17 ஜனவரி 2016, ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பைச்((Ambedkar student Association) சேர்ந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா பார்ப்பன பாசிசத்துக்கு பலியான நாள். முன்னர் சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை, பின்னர் ரோஹித் வெமுலாவின் மரணம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்ற கல்விக்கூடங்களின் மீதான இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல் இப்போது மேலும் தீவிரமடைந்து பல்வேறு கல்வியிடங்களிலும் தன் தலையைக் காட்டுகின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பு ஏபிவிபி-யால் தாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது அடுத்த நாள் காணாமல் போயுள்ளார். இவ்வாறு நாட்டை இறுகப்பற்றி வரும் பார்ப்பன பாசிசத்தையும், உயர்கல்வி நிறுவனங்களில் ஜனநாயகத்திற்கான வெளி குறைந்து வருவதையும் எதிர்த்துக் கண்டனப் பேரணி ஒன்றை 17 ஜனவரி 2017 அன்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சென்னை ஐ.ஐ.டி-யில் ஒருங்கிணைத்திருந்தது. இக்கண்டன பேரணியில் 45 பேர் கலந்துகொண்டனர்.
மாலை 5:15-க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலில் பேசிய ஆராய்ச்சி மாணவர் அனைவரையும் வரவேற்ற பின்னர், ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கான நீதிக்கான போராட்டத்தைப் பற்றி பேசினார், “ஒரு வருடம் கடந்த பின்னும் கூட ரோஹித்தின் மரணத்திற்கு காரணமான பாஜக-வின் ஸ்மிருதி இராணி, பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ராமச்சந்திர ராவ் மீதோ துணைவேந்தர் அப்பா ராவ் மீதோ சம்பந்தப்பட்ட ஏபிவிபி மாணவர்கள் மீதோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதிகோரும் நம் போராட்டத்தில் இன்னும் பெரிதும் அவநம்பிக்கையே நிறைந்துள்ளது. மேலும், நஜீபைக் கண்டுபிடிப்பதிலும் பெரிதும் மர்மம் நீடிக்கிறது. டெல்லிக் காவல்துறை தன் விசாரணையைத் தீவிரப்படுத்தக் கோரி நஜீபின் தாயார் பேரணி சென்ற போது, அவர் இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டார். மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலும் இப்போது அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. இந்துத்துவத்தின் இத்தகைய தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும், ரோஹித்தின் மரணத்துக்கு நீதியைப் பெறவும் இந்நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்கள் தீரவும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.”
பின்னர் பேசிய ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவர் “மாணவர்கள் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதல்களை வெறும் சமூகரீதியான தாக்குதல்களாக மட்டும் பார்க்கக் கூடாது. இங்கு பொருளாதாரத் தளத்திலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலைச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் மிக அதிகமான கட்டணமுந்தான்.” அங்கு வந்திருந்த ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு முன்னும் பின்னும் அங்கு நடந்து வருவன பற்றி பேசினர். இன்னொரு மாணவர், அப்போது ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்து வந்த ரோஹித் நினைவு தின நிகழ்ச்சியில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததைத் தெரிவித்தார். “ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு பின், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மணவர்களைக் கைது செய்த பின், பாஜக அரசும் அதன் சார்பான தேசிய ஊடகங்களும் ‘தேசியவாத – தேசவிரோத’ என்ற போலி விவாதத்தைக் கட்டமைத்தன. ஆனால் இவர்கள் சொல்லும் தேசமானது, பார்ப்பனிய ஒற்றைக் கலாச்சார இந்து-இந்தி-இந்துராஷ்ட்ரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இது உண்மையில் ‘பார்ப்பனிய – பார்ப்பனியத்திற்கு எதிரான’ என்ற விவாதம் தான் என்பதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்போது கூட பண மதிப்பிழப்பினை நியாயப்படுத்தும் மோடி அரசு இத்திட்டத்தை விமர்சிப்பவரை எல்லாம் கருப்புப் பணம் வைத்திருப்போர் எனப் பழிபோடுகிறது. ‘தூய ஆட்சி செய்வோர் – கருப்புப் பணம் வைத்திருப்போர்’ என்ற விவாதத்தை உருவாக்குகிறது. ஆனால் உண்மையில் அந்த விவாதத்திற்குள் ஒளிந்திருப்பது என்ன?”
இவ்வாறு மாணவர்கள் பேசிய பின் பேரணி புறப்பட்டது. “மனுவாதத்திடமிருந்து ஆசாதி(விடுதலை)!” “பார்ப்பனியத்திடமிருந்து ஆசாதி!”, “ஆர்.எஸ்.எஸ். ஒழிக!”, “பாஜக ஒழிக!” “இன்குலாப் ஜிந்தாபாத்!” ஆகிய முழக்கங்களுடனும் பறையோசையுடனும் பேரணி நடந்தது.
தகவல்: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை ஐ.ஐ.டி