எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளை, திமுக அரசு ஒடுக்க நினைத்தால் தமிழக களத்தை பாஜகவுக்கு உகந்ததாக அமைத்துக் கொடுத்த ‘பெருமை’ அதிமுகவிற்கு அடுத்து திமுக-வையே வந்து சேரும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதும் ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்த அதிமுக படுதோல்வி அடைந்ததும், தனித்து போட்டியிட்டு பாஜக நான்காவது இடத்தை எட்டியதும் அனைவரும் அறிந்ததே.
அதிமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டிருப்பினும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் தமிழகத்தில் காலுன்றுவதற்காக களம் அமைத்து கொடுத்த வகையில் அதிமுகவுக்கு முக்கியப் பங்குண்டு.
காவி – கார்ப்பரேட் பாசிசம் தமிழகத்தில் உறுதிபடுத்துவதற்கான கருவடிவம் தான் பாஜக-வின் தற்போதைய வெற்றி என்பதை உணராமல் திமுக கூட்டணிக் கட்சிகளும், முற்போக்கு ஆதரவாளர்களும் பாஜக-வின் தோல்வியை கேலி- கிண்டலுடன் கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் பாஜக-வின் வளர்ச்சி குறித்து எவ்வித பரிசீலனையும் இன்றி உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி போதை தலைக்கேறிகொண்டாடுகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி மாணவி தற்கொலையை வைத்து மதவெறி அரசியல் நடத்த முயன்ற பாஜகவின் அவதூறு பிரச்சாரம் தமிழகத்தின் மதநல்லிணக்கத்தால் உடைபட்டது என்றும் பாஜக-வை கொங்கு நாட்டிலேயே மண்ணைக் கவ்வச் செய்தது தமிழகம் என்றும் தமிழகத்தை பாஜக-வால் ஏமாற்ற முடியாது என்றும் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம், பாசிச கொடூரத்தை – நயவஞ்சகத்தை சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர்.
பாஜக தனித்துப் போட்டியிட்டே 308 வார்டுகளை வென்றுள்ளது. கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாகப் பறித்துள்ளது. கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலை விட தமிழகத்தில் அதன் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. கணிசமாக ஓட்டு வங்கியை கையில் வைத்திருக்கும் பா.ம.க, சி.பி.எம்., சி.பி.ஐ, வி.சி.க. போன்ற கட்சிகளுக்கு இணையாக பாஜக வளர்ந்து வருகிறது என்பதை புறக்கணித்துவிட்டு வெறுமனே சில தோல்விகள், சில இடங்களில் ஒற்றை ஓட்டு பெற்றது, பெருவாரியாக டெபாசிட் இழந்தது ஆகியவற்றை மட்டும் கிண்டல் செய்துவிட்டு கடந்து செல்வது என்பது, நமக்கு நாமே சவக்குழியை வெட்டிக் கொள்வதற்குச் சமம்.
ஏனெனில் சாதிய ரீதியான முனைவாக்கத்தில் எவரும் எட்டமுடியாத இடத்தை தமிழகத்தில் அடைந்திருக்கிறது பாஜக. தெற்கே நாடார் சாதியினர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சாதியினரை சாதிய, மத வெறுப்பு அரசியலை ஊட்டி அணி சேர்க்கும் வேலையை அடிமட்டத்தில் செய்து கொண்டிருக்கிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
சாதி – மத வெறியை வளர்ப்பதன் மூலம் இருக்கும் அடித்தளத்தில் மக்களை முனைவாக்கம் செய்யும்போதே, ஆட்சி அதிகார பீடங்களைப் பயன்படுத்தி, ஆளும் கட்சி மற்றும் அதன் பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை வருவாய்துறை இலஞ்ச ஒழிப்புத் துறைகளை ஏவிவிட்டு, அச்சுறுத்தி பணிய வைப்பது; அரசு அதிகாரிகளை மிரட்டி பணிய வைத்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது; அதன் மூலம் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தவிடாமல் முடக்குவதன் மூலம் ஆளும் கட்சிக்கு –கூட்டணிக்கு- நெருக்கடி கொடுத்து சட்டப் பூர்வமாக அவர்களை காலி செய்வதையும் செவ்வனே செய்து வருகிறது.
சாதி – மத வெறிக் கலவரங்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி, 356-ஐ காட்டி மிரட்டுவது, தேவைப்பட்டால் ஆட்சியை கலைப்பது போன்றவைகளை சிறிதும் அசராமல் அரங்கேற்றி ஆட்சியதிகாரத்தில் பாசிசத்தை நிறுவ முயன்று வருகிறது.
திமுக உள்ளிட்ட கட்சிகளில் நடைபெறும் இலஞ்ச ஊழல் லாவண்யங்களைப் பயன்படுத்தி, தனது ஊடக மற்றும் ஒன்றிய அரசின் அதிகார நிறுவனங்களின் உதவியுடன், ஆளும் கூட்டணியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, அதன் மூலம் மக்களின் அங்கீகாரத்தை பெறுவதும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு கைவந்த கலை.
தமிழகத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளிலும் சாகா பயிற்சியின் மூலம் பணம் – பைக் போன்றவைகளை கொடுத்தும் மாணவர் – இளைஞர்களின் சிந்தனையில் பார்ப்பன மதவெறியை வளர்த்து அவர்களை கலவரத்திற்காக தயார்படுத்தி வருகின்றனர்.
சாதி – மதச் சடங்குகள், மூடநம்பிக்கைகளில் மூழ்கி போயுள்ள மக்களை ஓட்டுபோடும் ஜனநயகத்தை தவிர வேறு எந்த வகையிலும் ஜனநாயகத்தின் பரிமாணத்தை உணராத மக்களை விரைவில் ஓட்டு வங்கிகளாக மாற்றுவது பார்ப்பன பனியாக்களுக்கு எளிது என்பதை திமுகவும் இதர முற்போக்காளர்களும் உணர மறுத்தால், ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
இந்த பாசிஸ்டுகளை முறியடிக்கக் களத்தில் இறங்கி போராட மறுத்தால் – போராடும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க நினைத்தால் – கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியேறிய கதையாக தமிழக களத்தை பாஜகவுக்கு அமைத்துக் கொடுத்த பெருமை அதிமுகவிற்கு அடுத்து திமுக-வையே வந்து சேரும். இந்தத் தேர்தலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல், அடுத்த தேர்தலில் இரண்டாவது இடத்தை நிச்சயம் பிடிக்கும் என்பதை திமுகவினரும், அவர்களை ஆதரிக்கும் முற்போக்காளர்களும் சிந்திக்க மறுக்கின்றனர்.
மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதன் ஊடாகவே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிந்து களைய ஆளும் கட்சி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அக்கும்பல் முன்னெடுக்கும் கலவர சதித் திட்டங்களை அம்பலப்படுத்தி உடனடியாக கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனப் பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளை அங்கிகரித்து ஊக்கப்படுத்த வேண்டும்.பாசிசக் கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் போலீசு கிரிமினல் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
களத்தில், இவை எவற்றையும் செய்யாமல், வெறுமனே உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருந்தால், காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.