மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனை ஒட்டி புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை ஆளுநர் அமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
மோடி அரசின் காவி கார்ப்பரேட் பாசிச படையெடுப்பை தமிழகத்தின் மீது தொடுக்க உளவாளியாக செயல்படும் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்துள்ளார். அவர் அமைத்த குழு எப்படிப்பட்டதாக இருக்கும்?
இந்த தேடுதல் குழுவில் உள்ள மூவரைப் பற்றி பார்க்கலாம். இந்தக் குழுவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவாளர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மருதமுத்து, பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் அடிமையான அதிமுக கட்சியின் ஆதரவாளர்; முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர் என பல பேராசிரியர்களும் கூறுகின்றனர். இந்த மூவரும் தான் துணைவேந்தரின் தேடுதல் குழுவின் உறுப்பினர்கள்.
காவி, கொள்ளை, பாலியல் வக்கிரம் என்ற இணை பிரியாத கூட்டுக் கலவையின் தேர்வு எப்படி இருக்கும் என்பதை சாதாரண நபர்களே புரிந்து கொள்ளலாம்.
இது பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் நாகூர்கனி அவர்கள் கூறும்போது “பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஜனநாயக சக்திகள் இல்லை. பட்டியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்களின் பிரதிநிதித்துவம் இல்லை (குறிப்பு: சட்டப்படியே பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தேடுதல் குழுவில் இருக்க வேண்டும்). துணைவேந்தர் தேடுதல் குழு 136 விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை நடத்தி 10 விண்ணப்பங்களை மட்டும் தேர்வு செய்து நேர்முகத் தேர்விற்கு அழைத்துள்ளது. இந்தப் பத்து பேரில் ஜனநாயக சக்திகளோ பட்டியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்களோ ஒருவர் கூட இல்லை. இது ஒரு நவீன தீண்டாமை” என பதிவு செய்தார்.
மேலும், “கடந்த 15 வருடங்களில் தமிழகத்தில் உள்ள இருபத்திநான்கு மாநில பல்கலைக்கழகங்களில் ஒன்றில் கூட பட்டியல் பிரிவைச் சேர்ந்த துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதான் சமூகநீதியின் ஆட்சியா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
1 of 2
சட்டப்படி அனைவரும் சமம். உயர் பதவிகளிலும் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்பதெல்லாம் சட்டப்படி எழுதப்பட்டிருந்தாலும் எந்த ஆட்சி வந்தாலும் அவை வெறும் வெற்றுக் காகிதமாகவே நடைமுறையில் உள்ளது.
மேற்கண்ட பல்கலைக்கழக தேர்வுக் குழுவின் நடவடிக்கையும் இதைத்தான் காட்டுகிறது. இதற்கு முன்பு இங்கு துணைவேந்தராக இருந்த கிருஷ்ணன் ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான ABVP-யின் மாநாட்டை இதே மதுரையில் தொடங்கிவைத்து ஆதரவு தெரிவித்தவர்.
இன்று தெருவுக்குத் தெரு விநாயகர் சிலைகளை வைத்து மதக் கலவரத்தைத் தூண்ட ஆர்எஸ்.எஸ்., பிஜேபி கையாளும் அதே வழிமுறையை பல்கலைக்கழகத்திற்குள் கிருஷ்ணன் அனுமதித்தார். பல்வேறு ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பின் காரணமாக பின் வாங்கிக் கொண்டார்.
தற்போது அவருக்கு திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தின் துணைவேந்தராக பதவி உயர்வு வழங்கி சிறப்பித்துள்ளது பாசிச மோடி அரசு.
தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் சொல்லும் உண்மை என்ன? துணைவேந்தர் ஆவதற்கு காவி கருத்துக்களாலும், காவி செயல்பாடுகளாலும் அறிவிக்கப்படாத ஆர். எஸ். எஸ். உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.
சாந்திஸ்ரீ பண்டிட் “போராடிய விவசாயிகளை ஒட்டுண்ணிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள்” என்றார். மேலும், ஜே என் யூ வில் உரிமைக்காக போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நக்சல்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தினார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இப்படிப்பட்ட ஒரு துணை வேந்தர்தான்
ரோகித் வெமுலா என்ற ஆய்வு மாணவருக்கு அரசு வழங்கும் நிதியை நிறுத்தி பல்கலைக்கழக விடுதியை விட்டு வெளியேற்றி தற்கொலைக்குத் தூண்டினார். இது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் ஜனநாயக சக்திகள், இடதுசாரி சிந்தனையாளர்கள், பட்டியல் பிரிவினர், மாணவர்கள் என உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைவரின் குரல்வளைகளும் நெறிக்கப்படுகின்றன என்பதைத்தான்.