நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி… நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்திய கம்யூனிச இயக்கம்
பாகம் – 1
(“நக்சல்பாரி ஐம்பதாவது ஆண்டு தினத்தில் புரட்சிகர தந்தை அளித்துச் சென்ற மரபுரிமை செல்வம் என்னவென்று பரிசீலிப்போம்” என்ற தலைப்பிடப்பட்டு வெளிவந்த கட்டுரை. 1972ல் மரணிக்கும் வரையிலும் இந்திய அரசோடு வன்முறை மோதலை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்டை வழி நடத்திச் சென்ற சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் மஜூம்தாருடன் நேர்காணல்) நேர்காணல் : M. சுசித்ரா
(பேட்டியாளர் எம். சுசித்ரா கேரளாவின் கொச்சினைச் சேர்ந்த சுதந்திரமான பத்திரிகையாளர் ஆவார். இந்த பேட்டி, முதலில் மே 21-27, 2019 மாத்ருபூமி இதழில் மலையாளத்தில் வெளிவந்தது.)
புரட்சியாளர் சாரு மஜூம்தார் குறித்த நினைவுகளை அவரின் மகன் அபிஜித் மஜூம்தார் பகிர்ந்துகொள்கிறார்.
ஜூலை 28, 1972
அது மாலை நேரம். கல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக் கல்லூரியிலிருந்து இறந்தவரின் உடலை கல்கத்தாவின் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அது முழு இரகசியமாக செய்யப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் சாலைகளில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போல தோன்றியது. சாலையிலிருந்த அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். சாலையின் இரண்டு பக்கமும் போலீஸ் அணி வகுத்திருந்தது. வெகு நேரம் கழித்த பின்னர் அந்த உடல் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கேயும் கூட துணை ராணுவப்படைகள் எல்லா இடத்திலும் நிறுத்தப்பட்டிருந்தனர். சிறுவன் ஒருவனிடம் ஒரு போலீஸ்காரர் தீப்பந்தத்தை அளித்தார். அந்தப் பையனின் தந்தைதான் அங்கு சடலமாக கிடந்தார். சடலத்திற்கு தீ வை என்று அந்த பையனுக்குச் சொல்லப்பட்டது.
இப்படியாக, புரட்சிகரமான தலைவரான சாரு மஜூம்தாரின் உடல், நள்ளிரவில் தீக்கு இரையாக்கப்பட்டது. அவர்தான் நக்சல்பாரியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ)-யின் கருத்தியலைக் கட்டமைத்தவர். மக்கள் மத்தியில் அளப்பரிய மரியாதைப் பெற்ற அந்த மனிதர் அரசின் கண்களுக்கு, மிகப் பயங்கரமான எதிரியாக தெரிந்தார். அழித்தொழிப்பையும், வன்முறை அரசியலையும் முன்னெடுத்துச் சென்றவர் என்று அவரைப் பற்றி சொல்லப்பட்டது.
சாரு மஜூம்தார்
இந்த சம்பவம் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், தந்தையின் சிதையிலிருந்து எழுந்த தீ, 57 வயதான அபிஜித் மஜூம்தாரின் மனதில் இன்னமும் கனன்றுகொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு மனிதருக்கு மகனாக இருப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. எப்போதும், பிள்ளையைத் தந்தையோடு ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அவன் தன் தந்தையின் பாதையைப் பின்பற்றுகிறானா என்று பார்ப்பார்கள். சொந்த தந்தையின் அரசியல் இலக்குகள்தான் மகனின் அரசியல் இலக்குகளா என்று யோசிப்பார்கள். விடாது எழும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஊடகங்கள் உள்ளிட்டு, பல தரப்பாரும் எப்போதும் கேள்வி கேட்பார்கள்.
அபிஜித் சாக் பீஸ் கொண்டு கல்கத்தாவின் தெருக்களில் “துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது” என்று எழுதித் திரிந்த சிறு பையனாக ஒரு காலத்தில் இருந்தபோதும், பல ஆண்டுகள் அவர் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார். அவரின் தந்தை இறந்து 25 ஆண்டுகள் கழித்த பின்னர்தான் அவர் மறுபடியும் அரசியலில் கால் எடுத்து வைத்தார். தற்போது அவர் CPI ML (Liberation) கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமாகவும் இருக்கிறார். சிலிகுரியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.
அவரின் தந்தை வழி நடத்திய கட்சியைப் போலல்லாமல் சிபிஐ எம்எல் சட்ட ரீதியாக, வெளிப்படையாக இயங்கும் ஒரு கட்சியாக இருக்கிறது. தேர்தலில் பங்கெடுக்கிறது. ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவதில்லை.
இந்த நேர்காணலில் அபிஜித் நக்சல்பாரியைப் பற்றி பேசுகிறார். அவரது பெற்றோர்களைப் பற்றி, இப்போதைய புதிய யதார்த்தம் குறித்து விரிவாக பேசுகிறார். பேட்டியின் போது, ஒரே ஒரு சமயம் மட்டும் அபிஜித் கண் கலங்கினார். அது அவர் தன் தாய் லைலா பற்றி பேசிய நேரம்.
கேள்வி: நக்சல்பாரிக்குப் பின்பு அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னதும் அந்த நாட்களை நினைவில் வைத்துள்ளீர்களா?
பதில்: நக்சல்பாரி எழுச்சி நடக்கும்போது எனக்கு ஏழு வயதுதான். எனவே, என் அனுபவத்தின் ஒரு பகுதியாக அதனைப் பற்றி நான் பேச முடியாது. ஆனால், நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். மே 25, 1967 அன்று போலீஸ் துப்பாக்கியால் சுட்டது அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்கள் குழு ஒன்றின் மீது! எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள், ஒரு ஆண் அன்று இறந்துபோனார்கள். அதுபோன்ற நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன. நந்திகிராம், சிங்கூர், பாங்கார்… இப்படி மேற்கு வங்கத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நக்சல்பாரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் நக்சல்பாரியின் கதை தெரியும். ஆனால், அப்போதிருந்த (ஒன்றுபட்ட) கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடந்துகொண்டிருந்தது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு நாள் காலையில் எல்லாமும் துவங்கின என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பல்வேறு தொடர் நிகழ்வுகளின் உச்ச கட்டம்தான் நக்சல்பாரி. பற்பல ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆற்றிய கடும் பணி அதன் பின்னே உள்ளது.
படிக்க :
இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
கேள்வி: நக்சல்பாரியில் என்ன நடந்தது? அது ஓர் ஆயுதப் போராட்டம்தானே?
பதில்: ஆமாம். அது ஓர் ஆயுதப் போராட்டம்தான். நக்சல்பாரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பழங்குடிகள் அதிக அளவு வாழும் பகுதிகள். அங்கே உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் நிலமற்றவர்கள். அவர்கள் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் தங்களின் பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு கலகம் செய்தனர். விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. துப்பாக்கி குண்டுகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
உண்மை என்னவென்றால், தெபகா இயக்கத்தின் தொடர்ச்சிதான் நச்கல்பாரி இயக்கம். தெபகா இயக்கம், வடக்கு வங்கத்திலும், தற்போது வங்கதேசமாக இருக்கும் சில பகுதிகளிலும் 1940களில் நடைபெற்றது.இங்கே தெபகா இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தெலுங்கானாவிலும் விவசாயிகள் தொழிலாளர்களின் ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. தெபகா இயக்கத்தின் படிப்பினைகளைப் பெற்ற சாரு மஜூம்தார், கனு சன்யால், ஜங்கல் சந்தல், சரண் கோஷ் மற்றும் தெபகா இயக்கத்தின் தலைவர்கள் பலரும் நக்சல்பாரியில் தோட்டத் தொழிலாளர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பாக்கத் துவங்கினர். நான் முன்னமேயே சொன்னது போல அது பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
கேள்வி: தெபகா இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பதில்: 1946 -47 ஆண்டுகளில் தெபகா இயக்கம் நடைபெற்றது. தெபகா என்றால் மூன்றில் (2/3) இரண்டு பங்கு என்று பொருள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்ட குத்தகையாளர்கள், நில உடமையாளர்களுக்கு விளைச்சலில் சரி பாதியைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அதியார்கள் என்று அழைப்பார்கள். அதாவது அதா என்றால் பாதி என்று பொருள். பாதி விளைச்சலை வரியாக கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவர்கள் அதியார்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பண்ணை அடிமைகள் போல இருந்தனர். அவர்களுக்கு உரிய பாதி கூட அவர்களுக்கு கிடைக்காது.
1939-களின் இறுதியின்போது, கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையைக் கையில் எடுத்தது. வாரக் குத்தகையாளர்களை அருகாமையில் உள்ள ஜெல்பெய்குரி மாவட்டத்திலும் அமைப்பாக்கியது. இந்த சமயத்தில்தான் என் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவர் 1939ல் அவருக்கு 20 வயது ஆனபோது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வாரக் குத்தகைதாரர்கள் அறுவடையில் மூன்றில் ஒரு பகுதியைத்தான் குத்தகையாக கொடுப்போம் என்று உறுதியாக சொன்னார்கள். அவர்கள் அமைப்பான பின்பு அவர்கள் தங்களுக்குத் தேவையானதை தங்களுக்கு என்று வைத்துக்கொண்டார்கள். இயக்கம் மெதுவாக வலுப்பெற ஆரம்பித்தது. அத்துடன் சேர்ந்து அரசு ஒடுக்குமுறையும் வலுப்பெற ஆரம்பித்தது. 1942ல் கட்சியின் வேலைகள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் விரிவடைந்தது. ரயில் வே தொழிலாளர்கள் மத்தியிலும் அமைப்பு உருவானது.
அடுத்த ஆண்டு மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்தனர். மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று சாரு மஜூம்தாரும் மற்ற தலைவர்களும் வலியுறுத்தினர். நிலப்பிரபுக்களின் தானிய களஞ்சியங்களைக் கைப்பற்றுங்கள், தானியங்களை பறிமுதல் செய்யுங்கள் என்று வழிகாட்டினர். “நாங்கள் துப்பாக்கி குண்டுகளால் சாவோம்… பட்டினியால் சாக மாட்டோம்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. விரைவில் போராட்டம் வேகம் பிடித்தது. தொழிலாளர்களும் விவசாயிகளும் பேரணிகளை நடத்தினர். தொழிலாளர்கள் பயிரை அறுவடை செய்தனர், தானியக் களஞ்சியங்களைத் தாக்கி, பதுக்கப்பட்ட தானியத்தை மக்களுக்கு வினியோகம் செய்தனர். மக்களை ஒடுக்குவதற்கான அரசின் தாக்குதல் மேலும் மேலும் காட்டுமிராண்டித்தனமானது. அதுபோன்ற பேரணியொன்றில் விவசாயிகள் போலீசிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றனர். இதன் காரணமாக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. 11 விவசாயத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள்.
படிக்க :
♦ சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
கேள்வி: போராட்டம் தொடர்ந்ததா?
பதில்: தலைவர்கள் தொடர்ந்து விவசாயிகளை அமைப்பாக்கினர். 1953ல், மத்தியில் இருந்த நேரு அரசாங்கம் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், அது நடைமுறைக்குக் கொண்டுவருவது நேரு அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மக்களை ஏமாற்றி திசை திருப்புவதற்காகத்தான் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் பற்றியும் கேள்வி எழுப்பியது. 1959-ல், உச்சவரம்புக்கு அதிகமாக நிலப்பிரபுக்களிடம் இருக்கும் நிலத்தை பறித்தெடுங்கள் என்று கட்சி அழைப்பு விடுத்தது. இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. கட்சியின் மாநில தலைமை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
என் தந்தை தனது ஊருக்கு, அதாவது சிலிகுரிக்கு 1952-ல் திரும்பியிருந்தார். டார்ஜிலிங் மாவட்டத்தில் விவசாயிகளை அமைப்பாக்குவதில் முழுமையும் ஈடுபட்டிருந்தார். அவர் கட்சியின் போராட்ட வாபஸ் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தார். அவர் மட்டுமல்ல, மாவட்டத்தின் பிற தலைவர்களும் ஏமாற்றம் அடைந்தார்கள். கட்சியின் கருத்துரையை ஏற்காமல் மாவட்டத்தில் வேலையைத் தொடர்ந்தனர். விவசாயிகளையும், தேயிலை தொழிலாளர்களையும் அமைப்பாக்கினர். உபரி நிலத்தைக் கைப்பற்றுங்கள் என்று சொன்னார்கள். நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிராக கலகம் செய்யுங்கள் என்றனர். அதன் உச்சமாக நக்சல்பாரி நடந்தது.
கேள்வி: சாரு மஜூம்தார் மிகவும் கண்டிப்பான தந்தையாக இருந்தாரா?
பதில்: ஒரு நாளும் அவர் அப்படி இருந்ததில்லை. அவர் மிகவும் அன்பான, பரிவுணர்ச்சியுள்ள தந்தை. இரக்கமேயில்லாத புரட்சியாளன், தொழிலாளர்களின் வர்க்க எதிரிகளைக் கொன்றொழிக்கச் சொன்னவர் என்பதெல்லாம் ஊடகங்களும், அரசாங்கமும் வேண்டுமென்றே பரப்பிய கட்டுக்கதை. அவர் ஒரு நாளும் அப்படிப்பட்டவர் இல்லை. அவருக்கு எங்களோடு செலவு செய்ய நேரமிருக்கவில்லை. இருந்தாலும் அவர் வீட்டிலிருக்கும்போதெல்லாம் எங்களோடு அன்போடு பழகுவார். அவருக்கு அரசியல் மட்டுமே பிடித்திருந்தது என்பது இல்லை. அவருக்கு இலக்கியம் பிடிக்கும். சாஸ்திரிய சங்கீதம் பிடிக்கும்.
எனக்கும் என் அக்காவுக்கும் அவர் இலக்கியங்களையும் சங்கீதத்தையும் கற்றுக்கொடுத்தார். (எனது பெரிய அக்கா ஒரு மருத்துவர். இரண்டாவது அக்கா மதுமிதா ஓர் ஆசிரியர்). அவர் எங்களுக்கு ரவீந்திரநாத் தாகூரை அறிமுகம் செய்தார். பக்கிம் சந்திர சட்டர்ஜியையும் பிறரையும் அறிமுகம் செய்தார். வங்க இலக்கியத்தை மட்டும் அவர் எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆங்கில நாவல்களையும் படிக்க கொடுத்தார். இலக்கணம் படித்தால் மட்டும் ஆங்கிலம் வசப்படாது. நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலமே ஆங்கிலத்தில் புலமை பெற முடியும் என்று சொல்வார். எனது ஹீரோ எனது தந்தைதான்.
கேள்வி: நக்சல்பாரி எழுச்சியின் போது உங்களுக்கு ஏழு வயது என்று சொன்னீர்கள். உங்கள் குழந்தைப் பிராயம் எப்படி இருந்தது?
பதில்: எனது குழந்தைப் பருவம் மற்றவர்கள் போல இருக்கவில்லை. எனது நண்பர்கள் வளர்ந்தது போல நாங்கள் வளரவில்லை. கட்சித் தலைவர்களும், ஊழியர்களும், மாணவர்களும் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல… ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளாவிலிருந்தெல்லாம் வருவார்கள். என் தந்தையைப் பார்த்துவிட்டு இங்கிருந்து புறப்பட்ட, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த, பஞ்சடி கிருஷ்ணமூர்த்தி, பலசாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இயக்கத்தின் தலைவர்கள் பலரையும் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
நாங்கள் வளர்ந்தபோது புரட்சி என்பது எங்களுக்கு மிகவும் பழக்கமான சொல் ஆகிவிட்டது. ஆனால், இயற்கையாகவே, சிறார்களான எங்களுக்கு அரசியல் புரியவில்லை. ஆனால், எங்களுக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது என்று நாங்கள் கருதினோம்.
எங்களுக்குப் புரட்சியைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் பெரிய புரட்சியாளர்கள் போல நடந்துகொண்டோம். அது மிகவும் துணிச்சல்கரமான காரியம் என்று நாங்கள் புரிந்து வைத்திருந்தோம். அந்த நேரத்தில் இயக்கத்தின் முழக்கங்கள் எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டன. அந்த முழக்கங்களை எழுப்பியபடி நாங்கள் ஊரைச் சுற்றி வருவோம். எங்கள் வீட்டில் மர சுவர்களால் ஆன சிறு அறை ஒன்று இருந்தது. அதனை வாடகைக்கு விட்டு வைத்திருந்தோம். ஆனால், நக்சல்பாரி நிகழ்ந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. சிறுவர்கள் எல்லாம் அந்த அறையில் கூடுவோம். அந்த மரச் சுவர்களில் உடைந்த கையெழுத்தில், “துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது”, “சீனத் தலைவர் எம் தலைவர்” என்றெல்லாம் எழுதி வைப்போம். (சிரிக்கிறார்). புரட்சியென்பது மிகவும் துணிவுகரமான வேலை என்று நாங்கள் நினைத்தோம்.
கேள்வி: வீட்டில் நிதி நிலைமை எப்படியிருந்தது? வீட்டு செலவுகளை எப்படி சரிக்கட்டினீர்கள்?
பதில்: எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம். ஆமாம். நாங்கள் வாழ்வதற்குப் போராட வேண்டியிருந்தது. எங்கள் தாய் (லைலா மஜூம்தார்) எல்ஐசி முகவராக செயல்பட்டு வந்தார். அதுதான் எங்களின் ஒரே வருமானம். எங்களின் உறவினர்கள் சிலரும் எங்களோடு வாழ்ந்து வந்தனர். அம்மாதான் எல்லோரையும் பார்த்துக்கொண்டார். அவர் மிகவும் கடினப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. பல வீடுகளுக்கும் சென்று எல்ஐசி பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று பேசுவார். அப்படித்தான் அவர்கள் எங்களைப் பார்த்துக்கொண்டார். நாங்கள் எங்கள் தாயிற்கு மிகவும் கடன்பட்டுள்ளோம். நாங்கள் வாழ்க்கையில் என்ன பெற்றிருக்கிறோமோ அதெல்லாம் அம்மா கொடுத்தது. நல்ல கல்வி உட்பட அனைத்தையும் அவர் கொடுத்தார். அதற்காக அரும்பாடுபட்டார்.
கேள்வி: அவருக்கு அரசியலில் எப்போதாவது ஆர்வம் இருந்ததா?
பதில்: அம்மாவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எல்லோருக்கும் என் அப்பாவைப் பற்றி தெரியும். அவரைப் பற்றி நிறைய எழுதப்பட்டாகிவிட்டது. ஆனால், வெகு சிலருக்கே அம்மாவைப் பற்றி தெரியும். நான் சந்தித்ததிலேயே மிகவும் தைரியமான பெண் என் அம்மாதான். அவரின் உள்ளும் புறமும் அரசியல்தான் இருந்தது. அவர் கேட்டதெல்லாம் அரசியல்தான். பேசியதெல்லாம் அரசியல்தான். 13 அல்லது 14 வயது முதல் அவர் மூச்செல்லாம் அரசியல்தான்.
கேள்வி: அவருடைய பின்னணி என்ன?
பதில்: அம்மாவின் தந்தை ஒரு மருத்துவர். ஹரேந்திர குப்தா என்பது அவரின் பெயர். அவர் அரசு மருத்துவராக இருந்தார். அவர் கடைசியாக ஜெய்பல்குரி மாவட்டத்தில் ராஜ்கன்ஞ் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அம்மாவுக்கு 13 அல்லது 14 வயது. அவரின் வீட்டுக்கு அந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் வருவார்கள். அவர்களில் பலர் மீது வழக்கு இருந்ததால் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. படித்த மருத்துவரின் பார்வையாளர் கூடத்தில் பல்வேறு பத்திரிகைகள் இருக்கும். அவர்கள் அங்கே வந்து பேப்பர் படிப்பார்கள். அரசியல் பேசுவார்கள். அம்மா அவர்களுக்கு தேனீர் அளிப்பார். அவர்களுடன் உட்கார்ந்து அம்மாவும் அரசியல் பேசுவார். அதனால், அவர் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகள் ஆழமாகப் பதிந்தன. பின்னர், அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆனார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவில் அவர் துடிப்போடு பணியாற்றினார். அதுபோல தெபகா விவசாய போராட்டத்திலும் பங்காற்றினார். அதன் பின்பு அவர் ஜெய்பெல்குரி மாவட்டத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார். 1948-ல் கட்சி தடை செய்யப்பட்ட போதும், 1950-ல் கட்சி தடை செய்யப்பட்டபோதும் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
கேள்வி: அவர் முழு நேர கட்சி ஊழியரா? அல்லது வேறு ஏதாவது வேலை பார்த்தாரா?
பதில்: அவர் எப்போதுமே உழைக்கும் பெண்தான். அம்மா பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பார். அவர் மிகப் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால், அவர் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
(தொடரும்)

பாகம் -2

ஆங்கிலம் மூலக் கட்டுரை : The Wire
முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் : சி. மதிவாணன்
(சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம்  – வினவு
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க