ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !

வீடு, மின்சாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்த ரூ.265 கோடியை வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடிய நோக்கம்தான் என்ன?

0

பழங்குடியின மக்களுக்கான ரூ.265 கோடி நிதியை மத்திய அரசிடம்
திருப்பி ஒப்படைத்த முந்தைய அதிமுக அரசு !

மிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது.

இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், “மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,310 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் ரூ.1,045 கோடி மட்டுமே பல்வேறு அடிப்படைத் திட்டங்களுக்கு செலவு செய்துள்ளனர். மீதம் ரூ.265 கோடி செலவு செய்யப்படாமல் அரசிற்கே மீண்டும் திரும்பவும் ஒப்படைத்துள்ளனர் என்பதை தெரிவித்துள்ளார்.

மதுரையில் கல்மேடு, சக்கிமங்கலம் போன்ற பகுதிகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுபோக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த பகுதிகள் பார்ப்பதற்கு நவீன சேரிகளை போல் காட்சியளிக்கும். முறையான குடிநீர் வசதி இருக்காது. 500 குடும்பங்களுக்கு இரண்டு தண்ணீர் குழாய்கள்தான் உள்ளன; அதைக் கூட அந்த மக்கள் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட ஆறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் அந்த மக்களிடம் வந்து பல்வேறு கோரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வாரி வழங்கும் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ பேருக்கு பிச்சை போடுவதைப்போல் சில விஷயங்களை செய்வார்கள் அதுவும்கூட அந்த மக்களின் தொடர்ச்சியான அழுத்தமும் போராட்டமுமே அத்தகைய நடவடிக்கை எடுக்கவும் அடிப்படையாக உள்ளது.

படிக்க :

♦ ’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!

♦ இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம்!

வீடு, மின்சாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்த ரூ.265 கோடியை வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடிய நோக்கம்தான் என்ன?

இந்த அதிமுக – பாஜக கும்பலுக்கு மக்கள் நலன் என்றாலே கசப்பான ஒன்றுதான். போன ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கல்விக்காக ஒதுக்கிய நிதியில் ரூ.4,000 கோடி தொகையை திருப்பி அனுப்பியதும் அது அனைவராலும் கண்டிக்கப்பட்டதும் நடந்தது.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் துரத்தி அடிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் நகரங்களில் வந்து குவிந்துள்ள இத்தகைய பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் நிற்கும்போது, அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் நம்மை சினம் கொள்ள வைக்கிறது.

ஜெய் பீம் படம் வந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு ஆதரவானவர் என்பதுபோல காட்டிக்கொண்டு வளம் வந்தார். பல்வேறு உதவிகள் செய்வதாகவும் காட்டிக் கொண்டார். அப்படி இருக்கும்போது அந்த மக்கள் இன்றும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்நிலை இன்றும் மாறவில்லை.

மாறாக, சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ள தமிழக அரசு அதை உருவாக்க இன்று பல்வேறு உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஒரு கார்ப்பரேட் நகரை உருவாக்க இப்படி உழைக்கும் மக்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. மக்களை அப்புறப்படுத்தி நவீன சேரிகளை உருவாக்கி வருகிறது. இதற்கு நிகரானதுதான் இப்படிப்பட்ட பழங்குடியின மக்களை புறக்கணிப்பது என்பது. கார்ப்பரேட்டுகளுக்கு விழுந்து விழுந்து சேவை செய்யும் இத்தகைய திராவிட மாடல்தான் நாளை உழைக்கும் மக்களை காப்பாற்ற போவதாக சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று.

கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் கார்ப்பரேட் சேவை மட்டும் நிரந்தரம் என்பதுதான் எதார்த்தம் ஆகிவிட்டது. பல்வேறு உழைக்கும் மக்களின் உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் வெடிக்க காத்திருக்கிறது அத்தகைய போராட்டங்களுடன் பழங்குடியின மக்களும் இணைந்து போராடுவதே தங்களுடைய உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள உள்ள ஒரே வழி.


ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க