கலையரசன்

தென் அமெரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும், பெருமளவு படித்த மத்தியதர வர்க்க இளம் தலைமுறையினரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாதவாறு கலவர பூமியாக காட்சியளிக்கிறது. ஒரு மெட்ரோ ரயில், 16 பேருந்து வண்டிகள் கொழுந்து விட்டு எரிந்தன. பத்துக்கும் குறையாத சூப்பர் மார்க்கெட்கள், மருந்துக் கடைகள் சூறையாடப்பட்டன. கலவரத்திற்குள் அகப்பட்டு பதினொரு பேர் கொல்லப்பட்டனர்.

சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா “நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம்” என அறிவித்துள்ளார். “ஒரு பலமான, இணக்கமாக போக முடியாத, எவரையும் மதிக்காத, வன்முறை பிரயோகிக்கத் தயங்காத எதிரியுடன்” இந்த யுத்தம் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

சிலியில் நடந்த இராணுவ சர்வாதிகார காலகட்டத்திற்குப் (1973 – 1990) பின்னர், முதல் தடவையாக இராணுவம் வீதிகளில் ரோந்து சுற்றுகிறது. தலைநகர் சான்டியாகோ உட்பட எட்டு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா.

யார் இந்த பிஞேரா? எழுபதுகளில், சர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் காலத்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதித்தவர். அதாவது, பினோச்சே காலத்தில் வந்த நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கையால் பலனடைந்த கோடீஸ்வரன். அப்படியான ஒருவர் சொந்த நாட்டு மக்கள் மீதே யுத்தப் பிரகடனம் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஜனநாயக ஆட்சி நடந்தாலும், பாசிச சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் பணக்கார வர்க்கத்தின் நலனுக்காகவே அரசு இயங்குகிறது.

இந்த மக்கள் எழுச்சிக்கு நேரடிக் காரணம், அரசு கொண்டு வந்த மெட்ரோ ரயில் டிக்கட் விலை அதிகரிப்பு. பிற தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாதச் சம்பளம் அதிகம். ஆனால் மாத வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்து செலவுகளுக்கு சென்று விடுகிறது.

குறிப்பாக பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் மாணவர்கள் வெகுண்டெழுந்து இலவசமாக பயணம் செய்யத் தொடங்கினார்கள். மெட்ரோ நிலைய டிக்கட் மெஷின், தடைக் கம்பங்களை அடித்து நொறுக்கினார்கள்.

மெட்ரோ டிக்கட் விலை உயர்வை மீளப் பெறுவதாக ஜனாதிபதி பிஞேரா அறிவித்தும் கலவரம் அடங்கவில்லை. அதற்குக் காரணம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல. மிகப் பலமான இடதுசாரி கட்சிகளால், நன்றாக அரசியல்மயப் படுத்தப் பட்ட இளம் தலைமுறையினர் எந்த வித சமரசத்திற்கும் தயாராக இல்லை.

நிச்சயமாக, சிலி அரசுக்கு இது ஒரு இக்கட்டான கால கட்டம். அடுத்த மாதம் Apec நாடுகளின் உச்சி மகாநாடு நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஸிஜின்பிங் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் சிலிக்கு வர இருக்கிறார்கள். அதற்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம்.

எதற்காக இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் மட்டுமல்லாது, ஓரளவு வசதியான மத்தியதரவர்க்க இளைஞர்களும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்?

1973-ல் நடந்த இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் சிலி நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கையின் பரிசோதனைச் சாலையாக கருதப்பட்டது. பொருளாதாரம் நூறு சதவீதம் தனியார்மயப்படுத்தப்பட்டது. பொருட்களின் விலைகள் மிக அதிகம். ஆனால் செலவிடுவதற்காக மக்களின் கையிருப்பில் பணம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. கல்வி, மருத்துவ செலவுகள் ஏழைகளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். வசதி இல்லாதவர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம்.

நவ- தாராளவாத பரிசோதனைச் சாலையில் பிறந்த பிள்ளைகள் தான் இன்று முதலாளித்துவத்திற்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்த இளைஞர்கள் மத்தியில் நவ- தாராளவாதம் என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை போன்று கருதப் படுகின்றது.

முன்பு இராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடந்த இனப்படுகொலையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் தேடி அழிக்கப் பட்டனர். பாசிச ஆட்சியாளர்கள் கம்யூனிசத்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்டதாக இறுமாப்புடன் இருந்தனர்.

பனிப்போர் முடிவில், “கம்யூனிசம் இறந்து விட்டது” என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், 1990-ம் ஆண்டு ஜனநாயகம் மீட்கப்பட்டது. அரசியல் கட்சிகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. பொதுத் தேர்தல் நடந்தன.

ஒற்றை ஆளாய் நின்று இராணுவ வாகனத்தை வழிமறிக்கும் தீரம்!

அதே நேரம், சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை போல புதிய தலைமுறை கம்யூனிஸ்டுகள் தோன்றினார்கள்.

புதிய சிலி கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி சில வருடங்களில் பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாகியது. அத்துடன், அனார்க்கிஸ்டுகள், ட்ராக்கிஸ்டுகள், இன்னும் பல சோஷலிச அமைப்புகளும் உருவாகின. குறிப்பாக அனார்க்கிஸ்டுகள் முதலாளித்துவத்தை மட்டுமல்லாது, அரசு என்ற கட்டமைப்பையே எதிர்ப்பவர்கள்.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்

கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகளுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஆரம்பத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக போராடிய மாணவர்கள், கூடவே நியோ லிபரல் சிஸ்டத்தையும் எதிர்க்கக் கற்றுக் கொண்டனர். தற்போது முதலாளித்துவத்தை வீழ்த்தி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பது என்று கிளம்பி விட்டார்கள்.

கம்யூனிஸ்டுகள் வேறு யாரும் அல்ல. அவர்களும் முதலாளித்துவம் வளர்த்து விட்ட பிள்ளைகள் தான். சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிவிட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன.

இது “கம்யூனிசம் 2.0”!

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க