23-09-2021

பத்திரிகைச் செய்தி

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே !

மிழகத்தில் மார்க்சிய – லெனினியப் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ), தமிழ்நாடு, முன்னோடியாகத் திகழ்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

எமது அமைப்பானது, மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையிலான நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர இயக்கமாகும். இந்தியாவில் சோசலிசத்தை நோக்கமாகக் கொண்டு ஏகாதிபத்தியங்களையும் காலனியாதிக்கத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் வீழ்த்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதை நோக்கமாகக் கொண்டு மக்களை அணிதிரட்டிப் போராடி வரும் இயக்கமாகும்.

இப்புரட்சியைச் சாதிக்க குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் அரசியல் சூழலையும், வர்க்கப் போராட்ட நிலைமையையும் கருத்தில் கொண்டு செயல்தந்திர உத்திகளை வகுத்துச் செயல்பட்டு வருகிறோம். கடந்த 2015-ல் கட்டமைப்பு நெருக்கடி என்ற அரசியல் செயல்தந்திரத்தின் அடிப்படையில் செயல்பட்டு தமிழக மக்களிடம் குறிப்பிடும்படியான அரசியல் செல்வாக்கையும், மதிப்பையும் பெற்றிருக்கிறோம்.

இந்துமதவெறி பார்ப்பன பாசிசமும், கார்ப்பரேட் முதலாளிகளின் பாசிசமும் கலந்த வீரிய ஒட்டுரக பாசிசம் முன்னேறித் தாக்கி வரும் தற்போதைய சூழலில், அதனை வீழ்த்துவதற்கான நோக்கத்துடன் களப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய செயல்தந்திரத் திட்டத்தை எமது அமைப்பு முன்வைத்து, அதனை 2021 செப்டம்பர் 11, 12 தேதிகளில் சிறப்புக் கூட்டம் நடத்தி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிலவிய கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் கலைப்புவாத, பிளவுவாத, சீர்குலைவு சக்திகளின் சதிவேலைகளால் எமது அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகிய சூழலில், அச்சீர்குலைவு சக்திகளை முறியடித்து அமைப்பை மீண்டும் நிலைநாட்டும் பணிகளின் காரணமாகவும் இந்தச் செயல்தந்திர வரைவறிக்கையை நிறைவேற்றுவதில் தவிர்க்கவியலாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அதன் பல்வேறு இந்துமதவெறி பரிவாரங்கள் பாசிச காட்டாட்சியைக் கட்டவிழ்த்துவிடும் நோக்கத்தோடு கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க கார்ப்பரேட் பாசிச கும்பல்கள் இந்தியாவின் இந்துமதவெறி பாசிச அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. காவிகளுடன் கார்ப்பரேட் கும்பல்கள் இணைந்துள்ள வீரிய ஒட்டுரகமாக காவி – கார்ப்பரேட் பாசிசம் முன் எப்போதும் இல்லாத அளவில் வளர்ந்து வருகிறது. இது, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாசிசம் போல் அல்லாமல், இந்திய நிலைமைகளுக்கே உரிய சாதி, மதம், இனம், மொழி போன்ற தனி சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம், மதம் ஆகியவற்றை ஒழித்து ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம் ஆகியவற்றை நிலைநாட்டி இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளது, காவி கார்ப்பரேட் பாசிசம். நிலவுகின்ற முதலாளித்துவ நாடாளுமன்ற சர்வாதிகார ஆட்சிமுறையைக் கொண்டே அதன் சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமே, படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக பாசிச நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றது.

ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்திய தரகு அதிகார வர்க்க கார்ப்பரேட்டுகள், நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்குச் சேவை செய்வதே காவி – கார்ப்பரேட் பாசிசம் ஆகும். கார்ப்பரேட்களின் பாசிசமும், ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜிய கனவுடைய இந்து வெறி பாசிசமும் ஒன்றிணைந்திருக்கும் பாசிசமே காவி – கார்ப்பரேட் பாசிசம் என இச்சிறப்புக் கூட்டம் பிரகடனப்படுத்துகிறது.

பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியினை அமைப்பதற்கான அடிகற்களாக கீழிருந்து கட்டியமைக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியும், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் எவ்வாறு அமைய வேண்டும் எனும் வழிமுறைகளை கொண்ட திட்டமிட்ட பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டத்தினை இக்கூட்டம் முன்வைக்கிறது. இவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே ஆளும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு பிரிவினருடனான ஐக்கிய முன்னணியாக அவை உருவெடுக்கும் எனும் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம், அவற்றின் உள்ளடக்கம், உருவங்கள் குறித்த கண்ணோட்டத்தினை வழங்குகிறது.

நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திளும் ஓரணியில் திரள வேண்டும் என இச்சிறப்புக் கூட்டம் அறைகூவல் விடுத்து, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கான உடனடிக் கடமைகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளது.

புரட்சிகர வாழ்த்துகள்!

★ ★ ★

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க