நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி… நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்திய கம்யூனிச இயக்கம்

பாகம் – 3

முதல் பாகம் : நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
இரண்டாம் பாகம் : நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்

கேள்வி: நீங்கள் 1997ல், உங்கள் தந்தை மறைந்து கால் நூற்றாண்டு கழித்து அரசியலுக்குள் நுழைந்திருக்கிறீர்கள். அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா?

பதில்: எங்கள் அம்மா மறைந்த பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். பிறந்தது முதல் அரசியலைச் சுவாசித்துக்கொண்டிருந்த நான், எப்படி அரசியலிலிருந்து விலகி இருக்க முடியும்? அது எனக்குள்ளேயே இருந்தது. இயக்கத்துக்குத் திரும்பி வருவது தவிர்க்க முடியாதது. அப்படித்தான் நான் சிபிஐ எம்எல் விடுதலையில் சேர்ந்தேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த வினோத் மிஸ்ரா எங்களின் தந்தைக்கும் குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர். அவர் கட்சியில் சேரும்படி என்னை அழைத்தார்.

கேள்வி: நக்சல்பாரியின் இன்றைய பொருத்தப்பாடு என்ன?

பதில்: நக்சல்பாரி எழுச்சியின் மைய பிரச்சனையாக நிலம் இருந்தது. 100 சதம் நிலச் சீர்திருத்தம் வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருந்தது. நிலப்பிரபுக்களிடம் இருந்த கூடுதல் நிலத்தைப் பறித்தெடுப்பது போராட்ட வடிவமாக இருந்தது. நிலமற்றவர்களும் விவசாயத் தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். ஆனால், பொருளாதார சீர்திருத்தங்கள், 1991-க்குப் பின்பு கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கம் காரணமாக நிலவரம் மாற்றம் கண்டுள்ளது.

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் கார்ப்பரேட்களின் பக்கத்தில்தான் நிற்கிறார்கள். நிலம் மறுபடியும் மையமான பிரச்சனை ஆகிவிட்டது. பழங்குடி, தலித் அமைப்புகளின் தலைமையில், பயிர் செய்யக் கூடிய நிலம் கோரி பல இடங்களில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராக மக்களின் போராட்டங்கள் நடக்கின்றன. தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலத்தைப் பறிக்க முயலும் அரசிடமிருந்தும், மிகப்பெரிய கம்பெனிகளிடமிருந்தும் எப்படி தப்பிப்பது என்பது சாதாரண மக்களின் விவசாயிகளின் கவலையாக இருக்கிறது. நில உரிமை மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக எழுந்து வந்துள்ளது. நக்சல்பாரிக்குப் பின்பு 50 ஆண்டுகள் கடந்திருந்தபோதும், நிலம் மையமான பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால்தான், நந்திகிராம், சிங்கூர், பாங்கார் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.

அரசுடன் நேரடி மோதல் என்பது ஓர் ஆயுதப் போராட்டமாக மாறலாம். ஆனால், ஆயுதங்கள் ஆதிக்கம் செய்வதை அனுமதித்துவிடக் கூடாது. இயக்கத்துக்குக் கீழ்ப்பட்டதாக ஆயுதப் போராட்டம் இருக்க வேண்டும். மக்களைத் திரட்டுவதைப் பற்றி கவலையின்றி, முழுக் கவனமும் ஆயுதப் போராட்டம் என்று ஆகிவிட்டால் விஷயம் (தலைகீழாக) மாறிப்போய்விடுகிறது.

படிக்க :

சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்

உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

உலக வங்கியின் உத்தரவின்படி அனைத்து மாநில அரசுகளும் நில வங்கிகளை உருவாக்கியிருக்கின்றன. நிலம் இப்போது வங்கியில் இருக்கிறது. அது யாருடைய நிலம்? மேற்கு வங்கத்தின் நில வங்கியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சமீபத்தில் மம்தா பானர்ஜி சொன்னார். அது யாருடைய நிலம்? அது அரசு நிலம் என்று எடுத்துக்கொண்டால் கூட, முதலாளிகளின் ஜனநாயக வரையறைகளின்படியும் அது மக்களின் நிலம்தான். அது மம்தா பானர்ஜிக்கோ மோடிக்கோ சொந்தமானதில்லை.

மாண்சாண்டோவும் பிற மிகப்பெரிய கம்பெனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எப்படி பரிசோதனை செய்கிறார்கள்? நக்சல்பாரி கேள்வி கேட்டதே, அந்த நிலக் குவிமானத்தை வைத்துத்தான் இந்த பரிசோதனைகள் நடக்கின்றன. அப்போது நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது. நிலம் இப்போது அரசின் கையிலும் கார்ப்பரேட்களின் கையிலும் இருக்கிறது.

புதிய நிலப் போராட்டங்களில் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவோ அல்லது அவர்களுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதன் மூலமாகவோ நக்சல் அமைப்புகள் தங்களின் இருத்தலைப் பதிவு செய்கின்றன. நீங்கள் என்னைப் பார்க்க வரும்போது இங்கேயிருந்த தோழர் பீகாரைச் சேர்ந்தவர். அவர் அசாமுக்கு வந்திருந்திருக்கிறார்.

அசாம், அருணாசலப் பிரதேசத்தின் எல்லையில், அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தின்படி அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலத்தை மீண்டும் அரசு கேட்கிறது. நிலத்திலிருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். 15 பேர் கொல்லப்பட்டனர். பீகார் தோழர் அந்த துப்பாக்கி சூட்டின் முதல் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். இன்னும் நிறைய எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்துகொண்டிருக்கின்றன. போஸ்கோ, நியமகிரி, தாத்திரி…. நிலம், வாழ்வாதாரம், ஜனநாயகம் என்பது தற்போதைய போராட்டங்களின் மையமான பிரச்சனையாக இருக்கிறது. நாங்கள் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறோம்.

கேள்வி: சாதி, ஆணாதிக்கம் போன்ற சில பிரச்சனைகளை மிகவும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. இப்பிரச்சனைகளை நக்சல் குழுக்கள் உட்பட, கட்சிகள் யாரும் எடுப்பதில்லையே?

பதில் : இப்பிரச்சனைகளை, (பாரம்பரியப்படி/ கடந்த காலத்தில்) இயக்கம் எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. நாங்கள் தலித் குழுக்களுடன் தொடர்ந்து விவாதம் நடத்துகிறோம். மேலும், ஒன்று சேர்ந்து முன்னேறுவதற்காக வழிகளை நாங்கள் தேடுகிறோம். உலகம் மாறியிருக்கிறது தலித் இயக்கங்களின் உள்ளேயும் கூட பல மாறுதல்கள் வந்துள்ளன.

நாங்கள் அம்பேத்கரை மறுபடியும் கற்றுக்கொள்கிறோம், மறு மதிப்பீடு செய்கிறோம், அவரில் புது கண்டுபிடிப்புகளை மேற்கொள்கிறோம். அவரைப் புதிதாக புரிந்துகொள்ள முயற்சியெடுக்கிறோம். அம்பேத்கர் சாதியை ஒழிக்க விரும்பினார். இந்திய சமூக நிலைமைகளில் பார்க்கும்போது இது மிகவும் முற்போக்கான நிலைப்பாடாகும். ஆனால், அதேசமயத்தில் அவர் இடதுசாரியும் அல்ல.

உனா எதிர்ப்புப் போராட்டத்தின் பின்பு ‘பாசிசத்தை, சாதியத்தை, பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கு தலித்துகள் இடதுசாரிகளோடு சேர்ந்து நிற்க வேண்டும்’ என்று ஜிக்னேஷ் மேவானி திரும்பத் திரும்ப சொன்னார். ஒவ்வொரு இயக்கத்திலும் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே, ‘எழுக என் தேசமே’ என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதே போன்ற நிலைமைதான் பாலின பாரபட்சத்திலும் இருக்கிறது. புதிய பரிசீலனைகள் செய்யப்படுகின்றன. பாலின பாரபட்சம் மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனை. அது வீட்டிலிருந்து துவங்குகிறது. அதேசமயம், மேற்கத்திய பெண்ணிய தத்துவங்களை பொருத்துவது தீர்வைக் கொண்டுவராது. இந்திய எதார்த்தங்கள் மாறுபட்டவை. இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளை நாங்கள் விடாது பரிசீலித்து வருகிறோம்.

கேள்வி: 60கள், 70களின் நக்சல்பாரி இயக்கத்துக்கும், தற்போதைய நிலைமைக்கும் இடையில் அரை நூற்றாண்டு கால வித்தியாசம் உள்ளது. இப்போதைய பிரச்சனைகள் என்று பார்க்கும்போது இயக்கத்தின் நிலைப்பாடுகளில் என்னென்ன மாறுதல்கள் வந்துள்ளன?

பதில் : பழைய காலத்து நக்சல் இயக்கம், அடிப்படையில், சிறு விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், ஒரு வர்க்கமாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக அமைப்பாக்குவதற்கு முயற்சித்தது. தற்போதைய யதார்த்தம் மாறுபட்டது.

கிராமங்களுக்குள், அல்லது விவசாய தொழிலாளர் என்ற அளவில் வேலையை நிறுத்துவது சாத்தியம் இல்லை. நகர்புற வேலை என்றொரு ஆவணத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். வாழ்வாதாரத்துக்காக மாநகரங்களுக்குப் புலம் பெயர்வது, நகரங்களில் உள்ள வறுமை, குடிசைப்பகுதி வாழ்க்கை… என்று அனைத்துமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இப்போது, அனைத்துமே மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. விவசாயம் எந்த அளவு மாறிப்போயிருக்கிறது என்று யோசித்துப் பாருங்களேன். மிகவும் கொண்டாடப்பட்ட பசுமை புரட்சியின் வன்முறை விவசாயிகளை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களின் பாரம்பரிய விவசாயத்திலிருந்து அவர்கள் அன்னியப்பட்டுவிட்டார்கள். உரமும், பூச்சி மருந்துகளும் நிலத்தின் உற்பத்தித் திறனைக் குறைத்துவிட்டன. நிலமும் நீரும் மாசுபட்டு கிடக்கின்றன. விதைகளின் மீது விவசாயிகளுக்கு உரிமை இல்லை.

மான்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்தாக விதைகள் மாறிவிட்டன. நான் முன்பு குறிப்பிட்டதுபோல, நிலச்சீர்திருத்தம் எப்படி செய்யப்பட வேண்டுமோ, அப்படி எந்த அரசும் நிலச்சீர்திருத்தம் செய்யவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டார்கள். பறித்த நிலத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கிறார்கள். எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு தாராளமாக நிலம் கையகப்படுத்தும் விதிகள் உருவாக்கப்படுகின்றன. கனிம வளம் நிறைந்த வனங்களில் வாழும் பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றனர். பற்பல ஐந்தாண்டுத் திட்டங்கள் கடந்துபோய்விட்ட நிலையிலும், பழங்குடிகள் தலித்துகளின் நிலைமை முன்பு போலவே பரிதாபமாக இருக்கிறது. இப்போது, சந்தை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் காளான்கள் போல முளைக்கின்றன. பல வகையான பொருளாதார சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆலைகள் ஏற்படுத்தும் மாசுபாடு தொடர்கிறது.

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பள்ளத்தாக்கு விரிந்துகொண்டே போகிறது. அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சிகள் மேலும் மேலும் ஏழைகளை விட்டு விலகிப்போகின்றனர். இடதுசாரிகள் மத்தியில் பெரிய வெற்றுவெளி ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்- பிஜேபி போன்ற பாசிஸ்ட்கள் மென்மேலும் வலுவடைந்து கொண்டிருக்கிறார்கள். மதவெறியும் பாசிசமும் எழுந்து வரும் போக்காக இருக்கின்றன. கல்வி வளாகங்களிலிருந்து அரசியல் அகற்றப்பட்டு வருகிறது.

முதலாளித்துவத்திற்கான கூலித் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் ஆலைகளாக பல்கலைக்கழகங்கள் மாறிவிட்டன. பிரதான ஊடகங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைப்பிடியில் உள்ளன. மேலும், மக்கள் சிந்திக்கும் வழிமுறைகளைக் கூட தங்களுக்கு உகந்தவகையில் மாற்றி வைத்திருக்கின்றனர். 2014 பொதுத் தேர்தலின்போது, பிஜேபி பற்றியும் மோடி பற்றியும் ஊடகங்கள் உருவாக்கிய மாய பிம்பங்களை நாம் கண்டோம். இதுபோன்ற ஒரு நிலைமையில் பிரச்சனைகள் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. இந்த நிலைமையில் பலவீனப்பட்டு நிற்கிற இடதுசாரி அரசியலைப் பலப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.

படிக்க :

நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!

பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !

கேள்வி: கடந்த 25 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அனைத்து பிரிவினரையும் முதலாளித்துவப் புரட்சி ஆட்கொண்டுள்ளதைக் காண முடியும். மாற்றம் பற்றி பேசுபவர்களையும் அது ஆட்கொண்டுள்ளது. இந்த யதார்த்த நிலையை எப்படி மாற்றுவீர்கள்?

பதில் : ஆமாம். இது இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான நேரம். இது புதிய வகை அரசியலுக்கான, முற்போக்கு அரசியலுக்கான காலம். முதலாளித்துவப் புரட்சியை அழிப்பதன் மூலம் நாம் மீண்டு எழ வேண்டும். மற்றுமொரு உலகம் சாத்தியம் என்பதை நாட்டில் நடைபெற்ற பல்வேறு சிறு முயற்சிகள் காட்டுகின்றன. அதுபோன்ற குழுக்கள் ஒன்றுபட்டு சேர்ந்து மேலும் பலம் பெற வேண்டும்.

இரண்டாவது சுதந்திரப் போராட்டம், மிகப்பெரும் புரட்சியாக உருவெடுத்து வருகிறது. ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு தற்கொலையல்ல அது ஒரு கொலை. அந்த கொலையில் அரசு நேரடி பாத்திரம் வகித்தது. புதிய வகை அரசியலின், முற்போக்கு அரசியலின் அடையாளமாக ரோஹித் இருக்கிறார். அதனால்தான் ரோஹித்தைக் கண்டு அரசாங்கம் அஞ்சியது. அதனால்தான் அவரை அழித்தொழித்தது.

எந்தவொரு இயக்கத்தையும் அரசியல் வழிநடத்த வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் ஒரு வெகுஜன அடித்தளம் வேண்டும். ஜனநாயக வழியிலான அனைத்துப் போராட்ட முறைகளும் தோல்வியடையும்போது, வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் முன்னுக்கு வரும். ஆயுதங்கள் அவசியமாகும் என்றால், வேறு வழியில்லை, அவற்றைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். அரசோடு நடக்கும் நேரடி மோதல் ஆயுதப் போராட்டமாக வடிவெடுக்கலாம். ஆனால், ஆயுதங்கள் தீர்மானிப்பதாக நிலைமையை அனுமதிக்கக் கூடாது. இயக்கம் ஆயுதங்களை வழிநடத்த வேண்டும்.

மக்களை அணி திரட்டாமல் ஆயுதப் போராட்டத்தில் மட்டும் கவனம் குவித்தால் விஷயம் திசை மாறிப்போய்விடும். அரசு தனது படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்கும் என்றால், இயக்கத்துக்கும் வேறு வழியில்லை. தனது ஆயுதங்களை இயக்கம் நவீனப்படுத்தியாக வேண்டும். கூடுதல் ஆயுதங்கள் என்றால் கூடுதல் பணம் என்று பொருளாகும். அதற்குப் புரவலர்கள் வேண்டும். அனேகமாக, பல சமயங்களில் பணம் அளிப்பது கார்ப்பரேட் கம்பெனிகளாக இருக்கும். இப்படியாக, அரசும், அரசை எதிர்ப்பவர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளால் கட்டுப்படுத்தப் படுபவர்களாக ஆகிப்போவார்கள். மாவோயிஸ்ட்டுகள், தெரிந்தோ தெரியாமலோ இந்த வலையில் வீழ்ந்துவிட்டார்கள்.

நிலத்திற்கான போராட்டம் பற்றி நாம் விவாதித்தோம். அது நிலத்தின் உரிமை யாருக்கானது என்பது பற்றியது. ஆனால், நமது பூமிக்கிரகமே அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பருவநிலை மாறுகிறது, பூமி வெப்பமடைகிறது. பூமி மேலும் வறுமைமயமாகும். ஏற்கனவே வறுமையில் தள்ளப்பட்டுள்ள மக்கள் ஏற்படப்போகும் பாதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இவை எவையுமே அரசியல் பிரச்சனைகள் ஆக்கப்படுவதில்லை.

நீங்கள் சொல்வது சரிதான். அதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் அரசியல் பிரச்சனைகள் ஆக வேண்டும். பூமி இல்லாது போய்விடும் என்றால், அரசியல் எதற்கு? நாங்கள் இப்போது இந்த மாறுதல்களை நாங்கள் ஆய்வு செய்துகொண்டுள்ளோம். ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கை இவை எப்படி அதிகப்படுத்திக்கொண்டு வருகின்றன, ஓரங்கட்டப்பட்டவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவது எவ்வாறு என்று ஆய்வு செய்கிறோம். வள ஆதாரங்களை மிகையாகச் சுரண்டுவதாலும், இயற்கையைச் அழிப்பதாலும் இப்பிரச்சனைகள் உருவாகியுள்ளன. பெரிய கம்பெனிகளின் சூறையாடல்கள் பற்றி நாங்கள் பேசும்போது, வள ஆதாரங்களின் உரிமை யாருக்கு, யார் நிர்வகிப்பது என்று பேசும்போது பூமி எதிர்காலத்திலும் இருக்க வேண்டும் என்ற பிரச்சனையையும் கூட நாங்கள் பேசுகிறோம்.

கேள்வி: கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தோல்வி எது என்று கருதுகிறீர்கள்?

பதில் : இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை என்பதுதான் கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தோல்வி! நக்சல்பாரி இயக்கத்தின்போது இளைஞர்கள் அதனை நோக்கி ஈர்க்கப்பட்டனர். பல்வேறு படிப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இயக்கம் நோக்கித் திரண்டனர். ஆனால், இன்றைய இளைஞர்கள் முதலாளித்துவ புரட்சி என்ற மாயையில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வது பற்றி கவலைப்படுகிறார்கள். சமத்துவம் அடிப்படையிலான சமூகம் வேண்டும் என்று யோசிப்பதில்லை. அவர்கள் முதலாளித்துவம் உருவாக்கிய மாயைகளை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவர்களின் குற்றம் இல்லை. அது அரசியல் இயக்கத் தோல்வியின் விளைவு. தலையீடுகள் தேவைப்படுகின்றன. முழக்கங்கள் மாற்றப்பட வேண்டும். இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றியும் அவர்களின் கனவுகள் குறித்தும் மேலும் படிக்க வேண்டும்.

கேள்வி : புதிய உலகம் என்பது நடைமுறை சாத்தியமற்ற கற்பனைக் கனவு, புனைவு என்று அதனைப் புறந்தள்ளும் போக்கு இருக்கிறது. எல்லோரும் உடனடி பலன்களை எதிர்நோக்குபவர்கள் ஆகிப் போய்விட்டார்கள்.

பதில் : எந்தவொரு புரட்சிகர சிந்தனையும் ஓரளவு புனைவாகத்தான் இருக்கும். இல்லையென்றால் புதிய உலகம் ஒன்றை மனக்கண்ணில் பார்க்க முடியாது. புனைவு கருத்துகளை கருத்தியல் முன்னேற்றமாக மாற்ற வேண்டும். அதற்கு கடின உழைப்பு வேண்டும். கடுமையான நிலைமைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் விருப்பம் வேண்டும். சமூக அரசியல் கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருவதில் பழைய நக்சல்பாரி இயக்கம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், மாற்றம் குறித்து தலைவர்கள் கண்ட கனவும், கருத்துகளும் இன்றும் பொருத்தம் இழக்கவில்லை. புதிய இயக்கங்களும், மக்களின் போராட்டங்களும் அவற்றை மேலும் வலுப்படுத்தும்.

(முற்றும்)

(பேட்டி எடுத்த எம். சுசித்ரா கேரளாவின் கொச்சினைச் சேர்ந்த சுதந்திரமான பத்திரிகையாளர் ஆவார். இந்த பேட்டி, முதலில் மே 21-27, 2019 மாத்ருபூமி இதழில் மலையாளத்தில் வெளிவந்தது.)

ஆங்கிலம் மூலக் கட்டுரை : The Wire
முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் : சி. மதிவாணன்
(சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம் – வினவு

 

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க