திரங்களும் காவி பாசிஸ்டுகளின் கூடாரமாக மாறிவருகிறது. குறிப்பான காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து அரச வன்முறை ஏவப்பட்டு வருகிறது. அரசின் உண்மையான பாசிச முகத்தை அமபலப்படுத்தும் முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க