13.06.2022
அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது!
ஐக்கியமும் புத்தார்வமும் அமைப்பில் கரைபுரண்டோடுகிறது!
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே!
1981-லிருந்து மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா-லெ) தமிழ்நாடு-இன் செயலாளராக இருந்தவரும், கடந்த 2021-இல் நடந்த மா.அ.க.வின் 10-வது பிளீனத்தில் பொறுப்புகள் பறிக்கப்பட்டவருமான முன்னாள் செயலரும் அவரது ரசிகர்கள் அடங்கிய சிறு கும்பலும் கோஷ்டிவாத, பிளவுவாத, சதிகாரச் செயல்பாடுகளின் காரணமாக, கடந்த 03.06.2022 அன்று அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தகுதிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, எமது அமைப்பிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிலர் வெளியேற்றப்பட்ட இந்நிகழ்வானது, கம்யூனிச இயக்கங்களில் நடக்கும் வழமையான ஒழுங்கு நடவடிக்கைகளைப் போன்றதொரு நிகழ்வல்ல. இந்தியப் புரட்சிகர இயக்கத்தைப் பீடித்திருக்கும் வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதத்தின் ஒரு பகுதியாக, எமது அமைப்பிற்குள் இரகசியமாக பதுங்கியிருந்து பிளவுவாத, கோஷ்டிவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் செயலர் தலைமையிலான கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட இந்நிகழ்வானது புரட்சிகர சக்திகளுக்கும், தோழர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பேருற்சாகம் தருகின்ற செய்தியாகும்.
000
எமது அமைப்பில் 2020-இல் நடந்த பிளவுக்கும் பின்னடைவுக்கும் வலது திசைவிலகலே காரணம் என்று கடந்த 2021-இல் நடந்த 10-வது பிளீனம் தெளிவாக வரையறுத்தது. தாங்கள் தனிமைப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, முன்னாள் செயலர் மற்றும் அவரது ரசிகர்களைக் கொண்ட இக்கும்பல், பிளீனத்தில் பெரும்பான்மைக் கருத்தை ஆதரிப்பதாக நாடகமாடி அமைப்பிற்குள் இரகசியமாக பதுங்கியிருந்தது.
ஆனால் 10-வது பிளீனத்திற்குப் பின்னர், இந்தக் கும்பல் வலது திசைவிலகலுக்கு எதிரான போராட்டத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் செய்தது; பிரபலம் தேடும் பிரச்சார வேலைமுறையை முன்தள்ளியது; இதன் மூலம் ஆளும் வர்க்க நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னே புரட்சிகர சக்திகளை இழுத்துவிட்டு சீரழிக்கும் போக்கை உயர்த்திப் பிடித்தது; புதிய தலைமைக் கமிட்டி மேற்கொண்ட முன்னேற்றகரமான வேலைகளுக்கு இந்த கும்பல் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டது; தனக்கு உடன்பாடில்லாத சுற்றறிக்கைகளை அணிகளுக்குச் சுற்றுக்குவிடாமல் முடக்கி வைத்து, தலைமைக் கமிட்டி செயலிழந்து நிற்பதாக அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டது.
தலைமைக் கமிட்டியின் அற்பமான தவறுகளை ஊதிப்பெருக்கி, அணிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, மாநில அமைப்புக் கமிட்டியை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று மனப்பால் குடித்தது. இருப்பினும், தொடர்ந்து பலவாறாக இந்த கும்பல் மேற்கொண்ட கீழ்த்தரமான நடவடிக்கைகள் அனைத்தும் அணிகளின் பேராதரவோடு தவிடு பொடியாகின.
தமிழக மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியலைப் பரப்புவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த எமது அமைப்பின் அரசியில் ஏடு, அமைப்பில் ஏற்பட்ட பிளவின் காரணமாக கடந்த ஜனவரி 2021-க்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய இளந்தோழர்களை வளர்த்தெடுத்து ஆகஸ்டு 2021 முதலாக எமது அமைப்பின் அரசியல் ஏட்டை மீண்டும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதுமட்டுமல்ல, முன்னாள் செயலர் பொறுப்பிலிருந்த காலத்தில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக முடக்கப்பட்ட, “புரட்சிப் புயல்’’ எனும் எமது அமைப்பின் அரசியல் – சித்தாந்தப் பத்திரிகையை காலாண்டிதழாக மீண்டும் வெளியிட்டு வருகிறோம். அகில இந்தியக் கட்சியைக் கட்டும் நோக்கத்துடன் எமது அமைப்பின் நிலைப்பாடுகளை பிற மாநில தோழர்கள், உழைக்கும் மக்கள் அறியும் வகையில், ஆங்கிலத்தில் எமது அரசியல் ஏட்டைக் கொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் இந்த கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், இந்த கும்பல் அமைப்பிற்குள் கோஷ்டி கட்டிக்கொண்டும், இரகசிய வலைப்பின்னலை அமைத்துக் கொண்டும் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகின. 10-வது பிளீனத்தின் தீர்மானத்திற்கு எதிராக, எமது அமைப்பு வலது திசைவிலகல் அடையவில்லை என்றும், செயல்தந்திரப் பிரச்சினையில் மாற்றுக் கருத்து உள்ளதாகவும் கூறி இக்கும்பல் உட்கட்சி விவாதத்திற்கு ஒரு அறிக்கையை வைத்தது. அதை உற்சாகத்துடன் வரவேற்று. ஆரோக்கியமான உட்கட்சி விவாதத்தை மா.அ.க. நடத்தியது.
இச்சூழலில், இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதென்பது, உட்கட்சி விவாதத்தின் நோக்கத்தை சீரழித்துவிடும், இந்தக் கும்பல் இதனைக் காரணம் காட்டி தப்பித்துவிடும் என்று மா.அ.க. உணர்ந்தது. ஏப்ரல் 09, 10 தேதிகளில் உட்கட்சி விவாதத்திற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்தி முடிக்கும்வரை பொறுமை காத்தது.
இந்த உட்கட்சி விவாதக் கூட்டத்தில் தமக்கு அதிக ஆதரவு வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கட்சிகள் பாணியில் கோஷ்டி கட்டிக்கொண்டும், பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் கொல்லைப்புறமாக உயர்த்திக் கொண்டும் இந்த கும்பல் கலந்து கொண்டது. இருப்பினும், இச்சிறப்புக் கூட்டத்தில், எமது அமைப்பு வலது திசைவிலகல் அடைந்துள்ளது என்ற 10-வது பிளீனத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை 75 சதவிகித அணிகள் உயர்த்திப் பிடித்தனர். மேலும், முன்னாள் செயலர் கும்பல் முன்வைத்த நம்பூதிரித்தனமான வாதங்கள் அனைத்தும் அரசியல் – சித்தாந்த ரீதியாக அம்பலப்பட்டுத் தோற்றுப்போயின. இந்த கும்பலை ஆதரித்த சில பிரதிநிதிகளும்கூட, இக்கூட்டத்தில் நடந்த விவாதத்தின் ஊடாக தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டு 10-வது பிளீன முடிவை உயர்த்திப் பிடித்தனர்.
படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்
ஆனால், இந்தக் கும்பல் தமது பொறுப்பிலுள்ள அணிகளிடம் இக்கூட்டத்தின் முடிவுகளை தீர்மானித்தபடி விளக்குவதற்கு மாறாக, சிறப்புக் கூட்டம் தொடர்பாக அவதூறுகளைச் செய்தது. இந்தச் சூழலில், முன்னாள் செயலர் கும்பல், 28-05-2022 தேதியிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில், மா.அ.க.வைக் கலைத்துவிட்டதாகவும், விரைவில் ஒரு பிளீனத்தை நடத்தி புதிய தலைமையை நிறுவிக்கொண்டு இயங்கப் போவதாகவும் குறிப்பிட்டு, “தற்காலிக அமைப்புக் கமிட்டி” என்று இந்த கும்பல் தங்களுக்குத் தாங்களே நாமகரணம் சூட்டிக்கொண்டுள்ளது. அமைப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் சில ஊழியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த அறிக்கையில் அவதூறு செய்துள்ளது.
தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறும் அமைப்பு விதிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, பிளீனத்தில் அணிகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைமைக் கமிட்டியை, அணிகளுக்கே தெரியாமல் கலைத்துவிட்டதாக இந்த கும்பல் அறிவித்துள்ளது. இதுதான் இந்த கும்பலுடைய ஜனநாயக மத்தியத்துவத்தின் மகிமை!
அணிகளை குரு – சிஷ்யன் பாணியில் இயக்கி நாட்டாமை செய்துகொண்டு, அணிகளின் ஜனநாயக உரிமையைக் கடுகளவும் மதிக்காத இந்த குட்டி முதலாளித்துவ அராஜகவாத கும்பல்தான், தங்களை ஆதரிக்குமாறு அணிகளுக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறது.
000
எமது அமைப்பின் தலைமையிலான தொழிற்சங்க அரங்கின் முக்கியப் பிரமுகராக இருந்த திருவாளர் வி.வி. என்பவரது ஊழல் – முறைகேடுகள் குறித்து, ஜனவரி 2021-இல் நடந்த 10-வது பிளீனத்தில் நடந்த பரிசீலனைக்குப் பின்னர், இப்பிரச்சினையைத் தாராளவாதமாக அணுகி, வி.வி.யின் ஊழல் – முறைகேடுகளை மூடிமறைக்க முயற்சித்த முன்னாள் செயலர், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். மேலும், இனி அவரை மா.அ.க.வுக்குத் தெரிவு செய்யக் கூடாது என்று பிளீனம் முடிவெடுத்தது.
அப்போது தன்னை அப்பாவியாகக் காட்டிக்கொண்டு நாடகமாடிய இந்த ஆஷாடபூதி, 10-வது பிளீனத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய மா.அ.க.வைத் தாக்கித் தகர்த்துவிட்டு, மீண்டும் செயலராகத் தன்னை அமர்த்திக் கொள்ளும் சதிகார நோக்கத்துடன் கட்சிக்குள் கட்சி கட்டும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளார் என்பது இப்போது நிரூபணமாகிறது.
தன்னைவிட்டால், இந்த அமைப்பைத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு யாருமில்லை என்ற இறுமாப்பில் திளைத்திருந்த அதிகாரவெறி பிடித்த இந்தப் பேர்வழி, புதிய மா.அ.க.வானது, 10-வது பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை அணிகளின் பேராதரவுடன் நிறைவேற்றி, புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதைக் கண்டு அரண்டு போயுள்ளார்.
ஒரு கம்யூனிஸ்டுக்கு உரித்தான நேர்மை என்பது அறவே இல்லாத இந்த நபர், தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக எந்தக் கேவலமான வேலையிலும் இறங்குவதற்குத் தயங்கமாட்டார் என்பதை மேற்கூறிய அவரது நடவடிக்கைகளே நிரூபித்துக் காட்டிவிட்டன.
முன்னாள் செயலர் மற்றும் அவரது ரசிகர்களின் கோஷ்டி கட்டும் கீழ்த்தரமான நடவடிக்கைகள் அம்பலமானதும், அவர் மீதும் அவரது பொறுப்பிலுள்ள குழுக்கள் மீதும் எச்சரிக்கை விடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையை மா.அ.க. மேற்கொண்டது. ஆனாலும், அவரும் அவரது ரசிகர்களும் தமது தவறுகளைச் சுயபரிசீலனை செய்து தம்மைத் திருத்திக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, தமது கோஷ்டிவாத நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினர்.
மேலும், 2012-க்குப் பிறகு அமைப்பின் நிதியறிக்கையை முன்னாள் செயலர் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. அவரது நிதி அராஜகத்தை மா.அ.க. விமர்சித்ததோடு, அவரது துண்டுச்சீட்டு கணக்குகளை முறைப்படுத்திக் கொடுத்து உதவியது. ஆனாலும், முன்னாள் செயலர் 2019 முதல் 2020 வரையிலான கணக்குகள் என்ற பெயரில், வரவுக்கும் செலவுக்கும் இருப்புக்கும் தொடர்பில்லாமல் ஒரு எண் கணிதப் பட்டியலைத் தயாரித்து, இவ்வளவுதான் கணக்கு என்று கொடுத்துள்ளார்.
இதனை நிதியறிக்கையாக யாரும் ஏற்க மாட்டார்கள் என்று நன்கறிந்திருந்த போதிலும், அமைப்பின் நிதியறிக்கையை முறையாகப் பராமரிக்காமல் இருந்துள்ள பாரிய தவறுக்காக எவ்வித பதற்றமோ, சுயவிமர்சனமோ இல்லாமல், அமைப்பையும் அணிகளையும் அவர் அலட்சியப்படுத்தினார். இதனைக் கடுமையாக விமர்சித்த மா.அ.க. அவருக்குக் காலக்கெடு விதித்து, நிதியறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும், இன்றுவரை அவர் நிதியறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.
இது மட்டுமின்றி, இன்னமும் தொகுக்கப்படாத 11 ஆண்டுகால அனுபவத் தொகுப்பறிக்கையை, புதிய மா.அ.க. தொகுத்து வைத்துவிட்டால், அணிகள் மத்தியில் தமது தில்லுமுல்லுகளும் தகிடுதத்தங்களும் அம்பலமாகிப் போய்விடுமே என்று முன்னாள் செயலரும் அவரது ரசிகர்களும் பீதியடைந்தனர்.
புதிய மா.அ.க.வானது, ஊழியர்களின் தவறுகளுக்கு எதிராக கறாரான, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கையாண்டு, முன்னாள் செயலரின் ரசிகர்களான சிலர் மீது அவர்களது தவறுகளின் தன்மைக்கேற்ப, அடுத்தடுத்து ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதைக்கண்டு பீதியடைந்த இக்கும்பல், அடுத்தகட்டமாக தங்கள் மீதும் இத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகள் வரும் என்று அஞ்சி, தாங்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பாகவே அமைப்பை விட்டு வெளியேறும் இந்தக் கேலிக்கூத்தை அரங்கேற்றியுள்ளது.
000
முன்னாள் செயலரின் ரசிகர்கள் கூடாரத்தின் ஒரு பிரிவான தருமபுரி மாவட்ட அமைப்புக் கமிட்டியினர், கோஷ்டி கட்டிக்கொண்டு மா.அ.க.வுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தங்கள் மாவட்டப் பகுதியை, தனி சமஸ்தானமாகக் கருதிக்கொண்டு மேல்கமிட்டியின் முடிவுகளைச் செயல்படுத்த மறுத்தனர். மேல்கமிட்டியை மதிக்காமல், அதன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், அமைப்பின் சுற்றறிக்கைகளைக்கூட அணிகளுக்குக் கொடுக்காமல், பத்திரிகை விற்பனைத் தொகையைப் பல மாதங்களாகச் செலுத்தாமல், தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் செயல்பட்டனர்.
இவர்கள் மீது மாநிலக் கமிட்டி எழுத்துப்பூர்வமாக வைத்த விமர்சனங்கள் எதற்குமே பதிலளிக்காமல், அவதூறுகள் செய்தும், அணிகளை மிரட்டியும் தமது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்கள் கீழ்த்தரமாக செயல்பட்டனர். ஊளைச்சதை அமைப்புக்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழும் இந்த கும்பல், அரசியல் முன்முயற்சியின்றி சோம்பிக் கிடப்பது, தனிநபர் பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது, கட்சி கட்டும் வேலைகள் அனைத்தையும் புறக்கணிப்பது என்பதாக தமது காலத்தைக் கழித்து வருகிறது.
மேலும், மா.அ.க.வைக் கலைத்துவிட்டதாக முன்னாள் செயலர் கும்பல் வெளியிட்டிருக்கும் 28-05-2022 தேதியிட்ட அறிக்கைக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமது மாவட்ட அணிகளிடம் இந்த கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டே, மற்றொருபுறம், இந்த அறிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிற மாவட்டப் பகுதிகளில் உள்ள அணிகளுக்கு இதனை வினியோகம் செய்து வருகிறது.
வேடிக்கை என்னவென்றால், முன்னாள் செயலரின் இரசிகர் கூடாரத்திலுள்ள பலர், எமது அமைப்பின் 10-வது பிளீனத்தின்போது, முன்னாள் செயலர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து, அவரது கட்சித் தகுதியை நீக்கம் செய்யக் கோரினர். இப்போது இவர்கள் வெட்கமின்றி முன்னாள் செயலரின் பின்னே திரண்டு சந்தர்ப்பவாத கோஷ்டிகானம் இசைக்கின்றனர்.
000
ஜனநாயக மத்தியத்துவத்தை வழுவாமல் பின்பற்றி, பொறுமையாகவும் நெளிவுசுழிவாகவும், நோயாளியைக் காப்பாற்றி நோயைக் குணப்படுத்தும் அணுகுமுறையைக் கையாண்டு இக்கும்பலின் தவறுகளை மா.அ.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி விமர்சித்து வந்துள்ளது. விமர்சன – சுயவிமர்சனத்தின் மூலம் திருத்தியமைக்க தொடர்ந்து முயற்சித்தது. ஆனாலும், இக்கும்பல் அனைத்தையும் அலட்சியப்படுத்தி, அமைப்பு முடிவுகளுக்குக் கட்டுப்பட மறுத்து, தமது திரைமறைவு சதிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த கும்பல் மீது மாநிலக் கமிட்டி முறையாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயாரிப்பு வேலைகளில் இருந்தபோதுதான், இந்தக் கும்பல் 28-05-2022 தேதியிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு மா.அ.க.வைக் கலைத்துவிட்டதாக அறிவித்து அணிகளிடம் இரகசியப் பிரச்சாரம் செய்து வந்தது.
இவ்வாறு அமைப்பைப் பிளவுபடுத்திக் கலைக்கும் வகையில் அராஜகவாத, சதிகார நோக்கத்துடன் அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் செயலர், அவரது சதித் திட்டங்களுக்கு வலதுகரமாக இருந்து செயல்படுத்திய A குழுவினர், அவரது ரசிகர் கூடாரமான தருமபுரி மாவட்ட அமைப்புக் கமிட்டி ஆகியோரை அமைப்பில் இருந்து நீக்கியுள்ளோம்.
1981-இலிருந்து 40 ஆண்டு காலமாக இந்த அமைப்பின் செயலாளராக இருந்து அமைப்பை வழிநடத்தியவர், இன்று தரம்தாழ்ந்து கோஷ்டி கட்டிக்கொண்டு தனக்கு ஆதரவாக கையளவேயான சில ரசிகர்களைக் கொண்ட சிறு கும்பலாகச் சீரழிந்து போயுள்ளார். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த பல ஊழியர்கள் அவரது கீழ்த்தரமான, கேவலமான நடவடிக்கைகளைக் கண்டு காறி உமிழ்கின்றனர். இக்கும்பல் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிமுட்டாள்தனத்தையும் அபத்தங்களையும் அற்பத்தனங்களையும் சாடி பல பகுதிகளில் எமது புரட்சிகர அணிகள் இவர்களை விரட்டியடித்துள்ளனர். மாநிலக் கமிட்டியின் இந்த முடிவை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணிகள் பலரும் வரவேற்றுள்ளனர். புரட்சிகர சக்திகள், உழைக்கும் மக்களின் ஆதரவை இழந்துவிட்ட முன்னாள் செயலரும் அவரது ரசிகர் பட்டாளமும் விரைவில் அரசியல் அனாதைகளாகப்போவது திண்ணம்!
எமது அமைப்பில் கடந்த 2020-லிருந்து அடுத்தடுத்து வெளியேறிய, அல்லது வெளியேற்றப்பட்ட சீர்குலைவுவாதிகளுக்கும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ள அதிகாரவெறி பிடித்த இச்சதிகார கும்பலுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. முன்னவை அனைத்தும் தனிநபர் முரண்பாடுகளை முன்வைத்து சீர்குலைவில் ஈடுபட்ட அராஜகவாத கும்பல் என்றால், தற்போதைய நிகழ்வானது கோஷ்டிவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பிளவுவாதத்தில் ஈடுபடும் அராஜகவாத கும்பலாகும். இவை தனித்தனி நிகழ்வுகளாக இருந்தாலும், இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது வலது சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன அராஜகவாத சித்தாந்தம்தான்.
000
அதிகாரவெறி பிடித்த இச்சதிகார கும்பல் எமது அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தகுதிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, இந்த அமைப்பிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டு அமைப்பு மேலும் தூய்மை அடைந்துள்ளதையும், இனி மேற்கொள்ள வேண்டிய கடமைகளைப் பற்றி விளக்கியும் மாநில அமைப்புக் கமிட்டி 03.06.2022 அன்று, “அமைப்பிற்குள் இரகசியமாக பதுங்கியிருந்த முன்னாள் செயலாளர் தலைமையிலான வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது!” என்ற தலைப்பிட்ட சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட அமைப்புக் கமிட்டிகள், மாவட்ட யூனிட்டுகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மக்கள் திரள் அரங்குகளின் பிராக்சன்கள் மற்றும் மாநிலக் கமிட்டியின் நேரடிப் பொறுப்பிலுள்ள செயற்பாட்டுக் கமிட்டிகள் அனைத்தும் பங்கேற்ற இந்தச் சுற்றறிக்கை மீதான விளக்கக் கூட்டம் 06.06.2022 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அனைத்து தோழர்களும் இந்தக் கும்பலைக் அமைப்பிலிருந்து வெளியேற்றி, அமைப்பைத் தூய்மைப்படுத்தியுள்ளதை இனிப்புகள் வழங்கி பேருற்சாகத்துடன் கொண்டாடினர். இப்பிளவுவாத அதிகாரவெறி கொண்ட சதிகார கும்பலை உழைக்கும் மக்களிடமும் அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளிடமும் அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தி முடமாக்க உறுதியேற்றனர்.
நக்சல்பாரி புரட்சிகர இயக்கம் இத்தகைய சில்லறைத்தனமான அற்பவாதிகளின் சலசலப்புகளைக் கண்டு ஒருபோதும் பீதியடைந்ததில்லை. சோர்வும் விரக்தியுமடைந்து துவண்டு போனதுமில்லை. எவ்வித அமைப்புக் கண்ணோட்டமும் இல்லாத, கட்டுப்பாட்டை விரும்பாத, குட்டி முதலாளிய தனிநபர்வாதத்தைக் கொண்ட இந்த நவீன அராஜகவாத, பிளவுவாத, சதிகார கும்பலை உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி முடக்காமல் எமது பணிகள் ஓயப்போவதுமில்லை.
இது, திரிபுவாத – நவீன திரிபுவாத சித்தாந்தங்களை நிராகரித்த மகத்தான நக்சல்பாரி எழுச்சியின் 55-வது ஆண்டு; மா.அ.க. என்ற எமது அமைப்பு தொடங்கப்பட்டதன் 45-வது ஆண்டு. பாட்டாளி வர்க்க விரோத சிந்தாந்தங்களுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தில், காலில் தைத்த கோஷ்டிவாத – அராஜகவாத முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, ஆயிரமாயிரம் தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் உறுதியுடன் எமது பயணத்தைத் தொடர்கிறோம். எமது அமைப்பின் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்துள்ள அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளும், வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களும் தொடர்ந்து எமது புரட்சிப் பணிகளுக்குத் தோள்கொடுத்து ஆதரவளிக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.
♦ எமது அமைப்பு வலது திசைவிலகல் அடைந்துள்ளதை அடையாளப்படுத்திய 10-வது பிளீனம், எமது அமைப்பின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்!
♦ வலது திசைவிலகலுக்குக் காரணமான வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதத்தைக் கண்டறிந்த 2022 ஏப்ரல் 9-10 தேதிகளில் நடந்த உட்கட்சி விவாத சிறப்புக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து 2022 ஜூன் மாதத்தில் முன்னாள் செயலர் கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டும் எமது போராட்டத்தில் இரண்டாவது வெற்றியாகும்!
♦ வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதக் கும்பல் அமைப்பிலிருந்து துடைத்தொழிக்கப்பட்டதை உற்சாகத்துடன் வரவேற்போம்!
♦ மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து, எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான கட்சியைக் கட்டியமைப்போம்!
♦ காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக!
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) நீடுழி வாழ்க!
புரட்சிகர வாழ்த்துகள்!
★ ★ ★
13.6.2022 மாநில அமைப்புக் கமிட்டி,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்),
தமிழ்நாடு.
புரட்சிக்கு முந்தைய சமூக சீரழிவுகளுக்கு மத்தியிலேதான் புரட்சியை நடத்தும் கட்சி தோன்றி வளர்கிறது என்பதுதான் வரலாறு.எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் கட்சியை பரிசீலனை சுயபரிசீலனை மூலம் கழிவுகளை கழித்து கட்டுவதை முக்கிய பணியாக கொண்டிருக்கிறது.அந்த வகையில் முந்தைய செயலாளர் நீக்கம் என்பதையும் அந்த பணியில் ஒன்றாக ஏற்பதே சரியானது.எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றினார் என்பதல்ல கடைசிவரை புரட்சிக்காக நிற்கிறாரா என்பதே முக்கியம்.இன்றைய அமைப்பு புத்துயிராக பரிணமித்து இந்திய மக்களின் வாழ்வில் விடிவெள்ளியை தோற்றுவிக்கும் புரட்சிக்கான கட்சியாக மாறும் மாறவேண்டும் என்பதே புரட்சியை நேசிக்கும் ஒவ்வொருவரின் விருப்பமும் ஆசையும்.வாழ்த்துக்கள் தோழர்களே.
வாழ்த்துக்கள் தோழர்களே