Tuesday, October 8, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்

கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்

-

1998-ம் ஆண்டு நவம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கல்வி காவிமயமாகும் அபாயத்தைப் பற்றிய கட்டுரை, இன்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி அரசு மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் காலத்தில் இன்னும் பொருத்தமாகிறது. கல்வியில் காவிமயம் எப்படி நடக்கிறது, அதை தடுத்து நிறுத்துவது எப்படி, சனநாயகபூர்வமான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை சுருக்கமாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

ரசு அதிகாரத்தின் மூலம், தனது இந்துத்துவ நோக்கங்களுக்கு ஏற்ப இந்தியக் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு, இந்துமதவெறியர்கள் செய்துவரும் சதிகள் அனைத்தும் நாடெங்கிலும் அம்பலப்பட்டுப் போய்விட்டன. தில்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பா.ஜ.க வின் கூட்டணிக்கட்சிகளான அகாலிதளம், தெலுங்கு தேசம் உள்ளிட்டு பிற எதிர்க் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு; கல்வியாளர்கள், முற்போக்கு சனநாயக சக்திகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு இவை காரணமாக, இந்து மதவெறியர்கள், கல்வியைப் பார்ப்பன- இந்து மதமயமாக்கும் தங்களது முயற்சியில் தற்காலிகமாகப் பின் வாங்கியுள்ளனர்.

ஸ்மிரிதி இரானி - கல்வி காவிமயமாதல்
அரைகுறையாகக் கிடக்கும் இந்தியக் கல்வி முறையை, முழுமையாகப் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும், முழுமையாக மக்கள் விரோத அடிப்படைகளைக் கொண்டதாகவும் மாற்றியமைப்பதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டு, இன்று வரை நடைமுறையில் இருந்துவரும் இந்தியக் கல்வி முறையும்கூட, முழுமையாக  விஞ்ஞானப் பூர்வமானதோ, முழுமையாக சனநாயகப் பூர்வமானதோ அன்று; இந்து மத மூட நம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனம் போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களும் நிறைந்தது தான்; ஆங்கில மோகம், ஏகாதிபத்திய அடிமைத்தனம் போன்ற மக்கள் விரோத, நாட்டு நலனுக்கு எதிரான சிந்தனைகளை மாணவர்களிடம் விதைக்கக் கூடியதுதான்; இப்படி அரைகுறையாகக் கிடக்கும் இந்தியக் கல்வி முறையை, முழுமையாகப் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும், முழுமையாக மக்கள் விரோத அடிப்படைகளைக் கொண்டதாகவும் மாற்றியமைப்பதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இதற்காகவே, இந்துமதவெறியர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் ஆர்.எஸ்.எஸ் சார்பான கல்வியாளர்கள், இராமகிருஷ்ணா மடம், சின்மயா மடம் போன்ற மடத் தலைவர்களைக் கூட்டி, கல்வி மாநாடொன்றை நடத்தி, இந்தியக் கல்வி முறையை இந்துமதமயமாக்கும் திட்டமொன்றை தயாரித்தனர்; இந்தியக் கல்வியை, “இந்திய மயப்படுத்துவது, தேசிய மயப்படுத்துவது, ஆன்மீக மயப்படுத்துவது” என்ற பெயரில், அத்திட்டத்தை நாடெங்கும் சுற்றுக்கும் விட்டனர். தில்லியில் நடந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், இத்திட்டத்தை அதிகாரபூர்வமற்ற முறையில் விவாதிக்கவும் முயற்சி செய்தனர்.

  • நமது நாட்டின் உச்சநீதி மன்றம், “இந்துத்துவா என்பது மதமல்ல; அது வாழ்க்கை முறை” என வரையறுத்துள்ளது. எனவே, இந்தியாவின் விலை மதிப்பற்ற மரபுச் செல்வங்களான வேதங்களையும், உபநிடதங்களையும், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும், தொழிற் சார்ந்த பயிற்சிக் கல்வியிலும் பாடமாக வைக்க வேண்டும்.
  • மூன்றாம் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பு முடிய சமஸ்கிருதத்தை கட்டாய மொழிப் பாடமாக்க வேண்டும். ஏனென்றால், சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், தேசத்தின் கலாச்சார ஜக்கியத்திற்கும், பழமையான அறிவுச்செல்வத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
  • இந்தியாவின் நான்கு திசைகளிலும் சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட வேண்டும்.
  • பாடத் திட்டத்தில், இந்தியக் கலாச்சாரம் குறிப்பிட்ட அளவிற்கு புகுத்தப்பட வேண்டும்.
  • ஆரம்பக் கல்வி முடிந்த பிறகு, மாணவிகளுக்கு வீட்டை நிர்வகிப்பது குறித்துப் போதிக்க வேண்டும்.

இவையெல்லாம் இந்தியக் கல்வி முறையை மாற்றியமைக்க, பா.ஜ.க அரசு வகுத்துள்ள வழிமுறைகள். இந்தியாவின் செல்வ உற்பத்தி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை உருவாக்கியதில் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களின், அவர்களது மொழிகளின் வரலாற்றுப் பாத்திரத்தையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, பல்வேறு மதங்களின் பங்கையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு, இந்தியாவெங்கும் வருண- சாதி ஒடுக்குமுறையை நிறுவனமாக்கிய, சூத்திர – தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பாலான உழைக்கும் மக்கள் கல்வியறிவு பெறுவதை மறுக்கும் ஆரிய பார்ப்பனர்களின் வேதங்களையும், உபநிடதங்களையும், சமஸ்கிருதத்தையும் பயிலச் சொல்வது நாட்டை மீண்டும் அந்த இருண்ட காலத்திற்குள் தள்ளிவிடும் முயற்சிதானே? இதுவா இந்திய மயமாக்கம்? இல்லை. இது பார்ப்பனமயமாக்கம்!

ஆர்.எஸ்.எஸ் - கல்வி காவிமயம்
விஞ்ஞானத்திற்குப் பக்கத்தில், பார்ப்பன புளுகு மூட்டைகளையும், மூட நம்பிக்கைகளையும் பயில்வது எத்தகைய மூடத்தனம்

விஞ்ஞானத்திற்குப் பக்கத்தில், பார்ப்பன புளுகு மூட்டைகளையும், மூட நம்பிக்கைகளையும் பயில்வது எத்தகைய மூடத்தனம் என்று சிந்தித்துப் பாருங்கள்? சமத்துவம், சம உரிமைக்காக இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, சாதிய ஒடுக்குமுறை சரியானதுதான் எனக் கூறும் பார்ப்பனர்களின் வேதங்களைப் படிப்பது அருவெறுக்கத் தக்கதாகாதா? “சமஸ்கிருதம்தான் தேவ பாஷை” என்று பார்ப்பனர்களின் ஆதிக்கத் திமிரை, இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கையைக் கட்டிக் கொண்டு படிப்பதற்கு, நாமென்ன சூடு- சொரணை அற்றவர்களா? தாய்மொழிப் பற்று இல்லாதவர்களா?

கல்வி, மாநிலங்களுக்கும் உரிமையுள்ள பொதுப்பட்டியலில் இருப்பதால் தான், இந்துமதவெறியர்கள், அவர்களின் திட்டப்படி, இந்தியாவெங்குமே கல்வி கொள்கையில், பாடத் திட்டங்களில் ஒரே மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. ஆனாலும், கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் வாய்ப்பையே பயன்படுத்திக் கொண்டு, இந்து மதவெறியர்கள் தாங்கள் ஆளும் மாநிலங்களில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அம்மாநில பாடத் திட்டங்களில் இந்துமத ஆதிக்கக் கருத்துக்களைப் புகுத்தவும் தவறுவதில்லை.

1991-ம் ஆண்டில், உ.பி. மாநிலத்தின் ஆட்சியதிகாரத்தை இந்துமதவெறியர்கள் முதன் முறையாகப் பிடித்தபொழுதே அம்மாநிலக் கல்விக் கூடங்களைப் பார்ப்பன மயமாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர். பாபர் மசூதியை இடிப்பதற்காக, இந்துமதவெறியர்கள் நடத்திய ராம ஜென்ம பூமி இயக்கத்தின் பொழுது, உ.பி. போலிசு நடத்திய தாக்குதலில் இறந்து போனதாக இரண்டு கரசேவகர்கள் படத்தைப்போட்டு, ‘தேசிய’ நாயகன் ராமனுக்காக உயிரைக் கொடுத்த இவர்கள்தான் தேசபக்தர்கள் எனப் பள்ளிப் பாடங்களின் மூலம், முசுலீம் எதிர்ப்பு தான் தேசபக்தி என்ற விஷத்தை மாணவர்கள் மனத்தில் விதைத்தார், கல்யாண்சிங்.

கணிதப் பாடத்தில் வேதக்கணக்குகளைப் புகுத்திய கல்யாண் சிங், இந்த முறை மூன்றாம் வகுப்பு தொடங்கி சமஸ்கிருத மொழியைக் கட்டாயப் பாடமாக்கியுள்ளார். வகுப்பறையில், “உள்ளேன் ஐயா” எனக் கூறுவதற்குப் பதிலாக “வந்தே மாதரம்” எனக் கூற வேண்டும்; ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சரசுவதி வாழ்த்துப்பாட வேண்டும். மதிய உணவுக்கு முன் போஜன மந்திரங்களைக் கூற வேண்டும் என இந்தப் பட்டியல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

முரளி மனோகர் ஜோஷி - கல்வி காவிமயம்
அப்போதைய மனிவளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி – வரலாற்றை மாற்றி எழுதுகிறார்.

இராசஸ்தானிலோ, இன்னும் ஒரு படிமேலே போய், வெளிப்படையாகவே இந்துமதவெறியை மாணவர்களின் மனத்தில் விதைப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ் , தலைவர்கள் எழுதிய கட்டுரைகளையும், கவிதைகளையும் பாடங்களாகப் புகுத்தியுள்ளனர்.

  • ஒன்பதாம் வகுப்பிற்கான இந்தி மொழி பாடத் திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர சிங், “பழைமை வாய்ந்த இந்திய விஞ்ஞானம் – இந்திய விஞ்ஞானி” களைப் பற்றியும், ஆர்.எஸ்.எஸ். இன் துணைத் தலைவர் கே.சி. சுதர்சன், “மரபு சார்ந்த இந்திய அறிவு” பற்றியும் எழுதியுள்ளனர்.
  • பதினோராம் வகுப்பிற்கான”அரசியல் சிந்தனை” பாடத் திட்டத்தில் பா.ஜ.க வின் முன்னாள் அவதாரமான ஜன சங்கத்தைத் தோற்றுவித்த தீன் தயாள் உபாத்யாய் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
  • ஆர்.எஸ்.எஸ். இன் அரசியல் ஏடான பஞ்சஜன்யா ஆசிரியர் தருண் விஜய், சுதேசி ஜாக்ரான் மஞ்ச்- ஜச் சேர்ந்த ஜலம் சிங் ராலட் எழுதிய கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்.ஜச் சேர்ந்த கஜேந்திர சிங் சோலங்கி எழுதிய கவிதை – இவையனைத்தும் இராசஸ்தான் மாநில பள்ளி பாடப் புத்தகங்களில் புகுத்தப்பட்டுள்ளன.
  • பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பாட நூலில், ராஜபுதன சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களை, ஜாட் சாதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்த்துப் போராடியதைக் கூறும் பாடம், பா.ஜ.க. வின் இந்து ஒற்றுமை மோசடித்தனத்தை அம்பலப்படுத்துவதால், அப்பாடத்தை நீக்கிவிட்டனர்.
  • இராசஸ்தான் மாநிலப் பள்ளிக் கல்வி குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த கோமேஷ்வர் தயாள் மாதூர்; அம்மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கான பாடத் திட்டங்களை வகுக்கும் அரசு அமைப்பின் தலைவராக இருக்கும் மதுகர் ஷியாம் சதுர்வேதி ஆர்.எஸ்.எஸ் க்கு மிகவும் நெருக்கமானவர்.
  • தில்லி யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ் க்கு நெருக்கமான 200 பேர் விரிவுரையாளர்களாகவும் 7 பேர் கல்லூரி முதல்வர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தில்லியிலுள்ள சிவாஜி கல்லூரி, மோதிலால் நேரு கல்லூரி, தீன்தயாள் உபாத்யாய் கல்லூரி, சத்யவதி ஆண், பெண் கல்லூரி, உள்ளிட்ட எட்டு கல்லூரிகளில் பா.ஜ.க சார்பு முதல்வர்களை நியமிக்கவும் பா.ஜ.க.அரசு முயன்று கொண்டுள்ளது.

கல்வித் துறையில் மட்டுமல்லாது, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், லலித்கலா அகாடமி, நவீன ஓவிய தேசியக் கூடம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம் போன்றவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். ஐச் சேர்ந்த இந்துமதவெறியர்கள், சட்டம் –மரபுகளை மீறி, தலைவர்களாக உறுப்பினர்களாக பா.ஜ.க அரசால் நியமிக்கப்படுகின்றனர். இந்துமதவெறி பாசிஸ்டுகளின் இந்த ஊடுருவலை எதிர்த்தால், “காங்கிரசு கட்சி இதுபோல் செய்யவில்லையா? கம்யூனிஸ்டு அனுதாபிகள் அரசுப் பதவிகளில் உட்காரவில்லையா? அது போல்தான் எங்கள் கட்சிக்காரர்களை நியமிக்கிறோம்” என நியாயப்படுத்தி விடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்
அரசு பதவிகளில் உட்காரும் இந்துமதவெறியர்கள், மற்ற கட்சிக்காரர்களைப் போல, இப்பதவிகளின் மூலம் கிடைக்கும் வசதி – வாய்ப்புகளைப் பொறுக்கித் தின்று விடுவதோடு மட்டும் நின்றுவிடமாட்டார்கள்.

இவை போன்ற அரசு பதவிகளில் உட்காரும் இந்துமதவெறியர்கள், மற்ற கட்சிக்காரர்களைப் போல, இப்பதவிகளின் மூலம் கிடைக்கும் வசதி – வாய்ப்புகளைப் பொறுக்கித் தின்று விடுவதோடு மட்டும் நின்றுவிடமாட்டார்கள்.

“புகழ்மிக்க பண்டைய பாரதத்தின் நாகரீகம் பண்பாட்டின் பிதா மகன்கள் ஆரியர்கள் – பார்ப்பனர்கள்; ஓங்கி வளர்ந்திருந்த பாரதம், மதவெறி பிடித்த கொலைகாரர்களான இசுலாமியர்களின் ஆக்கிரமிப்பினால் வீழ்ச்சியைச் சந்தித்தது; இந்திய தேசத்துக்கு எதிரிகள் ஏகாதிபத்திய காலனியவாதிகள் அல்ல; முசுலீம்கள்தான்” எனக் கல்வி தொடங்கி வரலாறு முடிய அனைத்தையும், தங்களின் இந்து ராஷ்டிரக் கனவிற்காக திரித்து எழுதுவார்கள்.

இப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்ட கல்வியைக் கற்று வரும் ஒர் இந்து மாணவன், இந்த நாட்டின் முசுலீம் மக்களைப் பற்றி என்ன நினைப்பான்? அண்டை நாடான பாகிஸ்தானைப் பற்றி என்ன கருதுவான்? அவன் எந்தக் கட்சியினுடைய ஓட்டு வங்கியாக இருப்பான்?

கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், எதிர்க் கட்சிகள் காட்டிய சடங்குத்தனமான எதிர்ப்பையடுத்து, பா.ஜ.க. பின் வாங்கிக் கொண்டதை நாம் முழு வெற்றியாகக் கருத முடியாது. பா.ஜ.க தனது இந்துத்துவக் கல்வித் திட்டத்தை நாடு முழுவதும் திணிப்பதற்கு மீண்டும் முயலும் என்பது ஒருபுறமிருக்க, கல்வியைத் தனியார் மயமாக்கியிருப்பதன் மூலம் புற்றீசல் போல் முளைத்திருக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மற்றும் மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கேந்திரியா வித்யாலயாக்கள் மாநிலக் கல்வி – பாடத் திட்டத்தைப் பின்பற்றுவதில்லை. மாறாக, இவையனைத்துமே மைய பாடத் திட்டத்தை (CBSE)தான் பின்பற்றுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க, தான் ஆளாத மாநிலங்களில் கூட,புறக்கடை வழியாக இந்துத்துவக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரலாம். மாநிலங்களுக்கும் உரிமையுள்ள பொதுப் பட்டியலில் இருந்து, கல்வியை மையப் பட்டியலுக்கு மாற்றிக் கொள்வதன் மூலமும் கூட, இந்துமதவெறியர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலலாம்.

மேலும், பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும்,மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன. சுதந்திரமான, சனநாயகப் பூர்வமான,விஞ்ஞான பூர்வமான கல்வியை விரும்பும் எவரும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இரண்டு வகையான மக்கள் விரோத, நாட்டின் நலனுக்கு எதிரான கல்வித் திட்டம் –கொள்கைகளுக்கு மாற்றாக, இந்திய நாட்டின் மாணவர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியிலேயே ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை பெறுவதை உத்தரவாதப்படுத்தும், கல்வியுடன் வேலை வாய்ப்பை இணைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஜனநாயகக் கல்விக்காகப் போராட முன் வருவதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வாகும்.

– புதிய ஜனநாயகம், நவம்பர் 98

  1. Why no comments allowed for ‘பார்ப்பான் வைத்ததுதான் சட்டம்!’?

    When your articles are filled with hatred and jealousy of Brahmins, you lose the the morality to specify this about comments ‘எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும்.’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க