கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 2
நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமயமாக்குதல்
பார்ப்பனரல்லாதோரை ‘இந்து’ வளையத்திற்குள் கொண்டுவருவதற்காக நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனமயமாக்குவது என்ற உத்தியைக் கையாண்டது ஆர்.எஸ்.எஸ்.
தமிழகத்தில், கிராமப்புற காவல் தெய்வமான முனியப்பனை முனீஸ்வரனாக்கியது, மழை தெய்வமான மாரியம்மனை சக்தியின் வடிவமாக்கியது, குறிஞ்சி நில கடவுளான முருகனை ஷண்முகனாக்கி பார்ப்பனமயமாக்கியது போன்று கர்நாடக மக்களின் நாட்டார் தெய்வங்களையும் பார்ப்பனமயாக்கியது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல்.
கர்நாடகாவில், நாட்டார் தெய்வங்களின் வரலாறு வாய்வழிக் கதைகளாக ஆண்டுக்கொருமுறை நடைபெறும் திருவிழாவின் போது சொல்லப்படும். இத்திருவிழாவின் போது கோழிகள், விலங்குகள் பலியிடப்படுவது வழக்கமாக இருந்தது. திருவிழா நேரம் மட்டுமின்றி நாட்டார் தெய்வங்களின் வரலாற்றை வயல்களில் வேலை செய்யும் போதும் பெண்கள் பாடுவர்.
படிக்க :
♦ மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
♦ தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
1920-களில் கர்நாடக நிலவுடைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் வேலை தேடி பெரும்பகுதி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் 1974-ல் கொண்டுவரப்பட்ட நிலவுடைமைச் சீர்த்திருத்தச் சட்டங்களாலும் பெரும் பண்ணைகள் படிப்படியாக மறைந்து சிறு நிலவுடைமையாளர்கள் அதிகம் தோன்றினார்கள். அவர்களிடம் விவசாயம் செய்வதற்கு போதிய பண வசதி இல்லாததால் 1970-களுக்குப் பிறகு விவசாயம் நலிவடைந்ததோடு நாட்டார் தெய்வ வழிபாடும் மெல்ல குறையத் தொடங்கியது. இந்த காலத்தை பார்ப்பனக் கும்பல் பயன்படுத்திக் கொண்டது.
000
தெய்வ வழிபாடு (தெய்வ ஆராதனா) நடைபெற்ற இடங்களை தெய்வங்களின் உறைவிடம் (தெய்வ சனா) என்று சொல்லி கோயில் கட்டி பட்டா போட்டதோடு, அவற்றிற்கு பார்ப்பனர்களே பூசாரிகளாகவும் ஆயினர். கர்நாடக நாட்டார் தெய்வமான பூடா சிவன் விஷ்ணுவின் அவதாரமாக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒரு முறை நடந்த வழிபாடு தினமும் நடைபெற ஆரம்பித்தது. கோழிகள், விலங்குகள் பலியிடப்பட்டு விருந்து நடைபெறுவது நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் சிவனை வழிபட நினைத்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நந்தனை சிதம்பரம் தீட்சித பார்ப்பன கும்பல் கோயிலுக்குள்ளேயே எரித்து “நந்தனார்” ஆக்கியது போல், கோயிலுக்குள் நுழைந்த ‘குற்றத்திற்காக’ பார்ப்பனர்களால் கொலை செய்யப்பட்ட கோரக தான்யா என்ற பழங்குடியை தெய்வமாக்கி வழிபட்டனர் பழங்குடி மக்கள். இன்று கோரக தான்யாவை கோரகஜ்ஜா என்று சிவனின் மறு உருவமாக்கி பார்ப்பனியத்திற்குள் செரித்துள்ளத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
மொகவீரர் என்ற மீனவ மக்களின் தெய்வமான பொப்பாரியாவையும் பார்ப்பன கும்பல் விட்டுவைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு முன் பொப்பாரியாவை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பொப்பாரியா தெய்வத்தை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனனின் மகன் பாப்ருவாகனனின் மறு அவதாரமாக்கி பார்ப்பனியத்திற்குள் வலைத்துப் போட்டுவிட்டார்கள். இதற்கேற்ப பொப்பாரியா அர்ஜூனனுக்கும் கேரள அரசி பிரமிளாவுக்கும் பிறந்தவன் என்ற திரைக்கதை, வசனங்களையும் உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.
இவ்வாறு நாட்டார் தெய்வங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டாலும் பார்ப்பனக் கடவுள்களுக்குரிய வேத அல்லது பார்ப்பன சடங்குகளின்படி வழிபாடு நடத்தப்படாமல் தீண்டாமையுடன்தான் நடத்தப்படுகின்றன என்பது தனிக்கதை.
‘பசுப் பாதுகாப்பு படை’ எனும் பேரில் பாசிச படை
1952-இல் ஜன சங்கம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் நடவடிக்கையாக பசு பாதுகாப்பைக் கையிலெடுத்தது ஆர்.எஸ்.எஸ். உடுப்பியில் 1952 ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியை “பசுக் கொலை எதிர்ப்பு நாளாக” அறிவித்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் “தேசிய பசு வாரம்” என்ற ஒன்றை உருவாக்கி பரப்பியது ஆர்.எஸ்.எஸ். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, துர்கா வாகினி, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்க பரிவார அமைப்புகள் “கிராமங்கள் தோறும் பசுப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தன. அதே போல் தட்சன கன்னடா எனும் தென் பகுதியில் பசுப் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
‘பசுவைக் கொல்வதற்கு எதிராக’ என்ற பெயரில் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. “வேத காலத்திலிருந்து ஒரு மனிதன் இன்னொருவனைக் கொன்றிருக்கிறான். ஒருபோதும் பசுவைக் கொன்றதில்லை. நாம் ஒருவரைக் கட்டாயம் கொல்லலாம். நமது சொந்த சகோதரனையும் கொல்லலாம். ஆனால் நாம் பசுவை மட்டும் கொல்லக்கூடாது” என்று மறைமுகமாக முசுலீம்களுக்கு எதிராக கொலைவெறியூட்டப்பட்டது.
இவைகளுக்கு பின்னர், ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டவாறே உ.பி-யில் நடப்பது போல் முசுலீம்கள் மீதான கும்பல் தாக்குதல்கள் அரங்கேறத் தொடங்கின. 1950-களில், உடுப்பி மாவட்டத்தில் ஹஜ்ஜபா, ஹாசனப்பா என்ற இரு முசுலீம்கள் பசுவைக் கடத்தினார்கள் என்று பொது இடத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும், அந்நியர்கள் என்றும் ‘இந்தியாவிற்கு பழக்கமில்லாத’ மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றும் முசுலீம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். உருவாவதற்கு முன்பிருந்தே கர்நாடகாவில் முசுலீம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றிருக்கின்றன. 1933-இல் இந்து மகா சபா மாநாட்டில் சிறப்புப் பேச்சாளரான ஆ.ஜி.பிடே, “முசுலீம்கள் தேச விரோதிகள், முசுலீம்களின் கிலாபத் இயக்கம் தேச விரோத இயக்கம்” என்று பேசியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பிறகு கேசரி இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1933-இல் தொடங்கி இன்று வரை முசுலீம்களை ‘தேச விரோதிகள்’ என்று சித்தரிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியும் கலவர யாத்திரைகளும்
நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமயமாக்கியதோடு தன்னுடைய பார்ப்பனப் பண்பாட்டை – விநாயகர் சதுர்த்தியை – தேசியமயமாக்குவதன் மூலமும் பார்ப்பனரல்லாத மக்களிடம் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டது ஆர்.எ.ஸ்.எஸ். மகாராஷ்டிராவில் ‘இந்துக்களை’ இந்துத்துவமயப்படுத்த விநாயகர் வழிபாட்டை திலகர் கையிலெடுத்தார். கர்நாடாகவிலும் விநாயகர் வழிபாட்டைக் கையிலெடுக்கவும் அதன் மூலம் கலவர ஊர்வலங்களை நடத்தவும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைத் தூண்டியவர் கோல்வால்கர்.
1960-களுக்கு முன்பு வரை கர்நாடகாவில் விநாயகர் வழிபாடே இல்லை. 1960-களில்தான் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தப்பட்டது. இதற்கு முன்பு மருத்துவரான டோன்ஸ் மாதவா ஆனந்த் பாயால் தொடங்கப்பட்ட கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியிலும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான சாந்தி நிகேதன் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விநாயகர் உருவச்சிலை இருந்தது. தொடக்கத்தில் விநாயகர் வழிபாட்டை செய்தவர்கள் கவுட் சரஸ்வத் பார்ப்பனர்களே. இதர ‘இந்து’க்களான சூத்திரர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டதில்லை. விநாயகர் சதுர்த்தியின் 25-வது ஆண்டு விழாவின் போது, கர்நாடகாவின் அனைத்தரப்பு மக்களையும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குள் ஈர்த்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.
கர்நாடகாவில் மதவெறியை மூட்டிய ‘இராம ஜென்ம பூமி’
விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து ஆர்.எஸ்.எஸ்-க்கு கர்நாடகாவில் மிகப் பரந்த அளவில் மக்கள் அடித்தளத்தை உருவாக்கியது இராம ஜென்ம பூமி இயக்கம்தான். 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அத்வானியின் இரத யாத்திரையும் இராம ஜென்ம பூமி இயக்கமும் இராமனை ‘இந்து இந்தியா’வின் கதாநாயகனாக்கியது என்றால் மிகையல்ல. இராமஜென்ம பூமி இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக கர்நாடகாவில் “ஸ்ரீ ராம் ஜென்ம பூமி முக்தி யக்ன சமிதி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். 1992 ஆம் ஆண்டு இராம ஜென்ம பூமியின் கடைசிக் காட்சியான பாபர் மசூதி இடிக்கும் வரை தனது முழு பலத்துடன் தீவிரமாக மக்கள் மத்தியில் செயல்பட்டது.
இந்தியா முழுவதும் நடந்தது போல் கர்நாடகாவிலும் பாபர் மசூதியிருந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்டுவதற்காக வீட்டுக்கு வீடு செங்கல் வழங்க சொல்லி ‘கர சேவை’ இயக்கத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல். அவ்வாறு செங்கல் பெறும்போது ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூசைகள் நடத்திய பிறகே செங்கல் பெறப்பட்டது. இவ்வாறு பூசை நடத்தி செங்கலைப் பெறுவது என்பது உளவியல் ரீதியாக மக்களை இந்துத்துவத்திற்கு வென்றெடுப்பதற்கான நடவடிக்கையாக அமைந்தது.
இராம ஜென்ம பூமி இயக்கம் தொடங்கப்பட்ட அதே காலத்தில்தான் இராமாயணமும் மகாபாரதமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் இராமன் யார் என்று அறியா மக்களுக்கும் அவன் தெய்வீக அவதாரமாக, இந்துக்களின் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டான். இராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு முன்பு வரை தென் கடற்கரை பகுதியான மங்களூருவில் மட்டுமே இருந்த ஆர்.எஸ்.எஸ். அதன் பிறகு பெங்களூருவிலும் பரவத் தொடங்கியது.
‘லவ் ஜிகாத்’ எனும் நச்சுப் பிரச்சாரம்
இந்துக்களின் மத்தியின் முசுலீம் எதிர்ப்புணர்வை உருவாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். கையிலெடுத்த மற்றொரு நச்சுப் பிரச்சாரம்தான் ‘லவ் ஜிகாத்’. கடந்த 2005-லிருந்துதான் லவ் ஜிகாத் என்ற சொல்வழக்கு கர்நாடகாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முசுலீம் ஆண்கள் இந்துப் பெண்களைக் கவர்ந்து (ல்வ் ஜிகாத் செய்து) மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் சங்கிகள் வெறியூட்டினர்.
2008 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது ஊற்றிய பெட்ரோலுக்கு தீ வைத்த கதையாக அமைந்தது. ‘லவ் ஜிகாத் கர்நாடகாவின் பற்றியெரியும் பிரச்சனையாகியது. 2009, 2012 ஆம் ஆண்டுகளில், ‘லவ் ஜிகாத்திற்கு எதிராக’ என்ற பெயரில் பப்களில் இருந்த பெண்களின் உடைகளைக் கிழித்து கடுமையாகத் தாக்கியது காவி குண்டர் படை. 2009-இல், இந்து பெண் ஒருவர் முசுலீம் இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ‘லவ் ஜிகாத்’ பற்றி விசாரிப்பதற்கு சி.பி.சி.ஜ.டி. விசாரணையே நடத்தப்பட்டது என்பதுதான் கொடுமையின் உச்சம்.
1998 ஆம் ஆண்டு சுரத்கால் என்ற பகுதியில் முசுலீம் இளைஞர் இந்துப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக கலவரம் நடந்தது. அதே போல், அனிதா என்ற இந்து பெண் முசுலீம் இளைஞரை திருமணம் செய்து கொண்டதற்காக, அவர்களை கார் விபத்தில் கொலை செய்தான் சங்க பரிவார கும்பலைச் சேர்ந்த மோகன்.
***
படிக்க :
♦ கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
♦ கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றுவதற்கு முன்புவரை முசுலீம்களும் இதர மதத்தினரும் நட்புறவாகத்தான் இருந்தனர். கறிக்கடைக் காதருக்கும் மீனவ மொகவீர சமூகத்தினருக்குமான நட்புறவை காதல் கதையாக கொண்டாடிய சுவைமிக்க வரலாறு கர்நாடகாவிற்கு உண்டு. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய பிறகோ மதத்தின் பெயரால் அந்த வரலாற்று ரீதியான நட்புறவு இருகூறாக பிளக்கப்பட்டது. முசுலீம்களை அந்நியர்களாக சித்தரிக்கும் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாக வெற்றிபெற்றது.
1968 ஆம் ஆண்டு சுரத்கல்லில் நடைபெற்ற கலவரம்தான் அதிகார மாற்றத்திற்கு (1947- போலி சுதந்திரம்) பிறகு கர்நாடகாவில் நடைபெற்ற முதல் இந்து-முசுலீம் கலவரமாகும். இதைத் தொடர்ந்து, மங்களூர் துறைமுகத்தில் மீனவர்களிடையே கலவரம் வெடித்தது. முசுலீம் வெறுப்புணர்வும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களான சரஸ்வத் பார்ப்பனர்கள் மீன்பிடித் தொழிலில் இறங்கியதுமே இக்கலவரத்திற்கு அடிப்படை. இதில் 6 முசுலீம்களும் 2 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மொகவீர சமூகத்தினர் பார்ப்பனர்களின் அடியாட்களாக செயல்பட்டனர்.
1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு கர்நாடகத்தில் கலவரங்கள் தொடர்கதையாயின. 2006 ஆம் ஆண்டு முசுலீம்களுக்கு எதிரான கலவரமும் 2008 ஆம் ஆண்டு கிறித்தவர்களுக்கு எதிரான கலவரமும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கர்நாடக மக்களை காவிமயமாக்குவதில் பாசிஸ்ட்டுகள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பதையே கர்நாடகாவில் நடைபெற்ற ஒவ்வொரு மதவெறிக் கலவரங்களும் நமக்குக் காட்டுகின்றன. தென்னிந்தியாவில் ‘இந்துராஷ்டிரத்தின்’ முதல் களமாக கர்நாடகா மாறியிருக்கிறது.
(தொடரும்…)

அப்பு