கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 1
கிறித்தவர்கள், முசுலீம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய நான்காந்தர குடிமக்களாக, உள்நாட்டு ஏதிலிகளாக மாற்றுவது; மனு நீதியின் படி ஆண்களை மகிழ்விப்பதற்காகவே படைக்கப்பட்ட பிறவிகளாக, பார்ப்பன ஆணாதிக்கத்திற்கு அடிமைச் சேவை செய்பவர்களாக பெண்களை நடத்துவது; விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை, தேவைகளை தேசத்திற்கு எதிரானதாகவும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை தேச நலனாகவும் முன்னிறுத்துவது; உழைக்கும் மக்களின் நலன்களைப் பேசக் கூடிய புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகளை அழித்தொழிப்பது; இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பன பாசிச அமைப்பு சொல்லும் ‘இந்துராஷ்டிரம்’. நாம் சொல்லும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
இத்தகைய இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிலைநாட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னேறிவருகிறது என்பதுதான் இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பேரபாயம். உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகள், பாசிசக் கொடுங்கோன்மைக்கான முன்மாதிரிகள் என்று நாம் சொல்லிவந்தோம். ஆனால், அவை பழைய செய்திகளாகிவிட்டன. இன்று கர்நாடகா, திரிபுரா, அசாம் என பல புதிய சோதனைச் சாலைகளையும் உண்டாக்கியிருக்கிறது சங்கப் பரிவார கும்பல்.
சமீபத்தில், கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம், தொடர்ந்து அம்மாநிலத்தில் கிறித்துவ வழிபாட்டுத்தலங்கள் காவி குண்டர்களால் தாக்கப்படுவது; அசாமில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அரசால், செப்டம்பர் மாதம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் ஏழை இசுலாமிய மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி 800 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைத்ததோடு, இருவரை சுட்டுக் கொன்றது; திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட பாசிச கொலைவெறி தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் பேரணியின் போது இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தீவைப்பு சம்பவங்கள் என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எல்லா இடங்களிலும் நிகழ்த்தும் வழமையான நிகழ்வுகளாகவோ, பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களாகவோ பார்க்க முடியாது. இவையாவும் இம்மாநிலங்களில் உள்ளூர வேர்விட்டிருக்கும் காவி பயங்கரவாதத்தின் வெளிப்படைத் தோற்றங்களே!
குஜராத், உத்தரப்பிரதேசம் போல கர்நாடகா, திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களும் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியிருக்கிறது என்று நாம் சொல்வதற்கான பொருள், இம்மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பன-இந்துமதவெறியின் செல்வாக்கின் கீழ் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.
படிக்க :
கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !
000
1993 முதல் 25 ஆண்டுகாலம் சி.பி.எம். கட்சியின் கோட்டையாக இருந்த திரிபுராவில் எவ்வாறு ஒரே தேர்தலில் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது? 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க, 2018-ல் 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2013-ல் 1.5 சதவீதமாக இருந்த வாக்குகள் 2018-ல் 42.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் திரிபுராவில், 222 இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 217 இடங்களில் பா.ஜ.க.வே வெற்றி பெற்றிருக்கிறது.
அசாமில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, 29.5 சதவீத வாக்குகளுடன் 2016-ல் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து 123 இடங்களில் 86-ல் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க மட்டும் 60 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களால் பா.ஜ.க தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 2021 தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 33.2 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 11 இடங்களை பா.ஜ.க இழந்திருந்தாலும், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே மேற்கண்ட வாக்கு சதவிகிதம் உறுதிசெய்கிறது.
தென்னிந்தியாவிலேயே பா.ஜ.க நேரடியாக ஆளும் மாநிலம் என்றால் அது கர்நாடகம்தான். இங்கு 2008 சட்டமன்றத் தேர்தலில், 33.6 சதவீத வாக்குகளுடன் 110 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களை இழந்து 104 இடங்களில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்கு சதவிகிதம் 36.2 ஆக அதிகரித்திருக்கிறது.
பற்றி எரியும் திரிபுரா
கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு அதிகரித்துள்ள வாக்கு சதவிகிதம் என்பது அம்மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு மக்கள் அடித்தளம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இந்த அடித்தளம் தேர்தலில் வெற்றி பெற்று உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அரசியல் சூழல், வரலாறு, மக்களின் பண்பாடு உள்ளிட்ட தனிச்சிறப்பான நிலைமைகளுக்கேற்ப பல ஆண்டுகள் மக்களிடம் வேலைசெய்து உருவாக்கிய இந்துத்துவ செல்வாக்கின் விளைவே தேர்தல் வெற்றி. சந்தர்ப்பவாத கூட்டணிகள், பிற கட்சியினரை மிரட்டிப் பணியவைப்பது, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கவர்ச்சிவாத பிரச்சாரங்கள் போன்றவையெல்லாம் இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்திக் கொண்டவை மட்டுமே.
சான்றாக, தமிழகத்தில் அடிமை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அவர்களது ஓட்டுகளையும் தனக்கு அறுவடை செய்துகொண்டாலும் நாகர்கோயில், கோயம்பத்தூர் (தெற்கு), மொடக்குறிச்சி, திருநெல்வேலி என கீழே தான் வேலைசெய்து செல்வாக்கு பெற்ற தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க.வால் வெற்றிபெற முடிந்தது. அ.தி.மு.க.வின் ஓட்டுகள் கூடுதலாக அவர்களுக்கு உதவியவை மட்டுமே.
எனவே “தமிழகத்தில் அ.தி.மு.க. இல்லாவிட்டால் பா.ஜ.க. ஒரு சீட்டு கூட வெற்றி பெற்றிருக்காது; பிற மாநிலங்களிலும் சந்தர்ப்பவாத கூட்டுகள், பொய் வாக்குறுதிகள், குதிரை பேரங்களை நடத்துவது போன்றவற்றின் மூலம் மட்டுமே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது, மற்றபடி அதற்கு செல்வாக்கு இல்லை” என்பது போன்ற கருத்துக்கள் எதார்த்தத்தை காண மறுப்பதும் பாசிஸ்டுகளைப் பற்றிய மிகவும் கொச்சையான புரிதலுமாகும்.
கர்நாடகா, திரிபுரா, அசாம் போன்ற மாநிலங்களை கவ்வியிருக்கும் இந்துராஷ்டிர அபாயத்தை புரிந்துகொள்ளவும் இந்தியாவை காவி-கார்ப்பரேட் பாசிசத்திடமிருந்து விடுவிக்கவும் விரும்புவோர் அனைவரும் ‘தகிடுதத்தங்கள் மூலம் மட்டுமே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது’ என்ற அப்பாவித்தனமான புரிதலையும் சட்டமன்ற-நாடாளுமன்ற தேர்தல்களில் ‘சாத்தியமான மாற்று’களை ஆதரிப்பதன் மூலமே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தோற்கடித்துவிடலாம் என ‘மேற்’பார்வை பார்ப்பதையும் விடுத்து ‘கீழே’ (மக்கள் மன்றத்தில்) நடக்கும் மாற்றங்களை கண் திறந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
000
கர்நாடகா: காவி பயங்கரவாதத்தின் தென்னிந்திய நுழைவாயில்!
இதுவரை இல்லாத வகையில், கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் மேல் பயங்கரவாத தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்கிறார்கள் என கிறித்தவர்களும் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என முசுலீம்களும் பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா ஆகிய சங்கப் பரிவார மதவெறி அமைப்புகளால் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
கடந்த நவம்பர் 30 – அன்று கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பேலூர் பகுதியில், நடைபெற்றுக் கொண்டிருந்த கிறித்துவ ஜெபக் கூட்டத்தை பாதியில் நிறுத்தி அங்கிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளார்கள். கோலார் மாவட்டம் சீனிவாசபுரத்திலும் சர்ச்சுக்குள் புகுந்து பைபிள் புத்தகங்களைப் தீயிட்டு எரித்துள்ளது காவி குண்டர்படை. கடந்த மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கிறித்துவ பள்ளிக்குள் நுழைந்து அவர்களின் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு தேவாலயத்திலும் வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கே கிறித்தவர்கள் அச்சமுறும் நிலைமைதான் உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், “நீங்கள் வழிபாடு நடத்தாதீர்கள். எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது” என்று வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ்.இன் அடியாள் படையாக நடந்துகொள்கிறது போலீசு.
உண்மை கண்டறியும் குழு ஒன்றின் அறிக்கையின் படி, கிறித்தவர்கள் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறும் இந்திய மாநிலங்களில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம்வரை நாடு முழுவதும் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட 305 மதவெறித்தாக்குதல்களில் 66 சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்திலும் 47 சத்தீஸ்கரிலும் 32 கர்நாடகத்திலும் நடைபெற்றிருக்கிறது.
முசுலீம் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுகிறது. தங்களது மத அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தாலேயே பலர் காவி குண்டர்களால் அநியாயமாக தாக்கப்படுகிறார்கள். பாகல்கோட் மாவட்டத்தில், தனியார் டியூசன் செண்டர் ஒன்றிற்கு குல்லா அணிந்து வந்த இரண்டு முசுலீம் மாணவர்கள் 15 பேர் கொண்ட மதவெறி கும்பலால் கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். முசுலீம்களின் கடைகளும் தாக்கப்படுகின்றன.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் வரிசையில், கர்நாடகாவிலும் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பா.ஜ.க. அரசு. இவையெல்லாம் கர்நாடகா இன்னொரு உத்தரப் பிரதேசமாக மாறி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்-ன் விளைநிலமான கர்நாடக பார்ப்பன கும்பல்
கர்நாடகாவில், ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு விதை துர்கவாகினி, பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, பசுப் பாதுகாப்புப் படை, பா.ஜ.க. என பல்வேறு பெயர்களில் கிளை பரப்பி விருட்சமாய் வளர்வதற்கான வளமான அடித்தளமாய் இருந்தவர்கள் தென் கர்நாடகாவின் மங்களூரு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்களே.
மகாராஷ்டிரத்தில் ஆர்.எ.ஸ்.எஸ். தோன்றுவதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள் என்றால், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கு காரணமானவர்கள் கொங்கனி பேசும் கவுட் சரஸ்வத் பார்ப்பனர்கள், சித்ரபூர் சரஸ்வத் பார்ப்பனர்கள், துளு பேசும் சிவாலி பார்ப்பனர்கள் மற்றும் கன்னடம் பேசும் ஹவ்யாக் பார்ப்பனர்களாவர். இவர்கள் பார்ப்பன மேலாதிக்கத்திலும், செழிப்பான வேத காலத்திலும் விருப்பம் கொண்டிருந்ததால் இயல்பாகவே இந்துராஷ்டிரத் திட்டம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் நீரோட்டத்தில் இரண்டறக் கலந்தனர். ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கு முன்பே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் மற்றும் அகில இந்திய இந்து மகா சபா ஆகியவற்றைக் கர்நாடகாவில் உருவாக்கியவர்களும் இவர்களே.
கிறித்தவ மிஷனரிகள் ஆங்கிலக் கல்வி என்ற பெயரில் மதமாற்றம் செய்கின்றன என்பதற்கு எதிராக பிரம்ம சமாஜ் உருவாக்கப்பட்டது. மதமாற்றம் என்பது முழு உண்மையல்ல. பார்ப்பனர்கள்கூட கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள். உண்மை என்னவென்றால், 1860-களில் ஆங்கில கிறித்துவ மிஷனரிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (பில்லவர்கள்) ஆங்கிலக் கல்விக் கொடுத்தன. இதனால் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிகளில் பார்ப்பனர்களுக்கு சமமாக தாழ்த்தப்பட்டவர்களும் பணியாற்றினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பார்ப்பன மேலாதிக்க வெறியின் விளைவாகவே கர்நாடகாவில் பிரம்ம சமாஜ் உருவாக்கப்பட்டது, “இந்துக்கள் கிறித்துவ மிஷனரிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது” என்று பிரச்சாரமும் செய்தது.
படிக்க :
மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
1925-ல் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடக பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களாயினர். கர்நாடாகவில் முதல் ஷாகா பெலகாவில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மங்களூருவில் உருவாக்கப்பட்டது. சரஸ்வத் பார்ப்பனர்களின் நிதி உதவியால் உருவாக்கப்பட்ட கனரா பள்ளிதான் ஆர்.எ.ஸ்.எஸ்-ன் அலுவலகமாக இருந்தது. இப்பள்ளியில் ஆங்கிலக் கல்வியோடு வேத கலாச்சாரமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
1970-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி நிறுவனமான “வித்யா பாரதி” தற்போது 2,000 பள்ளிகள்; 30 இலட்சம் மாணவர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், 1951-இல் ஷாகாக்கள் இருந்தாலும் ஜன சங்கம் தொடங்கப்பட்ட பிறகும் பரந்துபட்ட மக்களிடம் செல்வாக்கு இல்லாத, பார்ப்பனர்களின் அமைப்பாக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். இருந்தது.
பரந்த மக்கள் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் பார்ப்பனரல்லாத மக்களை சாதியைத் தாண்டி ‘இந்துக்களாக’ திரட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு இராமன் என்ற கதாநாயகனும் முசுலீம் என்ற வில்லனும் தேவைப்பட்டார்கள். இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் அமைப்பு வடிவங்களையும் கையிலெடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
(தொடரும்)

பாகம் – 2

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க