ரவுடி சாமியார் ஆதித்யநாத், கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் ஆகியோரின் நூல்கள் உ.பியின் புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் சேர்ப்பு !
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேச மாநில கமிட்டி, அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் மற்றும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் எழுதிய நூல்களை பல்கலைக் கழகங்களில் தத்துவப் பாடத்தில் சேர்க்க பரிந்துரைத்துள்ளது.
உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் இவர்களின் நூல்களை ஏற்கனவே பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தில் ஆதித்யநாத் எழுதிய நூலும் ராம்தேவ் எழுதிய நூலும் இளநிலை தத்துவம் இரண்டாவது செமஸ்டரில் பாடத்திட்டங்களாக உள்ளன.
படிக்க :
♦ லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்
♦ வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அனத் தலைவராகிறார் !
இந்த நிலையில், மேற்கண்ட இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க “அனைத்து உ.பி. மாநில பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பொதுவான குறைந்தபட்ச பாடத்திட்டத்தை” உருவாக்க மாநில அரசு அமைத்த ஒரு குழுவால் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், மனிதநேயம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் இந்தக் குழு பாடத்திட்டங்களை பரிந்துரைத்துள்ளது.
உ.பி. அரசாங்கத்தின் வழிநடத்தல் குழுவில், உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மோனிகா எஸ்.கார்க் தலைவராக உள்ளார்; லக்னோ பல்கலைக்கழக இயற்பியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் பூனம் தாண்டன்; பேராசிரியர் ஹரே கிருஷ்ணா, புள்ளிவிவரத் துறை, சி.சி.எஸ் பல்கலைக்கழகம், மீரட் போன்ற அறிஞர்கள் ஊரறிந்த ‘தத்துவஞானிகளின்’ பாடங்களை பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். பெயர் சொல்ல விரும்பாத ஒரு உறுப்பினர், மேற்கண்ட தத்துவஞானிகளின் நூல்கள் ‘உயர்ந்த இலக்கிய’ தரத்துக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக “த பிரிண்ட்” இணையதளத்திடம் கூறியுள்ளார்.
“அனைத்து புத்தகங்களும் அவற்றின் உயர்ந்த கல்வித் தரம் மற்றும் இலக்கிய மதிப்பு காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டன” என்ற பெயர் சொல்ல உறுப்பினரின் கருத்தை எதிரொலிக்கிறார் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக ஆய்வு வாரியத்தின் கன்வீனர் டி.என்.சிங்.
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் மிக உயர்ந்த கல்வி மதிப்பைக் கொண்டுள்ளன எனவும் குறிப்பாக ஆதித்யநாத் ஜி எழுதிய புத்தகம்; இது யோகாவின் நடைமுறை அம்சத்தை கற்பிக்கிறது எனவும் சிங் கூறுகிறார்.
“நமது பண்டைய அறிவியலான யோகாவைப் பற்றி அறிய இதுபோன்ற இலக்கியங்கள் நமக்குத் தேவை. இதேபோல், ராம்தேவின் புத்தகமும் தத்துவ மாணவர்களுக்கு கிடைத்த ஒரு நல்ல நூலாகும். ஏனெனில் அவர் யோகா குரு… அவர் யோகாவை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்” என புகழாரம் சூட்டியுள்ளார். இந்த டி.என்.சிங், மீரட் கல்லூரியில் தத்துவவியல் துறை தலைவர் என்பது கூடுதல் சிறப்பு !
சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக கலை துறைத் தலைவர் பேராசிரியர் நவின் சந்திர லோகனி, “புத்தகங்கள் இந்தப் பல்கலையில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும். பண்டைய கலாச்சார பாரம்பரியத்தையும் தத்துவத்தையும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக அவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.”
அதாவது பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மாபெரும் தத்துவஞானிகளின் நூல்களுடன் இந்துத்துவ மூடர்கூடங்களின் நூல்களையும் இனி புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் உத்திரப்பிரதேச மாணவர்கள் படிக்க இருக்கிறார்கள்.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு பல்கலைக்கழக ஆசிரியர், “நாங்கள் அவர்களின் திகைப்பூட்டும் பரிந்துரைகளை புரிந்து கொள்கிறோம். சக்திவாய்ந்த மனிதர்கள் அவர்களுடைய புத்தகங்களை கற்றுக் கொடுக்க கட்டாயப்படுத்துகிறார்கள். அவை தரமற்றவை. அரை வேக்காட்டுத்தனமான அறிவுடையவர்களின் நூல்களை படிக்கச் சொல்வதும் மக்களை யோகா செய்யச் சொல்வதும் ஒன்றல்ல” என விரக்தியுடன் பேசுகிறார்.
இந்த அரைவேக்காடுகளின் நூல்களை எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டதால்தான் ஹிந்தி இலக்கிய பாடத்தில் உத்தரப்பிரதேச முற்போக்கு கவிஞர்கள் மூவரின் கவிதைகளை பாடத்தில் சேர்க்க முடிந்தது எனவும் அவர் கூறுகிறார்.
படிக்க :
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
♦ பாஜாகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
நவீன மருத்துவத்தை ‘மூடத்தனமான அறிவியல்’ என இகழ்ந்த ராம்தேவ், பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தத்துவஞானி ஆகிவிட்டார். அதுபோல, கலவரங்கள் மற்றும் போலி என்கவுண்டர் புகழ் ரவுடி ஆதித்யநாத்தும் தத்துவஞானி ஆகிவிட்டார்.
இந்துத்துவ மூடர்களுக்கு தத்துவஞானி முலாம் பூசி, குழந்தைகளின் மூளையில் இந்துத்துவ நஞ்சை விதைப்பதற்குத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது பாஜக அரசு ! தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டு அது தடுத்து நிறுத்தப்படவில்லையெனில், வடநாட்டு கஞ்சாகுடிக்கி சாமியார்கள் முதல் கஞ்சா வியாபாரி சத்குரு வரை இந்தக் கயவர்களின் போதை உளறல்களே தத்துவங்களாக நம் வருங்கால சந்ததியினருக்கு பயிற்றுவிக்கப்படும்.
கலைமதி
நன்றி : The Print, Telegraph india
வருங்காலத்தில் பாபா ராம்தேவ் தான் விவேகானந்தரின் மறுபிறவி என்று பரப்புரை செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.