ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

திமுகவின் தவறுகள் இனி பூதாகரமாக்கப்படும், திமுகவின் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களில் எல்லாம் இனி சீமானை வைத்து பாசிச பாஜக விளையாடும். தமிழ்நாடு எதிர் பாஜக என்ற கருத்தை தமிழ்நாட்டின் அணையா நெருப்பை அணைக்க சீமான் என்ற தண்ணீர் தேவைப்படும் போது பீய்ச்சப்படும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ;
செத்துப் போனது  ‘ஜனநாயகம்’!
உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான் !

”ஏற்கனவே செத்துப்போன ஜனநாயகத்தை எத்தனை முறைதான் சாவடிக்குறது?”

“ நீங்க நம்புற வரைக்கும்தான்”

நேற்றைய தினம் ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தென்னரசுவிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்ட அவரோ “ஒரே ஒரு கேள்விதான், ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றது” என்று சொல்லி விம்மி அழுதுகொண்டே சென்றார். ஜனநாயகத்தைப்பற்றியெல்லாம் ”நீ யெல்லா எனக்கு வகுப்பு எடுக்குறீயா” என்று கேள்வி கேட்டு நாலு சாத்து சாத்த  ஆள் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை.

பதிவான சுமார் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் வாக்குகளில் ஒரு  லட்சத்து பத்தாயிரம் வாக்குகள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைக்க, தென்னரசுவுக்கு நாற்பத்து மூவாயிரம் வாக்குகள் விழ, சீமானுக்கு சுமார் பத்தாயிரம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பதிலளித்த மீச வெச்ச ஆம்பிளையான’ பழனிச்சாமி “வரலாறு காணாத முறைகேடுகள் நடந்துள்ளது, நியாயமாக தேர்தல் நடைபெற்றிருந்தால் நாங்கள்தான் ஜெயித்திருப்போம்” என்று பதிலளித்தார். ஒவ்வொரு ஓட்டுக்கும் பல ஆயிரம் செய்த செலவை இனி யார் காலில் விழுந்து தேற்றுவது என்றவாறே எடப்பாடி இப்போது யோசித்துக்கொண்டிருப்பார்.

“திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு எதற்காக அத்தனை அமைச்சர்களும் மாடாக வேலை செய்தார்கள்? ஏன் பணம் தண்ணீராய் ஓடியது என்று யாரும் கேட்கப்போவதில்லை.  ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதக்கிறார்கள்.

நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களான புகழேந்தியும் பண்ருட்டி ராமச்சந்திரனும் “இது இறுதி எச்சரிக்கை, இனியும் ஓபிஎஸ்-ன் அம்மா சாவுக்கு போய் மரியாதையாக துக்கம் விசாரித்து விட்டுவா எடப்பாடி” என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர்.

பாஜக தலைவர் அண்ணாமலையோ  “அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்” என்றும் எடப்பாடிக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.


படிக்க: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !


இக்கட்டுரை எழுதும் வரையில், “வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி ” என்று உச்சரிக்காமல் இருக்கிறார் சீமான்..

இப்படி ஒரே நேரத்தில் மகிழ்ச்சி, சிரிப்பு, கோபம், அழுகை, வேதனை, விரக்தி, துக்கம், துயரம் என அனைத்தையும் கலந்து குழப்பி நமக்கு தந்து கொண்டிருக்கின்றன ஊடகங்கள், என்னதான் குமட்டினாலும் வேறுவழியில்லை என்று நமது மூளையில் திணித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த குமட்டல்களுக்கு மத்தியில் ஈரோடு இடைத்தேர்தலையும் அதன் வெற்றியையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

ஜனநாயகம்கிலோ என்ன விலை?

மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டு ஓட்டுப்போடுவதுதான் ஜனநாயகம் என்று அரசே சொல்கிறது . அந்த ஜனநாயகத்தைதான் நல்ல விலைக்கு விற்றிருக்கின்றன கட்சிகள். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டின் அமைச்சர்களில் பெரும்பாலானோர்  அத்தொகுதியில் வீதிகளிலேயே அலைந்து கொண்டிருந்தனர்.  ”இவர்தான் உயர்கல்வித்துறை அமைச்சர், அதோ போறாரே அவரு மதுவிலக்குத்துறை அமைச்சர்” என்று தன் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தவர்களை மக்கள், அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களைப் பார்த்து விளக்குவது போல விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தனர். அரசாங்கமும் அரசும் மொத்தமக ஈரோடு கிழக்கில் சம்மணமிட்டுக் கொண்டு அம்மணமாய்த் திரிந்தது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் /  சட்ட மன்ற உறுப்பினர்/ அமைச்சருக்கும் ஒரு வார்டும் ஒவ்வொரு வட்டச்செயலாளருக்கும் குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான தெருக்களும் ஒதுக்கப்பட்டது எதைக்கொடுத்தும் ஓட்டுக்களை அறுவடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு.

சொல்லிட்டு தேர்தல் வரும் சொல்லாமலேயே  கோமாளிக்ள் வருவர் ! 

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒரு கடையில் டீ போட்டுக்கொடுத்தார். இன்னொரு கடையில் புரோட்டா அடித்தார், அமைச்சர் மா.சுப்ரமணியம்  நடையாய் நடந்து காட்டினார். அமைச்சர் செந்தில் பாலாஜி ……………………… இப்படி பலரும் பலவித கோமாளிக் கூத்துக்களைக் கட்டிக்கொண்டிருக்க இதற்கு கொஞ்சமும் சளைக்காமல் அதிமுகவின் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் என அடிமைகள் அனைவரும் குட்டிக்கரணம் போட்டு ஓபிஎஸ் மூஞ்சியில் கரி பூச வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தனர். சீமானோ ஆமைக்கதை, ஏகே 74 கதை, இட்லி கதைகள் எல்லாம் புளித்துப்போனதால் அருந்ததியினரை திட்டமிட்டு தாக்கும் நோக்குடன் வந்தேறிக்கதையை எடுத்துவிட அதுவே  தேர்தல் கால கிளைமேக்ஸ் – ம் ஆனது. ” ஈரோடு கிழக்கில் முதலியார் அதிகம் என்பதால் நான் முதலியார் சாதிப்பெண்ணை நிறுத்துகிறேன்” என்று பச்சையாக சாதிவெறியை கக்கினார். ’”முதலியார்கள் போருக்கு முதலில் வந்தவர்கள்” என்று சீமான் கொடுத்த பைத்தியக்காரத்தனமான விளக்கங்களுக்கும் கூட கைத்தட்டுகள் கிடைத்தன.

அதிமுகவின் இந்நாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு தெருக்களிலும் திருந்து கொண்டிருந்தனர். கடந்த பத்தாண்டுகளில் கொள்ளையடித்த பணத்தை கோடிக்கணக்கில் தெருக்களில் கொட்டி அழுதார்கள். என்ன செய்ய முடியும்? அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தானே வெல்ல முடியும்? ஆண்டிப்பட்டி உனக்கு, ஈரோடு கிழக்கு எனக்கு இதுதானே லாஜிக்.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் பொன்முடியும் செல்லூர் ராஜூவும் எப்படி கலாய்த்துக்கொள்கிறார்கள் பாருங்கள் என்று பாலிமர் போன்ற ஊடகங்கள் மக்களை கோமாளிகளாக்கிக் கொண்டிருந்தன. ஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் என்ற அளவே தெரியாத அளவுக்கு விலை எகிரிக்கொண்டே போனது. ஆண்ட்ராய்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், வெள்ளி விளக்கு, இது போக ஒவ்வொரு வீட்டுக்கும் பல ஆயிரம் பணம் என ஈரோடு கிழக்கு தொகுதியே தூங்கா நகரத்துக்குப் போட்டியாக நோட்டுக்களை எண்ணிக்கொண்டிருந்தது. இதைச் செய்தது திமுக மட்டுமல்ல, அதிமுகவும் தான்.

யாருக்கு எவ்வளவு தெம்பு இருக்கிறதோ செலவு செய்யுங்கள் எதிலும் நாங்கள் தலையிட மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் ஓரமாய் உட்கார்ந்து சர்பத் குடித்துக்கொண்டிருந்தது. குதிரை ரேஸில் தோற்றவன் விதிமேல் பழிபோடுவதும் வென்றவன் தனது அதிருஷ்டத்தின் மீது பெருமை கொள்வதும் நடக்கும் ஆனால் இருவரும் நடைபெற்றது ஒரு சூதாட்டம் என்பதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதுபோலத்தான் ஈரோடு இடைத்தேர்தலிலும் ”ஜனநாயகம், பணநாயகம்”  போன்ற உவமைகள்  மாட்டிக்கொண்டு முழிக்கின்றன.

பணம் கொடுக்காமல், பல கோடி செலவு செய்யாமல் யாரும் தேர்தல் களத்தில் தாக்குப்பிடிக்க முடியாது என்ற உண்மையை மறுப்பவனே ஒண்ணாம் நெம்பர் அயோக்கியனாக இருப்பான். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் எதிர்கட்சிகளை பிரச்சாரம் செய்யவே விடாமல் விரட்டியடித்து வெற்றி பெற்றார் ஜெயலலிதா. திருமங்கலத்திலோ ஒன்றிய, மாநில அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவார்டை பிரித்துக்கொடுத்து விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்க மூக்குத்தியும் பணம் போடப்பட்ட கவர்களும் குறும்பாட்டுக்கறியும் வீடு தேடிவந்தது. ஆர்,கே.நகரில் பிரச்சாரத்துக்கு வருவோருக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் கூலி கூடவே குக்கர் + பிரியாணி + குவாட்டர்….. இலவசம். இப்படி ஆர்.கே நகர் மக்களுக்கு தினமும் குவாட்டரும் பிரியாணியும்  வேலையும் சம்பளமும் இன்னும் என்னன்னவோ கொடுத்து வெற்றி பெற்ற டி.டி.விதினகரன் சொன்னார் “ஜனநாயகம் வென்றது.”

இப்படியெல்லாம் போராடி வாதாடி கூத்தாடி ஜனநாயகத்தை மீட்டவர்களின் தற்போதைய அப்டேட் வெர்ஷன்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். ஒரு எளிய மனிதன் இத்தேர்தல் முறைக்குள் சென்று தன்னுடையப் பிரச்சினையை முன்வைக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ வெல்லவோ முடியாது என்பதைத்தான் இத்தேர்தல் முடிவுகளும் நமக்கு காட்டுகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ; தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு கரும்புள்ளிதான். ஏனெனில் பணமும் அதிகாரமும் யாரிடம் உள்ளதோ அங்கேதான் இடைத்தேர்தல் வெற்றி கிடைக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடா? பாசிச பாஜகவா? என்ற அணையா பெரு நெருப்பு

தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும் அரசியலுக்கும்  எப்போதும் எதிரானதே பாஜக. இது தான் தமிழ்நாடு. இதை எப்போதெல்லாம் உயர்த்திப்பிடித்தோமோ அப்போதெல்லாம் பாசிச பாஜக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான பாசிச மோடி அரசின் அனைத்து திட்டங்களுக்கும் செயல்களுக்கும் தமிழ்நாடு பொங்கி எழுந்திருக்கிறது. காவிரி நதி நீர் உரிமை பறிப்புக்கு எதிராக ஒவ்வொரு ஊரிலும் தெருவிலும் வீட்டிலும்  தமிழ்நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பே கோபேக் மோடி என்ற இயக்கமாக மாறி 56 இன்ச் மார்பு கொண்ட மோடியை சென்னை ஐஐடி மூத்திர சந்து வழியாக ஓட வைத்தது. மோடி வந்த விமானத்தை கரும்படையாய் சூழ்ந்து மறித்தன தமிழரின் மூச்சுக்காற்று நிரப்பிய பலூன்கள்.  பல லட்சம் வீரர்கள், பல ஆயிரம் டாங்கிகள், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கவசம் கொண்ட ஒன்றிய அரசை மண்டியிட வைத்து புற முதுகு ஓட வைத்தது தமிழரின் மூச்சுக்காற்று. அது வெறும் காற்று , ஈராயிரம் ஆண்டுகளால் தேக்கிவைக்கப்பட்ட எரிமலையின் ஜுவாலை .

ஜல்லிக்கட்டுக்கு தடைவித்தது டெல்லி,  மெரீனா மனிதத் தலைகளால் நிரம்பின. கடல் எது கரை எதுவென தெரியாமல் தவித்தன அலைகள்.  மெரீனாவில் விரட்டப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடெங்கும் திரண்டன மக்கட் படைகள்.

நீட் எதிர்ப்பு போராட்டம் ,ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் இப்படி எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் அத்தனையும் பாசிச பாஜகவா தமிழ்நாடா என்ற ஒரு உணர்வே தமிழரையும் தமிழ்நாட்டையும் உந்தித்தள்ளியது. எத்தனை எம்.எ.ஏக்கள் எங்களுடன் வரப்போகிறீர்கள் என்று கேட்டுவிட்டு மக்கள் போராடவும் மார்பில் குண்டேந்தி சாகவும் இல்லை. அது தமிழ்நாடென்ற உணர்வு. ஒவ்வொரு தமிழரையும் நெருப்பில் போட்டு எரித்தாலும் அந்த சுடுகாட்டு சாம்பலை நுகரும் ஒவ்வொருவரையும் பற்றிக்கொள்ளும் அணையா பெரு நெருப்பு அது.

கொண்டையை மறை !

தமிழிசை, ஆர்.என்.ரவி, அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் என எப்படி வந்தாலும் எந்த வேடத்தில் வந்தாலும் ஊறவைத்து அடிக்கும் தமிழ் நாட்டின் இந்த உணர்வுதான் மற்ற மாநிலங்களைப் போல திமுக அரசை கலைக்கவிடாமலும் திமுகவை உடைத்து இன்னொரு ஷிண்டே உருவாக்கவிடாமலும் வைத்து இருக்கிறது.

இந்த உணர்வை உயர்த்திப்பிடித்துதான் 2019 தேர்தலில் மோடியா? தமிழ்நாடா என்ற முழக்கத்தை திமுகவினர் வைத்தனர். அதன் பலை நாடாளூமன்றத் த்யேதலில் அறுவடை செய்தனர். திமுக தலைவர்களின் வர்க்கத்தன்மை காரணமாக 2021ல் மோடிக்கெதிரான சுதி இறங்கியதும் அதன் பலனையும்’ அனுபவித்தார்கள்.

இந்த ஈரோடு இடைத்தேர்தலில் கூட எண்ணப்பட்ட முதல் சில வார்டுகள் சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதி, அப்போதிலிருந்தே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பத்தாயிரம் வாக்குகள் முன்னிலையிலிருந்தார்

அதுமட்டுமல்ல ஆளுங்கட்சி, பணபலம் என்பதைத்தாண்டி பாசிச பாஜவுக்கு எதிரான களமாக நினைத்து’ மக்கள் ஓட்டாக அளித்திருக்கிறார்கள். கண்ணன் குலம் நான் என்று பழனிச்சாமி ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடிதம் எழுதிய போதும், திமுகவின் மீது மிகப்பெரிய அதிருப்தி இருப்பதாக புரூடா ஒன்றை’ ஈன்றெடுத்து அதை வளர்க்க முயன்றதும் பயன்தரவில்லை அதிமுகவின் கே.சி. பழனிச்சாமி “அண்ணாமலை பிரச்சாரத்துக்கு வராமல் இருந்திருந்தால் இன்னமும் பத்தாயிரம் ஓட்டுக்களை அதிமுக பெற்றிருக்கும்” என்று கூறியதும் உண்மை.

தேர்தல் பாதைக்கு வெளியில் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவுக்கு எதிரான  மாபெரும் அரசியல் போராட்டக்களம் இல்லாததால் தமிழ்நாடா? பா.ஜகவா என்ற என்ற அணையா பெருநெருப்பே இன்றைக்கும் சாதி , மத வெறிப்பிரச்சாரத்துக்கு மத்தியில் திமுகவுக்கு ஓட்டாக விழுந்ததில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்திருக்கிறது என்பதும் உண்மைதான்.

பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்

அழுகி நாறும் அரசுக்கட்டைமைப்பின் மீதான மயக்கம் பலருக்கும் தெளிந்துகொண்டிருக்கிறது. வேறென்ன மாற்று என்பதைத்தேடி பலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது அவர்களை இக்கட்டமைப்பிற்குள்ளே இருக்க வைக்க  ஹிட்லர்கள் தேவைப்படுவர். அப்படித்தான் நவீன ஹிட்லராக வந்து அவதாரம் எடுத்துள்ளார் சீமான்

ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆகிய பாசிசக்கும்பலின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலையில் தீவிரமாய் இறங்கிக்கொண்டிருக்கிறார் நாம் தமிழர் என்ற பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு இருக்கும் சாதிவெறியன் சீமான்.

சீமான் – அராஜகவாத, பிற்போக்குவாத, ஆதிக்க சாதி வெறி கொண்ட ஒரு சாக்கடை. பலர் அது சாக்கடை என்று தெரியாமலேயே அதில் விழுந்து புரண்டு முத்தெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

சீமானின் முன்னோடியான சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம், பதவிப்பிச்சைக்காக எதையும் செய்யத்துணிந்தவர்,  பார்ப்பன பாசிச பயங்கரவாதி சாவர்க்கரின் ஆன்மாவுக்காக கலங்கியவர், தனது செங்கோல் இதழில் நொண்டியடித்தவர்(நொண்டியத்தல் என்பது ஒரு விளையாட்டு). இப்படிப்பட்டவரை தலைவராகக் கொண்டிருக்கும் சீமானுக்கு அடிப்படை அறிவென்பதும் இல்லை. சீமானின் அறிவின்மையே  சீமானிசமாக மாறிவிட்டது. நித்தியானந்தாவை நம்புவதற்கு உள்ள கூட்டம் போல சீமானுக்கும் இருக்கிறது. நித்தியின் பின்னால் உள்ளவர்களால் பெரும் அபாயம் வரப்போவதில்லை. சீமானோ தமிழ், தமிழர், தமிழ்நாடென்று அதன் மீது நாட்டம் கொண்ட இளைஞர்களை தன்பாற்இழுத்து சிதைத்துக்கொண்டிருக்கிறார்.

காவிரிப்பிரச்சினையை தீர்க்க ஒகேனக்கல் பகுதியை சுத்தி சுவர் கட்டிவிடுவேன் என்பார். வேலையின்மைப் பிரச்சினையை தீர்க்க ஆடு மாடு மேய்ப்போரை அரசு ஊழியராக்கி விடுவேன் என்பார் .

இரட்டை நாக்கும் இரட்டை ஆட்சியும்

அரசு என்பது அதிகாரிகளைக் கொண்டது, அதை ஒரு போதும் மக்களால் தெரிவு செய்ய முடியாது ஆளும்வர்க்கமாக எது உள்ளதோ அதன்படியிலான அரசே அமையும். ஆளும் வர்க்கம் முதலாளித்துவமாக உள்ளதெனிலதற்கேற்ற அரசே அமையும். அதுவே நிரந்தரம் அவர்களே நம்மை நிரந்தரமாக ஆட்சி செய்பவர்கள். அரசாங்கம் என்பது தேர்தல் மூலம் தெரிவு செய்வது, ஐந்தண்டுகளோ அல்லது இடையிலோ நடைபெறும் அரசாங்கம் ஒரு போது அரசை கட்டுப்படுத்த முடியாது.

இந்த உலகம்  ஏகாதிபத்திய மேல் நிலை வல்லரசான அமெரிக்கா என்ற ஒற்றை எஞ்சினில்  கட்டப்பட்டிருக்கிறது. அதனால்தான் அமெரிக்காவில் ஏற்பட்ட குமிழி வெடிப்பு இந்தியா வரை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டை சுற்றி 1000 அடி அகலத்திற்கு சுவர் எழுப்பினாலும்கூட பொருளாதார பாதிப்பினை சரி செய்ய முடியாது. உலக வர்த்தகக் கழகம் , உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவைதான் உலகை இயக்கும் இன்ஞ்சின்கள்.  . இவை அனைத்துமே முதலாளித்துவம் பெற்றெடுத்த புளுத்து நாறும் மூட்டைகள். இவற்றுக்கு வெளியே  எப்படி செல்ல முடியும் ? அப்படி செல்லவேண்டும் என்றால் முதலாளித்துவத்துக்கு மாற்றாக சீமான் முன்வைக்கும் தத்துவம் என்ன? இப்போதே சீமானை இந்தியாவின் பிரதமர் ஆக்கிவிட்டால்’ அவரால் கச்சா எண்ணை விலையை நிறுத்தமுடியுமா?

முதலாளித்துவம் உருவாக்கிய அரசுக்கட்டமைப்பே புளுத்து அழுவிட்டது. உற்பத்தி சமூகமயமாக இருப்பதும் நுகர்வு  அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் போன்ற மீச்சிலரிடம்  குவிந்து கிடப்பதுமான சுரண்டலே அடிப்படைப்பிரச்சினை. உழைப்பவனுக்கு அதிகாரம் உழுபவனுக்கு நிலம் . பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமல் சுரண்டும் முதலாளித்துவத்துக்கு முடிவு கட்ட முடியாது. இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் அனைத்துமே முதலாளித்துவ நகல்களே. சுரண்டலற்ற உலகை மாற்ற வேண்டுமென்றால் அது இக்கட்டமைப்பில் வைக்கப்படும் தீர்வுகளுக்கு மாற்றான புரட்சி மட்டுமே !

ஆனால் இதைப்பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதற்கும் தான் ” ங்கோத்தா, …..….மவனே, பச்ச மட்டைய எடுத்து வெளுத்துப்புடுவேன்” என்பதும் ஆமைக்கறி, ஏகே 74 கதைகளும்.

சீமான் என்றோர் மாயத்திரை

மாயத்திரைகள் விலக்கி ஜோதியை காண் என்றால் வள்ளலார்!

பாசிச பாஜகவா தமிழ்நாடா என்பதுதான் தமிழ்நாட்டின் சிறப்பு, அதை மாற்றவும் முறியடிக்கவும்  பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் பல முயற்சிகளை எடுத்துவந்தாலும் அவை நிறைவேறுவதில்லை. ஆனாலும் தனது முயற்சியில் இருந்து பின்வாங்காத பாசிச கும்பல் பலரையும் வளைத்துப்போட்டிருக்கிறது. அதில் ஒருவர்தான் சீமான். சீமானைப்போல் இப்படி பேசலாமா?  என்று பலரும் கேட்கலாம்.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி –அதானி பாசிசக்கும்பல் தமிழ்நாட்டை சுற்றி வளைத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர்  வேறு வடிவத்தில் தமிழ்நாட்டின் மீது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. வீழ்த்தப்பட வேண்டிய அதானி – அம்பானி கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கைப்பேன் என்று சீமான் பேசுவதில்லை .மாறாக தமிழன் பிழைப்பு தேடி பம்பாய்க்கும், சிங்கப்பூருக்கும் இன்னும் பிற நாடுகளுக்கும் சென்றது போல வட இந்தியர்கள் பிழப்பு தேடி தமிழ்நாடு வருகிறார்கள் . அவர்களை எதிரியாகக்காட்டி அவர்கள் மீது மோதலை உருவாக்குகிறார். கிரானைட் மலைகளைக் கொள்ளையடித்த பி.ஆர்.பழனிச்சாமி மீதும் தாதுமணல்கொள்ளையன் வைகுண்டராஜன் பற்றியும் பேசாமல் இருக்கிறார். பி.ஆர். பழனிச்சாமிக்கு ஆதர்வாக வெளிப்படையாக போராடியது பாசிச பாஜக., அமைதியாக இருந்தார் சீமான் அவ்வளவுதான் வித்தியாசம்.


படிக்க: எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !


இந்தியா முழுவதும் பட்டியலின மக்களை கூறுபோட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி வருகிறது பாசிச ஆர்.எஸ்.எஸ் –பாஜக. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அதன் சித்து விளையாட்டுக்கள் பெரியதாக எடுபடவில்லை. அருந்ததியர்கள் வந்தேறிகள் என்று அண்ணாமலை பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆனால் சீமான் பேசியதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எதுவும் எழவில்லை(அருந்ததியினர், மக்கள் அதிகாரம் உள்ளீட்ட அமைப்புக்கள் தவிர). தமிழ்ச் சமூகத்தை பிளக்கும் ஈரோட்டில் சீமானால் எப்படி நிம்மதியாக பிரச்சாரம் செய்ய முடிந்தது?

ஆக தமிழ், தமிழன் என்ற பெயரில் எப்படிப்பட்ட டுபாக்கூர்கள் வந்தாலும் அயோக்கியர்கள் வந்தாலும் பாசிஸ்டுகள் வந்தாலும் அவர்களை புறக்கணிக்கவில்லை தமிழ்நாடு என்பதற்கு சீமானே சாட்சி. பட்டியலின மக்களை கூறு போட பாசிச பாஜகவால் முடியாததை சீமான் செய்து கொண்டிருக்கிறார்.

வட இந்தியர்கள் மீதும் அருந்ததியினர் மீதும் திட்டமிட்டு மோதலை உருவாக்கும் சீமானின் பேச்சுக்க்ள் பற்றி பாஜகவும் அதிமுகவும் வாய் திறந்து பேசவில்லை என்பதுதான் இருவருக்குமான உறவு.

பத்தாயிரம் ஓட்டுக்களூம் சில பலிகிடாக்களும்

இப்படிப்பட்ட கோடாரிக்காம்பிற்கு எப்படி கிடைத்தது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் ?  அதிமுக, திமுக, என  ஆண்ட தேர்தல் கட்சிகள் மீதுள்ள பொதுவான அதிருப்தி வாக்குகளை அவ்வப்போது உருவாக்கப்படும் பிம்பங்கள் அறுவடை செய்கின்றன. கருணாநிதியை வீழ்த்த உருவாக்கப்பட்ட எம்ஜியார், ஜெயா தவிர மற்ற பொம்மைகள் விலை போகவில்லை என்றால் பார்ப்பனீயமும் ஆளும் வர்க்கமும் முயற்சிகளை தளரவிடுவதில்லை. பொதுவான அதிருப்தியை அறுவடை செய்ய வைகோ, விஜயகாந்த், கமல், இப்போது சீமான் என ஆளும் வர்க்கமும் பார்ப்பனீயமும் ஊதிப்பெருக்கிய, பெருக்கும் பலூன்களுக்கு கணக்கில்லை.

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்த வரை, ஸ்டாலின் எதிர் சீமான் என்றே அனைத்து ஊடகங்களும் கட்டமைத்தன. பேனா சிலையை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதை திரும்பத்திரும்ப ஏன் ஊடகங்கள் வெளியிட்டன? சீமானின் பைத்தியக்காரத்தனமான உளறல்களையும் லூசுத்தனமான குதறல்களையும் ஏதோ அறிவு ஜீவி’க்கருத்துக்கள் போல மீடியாக்கள் டிரெண்டாக்கின. இங்கு மீடியாக்கள் என்று குற்ப்பிடுவது தனிப்பட்ட மீடியாக்களை மட்டுமல்ல, அவற்றை இயக்கும் ஆளும் வர்க்கம் மற்றும் பாசிச பாஜகவையும் சேர்த்துதான். அதனால்தான்  ஒருவரை “ போடா பைத்தியம்” என்று பொதுவெளியில் பேசும் போது கூட மீடியாக்கள் சீமானை கொஞ்சிக்கொண்டு இருக்கின்றன.

பார்ப்பனர் தமிழ்க்குடிஅருந்ததியர் வந்தேறி !

பிறரை வளைத்து வளைத்து கேள்வி கேட்கும் பாண்டேவும் சீமான் முன் ஏன் பம்முகிறார் என்றால். சீமான் பார்ப்பனரையும் பார்ப்பனீயத்தையும் ஒரு போதும் எதிர்க்கவில்லை என்பதே. பார்ப்பனர் தமிழ்க்குடி – அருந்ததியர் வந்தேறி.

சீமான் அறிவு நாணயமற்ற – குதர்க்கவாதி, ஆதிக்க சாதிவெறியன் அதனல்தான் தன்னுடைய பேச்சுகளுக்கு பொறுப்பாக இருப்பதில்லை. நாம் தமிழர் கட்சியும்  மிகப்பெரிய கட்டமைப்பை கொண்ட கட்சியும் அல்ல. இதை அவருடைய கட்சியை சேர்ம்ந்தவரே புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத்தத்தில் நேற்று தெரிவித்தார். இப்படிப்பட்ட கட்சியை வைத்து தலைவனை (சீமானை) வைத்துதான்  பாஜக –ஆர்.எஸ்.எஸ்-ஆல் அனைத்துத் தேவைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். சீமானைப்போல பல சீமான்கள் பாஜகவிற்கு இருகின்றனர்.

முருகனுக்கு யாத்திரை போனார் எல்.முருகன் முப்பாட்டன் முருகன் என்றார் சீமான் . ஆர்.எஸ்.எஸ்க்கு லேட்டஸ்ட் வெர்ஷன் தான் சீமானின் பண்பாட்டு நிகழ்ச்சிகள். சீமானின் பொருளாதர நிபுணத்துவம்’, அராஜகம் – சாதிவெறி – இனவெறி நிரம்பிய பேச்சும் செயல்பாடும், சிறுபான்மையினரை சந்தேகப்பட வேண்டும் என்ற அவரின் நிலைப்பாடு என அனைத்துமே பாசிச பாஜகவுக்கு உகந்தவையே.

சீமானை ஆதரித்து ஓட்டுப்போட்டவர்கள் குறைவாக இருக்கலாம். ஜனநாயகத்தின் கேடுகெட்ட நிலையை ஏதோ ஒரு வகையில் பேசிக்கொண்டிருக்கும் , ஆணித்தரமாக அடித்துப்பேசும் சீமான் தீர்வை இந்த கட்டமைப்பிற்குள் வைக்கிறார். மக்கள் வாழ்வியலைப்பேசி தீர்வை பொய்யாக வைக்கும் போது சிலர் மயங்கத்தானே செய்வர்.

ஆக சீமானிற்கு விழுந்த வாக்குகளில் சீமானின் இனவெறி சாதி வெறிப்பேச்சுகளுக்கு மீச்சிறு பங்கும் இருக்கிறது.” மற்ற எந்த விசயத்திலும் எப்படியோ போல்டா பேசுறாரு” என்பவர்களும் சரி, பொதுவாக தேர்தல் கட்சிகள் மீதான் அதிருப்தி ஓட்டுகள் சீமானுக்கு விழுந்ததிலும் சரி முக்கியமானது பிரபல தலைவராக சீமானை இந்த இடைத்தேர்தலில் மீடியாக்கள் முன்னிறுத்தியதுதான்.சீமானை ஆதரிப்பது போலத்தான்  ”என்ன தான் இருந்தாலும் சீனாவை எதிர்க்க மோடிதான் கரெக்ட்” என்று மோடியையும் பலர் ஆதரிக்கிறார்கள்.

சீமானை ஊதிப்பெருக்கி தமிழ்நாடு எதிர் பாஜக  என்ற கருத்தினை தகர்த்து ஏதோ திமுகவிற்கும்  சீமானுக்குமான பிரச்சினையாக திசை திருப்புவதில் பாசிச பாஜவுக்கே பெரும் பங்கு இருக்கிறது.அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவை  சீண்டவும், வாக்குகளை பிரிப்பதற்கும்  சீமானை பாஜக பயன்படுத்தும்.

திமுகவின் தவறுகள் இனி பூதாகரமாக்கப்படும், திமுகவின் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களில் எல்லாம் இனி சீமானை வைத்து பாசிச பாஜக விளையாடும். தமிழ்நாடு எதிர் பாஜக என்ற கருத்தை தமிழ்நாட்டின் அணையா நெருப்பை அணைக்க சீமான் என்ற தண்ணீர் தேவைப்படும் போது பீய்ச்சப்படும்.

வாலியுடன் சுக்ரீவன் சண்டையிடும் போது வாலியை மறைந்திருந்து கொன்றான் ராமன். மறைந்திருந்து கொல்வது ராமன்களின் வேலை. தூண்டிவிடுவோரின் செய்கைக்கு ஆடுவது சுக்ரீவனின் – சீமானின் – வேலை.

நிற்க,

இது ராமன்களின் மண் அல்ல; இது தமிழ்நாடு  ராமசாமிகளின் வள்ளலார்களின், வைகுந்தர்களின் சித்தர்களால் பண்பட்ட ஆரிய – பார்ப்பன – வேத எதிர்ப்பு மண்.

காத்திரு பகையே!

மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க